Saturday, 28 April 2007

❒ மீனாட்சியின் வேண்டுகோள்

மங்கை அவர்களின் பதிவில் [நான் தாங்க மீனாட்சி பேசறேன்...] மீனாட்சி சொல்லியுள்ளபடி சிவப்பு ரிப்பனை இட்டு ஆதரவு தர விரும்புகிறவர்களுக்காக இந்த நிரலை இட்டுள்ளேன்.




Friday, 19 January 2007

இந்திரலோகத்தில் எயிட்ஸ்-4

Image and video hosting by TinyPic"மன்னவா...நேரமாகிக் கொண்டிருக்கிறது... யாக பூமியில்..." கூட வந்திருந்த சுட்டெரிக்கும் சூரியன் நினைவு படுத்தினான்.

"ஆங்...யாகபூமி..ஆமாம்...
சரி...நீங்களெல்லாம் போய் அவில் வாங்கிக் கொள்ளுங்கள்...நான் பிறகு வருகிறேன்."

"இல்லை மன்னா... சுவாமிஜி சபித்துவிடப் போகிறார்."

"ஹா..ஹா..ஹா.. இது கலியுகம் என்பதை மறந்துவிட்டாயா...மனித சாபங்கள் நம்மை இப்போது ஒன்றுமே செய்ய முடியாது"

"உத்தரவு மன்னா"

தேவர்கள் எல்லாம் போனவுடன். ஐராவதம் "நான் காட்டுக்குள் கொஞ்ச நேரம் போய்வரவா" என்று கெஞ்சிக் கேட்டது. பிடியானையின் பிளிறல் பக்கத்திலேயே கேட்டுக் கொண்டிருந்ததில் ஐராவதத்துக்கும் இருப்புக் கொள்ளவில்லை. தொல்லை விட்டால் போதுமென்றிருந்த தேவேந்திரனும் சரியென்று சொல்லிவிட்டு ஊருக்குள் நடந்தான்.

மற்றவர் பார்வைக்கு தன்னை மறைத்துக் கொண்டு நடந்தவன் பரிமளாவின் வீடு வந்ததும் அருகே நின்று பார்த்தான். வாசல் கதவு பூட்டியிருந்தது. திறந்திருந்த சன்னல் வழியே எட்டிப் பார்த்தான். பரிமளா அப்போதுதான் உடைமாற்றி முடித்திருந்தாள். அடடா கொஞ்சநேரம் முன்னால் வராமல் போனோமே என்று தன்னைத் தானே குட்டிக் கொண்டான்.

சூழ்நிலையைக் கவனித்தான். வீட்டில் யாருமே இல்லை.
இதுதான் சரியான நேரம்*.

-oOo-

யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு பரிமளா கதவைத் திறந்தாள்.

இவன்...இவன்...
அந்தக் கூத்தாடிக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லவா? இங்கே எதற்காக வந்திருக்கிறான்.

"யாரு..யார்..உங்களுக்கு யாரு வேணும்..என்ன வே..ணும்.." பரிமளா கொஞ்சம் திணறியபடி கேட்டாள்.

தேவேந்திரன் நேரடியாகவே "நீ...நீ தான் வேண்டும்" என்றான்.

"என்ன...என்ன சொல்கிறாய்" பரிமளா பதறினாள். அவள் பயந்து விட்டாள். அவன் கதவை மறித்துக் கொண்டு நின்றிருந்ததில் வெளியே போகவும் முடியாமல் இருந்தது.

தேவேந்திரன் துணிவுடன் அவள் கையைப் பற்றினான்.

பரிமளா தன் கையை விடுவித்துக் கொண்டு சில அடிகள் பின்னோக்கிப் போய் நின்றாள்.

"அடப்பாவி... என்ன காரியம் செய்யிற.. என்னை என்னான்னு நினைச்சே...தமிழ்ப்பொண்ணுடா நானு...என்னைத் தொட்டே நடக்கிறதே வேற" என்றாள்.

