Tuesday, 17 June 2008

❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா?

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஆரம்பித்த பிறகு அது வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போல ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது. காங்கிரசின் புகழ் பெற்ற கோஷ்டிப் பூசலும் கட்சிக்கு தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக்கி நிரந்தரமாக டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டுப் பெறும் அரசியலை உருவாக்கிக் கொண்டு விட்டது.

இன்று தமிழகத்தில் ஆட்சி என்றாலே திமுக அல்லது அதிமுக என்ற நிச்சயமான நிலை தான் நிலவுகிறது. புதிதாக ரேசில் அடுத்த முதல்வர் கனவுடன் விஜயகாந்த் தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயன்று கொண்டிருந்தாலும் சரத்குமார், கார்த்திக் என இன்னொரு நடிக வரிசை அதே கனவுடன் நுழைந்து கொண்டிருந்தாலும் கூட இப்போதைக்கு நிலைமையில் மாற்றமில்லை.

அதிமுகவைப் பொறுத்த வரை ஜெயலலிதாவைத் தவிர முதல்வர் ரேசில் யாரும் இல்லை.

திமுக தலைமையைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளரைக் களத்தில் இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி என்று போற்றப் படும் திமுகவில் முதல்வர் பதவிக்கு மட்டும் கருணாநிதி குடும்பத்தை விட்டு வேறு பெயர்கள் எதுவும் சிந்திக்கப் படுவதேயில்லை. கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் மறைவுக்குப் பின் களமிறக்கப் பட்ட அவர் மகன் தயாநிதி மாறன் இந்தப் போட்டியில் இருப்பதான நிலவரம், அவர் சார்ந்த தினகரன் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி அவர் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டார். ஆரம்பத்திலிருந்தே முதல்வர் வேட்பாளராக, கருணாநிதியின் அரசியல் வாரிசாகப் பேசப் பட்டு வந்த ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இப்போது களத்தில் இருப்பதே அரசியலின் மிக வினோதமான கூறு. அறிவுஜீவி அரசியல்வாதியாக களமிறங்கிய கனிமொழியும் அழகிரியை ஆதரிப்பதாக வந்துள்ள செய்திகளால் தமிழக மக்களுக்கு அடுத்த முதல்வர் வேட்பாளராக திமுக களமிறக்கப் போவது யாரை என்ற சந்தேகம் சர்வநிச்சயமாக ஏற்படக்கூடும்.

மாறன் சகோதரர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கக்கூடூம். ஸ்டாலின் தமிழக முதல்வராக தகுதியானவரா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அவர் அரசியலில் அடித்தளம் முதல் வளர்ந்து வந்த முறையும் பயிற்சியும் ஓரளவுக்கு அந்த தகுதியை உருவாக்கி இருக்க கூடும்.

ஆனால் அழகிரி? முதல்வரின் மகன் என்ற முறையில் அவர் மதுரையில் தனி ராசாங்கமே நடத்தி தாதா அரசியலைத்தான் செய்து வந்திருக்கிறார். இப்படிப் பட்ட கட்டைப் பஞ்சாயத்து அரசியல்வாதி முதல்வராவதை விட விஜயகாந்தே வந்து விட்டுப் போகலாம்.

நட்பு என்ற காரணத்துக்காக ஆற்காடு வீராச்சாமி போன்ற ---களை அமைச்சராக்கி தமிழக மக்களை சோதனைக்குள்ளாக்கும் கருணாநிதி ஒருவேளை வாரிசுரிமைப் படி மூத்த மகனுக்கே பட்டம் சூட்டக் கூடும். அப்போது நாமும் கருணாநிதிச் சோழனின் வாரிசாக தமிழக முதல்வர் அழகிரிச்சோழ பாண்டியனை வாழ்த்தி பதிவுகள் போட்டு மகிழலாம்.

வாழ்க தமிழகம்.

07:35 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this | Tags: tamilnadu, dmk, திமுக |  del.icio.us | | Digg! Digg

Tuesday, 13 February 2007

❒ அமைச்சரவை மாற்றம்

துரைமுருகனிடம் சட்டம்வேலுவிடம் கூட்டுறவு:
கோ.சி மணி முக்கியத்துவம் குறைப்பு


பிப்ரவரி 13, 2007

சென்னை: திமுக அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோ.சி.மணி வகித்து வந்த கூட்டுறவுத் துறை அ.வ.வேலுவிடம் தரப்பட்டுள்ளது. பொன்முடியிடம் இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் மணியிடம் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த புள்ளியியல் துறையும் மணியிடமே இருக்கும்.

கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருந்த மணிக்கு இந்த முறை கூட்டுறவுத் துறை தான் வழங்கப்பட்டது. இப்போது அதுவும் பறிக்கப்பட்டு உப்பு சப்பில்லாத துறைகளான முன்னாள் ராணுவத்தினர் நலன், புள்ளியியல் துறை ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் மூலம் கோ.சி. மணியின் முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த அ.வ.வேலுவிடம் கூட்டுறவுத் துறையும் சேர்த்து கொடுக்கப்பட்டு அவரது முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனிடம் கூடுதலாக சட்டத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தத் துறை ஐ.பெரியசாமியிடம் இருந்தது. இனிமேல் ஐ.பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத் துறைகளை மட்டும் கவனிப்பார்.

உயர் கல்வி அமைச்சராக உள்ள பொன்முடியிடம், முதல்வரிடமிருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை வழங்கப்பட்டுள்ளது.

-oOo-

செய்தி - தட்ஸ்தமிழ்