Saturday, 19 April 2008
❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பாலபாரதி
காலையில் எழுந்து பல்துலக்கி குளித்து அலுவலகம்/பணியிடம். மாலைவீடு திரும்பி மனைவி குழந்தைகளுடன் உல்லாசம், பசிக்கு உணவு, புணர்வு என சராசரி மனிதனின் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டுள்ளது. பசிக்கு உணவு,உணவுக்கு உழைப்பு என பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்க்கை நியதிதான் பொது நியதியாக இங்கே இருக்கிறது.
இந்த நியதியை மீறி வாழ்வைத் துய்க்க வேண்டிய தருணங்களில் சிந்தனையோட்டம் கற்பனை, என மனித வாழ்வில் சுருதிபேதமான நிகழ்வினூடே தான் படைப்பாக்கம் நிகழ்கிறது. சராசரி மனிதர்களில் இருந்து எந்தப் படைப்பாளியுமே சற்று மாறுபட்டவர்களாகத்தான் இருந்தாக முடியும். அட்டவணை வாழ்க்கையில் படைப்பு உருவாக முடியாது.
அதே சமயம் இந்த சுருதிபேதம் சிலருக்கு புதிய சுவரத்தை உருவாக்காமல் அபசுரமாக மாறிப்போவதும் உண்டு. இன்றைக்கு பத்திரிகைகளில் எழுதும் சிலநூறு எழுத்தாளப் படைப்பாளிகளில் இந்தப் அதிபிறழ்வு கொண்டவர்கள் ஒரு சதவீதம் என்றால் பல ஆயிரம்பேர் எழுதும் இணையப் பரப்பிலும் அதே சதவீதப் பிறழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நூற்றுக்கு ஒருவர் என்றால் ஆயிரத்துக்கு பத்துப் பேர் இருக்க வேண்டும். இணையம் என்ற சுதந்திர ஊடகம் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. பத்திரிகை உலகமோ விரும்பாதவர்களை புறக்கணித்து விட முடியும்.
எனவே இணையத்தில் மனப்பிறழ்வுகள் வெள்ளைத் துணியில் மைத்துளிக் கறைபோல வெளிப்படுகின்றன. அதை பொதுக் கருத்தாக கட்டமைக்க முயலும் பத்திரிகை உலக மனநோயாளிகள் தங்களின் மனக்கோளாறுகளை இதன் மறைப்பில் வசதியாக மறைத்து விடவும் இயலுகிறது.
இன்னொரு புறம் போர்னோ போன்ற பல அழுக்குகள் பத்திரிகை உலகிலும் மலிந்து கிடக்கின்றன. இணையமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இணைய எழுத்து அல்லது வலைப்பதிவு என்பது வேறு விதமானது.
ஓரிருவரின் பிழைகளை இணைய எழுத்தின் தன்மையாகவே ஏற்றிக் கூறும் குமுதம் அரசு, இணையத்துக்கு அடிமையானால்......... என்ற கேள்வியை தனது பிறழ்மனவெளிப்பாடாக இணைய எழுத்தாளர்கள் மனநோயாளிகள் என்கிறார்.
இது பற்றி சிறில் அலெக்ஸ் தன் பதிவின் பின்னூட்டத்தில்...
//அரசு யாரையெல்லாம், எந்தவகை எழுத்தையெல்லாம் குறிப்பிடுகிறார் எனச் சொல்ல முடியவில்லை.
முதலில் அவர் அந்தக் கேள்வியையே புரிந்துகொள்ளவில்லை. இண்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் வருமா? என்பது கேள்வி. இண்டர்நெட் மட்டுமல்ல வேறெதற்கும் அடிமையாவதும் மனநோய்தான்.//
தொலைக்காட்சி சீரியல்கள் தொடங்கி பலவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இணையத்தில் எழுதுபவர்களில் பலர்...........என்ற வாசகம் துருத்திக் கொண்டு வந்திருப்பது தான் அந்த அரசுவின் நோக்கம் பற்றி ?
//பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.//
இந்த வரிகளில் பகிரங்கமாகத் தெரிகிறது இவர்களின் வயிற்றெரிச்சல்... எப்படியும் அச்சுப் பத்திரிகைகளின் உள்ளடக்கங்களைவிட பிரம்மாண்டமாக தகவல்கள் இணையப் பரப்பில் வெளிப்படுகின்றன. எனவே புதுசா என்ன செய்வது என்று தெரியாமல் தங்களின் அறியாமையை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள். அச்சுப் பத்திரிகைகள் தங்களின் உள்ளடக்கங்களின் தன்மையை,செறிவை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இணையத்தில் கிடைக்காதவற்றை அவர்களால் தர முடியாத நிலையில் இது போன்ற கும்பி எரிச்சல் சகஜமே ;)
அச்சு ஊடக எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக இணையத்தில் கைக்குட்டை போட்டு இடம்பிடித்து வருவது, இணைய எழுத்தாளர்களின் இணையப் படைப்புகள் அச்சுப் பதிரிகைகளில் (அவர்களின் அனுமதியின்றியே) வெளியாகி வருவது போன்றவை இணையத்தின் குறைபாடா அல்லது இதழ்களின் போதாமையா என்ற கேள்வியை எழுப்பவில்லையா?
பத்திரிகையில் வந்த தனது படைப்பு தன்பெயரிலேயே ஒரு இணையதளத்தில் வெளியிடப் பட்டிருந்தால் அந்தப் படைப்பாளி எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ அது போன்றே தான் வலைப்பதிவில் எழுதியது பத்திரிகையில் சுட்டப் பட்டிருந்தால் பதிவரும் மகிழ்வார். அதற்காக அவர் பத்திரிகையில் வர வேண்டுமே என்பதற்காக வேறுமாதிரி எழுதப் போவதில்லை.
இரண்டுமே ஊடகங்கள் என்றபோதிலும் இணைய எழுத்து எந்த நிர்ப்பந்தமும் இன்றி வருவது. பத்திரிகை எழுத்தோ வியாபார நோக்கத்தில் வலிந்து எழுதப்படுவது. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவதும் இணைய எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதுவதும் ஆரோக்கியமான விஷயங்கள் தான். ஆனால் அவை மிகச்சிறிய அளவிலேயே நடக்கின்றன. இவர்கள் இதற்காகவே அலைகிறவர்கள் போலவும் கிடைக்காமல் போனதால் தான் இணையத்தில் எழுதுகிறார்கள் என்பது போலவும் சில பத்திரிகை உலக மேதாவிகள் கட்டமைக்க முயலும்போது தான் இவர்களின் உள்நோக்கம் குறித்து சந்தேகம் வருகிறது.
11:05 Posted in இதழியல் | Permalink | Comments (4) | Email this | Tags: kumudam, குமுதம்

