Friday, 21 September 2007

❒ சன் டிவி கிரகணமா?

இன்று பரபரப்பாகப் பேசப்படும் கேபிள் டிவி தொழிலுக்கு நீண்ட நெடிய வரலாறோ அது ஒன்றும் பரம்பரை தொழிலோ இல்லை. சுமார் பத்தாண்டுகளுக்குள் உருவாகி படித்த வேலையில்லாத பல இளைஞர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பை அளித்தது. அந்த வாய்ப்பை புரிந்து கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து இளைஞர்கள் கேபிள் டிவியைத் தொடங்கினார்கள். வேவையில்லாத இளைஞர்கள் பலருக்கும் தற்காலிக நிழலாக இருந்தது என்பது உண்மைதான்.

ஆனால் குறுகிய காலத்திலேயே இந்த தொழிலின் வாய்ப்புகளைப் புரிந்து கொண்ட தொழில் முதலைகள் கேபிள் இளைஞர்களுக்கு அவர்களின் மூலதனத்தை விட லாபம் கொடுத்து தங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். தங்களுக்கு வேலை கிடைத்ததும் தாங்களாகவே கைமாற்றிக் கொடுத்து பலர் லாபம் கண்டார்கள்.

ஆரம்ப காலத்தில் ஓரிரு டிஷ் ஆன்டனாவும் அதற்கான மின்னணு உபகரணங்களும் இருந்தால் கேபிள் தொழிலைத் தொடங்கி விடலாம்.

டிடிஎச் என்றால் என்ன?

Direct-To-Home என்பதன் சுருக்கமே DTH.
பழைய பிரம்மாண்ட டிஷ் ஆண்டனாக்களுக்கு மாறாக சிறு அளவிலான டிஷ் ஆண்டனா மூலமாக நேரடியாக சாட்டிலைட்டில் இருந்து ஏற்கனவே புரோக்கிராம் செய்யப் பட்ட செட்டாப் பாக்ஸ் வழியாக தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை காண/கேட்க உதவுகிறது. பதிவு செய்யப் பட்ட அலை வரிசைகளை மட்டுமே இதன்வழியாக நாம் பெற முடியும். எனவே open to air சானல்கள் தவிர நாம் வாங்கும் டிடிஎச் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள சானல்களையும் டிவியில் காணலாம்.
மாதக்கட்டணம் இல்லாத டிடிடைரக்ட் தவிர டிஷ்டிவி, ஜீ, டாடா போன்றவை மாதக்கட்டணங்களுடன் டிடிஎச் சேவை வழங்குகின்றன. இப்போது சன்-டிடிஎச்சும் களத்தில் இறங்குகிறது.


இதற்கிடையில் பெருநிறுவனங்கள் வந்து கட்டுப் பாட்டு அறைகள் அமைத்து கட்டணச் சானல்களைப் பெற்று பிரித்துத் தர ஆரம்பித்தன. இளைஞர்களிடம் இருந்து சிறுமுதலாளிகள் வசம் வந்த கேபிள் டிவியை சன் டிவி உள்ளிட்ட பெருமுதலாளிகள் சுமங்கலி போன்ற பொதுக்கட்டுப் பாட்டு அமைப்பு மூலமாக கையகப் படுத்திக் கொண்டார்கள். இப்போது டிஷ் ஆண்டனாக்கள் காயலான் கடைக்குப் போயின.

கேபிள் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு டெப்பாசிட் சந்தா, கேபிள் சங்கத்தில் அனுமதி, அதற்கான கட்டணம் என இப்போது கேபிள் தொழிலுக்கு உபகரணங்கள் தேவையின்றி இணைப்புகள் தந்து சம்பாதிக்கும் புதிய முறை தோன்றியது. ஆனால் முதலீடு ஆரம்பத்தில் இருந்ததை விட அதிகம் தேவைப்படுகிறது.

இன்றைய நிலையில் வேலையற்ற இளைஞர்களின் நிரந்தர வேலை வாய்ப்பாக ஒரு போதும் கேபிள் டிவி இல்லை. தற்காலிக வாய்ப்பாக இருந்தது. ஆனால் இன்று அதையும் முதலாளிகள் தட்டிப் பறித்து விட்டார்கள்.

