Sunday, 21 January 2007

அக்பரின் மனைவி-3

Image and video hosting by TinyPic"எனக்கொரு வழி தோன்றுகிறது....ஆனால் அதில் நிறைய சிரமங்களும் அபாயமும் உண்டு"

"சொல்...சொல்...சொல் சீக்கிரம்"

"பொதுவாக ஆண்கள் முன்னிலையில் நம் இனப் பெண்கள் பருவமடைந்த பின் தலையில் முக்காடு அணிந்துதானே இருக்கிறோம்? அது போலவே முகலாயப் பெண்களும் முகத்திரை அணிந்தே வருவார்கள்."

"ஆமாம், அதற்கென்ன?"

"நாம் மூவருமே மேலாடையால் முகத்திரையிட்டுத் தானே வெளியில் செல்கிறோம்? வெளியில் பார்க்கும் வீரர்களுக்கு நமக்குள் உடையின் நிறமும் அலங்காரமும் தான் வேறுபட்டுத் தெரியுமே தவிர முகம் தெரியாது. அதனால் உங்கள் உடையை எங்களில் ஒருத்தி தரித்துக் கொள்வது. தாங்கள் சேடிப் பெண் உடையில் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்றுவிட வேண்டும்"

"கண்டுபிடிக்கப் பட்டால்..."

"ஆபத்துக்குத் துணிந்து தானே இனி எதையும் செய்ய முடியும்? மேலும் நீங்கள் நம் நாட்டு எல்லை கடந்து சென்று விட்டால் அச்சமில்லை..."

"நல்ல திட்டம் தான். அப்படியே செய்யலாம். அது சரி யார் மணப்பெண்ணாக டில்லிக்குச் செல்வது?"

ஷன்மதி அச்சத்துடன் மறுத்திடவே மதுமதி துணிவுடன் அந்தக் காரியத்தில் பிரவேசிக்க ஒப்புக் கொண்டாள்.

மூன்று பெண்களும் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். ரதத்தின் அருகே பிரதாப சந்திரனின் குதிரை வந்த போது ஷன்மதி ஒரு ஓலையை அவனிடம் எறிந்தாள்.

இரவில் கூடாரமிட்டு தங்கிய இடத்தில் இளவரசியின் சுகசவுகரியங்களை விசாரிக்கும் சாக்கில் அவர்களிடம் வந்த பிரதாபசந்திரன் அவர்களின் திட்டம் அறிந்து ஆச்சரியமடைந்தான். சந்தோஷப் புயலடித்தது அவனுக்குள்...

மறுநாள் காலை மதுமதி இளவரசிக்குரிய அலங்காரங்களுடன் புறப்படத் தயாரானாள்.

புறப்படும் நேரம் சேடிப்பெண் உடையிலிருந்த ரூபாதேவி திடீரென மயங்கி விழுந்தாள். இளவரசி(யாக வேடமிட்டிருந்த மதுமதி) பிரதாபசந்திரனை அழைத்தாள்.

"என்தோழிக்கு உடல்நிலை சரியில்லை. அவளை இங்கேயே ஏதாவது ஒரு வைத்தியசாலையில் சேர்ப்பித்து விடுங்கள்"

"உத்தரவு இளவரசி"

பிரதாபசந்திரன் உபதலைவனை அழைத்து பரிவாரங்களை பத்திரமாக அழைத்துச் செல்ல கூறிவிட்டு அவர்கள் கண்மறைந்ததும் ரூபாதேவியை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ஊருக்குள் நுழைந்தான். அங்கேயிருந்த ஒரு வயதான வணிகரின் இல்லத்தில் நுழைந்தான்.

