Sunday, 07 May 2006
தேர்தல் அலசல்
நாளை தேர்தல் நாள். அடுத்த ஆட்சிக்கு அச்சாரமிடும் நாள். ஐந்து ஆண்டுகள் மற்றவர்களால் ஆளப்படும் சாதாரண ஜனங்கள் ஆட்சி செலுத்தும் நாள். அவர்கள் ஆட்சி புரியும் அந்த நாளில் நல்லாட்சி நடந்தால் தான் அடுத்து வரும் ஆட்சியும் நல்லாட்சியாக அமையும்.
மாறாக பணத்துக்கோ, வேறு எதற்குமோ தஙகள் வாக்குரிமையை அடகு வைத்து அந்த நாளில் தங்கள் ஆட்சியை தவறாகப் பயன்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடக்கப் போவதும் இதே இந்நாட்டு மன்னர்கள் தான்.
வாழ்க சனநாயகம்.
*
முழக்கங்கள் ஓய்ந்து அமைதி நிலவுகிறது.
நாளை நடக்கும் திருவிழா அடுத்த சில தினங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப் போகும் ஏதோ சில அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது. எந்த்தேர்தலிலும் இல்லாத அளவுக்கு வாக்குறுதி வாணங்கள் இதுவரை வீசி எறியப்பட்டன. சிந்திக்க முடியாத அளவுக்கு இலவசங்கள் ஏலமிடப்பட்டன.
இன்று சிந்திக்க வேண்டிய நாள்.
*
இந்தத் தேர்தல் பிரச்சார ஆரம்ப நாட்களில் எந்த அலைகளும் இல்லை. அதிமுக வெற்றி பெறும் நிலை என்றே கணிக்கப்பட்டது. திமுக 2 ரூபாய்க்கு அரிசி, இலவச தொலைக்காட்சி என்று அறிவித்தது. அலையில் சிறிய மாற்றம். அதிமுகவும் போட்டிக்கு இலவச அரிசி என்றது. வாக்காளர் மனதில் ஊசலாட்டம்.
அதிமுக தவறுகளை ஆரம்பித்தது. வேட்பாளர் விலை பேசல் மிரட்டல் என அடாவடிககு முயன்றது. உளவுத் துறை மூலம் ஏதேதோ செய்தது. தோல்வி பயமோ என வாக்காளன் மனதில் ஐயம். தயாநிதி மாறன் விவகாரம் கிளம்பியது. திமுக மீதும் சந்தேகம். கடைசிக் கட்டத்தில் ஞாபகம் வருதே என சன் டிவி கிளறியது. திமுகவினருக்கு மட்டுமே இந்த ஞாபகம் தேவை என வாக்காளன் முகம் சுளித்தான். கலைஞரின் கைமாறு என ஜெயா ராஜீவை துணைக்கழைத்தது.
ஆகா சோனியாவே மன்னித்த நளினிக்கு கருணாநிதி ஆதரவளித்தால் கூட என்ன தவறு. உறவினர் என்பதால் ஒருவருக்கு உதவக்கூடாதா? சோனியாவுக்கில்லாத அக்கறையா ஜெயலலிதாவுக்கு இருக்க முடியும். அரசியல் அதிகாரம் பெற இத்தனையும் செய்பவருக்கு இனியும் தேவையா ஆதரவு?
வாக்காளன் சிந்திக்கிறான்.
*
இப்போதைய நிலவரம்.
அதிமுக அணியில் தளர்ச்சி. திமுக கூட்டணியில் மலர்ச்சி.
ஆரம்ப கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தன.
கருணாநிதி சொன்னார் "பத்திரிகைகளை எல்லாம் வசப்படுத்தி விட்டார்கள்."
இப்போதைய கணிப்புகள் திமுகவுக்கு சாதகம்.
நீங்கள் வசப்படுத்தி விட்டீர்களா?
மன்னிக்கவும் அன்று நீங்கள் அப்படிச் சொல்லியிருக்க கூடாது. தலைவனுக்குத் தேவை பொறுமை ஜெயலலிதாவுக்கு இதே பாடத்தை நீங்கள் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்.
04:04 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this | Tags: Tamils
Sunday, 23 April 2006
தேர்தல் கணிப்புகள்
தமிழக அரசியல் களம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது. பரிசீலனைக்குப்பின் 850 மனுக்களுக்கு மேல் நிராகரிக்கப் பட்டுள்ளது. இனி விலகலுக்கு ஒரு நாள் மட்டுமே பாக்கி. சுயேட்சைகளில் விலை பேசப்பட்டவர்கள் விலகலாம். விலைபேசலை எதிர்பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பலர் ஏமாற்றத்தில் தொடரலாம் அல்லது விரக்தியில் விலகலாம். இவை தவிர முக்கிய வேட்பாளர்களில் பெரிய மாற்றங்கள் இனி இருக்காது.
வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னரும் பல கட்சிகள் வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் மட்டுமல்லாமல் புதிய கட்சியான தேமுதிகவிலும் இந்த மாற்றங்கள் நடந்தன.
இந்த்தேர்தல் நடைமுறைகள் துவங்குவதற்கு முன்பும் பின்புமாக கூட்டணிகள் பல உடைந்தும் பிளந்தும் உருமாறின. திமுக கூட்டணியிலிருந்து பிரதான கட்சிகளில் ஒன்றான மதிமுக வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தது.