"என்ன செய்துவிடுவாய்..பெண்ணே" என்றான் எகத்தாளமாய்...

"பத்தினி சாபம் வாங்கினே..நல்லாவே இருக்க மாட்டே"

"ஹா..ஹா"

"நான் ஒருத்தனுக்கு முந்தானை விரிச்ச பத்தினியா இருந்தா என் சாபம் பலிக்கட்டும்... கண்ட பொண்ணையும் பெண்டாள நினைக்கிற ஆம்பிளைகளுக்கு கிடைக்கிற கொடிய நோய் உனக்கும் வரட்டும்...அந்த நரகத்தை அனுபவிச்சு நீயும் துடிக்கணும்"

[இந்தக் கதையை இதோட நிறுத்திக்கலாம் ஆனா லாஜிக் இடிக்கிறதே? கலியுகத்தில மனுச சாபம் பலிக்காதாமே...ஆகவே...]

தேவேந்திரன் பரிமளாவை கற்பழித்தான். (ஸாரி யாரும்... யாருடைய... கற்பையும் அழிக்க முடியாது...அதெல்லாம் அவரவர் அழிச்சுக்கிறது தான்) வன்புணர்ந்தான்...

-oOo-

(இதுதான் சரியான நேரம்*... இதுக்கு கீழ இருக்கிற எல்லாத்தையும் ரப்பர் வெச்சு அழிச்சிட்டு...)

சன்னல் வழியே பார்த்தபோது சுந்தரமும் பரிமளாவும் ஜோடியாக இருக்கிற படம் கண்ணில் பட்டது. அகலிகையிடம் செய்ததுதான் இங்கேயும் சரிவரும்...

தேவேந்திரன் சுந்தரமாக உருமாறினான்.

கதவைத் தட்டினான்.

"என்னங்க...ஆஸ்பத்திரியில் இருந்து எப்போ... வீட்டுக்கு வந்தீங்க...நேரா இங்கேயே வந்துட்டீங்க"

"எனக்கு நல்லா சுகமாகி விட்டதுன்னு சொல்லிட்டாங்க"

அவள் சொன்னதை வைத்தே அவளுக்கு பதில் கொடுத்தவன் அவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு போனான். குணமாகி விட்டது என்பதை சந்தேகமாக பார்த்தவள் அவனின் அவசரத்தை புரிந்து கொண்டாள்.

டாக்டர் சொன்ன பாதுகாப்பு கூட இல்லையே...என்று தவித்தவள் அவனின் இறுக்கமான அணைப்பில் நெகிழ்ந்து போனாள்.

ஏற்கனவே சுந்தரத்துக்குள்ளிருந்து பரிமளாவிற்கு பரிமாற்றம் பெற்றிருந்த உயிர்க்கொல்லி உயிர்கொண்டு தேவேந்திரனுக்குள் புகுந்தது.

இந்திரலோகத்தில் எயிட்ஸ்-3

Image and video hosting by TinyPicரிமளாவிற்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரி ராஜா வேசம் போட்டுக்கொண்டு யானைக்கு வேற வெள்ளைச்சாயம் பூசிக்கொண்டு கோமாளி மாதிரி திரிந்தவர்களைக் கண்டவுடன் சிரிப்புத் தான் வந்தது. ஆனாலும் அவள் சிரிக்கவில்லை.

அவளுக்கு இன்னும் அழக்கூடிய பக்குவமே வரவில்லை. ஆனால் அழ வேண்டிவளாகி விட்டாள். பதினாறு வயதில் அவளைப்பிடித்து மாமன் மகன் என்று சுந்தரத்துக்கு கட்டி வைத்து விட்டார்கள் படிக்க ஆசைப்பட்டும் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று.

சுந்தரம் ஒரு தேசிய பர்மிட் லாரியில் ஓட்டுநர். அவனுக்கு வயது 32 அவள் வயதில் இரண்டு மடங்கு. சொந்தம் விட்டுப் போகக்கூடாதென்று பாட்டியும் அத்தையும் அப்பாவுமாக பேசி முடிவு செய்துவிட்டார்கள்.

