Thursday, 24 January 2008

❒ தமிழ் புத்தகச் சந்தை

தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.

இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.

தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.


நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?

Tuesday, 10 July 2007

❒ ஆரியம் எங்கே போனது?

ஜாலிஜம்பர் என்பவர் ஒரு பதிவு இட்டிருந்தார்.

==========================

தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,

ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

===========================

முதலில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வந்தது என்று பார்ப்போம். இது தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாகவே எழுதப் பட்டது அல்ல.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை தனது மனோன்மணீயம் நாடகத்தின் பாயிரமாக கடவுள் வணக்கம் என ஒரு கடவுள் வாழ்த்தையும் கூடவே தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் இன்னொரு பாடலையும் எழுதி இருந்தார்.

அந்தப் பாடல் இது தான்.

-oOo-

தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா
உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே


கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

எனவாங்கு

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.

(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.

பாயிரம் முற்றிற்று.

-oOo-

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை தேர்வு செய்ய பல பாடல்கள் பரிசீலிக்கப் பட்ட போது இந்தப் பாடலும் அந்தப் பரிந்துரையில் இருந்தது. இறுதியில் இந்தப் பாடலின் முதல் இரு பத்திகள் தேர்வு செய்யப் பட்டன. எனினும் இரண்டாம் பத்தியின் பொருள்

இடைவிடாது பல உயிர்கள், பல உலகம் படைத்தளித்துக்கொண்டே இருந்தாலும் பரம்பொருளாகிய இறைவன் முன் இருந்தபடியே (சோர்வின்றி) இருப்பது போல

கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பலமொழிகள் உன்னிடமிருந்து பிறந்தாலும் ஆரிய மொழியாகிய சமற்கிருதம் போல வழக்கொழிந்து போய்விடாமல் என்றும் இளமையுடன் புதுமை குன்றாமல் இருக்கும் உன் திறனை வாழ்த்துவோம்


என்பதாக வருகிறது.

எனவே 'பிறமொழிகளைப் பற்றிய ஒப்பீடு அவசியமில்லை, முதற்பத்தி மட்டுமே போதும்' எனக் கருதி கூடவே அதற்கு முத்தாய்ப்பாக 'இரண்டாம் பத்தியின் இறுதி வரி'யை மட்டும் தேர்வு செய்தார் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி.

எனவே கிட்டத்தட்ட ஐம்பது வரிகள் இருந்த பாடலில் இருந்து மொத்தம் ஏழுவரிகள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப் பட்டன.

இடையில் (பரிந்துரை செய்யப் பட்ட இரு பத்திகளில்) என்று பார்த்தாலும் நீக்கப் பட்டது ஒருவரி அல்ல. இரண்டாம் பத்தியின் ஐந்து வரிகள் நீக்கப் பட்டு ஒரு வரி மட்டுமே தேர்வு செய்யப் பட்டது.

Thursday, 24 May 2007

❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்

வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?

இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?

இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.

உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)

இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.

இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.

உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.

முதலில் கணினியில்

Control Panel க்கு செல்லவும்.

விண்டோஸ் xp அல்லது 2000 எனில்

Change or Remove Programs

இதில்

Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)

(விண்டோஸ் 98, Me எனில்

Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.

Add/Remove கிளிக் செய்யவும்.)

புதிதாக வரும் Features to install பெட்டியில்

1. next கிளிக் செய்யவும்.

2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.

3. expand International Support கிளிக் செய்க.

4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.

5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.

6. கிளிக் Update.

இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.

-oOo-

குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.

எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.

Friday, 11 May 2007

❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்

சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.

இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.

சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.

தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.

தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.

அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.

செய்தி: தட்ஸ்தமிழ்

-oOo-

தலையெழுத்த்து...!

Friday, 02 February 2007

நமக்கெதுக்கு வம்பு

Image and video hosting by TinyPicலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்ட வசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.'தேமேனு' சென்று கொண்டிருநத என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து 'ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு' என்று சொன்னார்.

என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ் டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்"அப்படியா? மாத்திட்டாப் போச்சு" என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார். அங்கிருந்து பேசினார் "கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"

"அது எங்க கிடைக்கும்?"

"ஜே,ஸ’, ரோடு போகணும்"

சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க"

"அதெப்படிஙக முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே"

"முளுக்கப் பாருங்களேன்"

அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நு‘று அதற்கு ஐம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து. போக்கு வரத்து கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்த்தேன்.

ஒரு கிழவன் சென்ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் 'லொடக்கா லொடக்கா'என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு 'மெட்டடார்' வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல், பார்க்காமல், நிறுத்தாமல், முட்டாள்தனமாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என் வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.

பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால் அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.

கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.

"டிரைவர் எங்கய்யா?"

"அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு"

"நான் இல்லிங்க டிரைவர்"

"ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் து‘க்குங்க"

"தூக்காதிங்க! போலிஸ் வரட்டும்"

"அந்த ஆட்டோவை நிறுத்துய்யா"

நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸ’ன் ஜன்னல் பூரா முகங்கள்!"பிரசன்னா žக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸ’ன் உள் ஒரு அழைப்புக் கேட்டது.

"போலிஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது"

"டெலிபோன் செய்யுங்களேன்"

"ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்"

"எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலிஸ் வந்துருவாங்க"

இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள் வெடித்தன.