பாமகவுடன் இணைந்து பணியாற்றிவந்த விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இடம் கிடைக்காமல் அதிமுக கூட்டணியில் இணைந்தது.
திமுகவில் அதிருப்தியில் இருந்த விஜய ராஜேந்தர் தன் கட்சியைப் புதுப்பித்துக் கொண்டு அதிமுக அணிக்கு ஆதரவளித்தார். ஆனால் கடைசியில் சீட்பேரம் படியாததால் மறுபடி குருவுக்கு ஆதரவளிக்கிறார்.
அதிமுகவால் அவமானப் படுத்தப்பட்ட கார்த்திக் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கப்போவதாக அறிக்கைகள் விட்டு தேர்தல் களத்தை சூடாக்கினார். அவரது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறிவருகிறார்.
பாஜக சுப்பிரமணியம் சாமியுடனும் மேலும் பல உதிரிக்கட்சிகளுடனும் கூட்டணி வைத்துப்போட்டியிடுகிறது. சுப்பிரமணியம் சாமி இந்தத் தேர்தலில் போட்டியிடாத மாறன் சகோதரர்களின் சொத்துக்கணக்கை வெளியிட்டு காமெடியில் முன்நிற்கிறார்.
எம்ஜிஆரின் கலையுலக வாரிசு(?) பாக்கியராஜ் திமுகவில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுகவின் நட்சத்திர நாயகன் சரத்குமார் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் சேர்ந்தார்.
கூட்டணி ஆட்சி என்று பேசுவதே பாவம் என்று இளங்கோவனுக்கு வாய்ப்பூட்டு போட்ட கலைஞர் கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்றிருப்பது அரசியலின் அகோரமுகத்தை வெளிச்சமாக்குகிறது.
அரசியல் விமர்சகர்களால் திமுகவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட வைகோ சகட்டு மேனிக்கு திமுக தலைவரையும் அவரது அரசியல் வாரிசுகளையும் நிர்த்தாட்சண்யமின்றி வாரிவிடுவதன் மூலம் இனி ஒரு போதும் அக்கட்சியுடன் உறவு கொளளமுடியாத நிலையை ஏற்படுத்திக்கொள்கிறார்?
இந்த தேர்தலின் பிரதான விஷயமே தேர்தல் அறிக்கைகள் தான். ரேஷன் அரிசி வீடுதேடி வரும் என்று விஜயகாந்த்த அடியெடுத்துக் கொடுக்க 2 ரூபாய்க்கு அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி என்று திமுக கடைவிரித்தது. முதலில் 2 ரூபாய்க்கு அரிசியா? நடக்காத விஷயம் என்று கூவிய ஜெயலலிதா தானும் 10 கிலோ அரிசி இலவசம் என்று தாராள மயமாகிவிட்டார். விஜயகாந்த் வீடுதேடிவரும் ரேஷன் அரிசிக்கு, வீடுதேடிவரும் 15 கிலோ இலவச அரிசி என்று திருத்தம் கொண்டு வந்தார். திமுக 2 ஏக்கர் நிலம் இலவசம் என்று அறிவிக்க ஜெயலலிதாவோ முடியாது எனறு முரண்பட்டு (மூக்குடைபட்டுக் கொண்டு) 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அடுத்த தூண்டிலை வீசினார்.
இந்த தூண்டில்களில் சிக்கப்போகும் வாக்காள மீன்களின் எண்ணிக்கைதான் இந்தத் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடியவை.
தேர்தல் கணிப்புகளின் அடிப்படையில் இன்னும் கூட அதிமுகவுக்கான ஆதரவு மங்கிவிடவில்லை என்பதை உணரமுடிகிறது. ஆனால் கூட்டணி வலிமையில் அதிமுகவை விட திமுகவே முன் நிற்கிறது.
இன்னொரு புறம் அதிமுக இத்தேர்தலில் தனது தவறுகளை ஆரம்பித்து விட்டது. பெண்களின் அமோக ஆதரவும் அதிரடி அறிவிப்புகளும் ஜெயலலிதாவுக்கு ஆதரவை வழங்கிக்கொண்டிருக்க, சென்னை கமிஷனர் மாற்றல் விவகாரம், அரிசி விவகாரத்தில் அடித்த அந்தர் பல்டி, டிவி வழங்குவதாக சொன்னதை கிண்டலடித்தது போன்றவையோடு பார்வர்டு பிளாக் மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, வேட்பாளர்களும் நடிகர்களும் விலைபேசப்படுவது என அதிருப்தி அலையை அதிமுக தனக்குத்தானே உருவாக்கி வருகிறது.
இந்த அதிருப்தி அலையை திமுக தனக்கான ஆதரவு அலையாக மாற்றிக்கொள்ளுமா, அல்லது தானும் இதுபோல ஏதாவது தவறு செய்து எதிர் அலையை உருவாக்கிக் கொள்ளுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
வழக்கம்போல ஒரு நாள் ராஜாவாக வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் ஜனநாயகத்தை ஆளப்போகிறார்கள். அதன்பிறகோ ஜனநாயகத்தின் பெயரால் பணநாயக ஆட்சியாளர்கள் அவர்களை ஆளப்போகிறார்கள்.
இந்தத்தேர்தலில் அவர்கள் நிஜமாகவே ராஜாவாக ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அது தான் ஓ போடு.
18:55 Posted in அரசியல் | Permalink | Comments (4) | Email this | Tags: Tamils
Thursday, 06 April 2006
மின்னஞ்சல் திரட்டி?
