Sunday, 10 June 2007

❒ நான் கடவுள்: வவ்வால்!

Image and video hosting by TinyPicவ்வால்களில் ஆயிரத்து 100 வகைகள் இருப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் 70% வவ்வால்கள் வானத்தில் பறந்து சென்று பூச்சிகள், சிறு பறவைகளை பிடித்து உண்பவை. மற்றவை பழங்கள், மலர்களில் இருந்து தேன் உண்ணும் இனமாகும். அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினமாகவும் திகழும் வவ்வால்களின் கழிவுகளும் மிகச்சிறந்த உரமாக இருக்கின்றன.

வவ்வால்கள் ஆயிரக்கணக்கில்கூட்டம் கூட்டமாக வாழும். மேலும் வவ்வால்கள் தங்கள் உணவுக்காக அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுபவை. வவ்வால்களின் சராசரி ஆயுள்காலம் 25 ஆண்டுகள். இந்த காலத்துக்குள் அவை சுமாராக 15 முறை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதாக பறவை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பறக்கும் பாலூட்டி என்னும் சிறப்புத் தன்மையும் வவ்வாலுக்கு உண்டு. எப்போதும் தலைகீழாகவே தொங்கிக் கொண்டிருப்பதும் வவ்வாலின் தனிச்சிறப்பு. மரக்கிளைகள், மலைக்குகைகள், பாழடைந்த கட்டிடங்களின் மேல் தளங்களில் இவை கூட்டமாக தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இவை இரவில் தெளிவாக பார்ப்பதற்கான சிறப்பு தன்மை கொண்டவை. இந்த பார்வையானது எதிரொலி மூலம் வரும் அலைமாறுபாடுகளின் வழி அமைந்தது. நமது ரடார்கள் இயங்கும் நுட்பம் வவ்வாலின் பார்வையை ஒத்தது. எனவே கடும் இருளிலும் துல்லியமாக இரையை கண்டறிந்து பிடிக்க இவற்றால் முடியும்.

இந்த தனித்தன்மை வாய்ந்த உயிரினம் குறித்து நாட்டுப்புற நம்பிக்கைகள் பல உண்டு. தாய்தந்தை சொல் கேளாத பிள்ளைகள் அடுத்த பிறவியில் வவ்வாலாகப் பிறந்து தலைகீழாக தொங்குவதாக கிராமத்தில் குழந்தைகளுக்கு கூறப்படும் அறிவுரைக்கதைகள் உண்டு. இன்னும் கூர்மையாக தாய்தந்தையரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனையால் வவ்வாலாக பிறந்து தொங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். பல கிராமங்களில் வவ்வால்கள் தங்கள் மூதாதையர் என்ற நம்பிக்கைகள் தீவிரமாக உள்ளன.

தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகிலுள்ள குளதாசபுரம் என்ற கிராமத்தில் ஒரு படி மேலே போய் வவ்வால்களையே கடவுளாக வணங்குகின்றனர் என்ற செய்தி இதற்கெல்லாம் சிகரமாக இருக்கிறது. இந்த கிராமத்து எல்லையில் உள்ள மாமரங்களில் சுமார் 200 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. இந்த வவ்வால்கள் இங்கேயே நிரந்தரமாக இருந்து வருவதோடு இந்த மக்களால் சிறப்பு பூசைகள் செய்து வழிபடப் படுகின்றன. கிராமத்தை காக்கும் காவல் தெய்வங்களாக கருதப்படும் இவைகள் மற்ற கடவுளர்களைப் போலவே தங்களை வணங்குபவர்களுக்கு அற்புதமாக நன்மைகள் செய்வதாக இங்குள்ள மக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.