"ஐயா..நான் ஒரு ரத்தின வியாபாரி. தெற்கேயிருந்து வருகிறேன். நான் என் மனைவியுடன் யாத்திரை புறப்பட்டேன். தற்போது டில்லியில் பாதுஷாவிற்கு அவசரமாக கொஞ்சம் ரத்தினங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. வழியில் மிகவும் கள்வர்கள் பயமுண்டு. ரத்தினங்களையும் கொண்டு உடன் இவளை அழைத்துச் செல்வது கடினம். அதனால் நான் திரும்பி வரும்வரையில் இவளை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா?" என்று கேட்டான்.

"ஓ...அதற்கென்ன... தாராளமாகத் தங்கட்டும்" வணிகர் தம் மனைவியை அழைக்கவே முக்காடணிந்த அந்த மூதாட்டி வந்து ரூபாதேவியை அன்போடு உள்ளே அழைத்துச் சென்றாள்.

பிரதாபசந்திரன் ரூபாதேவி தந்த ரத்தினங்களில் சிலவற்றை வணிகருக்குத் தந்தான். அவர் அவனை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்.

பிறகு....

பிரதாபசந்திரன் விரைந்து சென்று தன் பரிவாரங்களோடு சேர்ந்து கொண்டான்.

டில்லியில்...

தன் மன்னனின் பரிசுகளையும் மணமகளையும் அக்பரிடம் ஒப்படைத்தான்.
மதுமதி மஷால் மந்திர் இளவரசியாக அக்பருக்கு மாலையிட்டாள். உண்மை எப்போது வெளிப்படுமோ என்ற அச்சமிருந்தாலும் அவளைப் பொறுத்தவரை அந்த வாழ்க்கை அவளுக்கு பெருமைக்குரிய பேறுதான். இளவரசியின் காதலுக்கு உதவி செய்ததால் அவள் சக்கரவர்த்தினியாக முடிந்ததே...

ரூபாதேவியை அறிந்த அவள் குடும்பத்துப் பெண்கள் யாருமே அதன்பிறகு டில்லிக்கு வரவில்லையாதலால் மதுமதியின் ஆள்மாறாட்ட விஷயத்தை யாருமே அறிந்திருக்கவில்லை. மஷால் மந்திர் இளவரசியாக அக்பரின் அந்தப்புரத்தில் இடம்பெற்ற மதுமதி சரித்திரத்தில் எழுதப்படாத சரித்திரப் பாத்திரமானாள்.

-oOo-

நாடு திரும்பிய பிரதாபசந்திரன் சில நாட்களில் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வணிகரின் வீடு சென்று ரூபாதேவியை அழைத்துக் கொண்டு தென்னாடு சென்று அங்கே ஒரு வணிகனாக தன் வாழ்வைத் தொடர்ந்தான். காதலொருமித்த காதலியாக ரூபாதேவியும்.

(முற்றும்)

10:40 Posted in தொடர்கதை | Permalink | Comments (0) | Email this | Tags: akbar |  del.icio.us | | Digg! Digg

Saturday, 20 January 2007

அக்பரின் மனைவி-2

Image and video hosting by TinyPicசக்கரவர்த்திக்கு சம்பந்தியாகி தங்கள் அரசுகளைக் காப்பாற்றிக் கொண்டனர் ராஜபுத்திர மன்னர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான் இன்னமும் அக்பருக்கு அடிபணியாத மஷால்மந்திர் கோட்டைக்கு படையனுப்பும் தீர்மானம் அக்பரின் சபையில் நிறைவேறியது.

இந்தச் செய்தியை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னன் பிரித்வி சந்த்ராம் மந்திரிசபையைக் கூட்டி ஆலோசனை செய்தார்.

இப்போதைய சூழலில் ஆலோசனையின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ரூபாதேவி கலங்கத் தொடங்கினாள். கிழமன்னர் அக்பருக்கு மனைவியாக பதினாயிரத்தில் ஒருத்தியாக அந்தப்புரத்தை அடைகாக்க அவளும் அனுப்பப்படப் போகிறாள், வேறென்ன?

