Monday, 09 July 2007
❒ அப்துல் கலாமின் சிபாரிசு
அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கான விடை கிட்டத் தட்ட தெரிந்து விட்ட நிலையில் அப்துல் கலாம் பற்றிய செய்தி ஒன்று.
அப்துல் கலாம் தனது கேரள சுற்றுப் பயணத்தில் திருவனந்தபுரம் சென்ற போது கார் அனுப்பி தனது பழைய நண்பர் ஒருவரை தான் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து சந்தித்துப் பேசி மகிழ்ந்தார். அந்த நண்பர் வேறு யாருமில்லை. திருவனந்த புரத்தில் சாலையோரமாக பழைய செருப்புகள் தைக்கும் ஒரு தமிழர்.
சமீபத்தில் அவரது சிறு பேட்டி ஒன்றை கேரளத் தொலைக்காட்சி ஒன்றில் காண நேரிட்டது.
அப்துல் கலாம் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த போது தினமும் சாலையோரமாக நடைப்பயிற்சி மேற்கொள்வாராம். அப்போது ஒரு முறை அவரது செருப்பு அறுந்து விட்டது. அவர் சாலையோரம் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தவரிடம் தன் செருப்பைக் கொடுத்து தைத்துக் கொண்டார். அப்போது செருப்புத் தைப்பவர் தமிழில் பேசியது கண்டதும் அப்துல் கலாம் அவரைப் பற்றி விசாரித்தார். அவர் தமிழர் என்று அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தார். தமிழ் பேசமுடியாமல் மலையாளிகள் நிறைந்த சூழலில் இருந்த அவருக்கு இந்த செருப்புத் தைப்பவரைக் கண்டதில் மகிழ்ச்சி.
அதன்பிறகு அவர் திருவனந்தபுரத்தில் இருந்தவரை தினமும் அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியோடு தமிழில் பேசி மகிழ்ந்தார். அந்த நட்பால் தான் அவர் ஜனாதிபதி ஆன பிறகும் அவரை அழைத்துப் பேசினார்.
அப்போது கலாம் ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டிருக்கிறார். தனது சகோதரி மகளுக்கு வேலை கிடைக்க உதவி செய்யும்படி அவர் கூறியதும் உடனே ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
கலாமின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களை அணுகி முயற்சித்தும் அந்தப் பெண்ணுக்கு இதுவரை வேலை கிடைக்கவே இல்லை. விரக்தியடைந்து அப்துல்கலாமுக்கே தகவலை எழுதி விட்டார் நண்பர். அப்துல் கலாம் அதிகாரிகளைக் கேட்டபோது கிடைத்த பதில் என்ன தெரியுமா?
சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு வேலை வாய்ப்பக பதிவு மூப்பு (seniority) வரவில்லை என்று அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் யூனியன் இருப்பது போல வேலை இல்லாதவர்களுக்கும் கேரளாவில் யூனியன் உண்டு. பதிவு மூப்பு இல்லாமல் முன்கூட்டியே வேலை கொடுத்தால் அவர்கள் பிரச்சினை செய்வார்கள். அதுவும் மலையாளியை முந்திக் கொண்டு தமிழருக்கு கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்.
கேரளாவில் யூனியன்களின் வலிமை அத்தகையது. அது அப்துல்கலாமின் சிபாரிசுக் கடிதத்தை விட வலியது.
இதுவே தமிழ்நாட்டில் என்றால்?
06:40 Posted in அரசியல் | Permalink | Comments (2) | Email this
| Tags: abdul kalam, அப்துல் கலாம் |
del.icio.us
|
|
Digg

