Wednesday, 25 October 2006

அப்சல் தீவிரவாதியா?

உலகெங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுத்து வரும் நிலையில் இந்தியாவில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சலை முன்வைத்து இந்த விவாதம் இப்போது எழுந்துள்ளது. தமிழ் வலைப்பதிவுகளிலும் காரசாரமாக விவாதிக்கப்படும் இந்த விஷயத்தில் மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு அப்பால் அப்சல் தேசத்துரோகியா இல்லையா என்றும் விவாதம் சூடுபறக்கிறது.

சிலர் மிகத்தீவிரமாக அப்சல் தேசத்துரோகிதான் என்று கூறுவதற்கு அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணமே பிரதானம் என்பதாலும் அவர்களின் குரல் வேறு சூழலில் இத்தனை உரத்து ஒலித்திருக்காது என்பதாலும் இங்கே மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அப்சல் தேசத்துரோகியா இல்லையா என்பதே முன் நிறுத்தப்படுகிறது.

இன்னொரு வலைப்பதிவர் அப்சல் குற்றவாளியே அல்ல என்று நிருபிக்கும் சான்றுகளுடன் அப்சலின் மரண தண்டனையை மறுதலிக்கிறார். அப்சல் மனம் திருந்திய தீவிரவாதி எனில் இந்த முறை ஏன் தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

நீதிமன்றம் ஒருவரை குற்றவாளியாக அறிவித்து உச்சநீதிமன்றம் வரை அதை ஆமோதித்து மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றவாளியே அல்லவென்று வெறுமனே குரலெழுப்புவதில் பயனேதுமில்லை.

அப்சலின் குற்றம் தேசத்துரோகமா இல்லையா என்பது குறித்து சிந்தித்தால் தேசத்திற்கு எதிரானவர்கள் தேசத்துரோகிகள் என்று எளிதான முடிவை கூறிவிடலாமென்றாலும் ஒருவர் தேசத்துரோகியாவதற்கான காரணங்களையும் அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிவிட முடியாது.

அப்சலின் குடும்பத்தை காட்டி மீடியா பரிதாபத்தை உருவாக்க முயற்சிப்பதான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் ஒரு தேசத்துரோக கைதியின் குடும்பத்திற்கு விளையும் இன்னல்களை எடுத்துக்கொண்டால் மரணதண்டனை நிறைவேற்றப்படுதலே நீண்டகால நோக்கில் அக்குடும்பத்துக்கு ஆறுதலளிக்கக் கூடியது.

துரதிருஷ்டவசமாக திருந்தி வாழ்வதற்கான சூழல் ஒருபோதும் ஒரு தேசத்துரோக குற்றவாளிக்கு கிடைப்பது அரிது. சரணடைந்த முன்னாள் தீவிரவாதி, மீண்டும் தண்டிக்கப்பட்ட நிலையில் திருந்தி வாழும் சூழல் நம் சிறைக்கூடங்களில் இல்லாததால் ஆயுள் தண்டனைக்குப் பிந்திய விடுதலை குற்றவாளிக்கோ குற்றவாளியின் குடும்பத்தாருக்கோ, அவரால் சமூகத்துக்கோ, சமூகத்தால் அவருக்கோ நிம்மதியைத் தர இயலாது.

இரண்டாவதாக நாடாளுமன்ற தாக்குதலைப் பொறுத்தவரை பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்ல வேளையாக ஆபத்தின்றி தப்பித்து விட்டார்கள் என்று கூறுவதில் உயிரிழந்த காவலர்களின் உயிருக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. தேசத்தின் எல்லை காக்கும் வீர்ர்களைப்போலவே தேசத்தின் ஆட்சியாளர்களைக் காத்து உயிர்விட்டவர்கள் அவர்கள்.

இந்த நாட்டின் குற்றவியல் சட்டம் மரண தண்டனையை ஏற்றுக்கொண்டிருக்கும் வரை அதன் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். அதேசமயம் மரண தண்டனை கூடாது என்ற விவாதம் ஆரோக்கியமான சூழலில் முன்னெடுக்கப்பட்டு அரசியல் சட்டப்படி அது நீக்கப்பட வேண்டும்.

இங்கோ ஒரு முஸ்லிம் என்பதற்காகவே முஸ்லிம்கள் அப்சலை மரணதண்டனையிலிருந்து விடுவிக்கக் கோருவதும் அதற்கு மரண தண்டனை கூடாது என்ற விவாதத்தை முன்னெடுப்பதும் ஒருபுறம், அவர் முஸ்லிம் என்பதற்காகவே தேசத்துரோகக் குற்றச்சாட்டில் அந்த மரண தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்று இந்துத்வா ஆவேசக்குரல் எழுப்பி வருவதும் நடக்கிறது.

இதற்கிடையில் இந்த சூட்சுமங்களைப் புரிந்தோ புரியாமலோ நடுநிலைவாதிகள் இந்தப்பிரச்சினையை மரண தண்டனை விவாதத்திற்குள் கொண்டுவந்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

மரண தண்டனை என்பது பழிவாங்குதல் என்பதாக இருக்கக்கூடாது எனபது உட்பட விவாதிக்கப்படும் விஷயங்களில் குற்றத்திற்கான தண்டனை, தவறை உணர வைக்கும் வாய்ப்பு என்பனவற்றை விட விதிக்கப்படும் தண்டனை அதே தவறை செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கு அச்சத்தை தரவேண்டும் என்றும் கூறலாம்.

இப்போது பந்து ஜனாதிபதியின் கையில்...! அது எங்கே விழப்போகிறது என்பதைப் பொறுத்து இந்த விவாதங்கள் திசைமாறலாம்.

மரண தண்டனை நிறைவேற்றப் பட்டாலும் சரி, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டாலும் சரி...அடுத்த சில தினங்களில் எல்லாம் அமைதியாகி விடும். அடுத்த மரண தண்டனைக்கைதி மீடியா வெளிச்சத்துக்கு வரும்வரை...!