நம்மில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் இருக்கக்கூடும். அவற்றில் பல மின்னஞ்சல் சேவைகள் பாப் வசதி இல்லாதவையாக இருக்கக்கூடும். பாப் வசதி உள்ளவை என்றால் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற செயலிகளில் நேரடியாக இறக்கிப் படிக்க முடியும். பாப் வசதி இல்லாதவற்றை ஒவ்வொரு முறையும் தளத்திற்கே சென்று மின்முகவரி, கடவுச்சொல் கொடுத்து தான் பார்க்க முடியும்.
இதைத் தவிர்த்து எல்லா மின்னஞ்சல் களையும் நேரடியாக நமது கணினியிலேயே பதிவிறக்கிப் படிக்க உதவும் ஒரு செயலி (ePrompter) இருக்கிறது. இதில் ஒரே சமயத்தில் 16 வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகள் வரை செயல் படுத்த முடியும். இதை துவக்க நிலையிலேயே செயல்படும்படி வைத்து விட்டால் தானாகவே இணையத் தொடர்பில் இருக்கும் போது மின்னஞ்சல்களைப் பதிவிறக்கி புதிய மெயில்கள் இருந்தால் அறிவிப்புத் தருகிறது.
குறிப்பிட்ட நேரத்திற்கொரு முறை மெயில்களைப் புதுப்பிக்க கட்டளை உள்ளது. இதை 1 நிமிடத்திற்கு ஒருமுறை முதல் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை வரை 10 வகையான நேர அளவுகளில் செயல்படுத்த வைக்கலாம். அதன்படி அது பின்னர் தானாகவே அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை எல்லா மின்னஞ்சல் முகவரிகளிலும் புதிய மின்னஞ்சல்கள் இருக்கிறதா? என சோதிக்கிறது...
ஸ்பாம்களை வடிகட்டுகிறது...
குறைபாடுகள்
1. இணைப்பு கோப்புகளை பதிவிறக்காது. (மின்னஞ்சல் வழி பரவும் வைரஸ் பாதிப்புகள் இருக்காது என்பதால் நன்மையும் கூட.)
2. தமிழ் மெயில்களை (வலைப்பதிவு நண்பர்கள் பலரும் மயில் என்றே எழுதுகிறார்கள். அறிந்தே எழுதுகிறார்களா; அறியாமல் நேர்கிறதா; தமாசுக்காகவா?) இதில் நேரடியாகப் படிக்க முடியாது.
ஆனால் இதில் வரும் தமிழ் மெயில்களை சுரதாவின் செயலி (பொங்குதமிழ்) வழியாக யூனித்தமிழுக்கு மாற்றிப் படிக்கலாம்.
(புதியவர்களுக்கு: சுராதாவின் பொங்குதமிழ் செயலியை இணையப் பக்கமாகவே உங்கள் கணினியில் சேமித்துக் கொண்டால் 18 வகையான வெவ்வேறு எழுத்துரு முறைகளில் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை அந்ததந்த எழுத்துரு உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் இந்தச்செயலியில் உள்ளிட்டு வாசிக்க முடியும்.)
"தூதூ" என துப்பும் யூனிகோடு வரிகளை வாசிக்க:
யூனிகோடு பல நேரங்களில் தூதூ வென துப்புவதை நாம் பார்த்து வருகிறோம். அதை எப்படி சரியாக வாசிப்பது?
1. அந்த ஆக்கத்தை, வரிகளை ஒற்றி நோட்பேடில் ஒட்டவும்.
2. அதை அப்படியே html கோப்பாக சேமிக்கவும். (<-html-><-/html-> போன்ற சம்பிரதாயங்கள் தேவையில்லை.)
3. சேமிக்கும்போது ANSI encoding லேயே சேமிக்க வேண்டும். (UTF-8 வேண்டாம்.)
4. ஐஇ அல்லது பயர்பாக்ஸ் போன்ற உலவி கொண்டு இந்த கோப்பை திறக்கவும்.
5. view > encoding > unicode(utf-8) என மாற்றவும்.
இப்போது நீங்கள் யூனித்தமிழில் அந்த ஆக்கத்தை வாசிக்கலாம்.
01:35 Posted in இணையம் | Permalink | Comments (0) | Email this | Tags: Tamils
Wednesday, 05 April 2006
தேர்தல் தள்ளுபடி
தமிழக தேர்தல்களம் புதியதொரு திசைநோக்கி பயணப்படுவதாகத் தோன்றுகிறது. தன் ஆட்சியின் சாதனைகளைச்சொல்லி மட்டுமே ஓட்டுக்கேட்கும் ஜெயலலிதா (கடந்த தேர்தலில் கலைஞரும் தன் ஆட்சியின் பொற்கால பெருமை கூறித்தான் வாக்குக்கேட்டார்!) கவர்ச்சிகரமான வாக்குறுதி எதையும் வழங்கவில்லை.
ஜெயலலிதா தன் ஆட்சிக்கால சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்க ஆச்சரியமாக கலைஞர் திமுகவின் பழைய அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற பழைய கோஷத்தை இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என காலத்திற்கேற்ற கோலத்துடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அன்று ரூபாய்க்கு மூன்று படி அரிசி கோஷம் தேர்தலோடு முடிந்து போனது. ரூபாய்க்கு ஒரு படி அரிசிதான் போட முடிந்தது. "மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்று தேர்தலுக்குப் பிறகு அது போன்ற சால்ஜாப்பு இப்போது பலிக்குமா?