மன்னர்களின் மண்ணாசைக்கு முன் சொந்தப் பெண் கூட பொன், பொருள் போல ஒரு பண்டமாற்றுப் பொருள்தானே? பெண்ணென்ற ஆன்மாவுக்கோ, அவளின் ஆசைகளுக்கோ அங்கே மதிப்பேது?

பிரதாபசந்திரன் இந்த வேளையில் என்ன செய்வான்? அவளது ஆசையும் அவனது கனவும் இனி .நிறைவேறாக் கனவுகளின் நிராசைகளே...

அவளது கண்களிலிருந்து கண்ணீர் முத்துகள் வாவியில் விழுந்து நீரில் சிதறியது. வாவிப்பரப்பில் அது சோகத்தின் சிதறல்களாக வட்டமிட்டுப் பரவியது.

ரூபாதேவி எண்ணியதைவிட வேகமாக அங்கே தீர்மானங்கள் உருவாகின. அக்பரின் படைகள் டில்லியை விட்டுப் புறப்படு முன்னே நேரடியாக டில்லிக்கே தங்கள் பரிசுகளை உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்தேறின. அதனால் ஏற்படும் சாதகம், அக்பரின் யாரேனும் ஒரு தளபதிக்கு முன்னால் மன்னன் பிரித்திவி சந்த்ராம் தலைக்குனிய வேண்டியிராதல்லவா?

பரிசுப் பொருட்கள் எல்லாம் தயார். மணப்பெண் அலங்கரிக்கப் பட்டாள். பயணிக்க வேண்டிய அலங்கார ரதத்தில் இளவரசி ரூபாவும் அவளது அந்தரங்கத் தோழியர் இருவரும்.

படையணி பரிவாரங்களோடு சீதனப்பொருட்களையும் மணப்பெண்ணையும் பாதுஷாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு பிரதாப சந்திரனிடம் ஒப்படைக்கப் பட்டது.

முன்னதாக பிரித்வி சந்த்ராமின் நட்புறவு செய்தியை அக்பருக்கு அறிவிக்க தூதுவன் ஒருவன் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றான்.

மணமகனாகக் கனாக் கண்டவன் மணமகளின் மணவலத்திற்கு காவலனாகச் செல்கின்றான்.

ரதத்தினுள் முக்காடிட்ட முகத்தின் செவ்வரியோடிய விழிகளில் நீர்த்தாரை. கனவுகள் எல்லாம் கலைந்து போன நிதரிசனம், நிலையற்ற வாழ்வின் நிஷ்கடூரம், முகத்தில் அறையும் உண்மைகளின் வெப்பத்தில் மௌனத்திரையிட்ட முகங்கள். ரூபாதேவியின் ஆத்மாவின் சோகம் விம்மிப் புறப்பட்டது.

"இளவரசி...அழாதீர்கள். இனி அழுவதால் எந்த பயனும் இல்லை. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்" ஆறுதல் படுத்த முயன்றாள் சேடி ஷன்மதி.

"இல்லை.... இந்த ராஜபுதனத்து மங்கை மனதை ஒருவனுக்குத் தந்துவிட்டு மணமாலையை வேறொருவனுக்குச் சூட்ட மாட்டாள் ஷன்மதி...கேட்டுக்கொள்...என் வாழ்க்கையின் கடைசிப் பயணம் இது. அரண்மனையிலேயே என் வாழ்வை முடித்துக் கொண்டிருப்பேன். பிரதாபனைக் கண்டு கொண்டே என் மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தாமதித்தேன்" ரூபாதேவியின் குரல் திடமாக ஒலித்தது.

"இளவரசீ...என்ன இது...?..." ஏக்காலத்தில் அலறினார்கள் ஷன்மதியும் மதுமதியும்.

