Thursday, 15 February 2007

❒ பஸ் எரிப்பு வழக்கு தீர்ப்பு

2000 ஆண்டு பிப்ரவரி 2 அன்று கல்விச் சுற்றுலா சென்ற கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் இருந்த பேருந்து கொளுத்தப் பட்டு கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்னும் மூன்று மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.

Image and video hosting by TinyPicகொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் கடந்த 2.2.2000 அன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுகவினர் நடத்திய வெறியாட்டத்தின் உச்ச கட்டமாக இச்சம்பவம் நடந்தது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கல்வி சுற்றுலா சென்ற பஸ் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகே வந்த போது மர்மக்கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து தீ வைத்தது. இதில் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி (வயது 19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய 3 பேரும் தீயில் கருகி இறந்தனர். மேலும் 18 மாணவிகள் தீக்காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். பின்னர் இந்த வழக்கு கடந்த 6.2.2000 அன்று சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் புலன் விசாரணை நடத்தி 28.4.2000 அன்று தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில் அப்போதைய தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், நகர கிளை செயலாளர் நெடு என்கிற நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்கிற ரவீந்திரன், ஊராட்சிமன்ற தலைவர் முனியப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முருகேசன், தவுலத் பாஷா, வேலாயுதம், முத்து என்கிற அறிவழகன், ரவி, வி.முருகன், வி.பி.முருகன், வடிவேல், சம்பத் மற்றும் நஞ்சன் என்கிற நஞ்சப்பன், பழனிசாமி, ராஜு, மணி என்கிற கூடலர் மணி, மாது, ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்), சண்முகம், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம், வீரமணி, உதய குமார் ஆகிய 31 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் களில் செல்லக்குட்டி இறந்து விட்டார்.

இந்த வழக்கை தர்மபுரி நீதிமன்றத்தில் இருந்து கடந்த 24.7.2000 அன்று கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நீதி மன்றத்தில் மொத்த சாட்சி கள் 386 பேரில் 22 பேர் விசாரிக்கப்பட்டனர். 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக புகார் எழுந் தது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி வழக்கை கோவைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் பஸ் எரிப்பு வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி 22.8.2003 அன்று உத்தரவிட்டார்.

இதன் பின்னர் 17.2.2005 அன்று தான் சிறப்பு வக் கீலை நியமனம் செய்து அரசு ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து 2.3.2005 அன்று சேலம் கோர்ட்டில் சாட்சி விசாரணை தொடங்கி 17.2.2006 அன்று அரசு தரப்பு சாட்சியம் முடிந்தது.

அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன், எதிர்தரப்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, கந்தசாமி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங்களும் 5.2.2007 அன்று முடிவடைந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப் பட்டது. மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப் பட்டுள்ளனர். தண்டனை நாளை அறிவிக்கப் படும் என்று கூறப் பட்டுள்ளது.

சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.

இதேபோல இந்த மூவர் உள்பட 28 பேர் மீது சாலை மறியல் செய்தது, பேருந்து கண்ணாடியை உடைத்தது, சட்டவிரோதமாக கூடுவது ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தண்டனை விவரமும் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த மாதேஷ், பழனிச்சாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.