அது மட்டுமல்ல அரசின் கருவூலத்தையே அள்ளி வளங்கும் வள்ளலாக மாறி இலவச வண்ணத் தொலைக்காட்சி, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், ஊதிய உயர்வு, லட்சக்கணக்கில் புதிய வேலை நியமனம், வேலையில்லாதவர்களுக்கும் அள்ளி வழங்கப்படும் என்ற அறிவிப்பு என எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட பிரயத்தனப்படும் அறிவிப்புகள். வாக்காளர்களை முட்டாளாக்கும் இது போன்ற அறிவிப்புகளுக்கு வாக்காளர்களும் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
முதல்கட்ட பிரச்சாரத்துக்கு அச்சாரமாக தேர்தல் அறிக்கையில் கலைஞருக்கு வெற்றி தான். இதற்குப் பதிலடியாக ஜெயலலிதாவும் இன்னும் சில அடாவடி சலுகைகளை அறிவிக்கக்கூடும். மக்களும் இரண்டில் எது அதிக ஆதாயம் தரும் என்று கணக்குப் போட்டுப் பார்த்து வாக்குகளை அள்ளி வழங்குவார்கள்.
இது (தேர்தல்கால) தள்ளுபடி சீசன். வாக்காளர் காட்டில் மழைதான். வாங்கும் துணி (புதிய ஆட்சி) ஒரே சலவையில் வெளுத்துப்போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
*
இந்தத்தேர்தல் மேலும் பல ஆச்சரியங்களைக் கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் மதிமுகவும் விடுதலைச்சிறுத்தைகளும் இருக்க, திமுக தலைமையில் காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அணிதிரண்டுள்ளன.
ஆனால் பாஜக, திண்டிவனம் ராமமூர்த்தி, விஜயகாந், கார்த்திக், விஜயராஜேந்தர் போன்றோரின் கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுகின்றன.
விஜயகாந்த் தவிர்த்து இவர்களெல்லாருமே அதிமுகவுடன் கூட்டணிக்கு முயன்று முடியாமல் போனதால் தனித்துப் போட்டியிடுபவை. விஜயகாந்தைப் பொறுத்தவரை தனித்துப்போட்டி என்றே சொல்லி வந்தாலும் அதிமுக அணியில் அதிக சீட் பெற பேச்சுவார்தை நடந்து தோல்வி கண்டதாகவும் சொல்லப்படுகிறது.
சரத்குமார் ரசிகர்கள் மட்டுமே இப்போதைய நிலையில் திமுக அணியில் எதிர்க்குரல் கொடுப்பவர்கள்.
இவற்றின் எதிரொலி எந்தளவுக்கு தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது என்பதே இந்தத்தேர்தலில் முக்கியமானது.
பத்திரிகைகள் மற்றும் கூடும் கூட்ட அடிப்படையில் விஜய காந்திற்கு செல்வாக்கு இருப்பதான மாயை இன்று கட்டமைக்கப் பட்டுள்ளது. விஜயகாந்த்தைப் பொறுத்தவரை அவர் இன்னொரு எம்ஜிஆரா? அல்லது இன்னொரு சிவாஜியா? என்பது தேர்தல்முடிவுகள் தான் சொல்லப்போகின்றது. அவருக்கு செல்வாக்கு இருப்பது உண்மை என்றால் அது அதிமுகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும்.
அகில இந்திய கட்சியின் மாநிலத்தலைவராக களமிறங்கியிருக்கும் கார்த்திக்கைப் பொறுத்தவரை அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவராகவே அறியப்படுகிறார். அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்படும் அந்தச்சமூகம் திசைமாறி கார்த்திக்கை முழுமையாக ஆதரித்தால் அதுவும் அதிமுகவுக்கு இழப்புத்தான்.
பிஜேபியும் சில பகுதிகளில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பை குறைக்கக்கூடும். ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. விஜயராஜேந்தர், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் முறையே திமுக, காங்கிரஸ் வாக்குக்களை சிதறடிக்க விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
போட்டி வேட்பாளர்களும் சில தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடும்.
வைகோவை ஆதரித்து வந்த நடுநிலை வாக்காளர்களை அவர் மீண்டும் தனக்குச் சாதகமாக மாற்ற முடியுமா? என்பதைப் பொறுத்தே மதிமுகவின் எதிர்காலம் இருக்கிறது.
கூட்டணி கட்சிகளில் மட்டுமல்ல, சாதாரண வாக்காளரிடத்திலும் பாமக மீதான கவர்ச்சி குறைந்து விட்டது என்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள நிலையான வாக்கு வங்கி கூட்டணிக்கு உதவக்கூடும்.
இந்த அடிப்படையில் கூட்டணி பலத்தைக்கொண்டு ஆராய்ந்தால் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றலாம். ஆனால் திமுகவுக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே முன்பு இளங்கோவன் போன்றவர்கள் கேட்டபடி கூட்டணி ஆட்சிக்கு திமுகவும் ஒப்புக்கொள்ள வேண்டி வரலாம்.
ஆனால் வழக்கம் போல தமிழக வாக்காளர்கள் ஒரே அணியை ஆதரித்து மீண்டும் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பையும் மறுக்க இயலாது...
