Thursday, 28 December 2006
எட்டே நாளில் சாதித்தார்!

டிச.28:
10 நாட்களில் முடிக்க திட்டமிட்டு தொடங்கிய கின்னஸ் சாதனை ஓவிய முயற்சியை குமரி மாவட்ட ஓவியர் 8 நாட்களில் முடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
குழித்துறை அருகே மீனச்சலை சேர்ந்தவர் ஓவியர் ராஜசேகரன். மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர்.
விளம்பர தேவைகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை கலை நேர்த்தியோடு வரைந்திருக்கும் இவர் பிரபல தமிழ் வார பத்திரிக்கை நடத்திய ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார்.
இவர் தனது கின்னஸ் சாதனை முயற்சியாக, 36 அடி உயரம் 80 அடி அகலத்தில் நிறுத்தப்பட்ட நிலையிலிருக்கும் பலகையில் மிகப்பெரிய மனித முகத்தை வரைகிற சாதனையை நெய்யாற்றின்கரை அருகே கடந்த 18-ம் தேதி ஆரம்பித்தார்.
உலக அளவில் இந்தச் சாதனையை பல ஓவியர்கள் ஒரு குழுவாக சேர்ந்து செய்திருக்கும் நிலையில் தனியாளாக களமிறங்கிய ராஜசேகரன், காலநிலை ஒத்துழைக்காத காரணத்தால் தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே ஓவியம் வரைந்திருக்கிறார். இருந்தும் கூட 10 நாட்கள் என திட்டமிடப்பட்டிருந்தது சாதனை ஓவியம் 8 நாட்களிலேயே முழுமை செய்யப்பட்டிருக்கிறது.
கின்னஸ் விதிகளின்படி ஓவிய சாதனை முயற்சி முழுவதும் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்கள், உயர் அதிகாரிகள் ஒப்புதலுக்குப் பிறகு கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பப்படவிருக்கிறது.
இந்தச் சாதனை குறித்து ஓவியர் ராஜசேகரன் கூறும் போது, பிளக்ஸ் பிரின்டிங் வரவுக்குப் பிறகு தொழில் முறை ஓவியர்கள் நொடித்துப் போயிருப்பது உண்மை.
ஆனாலும், எந்தத் தொழில் நுட்பத்துக்கும் சவால் விடவும் தூரிகை பிடிக்கிற ஓவியனால் முடியும் என்று உலக கலைஞர்களுக்கு உணர்த்துகிற முயற்சியில் நான் வெற்றி பெற்று விட்டதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி, படம்: தினகரன்.
தொடர்புள்ள செய்தி பதிவு இங்கே
09:05 Posted in வாழ்வியல் | Permalink | Comments (13) | Email this
| Tags: guinness, art |
del.icio.us
|
|
Digg

