Sunday, 31 December 2006
புலரட்டும் புத்தாண்டு...

வணக்கம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்றோடு இன்னொரு ஆண்டு தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் வயதுகள் ஏறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் அறிவு எந்த அளவு வளர்கின்றது என்று யோசித்தால் சில நேரங்களில் அதிகம் படித்தவர்கள் ஆபத்தானவர்களாக இருப்பதை உணர முடிகிறது. மூடநம்பிக்கைகளும் சில சித்தாந்த நம்பிக்கைகளும் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. யாராலும் நடுநிலையோடு சிந்திக்கவும் செயல்படவும் முடியவில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும் இருப்பது தவறில்லை. அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் அதை சகமனிதர்களுடனான வெறுப்பாக மாற்றி விடாமல் முடிந்தவரை நட்புணர்வோடு கடக்க முயல்வோம். காலம் பொன் போன்றது என்பார்கள். கடந்து போன காலங்கள் திரும்ப வாராது. வரும் காலத்தை வசந்த காலமாக வைத்திருப்பது நம் கையில் தான் இருக்கிறது.
பிரச்சினைகளோடே வாழும் ஏராளமானவர்கள் நம்மருகே உண்டு. அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், உபத்திரவமாக இல்லாதிருப்போம். ஆறுதலாக இருப்போம்.
2006 ன் இறுதி சில தினங்கள் செய்திக்களத்தில் சோகம் ததும்பிய தருணங்கள். தமிழகத்தில் ஒரு சிறுவன் இன்னும் சில சிறுவர்களாலேயே கொல்லப் பட்டான்.
இந்தியத் தலைநகருக்கருகே தோண்டத் தோண்ட சிறுமிகளின் பிணம்... சைக்கோ வெறிகளின் அடையாளமாய்.
உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அரசியல் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது. அதன் நியாய அநியாயங்கள் பலவிதமாக விமர்சிக்கப் பட்டாலும் சரித்திரத்தில் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இது இருக்கும்.
காலம் அனைத்தையும் கடந்து செல்கிறது. அதற்கு நன்மையோ தீமையோ எதுவும் இல்லை. நாம் காலத்தைக் கடப்பதற்குள் பலவற்றை இழக்கிறோம். பலவற்றைப் பெறுகிறோம். நம்முன்னே குவிந்து கிடக்கும் வாழ்க்கைச் சருகுகளின் குவியலில் இருந்து நமக்கான நம்பிக்கைகளைத் தேடியெடுப்போம்...பாதை கண்முன்னே இருக்கிறது. பயணத்திற்கான வாகனத்தை தேர்வு செய்வதே நம்வேலை...நேற்று என்பது இன்றில்லை. இன்று என்பது நாளை இல்லை. நாளை என்பது எதிர்பார்ப்பு...
வரப்போகும் 2007 ல் நமக்கான எதிர்பார்ப்புகள் எவை? சிந்திப்போம். நம்மை செலுத்தும் விசை உழைப்பும் முயற்சியுமாக இருக்கட்டும்...
வாழ்க வளமுடன்..நன்றி.
இந்த ஆண்டின் இறுதிப் பதிவான இது சிந்தாநதியின் நூறாவது பதிவும் கூட.
05:45 Posted in வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this
| Tags: century, new year |
del.icio.us
|
|
Digg