பார்வதி டீச்சர் வந்து படிக்கிற பிள்ளைய இப்பிடி பாதியில் படிப்பை நிறுத்தலாமா என்று தீவிரமாக வாதாடியும் அப்பா மனசு இளகவேயில்லை. அவள் தோழி, அவள் பட்டணத்தில் படித்து வந்தவள், சொன்னாள் நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது நல்லதில்லை என்று, அவள் என்ன செய்ய முடியும்?

கல்யாணம் முடிந்தது. பட்டணத்தில் இருக்கும் கணவன் வீட்டுக்கு ஏற்கனவே வெறும் மருமகளாக சென்று வந்தவள் இப்போது மணமகளாகவே குடிபுகுந்தாள்.

வயது 16 தான் என்றாலும் எல்லாப் பெண்களையும் போல கல்யாணமானதும் அவளும் பெரிய மனுசியானாள். இது உடல் ரீதியான மாற்றமல்ல. முழு மனரீதியான மாற்றம். உடலின் வளர்ச்சியை அவள் சில ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருந்தாலும் அறிவு முதிர்ச்சி அந்தப் பதினாறு வயதில் எப்படித்தான் வந்து விடுகிறதோ? என்னவோ...கல்யாணம் என்ற சுமை சுகமான சுமையாக பெண்களின் சுபாவத்தையே மாற்றி விடுகிறாற்போல... குழந்தைத்தனமும் துடுக்குத் தனமும் மாறாதிருந்த அந்த பெண்ணுக்கு ஒருசில மாதங்களில் பறித்து நடுகிறாற் போன்ற மாற்றத்தையும் சகித்துக் கொள்கிற பொறுப்புணர்ச்சி எப்படி வந்து சேருகிறது?

கணவன் நாடாறு மாதம் காடாறு மாதம் போல ஒரு முறை லாரியில் ஏறி விட்டால் திரும்பி வர சுமார் 20 நாட்களாகி விடும் திரும்பி வந்து 10 நாட்கள் போல வீட்டில் குட்டி போட்ட பூனை போல சுற்றி வருவான். பின்னும் அடுத்த சுற்று.

கல்யாணமாகி ஆறுமாசமாகி வர சுந்தரம் உடம்பு மெல்ல இளைக்க ஆரம்பித்தது. அடிக்கடி சோர்ந்து படுக்க ஆரம்பித்தான். ஒழுங்காக வேலைக்கும் போக முடியவில்லை. அக்கம் பக்கமெல்லாம் கல்யாணமானதும் மாப்பிள்ளைகள் சதைபோட்டுப் பார்த்திருந்ததால் இந்த மாப்பிள்ளையின் இளைப்பு எல்லோர் கண்ணுக்கும் பளிச்சென்று பட்டது. மோகினி அடித்து விட்டதாக குறி சொல்லும் பாட்டி சொல்லிவிட்டுப் போனதில் அவனுக்குத் தீட்டுக் கழிக்க பூசாரியை அழைத்து சின்னதாக பூசை செய்தார்கள்.

உண்மையில் பல வருடங்களுக்கு முன் ஒரு முறை மும்பைக்குச் சரக்கேற்றிக் கொண்டு போகையில் வழியில் நின்றிருந்த ஒரு மோகினி கண்ணடித்ததில் வீழ்ந்தவர்கள் தான் அவனும் சக டிரைவரான சம்பந்தமும். இன்னொரு லாரியில் போகையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சம்பந்தம் முன்கூட்டியே நிரந்தரப் பயண்ம் போய்விட சுந்தரம் மட்டும் விதியின் வலிய கரங்களில் தானாக சிக்கிக் கொண்டான்.