"என் அருமைத் தோழிகளே... என்னைத் தடுக்காதீர்கள். பெண்ணை விலைபொருளாகவும், அடிமையாகவும், போகப் பொருளாகவும் கருதும் ஆண்குல ஆணவமும் மண்ணாசைக்குப் பலியாகிவிட்ட ராஜபுதனத்து மன்னர்களின் மயக்கமும் தெளியட்டும். இப்படிப்பட்ட அக்கிரம்மான உடன்பாடுகளை இனியாவது மக்கள் மறுக்கட்டும். என் உயிரற்ற உடல் மட்டுமே இனி பாதுஷாவைச் சென்றடையும்" என்று திடமாக்க் கூறிவிட்டு ஏற்கனவே இரத்தினக் கல்லைப் பொடித்து வைத்திருந்த சிமிழைக் கையிலெடுத்தாள்.

"இளவரசி! உங்கள் உயிர் விலைமதிப்பற்றது...அதை வீணாக இப்படி அழித்துக் கொள்ளக் கூடாது நீங்கள் தற்கொலை செய்து கொண்டால் உங்கள் தந்தை பிரதாப சந்திரனையும் விட்டு வைக்க மாட்டார். பாதுஷா உங்கள் தந்தையையும் விடமாட்டார்." மதுமதி இளவரசியின் இதயத்தில் படும்படி இதைச் சொன்னாள்.

"அப்படியானால் நான் மனதைக் கொன்று மானத்தை இழந்து இந்தக் கொடுமைக்கு சம்மதிக்க வேண்டுமா?"

"நான் அப்படிச் சொல்லவில்லை இளவரசி!... இதிலிருந்து விடுபட ஏதாவது வழி உண்டா என்று சிந்திப்போம் என்று தான் சொல்கிறேன்"

"மதுமதி! அப்படி ஏதேனும் வழி உண்டா என்ன? உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா?"

(தொடரும்)

15:30 Posted in தொடர்கதை | Permalink | Comments (0) | Email this | Tags: akbar |  del.icio.us | | Digg! Digg

அக்பரின் மனைவி-1

Image and video hosting by TinyPicரண்மனை நந்தவனத்தின் ஆரண்யச் சூழலில் நீராழியின் பளிங்குப் படிக்கட்டுகளில் சோகம் சுமந்த முகத்துடன் சூனியத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மஷால்மந்திர் கோட்டையின் இளவரசி ரூபாதேவி.

பெயருக்கேற்றபடி ரூபவதியாக ரூபலாவணியத்துடன் இளமையின் தலைவாசலில் வீற்றிருந்தாள் இளவரசி. ராஜபுதனத்துச் சிற்றரசான மஷால் மந்திர் கோட்டையை ஆண்ட பிரித்வி சந்த்ராமின் ஒரே புதல்வி அவள்.

வசந்தம் வரவேற்புக் கூறும் வண்ணமயமான நந்தவனத்தில் இளவரசிக்கு மட்டும் சோகம் எங்கிருந்து வந்தது?

அந்த வயதுப் பெண்கள் பலரின் கனவுகள் போலவே ரூபாதேவிக்கும் ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவுகளின் நாயகன் குதிரைப் படைத்தலைவன் பிரதாப சந்திரன். வீரனும் வேந்தனின் புதல்வியும் கொண்டிருந்த காதல் கனவுகளை அறிந்தவர்கள் ரூபாதேவியின் இரண்டு அந்தரங்கத் தோழியர் மட்டுமே.

காதலைக் கடிமணமாக்க தக்க தருணம் காத்திருந்தனர் காதலர் இருவரும். தன் வீரத்தை தகுந்த முறையில் வெளிப்படுத்தி, தன் மன்னனின் மனப்பூர்வமான பாராட்டின் போது வீரத்தின் வெகுமதியாக இளவரசியைப் பரிசாகப் பெறுவதே பிரதாபசந்திரனின் நோக்கம்.