01:25 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this | Tags: Tamils
Monday, 03 April 2006
அனுபவம் பேசுகிறது
தனது திரையுலக சாதனைப் பயணங்களின் இடையே தீவிர திமுக ஆதரவாளராக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1961 முதல் காங்கிரஸ் உறுப்பினரானார். 1982 ல் இந்திரா காந்தியால் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டது தவிர வேறு எந்த அரசியல் பதவிகளும் வகிக்காத சிவாஜி 1987 ல் காங்கிரசிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். இறுதியில் சிலகாலம் ஜனதாதளம் கட்சியின் தமிழக தலைவராக இருந்ததோடு மிகுந்த வேதனைகளும் சோதனைகளும் கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வு நிறைவுற்றது.
சிவாஜி கூறுகிறார்:
"அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபின், ஜானகி அம்மாள் சிலநாட்கள் முதல் மந்திரியாக இருந்தார்.
அப்போது சட்ட மன்றத்துக்கு தேர்தல் வந்தது. 'ஜானகி அம்மையார் அணியும் நானும் ஒன்றாகத் தேர்தலில் நின்றால் ஜெயித்து விடலாம்' என்று பல பேர் கூறினார்கள். அது போலவே நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தோம்.
இருந்தாலும் எனக்குத் தேர்தலில் நிற்பதற்குத் தயக்கம் இருந்தது. ஏனென்றால் நான் கட்சி ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன. கட்சியானது அப்போது முழுமையாக வளர்ச்சி அடைந்து மக்களின் நம்பிக்கையைப் பெற அவகாசம் இல்லை.
எனவே நான் சற்றுத் தயங்கினேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னிடம் வந்து 'நாங்கள் மக்களிடத்தில் நமது கட்சியைப்பற்றிக் கேட்டோம். எல்லா இடங்களிலும் நமது கட்சி நன்கு வளர்ந்திருக்கிறது. கிராமங்களில் எல்லாம் காங்கிரஸ் கொடிக்குப் பதில் உங்கள் கொடி தான் பறக்கிறது' என்று கூறியவுடன் எனக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. என்னை ஒரு மாயையில் சிக்கவைத்து எனக்கு சோப்புப் போட்டு விட்டார்கள். எனது தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்து விட்டார்கள். நானும் "ஆகா!" என்று ஏமாந்து விட்டேன். என்னையே நான் ஏமாற்றிக் கொண்டேன்.
நமக்கும் மேலாக ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா? எதுவாயினும் அவன்தானே தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவனை மீறி நாம் எது செய்தாலும் அது தீங்காகவேதானே முடியும்.
அப்படித்தான் எனக்கும் நடந்தது. நான் தேர்தலில் நிற்கிறேன் என்றதும் 50 சீட் கொடுத்தார்கள். என் சொந்தப் பணத்தையும் மற்றும் வங்கியில் வாங்கிய கடன்களையும் வைத்துக் கட்சிக்காக செலவழித்தேன்.
பிற கட்சிக்கார்களில் நல்லவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் என் பிள்ளைகளிடம் வந்து 'அப்பாவை கட்சி ஆரம்பிக்க சொல்லாதீர்கள். வீணாக செலவு செய்யச் சொல்லாதீர்கள்' என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் என் பிள்ளைகளோ நல்ல பிள்ளைகள், அவர்கள் வந்தவர்களிடம் 'அப்பா இது வரை தனக்கென எதுவுமே கேட்டதில்லை. கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கிறார். அவர் என்ன செய்தாலும் தடுக்க மாட்டோம். சொத்துக்களையே விற்றாலும் கவலைப்பட மாட்டோம். எதுவாக இருந்தாலும் அவர் இஷ்டப்படியே செய்யட்டும்' என்று கூறிவிட்டார்கள்.
அதைப்போலவே நானும் என் இஷ்டப்படிதான் செய்தேன். தேர்தலில் நின்றேன் தோல்வி அடைந்தேன்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் மட்டும் தான் என்னுடன் இருந்தார்கள். அரசியலைச் சேர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது.
அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறேன். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறு செய்தேன் என்றால் அது அரசியலில் புகுந்ததும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு சுயமாக ஒரு கட்சி ஆரம்பித்ததும்தான்.
காமராஜர் பிறந்த விருதுநகர் மண் அவரைத் தோற்கடித்தது. நான் வளர்ந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மண் என்னைத் தோற்கடித்தது.
என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்களை என் கலையுலக நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
கலைஞர்களே! நீங்கள் அரசியலில் அனுதாபியாக இருங்கள். ஆனால் அதனுள் நுழையாதீர்கள். அரசியல்வாதியின் நண்பனாய் இருங்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாகி விடாதீர்கள். அதில் சென்று உறுப்பினராகி அந்த வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர் ஒரு அரசியல்வாதியா? அவருக்கு உதவி செய்யுங்கள். கட்சியின் கொள்கைகளை ஆதரியுங்கள். பரவாயில்லை. நீங்களே கட்சிக்காரனாக ஆகிவிடாதீர்கள். நீங்கள் பாடகனாகவே இருங்கள் அந்த பாட்டாகவே நீங்கள் ஆகிவிட வேண்டாம்.