"ஆள் யாருஙக"

"யாருக்குத் தெரியும்"

"கூட ஒருத்தரும் வரலியா"

"நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க" என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக் கொண்டிருந்தார்கள் "டெலிபோன் செய்யணும்"

"எழுபத்தஞ்சு பைசா"

"தர்றேன்"

"முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது" "இல்லை . போலிசுக்கு போன் செய்யணும். ஒரு ஆக்ஸ’டெண்ட்"

"பண்ணிக்கங்க"

"டைரக்டரி வேணும். அவசர போலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?"

"தெரியாது"

"டைரக்டரி இல்லையா?"

"இல்லை!"

"அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்"

"ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-"

"என்ன?"

"இதில மட்டும் மாட்டிக்காதிங்க"

"எதில?"

"ஆக்ஸ’டெண்ட் கேஸ’ல நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆகஸ’டெண்ட் கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு ஆஸபத்திரிக்குப் போனேன்.'அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் 'போ'ன்னாங்க. விக்டோரியா எவ்வளவு து‘ரம்?- அங்கே போனேன் ."அங்க போனா 'போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய மட்டும கொண்டு வரலாம்'னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க

முதல்லயே என்மேல ஏறினாங்க'எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்' டெட் ஆன் அரைவல்'னு முடிச்சுட்டு கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க."கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸபெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு "அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் எனக்கு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்த்தேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துக்கு நானே காரணம்ங்கற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என் பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு"

"நான் பிரமிப்புடன்கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "யாராவது போலிசுக்கு போன் செய்ய வேண்டாமா" என்றேன்

"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்"

"நம்பர் தெரியலையே"

"நு‘று பண்ணுங்க"

நான் போலிஸ•க்கு டெலிபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன் ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான் சென்றதும்

"இவர்தாங்க " என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி

"போலிசுக்கு சொல்லிட்டேன்" என்றேன்

"போலிஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலிஸ் ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு"

போலிஸ் இன்ஸபெக்டர என்னைப் பார்தது "கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன்.

"நீங்க இந்த ஆக்ஸ’டெண்ட்டை பார்த்திங்களா?"

" ம்.. பார்த்தேன்"

"உங்க பேரு?" அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன .

"எதுக்கு?"

" எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?"

"அது வந்து ... பார்ததேன் து‘ரத்தில இருந்து சரியாப் பார்க்கலை"

"இப்பதான் பார்ததேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க"

"அட்ரஸ் வந்து.. நான் ஊருக்குப் புதுசுங்க"

"ஊருக்குப் புதுசா? பங்களுர்ல தங்கறவர்தானே?"

"அதாவது மெட்றாஸ்காரன் நான்"

" சரி. இங்க வேலை செய்யறவரா?"

" இல்லை.. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவன்ல திரும்பிடறேன்"

அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை.என்னை வருத்தத்துடன் பார்த்துச் சிரித்தார்

"ஏன் ஸார் சாட்சி சொல்றதுக்கு அவ்வளவு பயமா?"

"பயம்னு இல்லிங்க. வந்து நான் ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல

முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்"

"அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்"

"யாராவது பாத்தவங்க சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாராவது?

கூட்டம் மெல்லக் கலைந்தது

நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக"ப்ளீஸ் லுக் இன்ஸபெக்டர் ! தி ஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வரமுடியும் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.சந்தோஷமா வருவேன். ஆனா வெளியூர்க்காரன்.. அதனால மெட்றாஸ்ல இருந்தா எப்படி.." இன்ஸபெக்டர் கோபததுடன் "போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே ! போ" என்றார்.கிழவனின் அருகில் சென்றார் அவன் இது நேரத்தில் இறந்திருந்தான் நான் சற்று þநெரம் நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம்"மெட்றாஸ்ல இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும் சொல்லுஙக"

"அதானே! ஆவுறதில்லை அது" என்று அனுதாபித்தார் திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன் அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்

"கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா" என்றார்

"செய்யுங்க"

"இன்ஜினை டவுன் பண்ணணும் மூணு நாளாகும்"

"செய்யுங்க. எஸ்டிமேட் கொடுத்துடுங்க"

"மொத்தம் முன்னு‘த்தம்பது, எல்லாத்துககும் பில் கொடுத்துர்றேன்" "சரி"

"உங்க அட்ரஸ் சொல்லுங்க"

சொன்னேன்

"எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க"

"ஒம்பது வருஷமா"

"புதன் கிழமை வந்துருங்க"

"சரி" என்று வெளியே வந்தேன்

இப்போது அந்த காவி வர்ண வேனைக் காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர். போலிஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது கிழவன் கிடந்த இடத்தில் அடையாளமாக உறைந்த ரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறக்குறைய கிழவனின் வயசிருக்கும் போல் புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி வைத்திருந்தான் போலும். அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது இரண்டு சிறுவர்கள் ரத்தம் படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

-oOo-

இந்தக் கதையை ஏற்கனவே படித்தவர்கள் அமைதியாக வாசிக்கவும். முதல் முறையாக வாசிப்பவர்கள் இந்தக் கதையை எழுதியவர் யாரென்று யூகித்து சொல்ல்லாம்.

வழக்கம் போல இந்தக் கதைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு எனக்கே பதில் தெரியாதுங்க...!