ராஜபுதனத்தில் வீரம் மட்டுமே ஆண்களின் அழியாச் சொத்து. அதுவே ஒருவனின் தகுதிக்கான சான்று. வீரவிளையாட்டுகள் அடிக்கடி நடக்கும். இது தவிர எல்லைப் போர்கள் அவ்வப்போது இடைவிடாது நடந்து வரும் என்பதால் போர்த்திறனைக் காட்ட எந்த வீரனுக்கும் தவறாத வாய்ப்புகள் இருந்தன.

வீரமும் போர்க்குணமும் ராஜபுத்திரர்களின் ரத்தத்தில் ஊறியவையாக இருந்ததால் ராஜபுத்திர இளவரசர்கள் ஒவ்வொருவரும் தனக்குரிய நாட்டை தானே போரில் சம்பாதித்துக் கொள்ள விரும்பினார்கள். அதனால் வழிவழி வந்த வாரிசுரிமைகள் அங்கே மதிப்பிழந்து கொண்டிருந்தன.. இதனால் அண்ணன் தம்பிக்குள், உறவினர்களுக்குள் என அரச குடும்பங்களில் போர்முழக்கம் இருந்து கொண்டிருந்தது. போர்வீரர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாதிருந்தது.

தன் இனத்தவருடன் எப்போதும் மோதிக்கொண்டு போர் அல்லது வீரமரணம் என்று துணிவோடு களமிறங்கி போர்க்களமே கதியென்றிருந்த ராஜபுத்திர சிற்றரசர்கள் முதன்முறையாக ஒரு பேரரசுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர்.

முகலாயச் சக்கரவர்த்தி அக்பரின் படைகள் ராஜபுதனத்தின் சிற்றரசுகளை தன்னுள் அடக்கி நாடுமுழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் புறப்பட்ட போதுதான் ராஜபுத்திரர்கள் முதன்முறையாக தோல்வியை ருசிக்க ஆரம்பித்தனர். ராஜபுத்திரர்களின் ஒற்றுமையின்மையால் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து அந்தப் பேரரசுக்கு பணிய ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் சிலர் துணிந்து போரிட்டனர். காட்டாற்று வெள்ளம்போல் பொங்கிவரும் சாம்ராஜ்யப் படைகளுக்கு முன் சிற்றரசர்களின் சின்னப் படைகள் எம்மாத்திரம்?

எதிர்த்தவர்கள் எல்லாம் அழிந்தனர். எஞ்சியவர் பணிந்தனர்.

தோல்வி நிச்சயம் என்று அறிந்து கொண்டே போரிட்டு அழிவதைவிட அடிபணிந்து ஆட்சியை தக்கவைப்பதே மேல் என்று கருதிய ராஜபுத்திர மன்னர்கள் அக்பரின் படைகள் தங்கள் நாட்டை நோக்கி வருவதை அறிந்ததுமே வரவேற்பு வளையங்களும் பரிசுப்பொருட்களுமாக எதிர்நோக்கி வரவேற்கத் தொடங்கினர். கூடவே வயதுவந்த பெண்மகள் இருந்தால் அவளை மாமன்னர் அக்பருக்கு மணமகளாக சீதனப் பொருட்களுடன் அனுப்பி வைப்பதும் வழக்கமாயிற்று.

இப்படியாக கிழப்பருவம் வாய்ந்த மன்னருக்கு மணமுடிக்கப் பட்ட பெண்களால் அக்பரின் அந்தப்புரம் நிறைந்தது.

அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்பது புராணம். டில்லியின் பாதுஷா அக்பருக்கும் பதினாயிரத்துக்கு குறையாத பத்தினிகள்...

(தொடரும்)

சாண்டில்யன் கதைகள் படித்து சரித்திரக் கிறுக்குப் பிடித்து அலைந்த போது எழுதிய கதை. தூசி தட்டி உங்கள் பார்வைக்கு...

10:10 Posted in தொடர்கதை | Permalink | Comments (0) | Email this | Tags: akbar |  del.icio.us | | Digg! Digg