ஆண்டவனுடைய எண்ணமோ, மக்களுடைய எண்ணமோ தெரியவில்லை. நான் எவ்வளவோ முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தேன். இருந்தும் நம்மை தூக்கித் தள்ளிவிட்டார்கள். "நீ நடிகன். நடிகனாகவே வாழ்க்கையை ஆரம்பித்தாய். நடிகனாகவே இருக்கப்போகிறாய். நடிகனாகவே சாகப்போகிறாய். ஆகையால் மற்ற வேலைகள் எல்லாம் உனக்கு வேண்டாம். நீ எப்போதும் கலையுலகின் நிரந்தர நடிகனே!" என்று மக்கள் நினைத்திருக்கலாம்.
அதனால் தான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி, நடிகனாக மட்டும் இருக்கிறேன். அரசியல் என்னவென்றும் மக்களிடத்தில் நாம் அரசியல்வாதியாக எவ்வாறு இருந்தோம் என்றும், நடிகனாக எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அனுபவத்தில் தெரிந்து கொண்டவன் நான். "கெட்டபின்பு ஞானி". இவையெல்லாம் தெரிந்து கொள்ள 60 வருடங்கள் ஆகிவிட்டன. அரசியலில் நான் தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டேன்."
தேர்தல் 1989 - போட்டி - முடிவுகள்
திமுக - 202 - 150
ஜெ.அணி - 198 - 27
காங்கிரஸ் - 214 - 26
மா.கம்யூ - 31 - 15
ஜனதா - 10 - 4
இ.கம்யூ - 13 - 3
ஜா.அணி - 175 - 2
அதிமுக(நா) - 4 - 2
சுயே - 2123 - 5
திருவையாறு சட்டமன்றத்தொகுதி தேர்தல் முடிவு
துரை சந்திரசேகரன் - திமுக - 36,981
சிவாஜிகணேசன் - தமுமு+ஜா.அணி- 26,338
ஆறுமுக கொண்ணமுண்டார் - காங்கிரஸ் - 14,346
ஆழி கோ மருதையன் - ஜெ.அணி - 13,435
முருகேசன் - நெடுமாறன் கட்சி - 270
நன்றி: வரலாற்றுச்சுவடுகள் - தினத்தந்தி - 18.4.2005
18:15 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this | Tags: Tamils
Sunday, 02 April 2006
சித்திரம் பேசுதடி
![]() |
மலையாளத்தில் முன்னணிக் கதாநாயகியரில் ஒருவரான பாவனா தமிழில் அறிமுகமான படம். இயக்குநர், நாயகன் உட்பட முன்னணியிலும் பின்னணியிலும் புதுமுகங்களே பங்கேற்றுள்ள இப்படம் லேட் பிக்கப் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 the people படத்தின் ஜெஸ்ஸி கிஃப்ட் போல இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகக் கருதப்படும் கானா பாடலுக்காக உலகநாதன் என்ற கானா பாடகர் ஓவர்நைட் புகழில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்த்திரையுலகம் கொஞ்ச நாட்களாக வட நாட்டு நடிகைகள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது மீண்டும் மலையாளத்துப் பக்கம் தாவியிருக்கிறது. சேரன் கோபிகாவைக் கொண்டு வந்தார். நவ்யா நாயர் 'அமிர்தத்'திலும், காவ்யா மாதவன் 'என மன வானி'லும் நடித்தார்கள். மீராஜாஸ்மின் மாதவன், ஸ்ரீகாந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டார். நயன்தாரா சூப்பர்ஸ்டாருக்கே நாயகியானதுடன் சரத், சூர்யாவுடனும் நடித்துவிட்டார். மலையாள நங்கையான அசின் இன்று தமிழின் நம்பர் 1 நாயகியாகப் பவனி வருகிறார்.
4 the people என்ற படத்தில் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து அறிமுகமான கோபிகா இன்று தமிழிலும் மலையாளத்திலும் பிசியான நடிகை. அதே சமயம் அந்தப்படத்தின் கதாநாயகி பிரணதி தற்போது தமிழில் சில படங்களில் நடித்துவருகிறார் என்ற போதும் அவ்வளவாக சோபிக்கவில்லை.
இது போலவே 'நம்மள்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரேணுகா மேனனை விட அப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கறுப்பு நிற சேரிப்பெண்ணாக நடித்து அறிமுகமான பாவனா பின்னர் மலையாளத்தில் திலீப், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் மாறி மாறி தொடர்ந்து நடித்து அதற்கடுத்த ஆண்டில் அதிகப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர். தொடர்ந்து அந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். அந்தப்பெருமை தமிழில் கிட்டுமா? காலம் பதில் சொல்லும்.
*
தமிழில் அறிமுகமாகி அதிக வாய்ப்புகள் கிட்டாத தமிழ்ப் பெண்களான கீதா, மேனகா, மோகினி ஆகியோர் மலையாளத்தில் உச்சநாயகியராக உயர்ந்தனர். மலையாளத்தில் தனிப்பெரும் நாயகியாக கோலோச்சி தேசிய விருதுவரை சென்ற ஷோபனா தமிழில் சோபிக்காதவர். ஊர்வசியும் தமிழில் அறிமுகமாகி மலையாளத்தில் கலக்கியவர்.
ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் நிலையான இடத்தை நீண்ட காலம் வைத்திருந்த நடிகையர் யாருமில்லை. இப்போது அசின், நயன்தாரா, மீரா என்று பலர் வந்திருக்கிறார்கள். இவர்களின் வலிமை எத்தனைக்காலம் என்று பார்ப்போம்....