ஜுரம் என்று மருந்து வாங்கப் போனபோது புதுசாக கட்டிய ஆஸ்பத்திரியின் லேபரட்டரிக்கு வேலை கொடுக்கவென்று அவனுடைய ரத்தம் பரிசோதிக்கப் பட்டதில் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்று மறுநாள் சோதனைக்குப் போனவனை ஆஸ்பத்திரியில் அவர்களாகவே சேர்த்தார்கள். தொடர்ந்து காசம் போலொரு அறிகுறி தென்பட அதற்கும் மருந்து கொடுத்தார்கள். சில தினங்களிலேயே டாக்டருக்குத் தெரிந்து விட்டது. HIV பரிசோதனையும் செய்து உறுதிப் படுத்திக் கொண்டார். அவனைத் தனியாக அழைத்து விசாரித்தார்.

முதலில் ஒன்றையும் ஒப்புக் கொள்ளாதவன் பிறகு மெல்ல நடந்ததைச் சொல்லி விட்டான். டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். இனி பரிமளாவைத் தொடக்கூடாதென்று. அவளிடமும் விவரம் சொல்லி விட்டார்.

அவர் சொன்னது முழுவதும் புரியாவிட்டாலும் கணவனுக்கு வந்திருப்பது ஒரு தீராதவியாதி என்பதையும் அவன் உயிருக்கு இனி உத்தரவாதமில்லை என்றும் அறிந்து கொண்டாள்.

விவரமறிந்த குடும்பத்தினர் அவனை கண்டமேனிக்கு ஏசினார்கள். பிறகு விவரம் வெளியானால் குடும்பத்துக்குத் தான் அவமானம் என்று சொல்லி பரிமளாவிடமும் யாரிடமும் சொல்லக் கூடாதென்று சொல்லி விட்டார்கள். அவளும் கேட்டவர்களிடம் மஞ்சக்காமாலை என்று சொல்லிச் சமாளித்தாள்.

பொது அறிகுறிகளின் கடுமை குறைந்த பின் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனாலும் உள்ளுக்குள் இருந்த நோயின் கடுமை கூடக்கூட அவனுக்குத் தினவெடுத்தது. டாக்டர் சொன்னதை மீறி அவளுடன் உறவு கொண்டான்.

பிறகு டாக்டர் விவரம் அறிந்து கோபித்துக் கொண்டார். என்றாலும் இனி இம்மாதிரி நிகழ்ந்தால் பாதுகாப்பு அணிந்து கொள்ளச் சொல்லி விட்டார். இதை அன்றே செய்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம் என்று சொன்னார்.

அடிக்கடி உடம்புக்கு வருவதும் சிலமாதங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதும் பிறகு வீட்டுக்கு வருவதுமாக காலம் போய்க்கொண்டிருந்தது.

அவன் மறுபடி பட்டணத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டபோதுதான் கிராமத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அங்கே ஊருணி கிணறெல்லாம் வற்றிப் போயிருந்தது.

பட்டணத்தில் தண்ணீரைக் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருந்தது. எங்கோ ஊருக்கு ஒதுக்குப் புறமாக சட்டவிரோதமாக ஆழ்குழாய் இறக்கி தண்ணீர் கொண்டு வந்து விற்கும் லாரிகள் நிறைய இருந்தன.

ஆனால் இங்கே அதற்கும் வழியில்லை. ஊர்ப்பெண்கள் எல்லாம் ஒன்று கூடி பக்கத்து ஊரில் இருந்த பெரிய ஏரியின் கிழக்கு மூலையில் கொஞ்சமாக இருந்த தண்ணீரில் பங்கு பெற போய்வருவார்கள். அப்படி ஒருமுறை அவர்களுடன் போனபோதுதான் பரிமளா அந்த கூத்தாடிக் கூட்டத்தைப் பார்த்தாள்.

(தொடரும்)

Thursday, 18 January 2007

இந்திரலோகத்தில் எய்ட்ஸ்-2

ழை வேண்டி மகாயாகம் நடத்திக் கொண்டிருந்த மகாமுனி சுவாமி சுபிட்சானந்தா தேவர்கள் வந்து அவில் பாகம் எடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்.