ஒரு புதிய தொழில் வாய்ப்பை பற்றிப் பிடித்து ஆங்காங்கே தொழில்களைத் தொடங்கிய அந்த இளைஞர்கள் ஒருபோதும் அதன் இன்னொரு முன்னேற்றத்தை மறுக்க முயல மாட்டார்கள். அவர்களை காரணமாக வைத்து கேபிள் தொழிலால் சம்பாதிக்கும் சிறு முதலாளிகள்தான் இன்று டிடிஎச் என்ற தொழில் நுட்பம் கண்டு அஞ்சி அலறுகிறார்கள்.

தூரதர்ஷன் டிடிஎச் தொடங்கி பல காலமாகியும் இதுவரை சீந்துவாரின்றிக் கிடக்கிறது. காரணம் அதை அரசே நடைமுறைப் படுத்தாமல் உதாசீனம் செய்கிறது. சன்டிவி டிடிஎச் தொழிலை ஜனரஞ்சகப் படுத்த முயல்வதால் அதை எதிர்த்து இன்று போராட்டமும் தாக்குதல் களும் நடக்கின்றனவாம். இன்று கேபிளில் சன்குழும டிவிக்கள் தெரியவில்லை....

கேபிள் டிவி என்பது முழுக்க முழுக்க சட்டவிரோதமான தொழில்.ஆனால் அரசாங்கம் வேறு வழியின்றி அனுமதித்த தொழில்... கேபிள் டிவி வீட்டுக்கு வீடு தெருவுக்கு தெரு கேபிள் இழுப்பது என்பது எந்த வரையறைக்கும் உட்படாத சட்ட விரோதமான செய்கை. எந்த அனுமதியும் பெறாமல் குறுக்கும் நெடுக்கும் செல்லும் கேபிள் வயர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அனுமதியின்றி திருட்டு விசிடியில் புதிய சினிமா படத்தை உள்ளூர் கேபிள் சானலில் ஒளிபரப்புவதையும் யாரும் கண்டு கொள்வதில்லை.

தமிழக அரசு கேபிள் தொழிலை தானே நடத்தப் போவதாகவும் மின்சார வரியம் மூலம் நடைமுறைப் படுத்தப் போவதாகவும் ஒரு செய்தி வந்தது. உடனே கேபிள் மன்னர்கள் திரண்டு போய் அரசை எப்படியோ தங்களுக்கு சாதகமாக செயல்பட செய்து விட்டார்கள்.

மின்சார வாரியம் மூலம் கூட சரியாக செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இப்போதைய கேபிள் முறை இனி அவசியமற்றது. கேபிள் மூலம் என்றால் அது தொலைபேசிக் கேபிள் மூலம் இணைப்புத் தருவதே சிறந்தது. தொலைபேசி, இணையம் போன்றவை போல தொலைக்காட்சியும் அதே கேபிளில் தர முடிக்கிற போது மீண்டும் சட்ட விரோதமான கேபிளை அரசே தாங்கிப் பிடிப்பது அவசியமற்றது.

அதை விட சன் டிவியால் டிடிஎச் உபகரணத்தை இல்வசமாகத் தர முடிகிறது என்றால் தமிழக அரசு தூரதர்ஷன் டிடிஎச்சை இலவசத் தொலைக்காட்சியுடன் இணைப்பாகத் தந்து விட்டால் தனியார் டிடிஎச்சைத் தேடி மக்கள் போக மாட்டார்கள். அதில் மாதக் கட்டணமும் இல்லை.

ஆனால் அரசும் அரசியல் வாதிகளும் இது போன்ற நல்ல மாற்றங்களை செய்யமாட்டார்கள். மற்றவர்களைச் செய்யவிடவும் மாட்டார்கள். எந்தத் தொழில் நுட்ப மேம்பாட்டையும் தற்காலிகமாகத் தடுத்தாலும் அது என்றாவது ஒரு நாள் இன்னொரு வடிவில் மேலேறி வரத்தான் செய்யும்.

19:35 Posted in விவாதம் | Permalink | Comments (13) | Email this | Tags: cable, dth, கேபிள் |  del.icio.us | | Digg! Digg