*
சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் சூப்பர்ஹிட் திரைப்பாடல் "வாழமீனுக்கும்..."
[கேட்க]
02:20 Posted in சினிமா | Permalink | Comments (2) | Email this | Tags: Tamils
Sunday, 05 March 2006
வைகோவின் ஊசலாட்டம்
ஒரு வழியாக வைகோ இப்போதைக்கு தன் ஊசலாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். சன் டிவி நேற்று பழைய குப்பைகளைக் கிளறி நினைவுகளை மீட்டிய போதும் இனி அண்ணன் சென்டிமென்டுக்கு வழியில்லாத வகையில் அம்மாவுடன் ஒப்பந்தமே கையெழுத்தாகி விட்டது.
மதிமுக தோன்றக்காரணமான நிகழ்வுகளை மறந்து திமுகவுடன் இணைந்து வர கடந்த சட்டமன்றத்தேர்தலின் போதும் வாய்ப்பு இருந்தது. அன்றும் இறுதி நேரத்தில் வைகோ பிரிந்து தனித்துப்போட்டியிட்டு திமுகவின் தோல்விக்கு ஓரளவேனும் காரணமாக அமைந்தார். பொடா கைது சம்பவத்தால் வைகோ ஜெயலலிதா இடையே உருவான கசப்புணர்வும் அன்று கலைஞைர் வைகோவுக்காக வாதாடியதும் போராடியதும் மீண்டும் வைகோவை திமுக அணிக்கு கொண்டு வந்து. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியாகவும் அது மலர்ந்தது.
தேர்தல் என்று வரும்போது கலைஞர் மதிமுகவை மட்டம் தட்ட முயல்வது எப்போதுமே வெளிப்படை. கூட்டணியில் மூன்றாமிடம் யாருக்கு என்ற பிரச்சினையிலும் கலைஞர் எபோதுமே பாமகவுக்கு ஆதரவாக இருப்பது, சம இடம் கூட தர மறுப்பது மதிமுகவின் தொண்டர்களிடையே அதிருப்தியைத்தான் உருவாக்கியது. அந்த அதிருப்தியை அறுவடை செய்தது அதிமுக.
பொடாவில் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளால் வைகோவின் குடும்பத்தாரும் உடன் சிறை சென்றவர்களின் குடும்பத்தினரும் தவிர மற்றவர்கள் அதிமுகவின் ஆசைவலையில் சிக்கி ஒட்டு மொத்தமாக அதிமுகவுடன் கூட்டணியை ஆதரித்தது வைகோவின் தடுமாற்றத்தை அதிகரித்து விட்டது. இத்தனை ஆண்டுகளாகக் கட்சியை கட்டிக்காத்து உடனிருந்த அணுக்கத் தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக கூட்டணியில் தன்னால் தரமுடியாது என்பதை உணர்ந்தார். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல விரும்பிய தொகுதிகளும் கிடைக்காமல் போகலாம் என்ற நிலையில் ஒரு அரசியல்வாதியாகத் தன் கட்சியின் எதிர்காலத்தை முன்னிட்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தியாகம் செய்து விட்டு இந்தச் சாகசத்திற்குத் துணிந்துவிட்டார்.
'குடும்பமா? கட்சியா?' என்ற கேள்விக்கும் 'தன்னலமா? கட்சித்தொண்டர்கள் நலமா?' என்ற கேள்விக்கும் அவர் தெளிவான முடிவெடுத்துவிட்டார். ஆனால் தமிழக மக்கள் நலன் குறித்து அவர் சிந்தித்தாரா என்பது தெரியவில்லை.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு ஜெயலலிதா எத்தகைய மரியாதை தருவார் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. வடமாவட்டங்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளும் தென் மாவட்டங்களில் மதிமுகவும் அதிமுக கூட்டணிக்குப் பலம் சேர்ப்பார்கள். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் தேர்தலுக்குப்பின் கூட்டணிகளைத் தூக்கி எறிய ஜெயலலிதா என்றுமே தயங்கியதில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வைகோவுக்கும் இப்படியொரு சந்தர்ப்பவாத கூட்டணி தான் நல்லது. உணர்வுப்பூர்வமான பிணைப்பு இல்லாத நிலையில் தேர்தலுக்குப் பிந்திய அணி மாற்றம் கூட எளிதானது தான்.
மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என்ற நினைப்பிலேயே அல்லது வெளியேற வேண்டும் என்ற முனைப்பிலேயே திமுகவின் அணுகுமுறைகளும் இருந்தது. ஆரம்பத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுக தயாராக இல்லாத நிலையால் தன் தொகுதிகள் இதற்கு மேல் குறைப்பது கலைஞருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் அவரது அறிக்கை வைகோவை சீண்டிப்பார்ப்பதாக அமைந்தது.
திமுக செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் கலைஞர் அந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால் தன்கட்சி நலனை முன்னிட்டு கலைஞர் முடிவெடுத்தது சரியானால் அதே மாதிரி தன் கட்சி நலனை முன்னிட்டு வைகோ முடிவெடுத்ததும் தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டதுதான்.
மதிமுக தொண்டர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் திமுகவை விட அதிமுகவுடன் இணைந்து பணியாற்றுவது இலகுவானதாக இருக்கக்கூடும். திமுக கூட்டணி என்றால் தங்கள் வாய்ப்பை தட்டிப்பறித்த வேட்பாளர் என்ற நினைப்பில் இரு கட்சிகளுமே காலை வாரிவிடும் வாய்ப்பும் உள்ளடி வேலைகளும் சாத்தியமாக இருந்தன. அதிமுக கூட்டணியில் அந்த பிரச்சினை இல்லை.