மகாயாக முழக்கத்தால் உறக்கம் கலைந்த இந்திரன் அந்தப்புரம் விட்டேகினான். ஐராவதத்தை தயாராக்கச் சொல்லி சக தேவர்களுடன் அவில்பாகம் பெற யாகபூமி நோக்கிப் புறப்பட்டான்.

பாதிவழியில் ஐராவதம் கீழே காட்டில் ஏதோ ஒரு பிடி யானையை கழுகுப் பார்வையில் கண்டுவிடவே அது நேராக கானகத்தை நோக்கி சென்றது. வாகனம் வழிமாறியதை உணர்ந்து தேவேந்திரனும் தேவர்களும் திசை திருப்புவதற்குள் ஐராவதம் கானகத்துக்கு அருகேயுள்ள காப்பியக்குடியில் இறங்கிவிட்டது.

சரி வந்ததுதான் வந்தோம். சற்று இளைப்பாறிச் செல்வோமே என்று எல்லோரும் அந்தக் கிராமத்தின் கானகச் சோலையில் இறங்கினார்கள். நீண்டதூரப் பயணக் களைப்பு நீங்க முகம் அலம்ப நீர் தேடிய போது அங்கே இருந்த தடாகம் வற்றிக் கிடந்தது. சோலையில் மரங்கள் எல்லாம் காய்ந்து கிடந்தன. நல்ல நிழல்கூட அங்கில்லை.

Image and video hosting by TinyPicஅப்போது சில பெண்கள் கரகாட்டக் காரர்கள் போலத் தலையில் குடங்களுடன் வரிசையில் சென்று கொண்டிருப் பதைக் கண்டார்கள். அவர்களிடம் போய் முகம் கழுவத் தண்ணீர் கேட்டார்கள்.

அவர்களில் முதிய பெண்ணொருத்தி "இங்கே குண்டி கழுவ தண்ணியில்ல. உனக்கெல்லாம் முகங்கழுவ தண்ணி வேணுமா? ஆமா எந்தூருல நாடகம் போட்டு வாறீய?" என்று கேட்டாள்.

"அம்மா நாங்கள் தேவர்கள்... யாகத்துக்காக வந்தோம். வழியில் இளைப்பாற இங்கே இறங்கினோம்" என்று தண்ணீர் கேட்ட தேவன் சொன்னான்.

"உன்ர சாதிய ஆரு கேட்டா...சரிசரி யாகத்துக்காகன்னு போனாலும் இப்பிடி வேசங்கட்டிட்டா போணும்" என்று முனகிக் கொண்டே "குடிக்கத் தண்ணி வேணும்னா ஒருவாய் வாங்கிக்கோ" என்று இரங்கினாள்.

"குடிப்பதற்கு எங்களுக்கு நீர் தேவையில்லை. நாங்கள் தாகமில்லாதவர்கள்..." என்றான்.

"ஆமாமா விடியவிடிய கூத்தடிச்சுட்டு சாராயத்தைக் குடிக்கிறீகளே?... பின்னே குடிதண்ணி எதுக்கு...?" என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு நடந்தாள்.

"இவளென்ன நம்ம விவகாரங்களை அப்படியே சொல்கிறாளே இவளுக்கெப்படி தேவலோக சமாச்சாரங்கள் தெரியும்?" என்று தேவர்கள் வியந்தார்கள்.

பலமைல் நடந்து தண்ணீர் கொண்டுவரும் அந்தப் பெண்கள் அவர்களைக் கடந்து செல்லும் போது இடையில் ஒரு பெண் ஒரேயொரு முறை மின்னல் வெட்டுப் போல முகம் திருப்பியதும் தேவேந்திரனுக்கு, வந்த வேலை மற்ந்து போனது.

(தொடரும்)

Wednesday, 17 January 2007

இந்திரலோகத்தில் எய்ட்ஸ்

Image and video hosting by TinyPicகாலை எழும்போதே ஒரே அசதியாக இருந்தது. தேவேந்திரனுக்கு. சபைக்கு வரும்போது ஒரே மயக்கமாக வந்தது. ஊர்வசியின் நாட்டியத்தை ஜொள்ளு விட்டுக் கொண்டு ரசிக்கும் இந்திரன் அன்று சரியான மூடில் இல்லை. இதைக் கவனித்து விட்ட இந்திராணி சபை கலைந்ததும் தன்வந்திரியை அழைத்துவரச் சொன்னாள்.

