Tuesday, 05 December 2006
விளம்பர ரகசியம்-தன்னம்பிக்கை முனை-2
மாப்பிள்ளை விநாயகர்,காளிமார்க்,பவண்டோ,டொரினோ
இதெல்லாம் என்ன?
உள்ளூர் குளிர் பான உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சுதேசி குளிர் பானங்கள் இவை.
இப்போது இவையெல்லாம் எங்கே?
பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியால் முகமிழந்து போய்விட்டன.
இது எப்படி நிகழ்ந்தது?
வெறும் ரூ. 1.50 விலைமதிப்புள்ள கோலா குளிர்பானங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் எல்லோரும் வாங்கிக் குடிப்பது எப்படி? இந்த நிறுவனங்கள் ரூ. 1.50 விலையுள்ள குளிர்பானத்தை கிட்டத்தட்ட ரூ.5 செலவு செய்து விளம்பரம் செய்கின்றன. பிரபலமான, ஏராளமான ரசிகர்களைக் கொண்ட சினிமா நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும் கொண்டு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் வழி இந்தப்பானங்கள் விளம்பரப் படுத்தப் படுகின்றன.சரியான விளம்பரம் இருந்தால் பயனற்ற பொருளையும் பயங்கரமாக விற்பனை செய்ய முடியும் என்பதற்கு இவையே முக்கிய சான்று. விலையைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் வாங்கிப் பயன்படுத்த காரணமே இந்த விளம்பரங்களின் கவர்ச்சி தான். இவ்வளவு செலவு செய்து விளம்பரப் படுத்த முடியாத உள்ளூர் தயாரிப்புகள் இதனால் தான் முடங்கிப் போகின்றன.
பிரபலங்களைக் காட்டினால் தான் விளம்பரம் வெற்றி பெறும் என்பதில்லை. விளம்பரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
![]() |
பெண்களின் கவர்ச்சி என்பது இன்றைய விளம்பர உலகில் அதிகம் பயன்படுத்தப் படும் விஷயம். ஆண்கள் பயன்படுத்தும் பொருட்கள் கூட பெண்ணை கவர்ச்சியாகக் காட்டியே விளம்பரப் படுத்தப் படுகின்றன. ஆனால் அப்படி கவர்ச்சி காட்டி விளம்பரப் படுத்த வேண்டிய அவசியமே இல்லை. உண்மையில் வித்தியாசம் என்பது தான் விளம்பர உலகின் தாரக மந்திரம்.
"உலகம் தன்போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதர்கள் பிறந்து வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகின் போக்கிலேயே போய் வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள். ஆனால் மிகச்சிலர் மட்டும் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். வித்தியாசமாக வாழ்கிறார்கள். வித்தியாசமான செயல்களைச் செய்கிறார்கள். அவர்களால் தான் உலகில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அவர்களால் தான் உலகில் முன்னேற்றங்கள் உருவாகின்றன. அந்த வித்தியாசமான சிந்தனையாளர்கள் தான் உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமானவர்கள்" என்கிறார் ஒரு அறிஞர்.
அது விளம்பர உலகிற்கும் பொருந்தும். வித்தியாசமான விளம்பரங்கள் தான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். நினைவில் இருக்க வைக்கும்.ஒரு தலைக்கவச விளம்பரம்.
தலையை பாதுகாக்கவும்.
எல்லோராலும் மாற்றுத் தலை பெற முடியாது!
(கீழே விநாயகர் படம்)
வித்தியாசமான சிந்தனைதானே இது!
ஒரு ஏசி விளம்பரம்.
ஏசி அறைக்குள் அதன் குளுமையை அனுபவித்த ஒரு ஏழைச்சிறுமி ஒரு டப்பாவை ஏசியின் முன் நீட்டி அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்றை பிடித்துக் கொண்டு போய் வயல் வெளியில் வெயிலில் வேலை செய்யும் முதியவரின் முகத்தில் திறந்து காட்ட, அவர் அந்தக் குளிர்ச்சியை அனுபவிப்பதாக காட்டப் படுகிறது.
இதில் ஏசி இயற்கையான காற்றை விட சிறப்பானதா? என்றால் இல்லை. ஆனால் அந்த புதுமையும் வேறுபாடும் கற்பனையும் விளம்பரத்தை வெற்றி பெறச் செய்து விடுகின்றன.
[தொடரும்...]
06:50 Posted in வணிகம் | Permalink | Comments (7) | Email this
| Tags: தமிழ்ப்பதிவுகள், விளம்பரம், advertisement, தன்னம்பிக்கை |
del.icio.us
|
|
Digg