தன்வந்திரி இந்திரனிடம் தன் பரிசோதனைகளை முடித்துவிட்டு கொஞ்சம் அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்.

"அரசே..! உங்களுக்கு கொஞ்சம் விவகாரமான நோய் வந்திருக்கிறது. பூலோகத்தில் உங்களை மாதிரி தீராத விளையாட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே வருகிற நோய். நீங்கள் கொஞ்ச நாளைக்கு அந்தப்புரம் போகக் கூடாது"

என்றார். ஏதோ கஷாயத்தை அமுதில் கரைத்துக் கொடுத்து விட்டு பத்திய முறைகள் எல்லாம் விளக்கமாகச் சொன்னார்.

தேவேந்திரன் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் இந்திராணியின் நச்சரிப்பு இல்லாமல் இருக்கலாமே என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு தன்வந்திரி திரும்பிப் போனவுடன் ரம்பையைத் தேடிப் போனான். தன் காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருந்த ரம்பை திடீரென தேவேந்திரன் வருவது அறிந்தவுடன் காதலனைப் பேக்கப் செய்து அனுப்பி விட்டு தேவேந்திரனை உபசரித்தாள்.

சில மாதங்களில் தேவேந்திரனுக்கு உடம்பு இளைக்க ஆரம்பித்தது. முன்னே சாபத்தால் ஆயிரம் கண் வந்தது போல உடம்பில் கொப்புளங்களும் வரத் தொடங்கின. இதற்குள் ஊர்வசி, ரம்பா, மேன்காக்களின் காதலர்களுக்கும் மற்ற தேவர்களுக்கும் அதே நோய் வரத் தொடங்கியிருப்பதாக தன்வந்திரி வந்து சொன்னார். அவர் அந்த நோய் எப்படிப் பரவுகிறது என்று சொன்ன விளக்கம் அவனுக்கு கொஞ்சம் அசூயையாக இருந்தது.

ஆபத்பாந்தவரான மகாவிஷ்ணுவிடம் போய் ஆலோசனை கேட்பது தவிர வேறு வழி இருக்கவில்லை. சிவபெருமான் இதை அறிந்தால் தன் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தே விடுவார். உடம்பில் ஒருத்தியையும் தலையில் இன்னொருத்தியையும் வைத்திருந்தாலும் முறையான மனைவியரைக் கட்டிய அவரிடம் போய் யோசனை கேட்டால் ஆபத்து தான். அதனால் தன்னைப் போலவே அவதாரம் தோறும் விளையாடும் மாலவனிடம் போய் ஆலோசனை கேட்பதே மேல் என்று நினைத்தான்.

விஷயத்தைக் கேட்டவுடன் மகாவிஷ்ணு மந்தஹாசம் புரிந்தார். அவரது மனக்கண்ணில் பூலோகத்தில் தேவேந்திரன் வம்பு பண்ணிய பெண்ணொருத்தி இட்ட சாபம் காட்சியாக விரிந்தது.

[தொடரும்]

பாலபாரதியின் விடுபட்டவை: இதுவும் இந்து பண்டிகையே! பதிவில் தரப்பட்ட ஆலோசனையை சிரமேற்கொண்டு இந்த எயிட்ஸ் இதிகாசத்தின் முதல் பாகத்தை எழுதியிருக்கிறேன்.

(ஆன்மீகவாதிகள் அடிக்க வராதீர்கள் புராணத்தில் இல்லாத எதையும் இங்கே அதிகப் படியாக எழுதவில்லை என்று உறுதியளிக்கிறேன்.)

இதை ஒரு மெகா காவியமாக தொடரலாம். எனவே இதன் இரண்டாம் பாகத்தை யாரைத் தொடரச் சொல்லலாம்?