அதே சமயம் அரசியல் சார்பற்ற பொதுமக்களில் பலரும் வைகோவின் மீதான பொடா அடக்குமுறை காரணமாக அவர்மீது அனுதாபமும் நன்மதிப்பும் கொண்டிருந்த நிலையில் இந்தக் கூட்டணியால் மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. பொடா கொடுமைகளை வைகோ மறந்தாலும் அவர்கள் மறக்க மாட்டார்கள்.
03:00 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this | Tags: Tamils
Wednesday, 15 February 2006
பதிவு சோதனை
பதிவு சோதனை
21:54 Posted in *பொதுவியல் | Permalink | Comments (0) | Email this | Tags: Tamils
துக்ளக் சோவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ்
சனவரி-பிப்ரவரி 2006 'நாளை விடியும்' இதழில் வெளியானது இது:
*
துக்ளக் சோ-குருமூர்த்தி பிபிசியின் பெயரால் மோசடி
பூ.அர.குப்புசாமி,B.A.,B.L.,Dip.Anthrop.,
19, மேற்கு மடவளாகம் தெரு,
இரா.ஜீவானந்தம்
வழக்கறிஞர்கள்
கரூர்-639001
04324-261114
பெறுநர்
1. S.குருமூர்த்தி, ஆடிட்டர், சென்னை.
2. சோ, ஆசிரியர், துக்ளக் வார இதழ், 166-கிரீன்வேஸ் சாலை, சென்னை-28
3. ஆசிரியர், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ், சென்னை.
அய்யன்மீர்,
எம் கட்சிக்காரர் இல.பரணன் த/பெ இலட்சுமணன், வயது 71, செயலாளர், சமூக வரலாற்றுச் சங்கம், யாசிகா இல்லம், சக்தி நகர், சின்னாண்டான் கோயில் சாலை, கரூர் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் உங்களுக்குக் கொடுக்கும் அறிவிப்பு யாதெனில்;-
1. 2.11.2005 தேதியிட்டு வெளியிடப்பட்ட துக்ளக் வார இதழ் பக்கம் 34-இல் ஆரிய திராவிட பேதம் - கட்டுக்கதை - பிபிசி கூறுகிறது என்ற தலைப்பில் உங்களில் 1ஆம் நபர் (குருமூர்த்தி) எழுதியுள்ள கட்டுரையை உங்களில் 1ஆம் நபர் (சோ) வெளியிட்டுள்ளீர்.
2. உங்களில் 1ஆம் நபர் (குருமூர்த்தி) எழுதியுள்ள, Dr.David Frawely என்பவர் Myth of Ariyan Invasion of India என்ற கட்டுரையை உலக அளவில் நம்பகத் தன்மையுள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் www.bbc.com.uk website வெளியிட்டுள்ளதாக 29.10.2005 தேதியிட்ட The New Indian Express பத்திரிக்கையில் உங்களில் 3ம் நபர் (ஆசிரியர், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்) வெளியிட்டுள்ளீர்.
3. அக்கட்டுரையில் 1848 ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் என்ற சரித்திர நிபுணர், "மத்திய ஆசியாவிவிருந்து ஆரியர்கள் பாரத நாட்டின் மீது படையெடுத்து வந்து, சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்து, திராவிடர்களை நகர்ப்புறத்திலிருந்து காடுகளுக்கு விரட்டி, மிச்சமிருந்தவர்களைத் தங்களுடைய கலாச்சார வழிபாட்டு முறைகளுக்கு மாற்றி, இந்த நாட்டின் பழமையான கலாச்சாரத்தை அழித்து விட்டனர்" என்று அறிவித்ததைப் பின்பற்றி பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை ஆரிய திராவிட பேதம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், ஆனால் அக்கருத்து பொய் என்று பிபிசி ஒலிஒளி பரப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்று சில வாரங்களுக்கு முன் வெளியிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. எனது கட்சிக்காரர் www.bbc.com.uk இணைய தளத்தில் உட்சென்று பார்த்த போது நீங்கள் கூறியுள்ளது போல Dr.David Frawely என்பவரது Myth of Ariyan Invasion of India என்ற கட்டுரை பிபிசி இணையத் தளத்தில் வெளியிடப்படவில்லை என்பதையும், ஆனால் மேலே குறிப்பிட்ட கட்டுரை Hindu Students Council என்ற அமைப்பு நடத்தி வரும் The Hindu Universe என்கிற External Internet Site உள்ளே அமைக்கப்பட்டுள்ள www.hindunet.org என்ற இணைய தளத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் www.bbc.com.uk இணைய தளத்தில் "THE BBC IS NOT RESPONSIBLE FOR THE CONTENT OF THE EXTERNAL INTERNET SITES" என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது என்பதையும் கண்டார்.
5. இது தொடர்பாக பிபிசி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு 07.11.05 அன்று பிபிசி நிறுவனத்தின் சார்பாக Adam sims என்னும் அலுவலர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில் மேலே குறிப்பிட்ட கட்டுரை www.bbc.com.uk இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும் இதர பிற இணையதளங்களில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு பிபிசி பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி கட்டுரையை ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளியிட்டு விட்டு அதனை பிபிசி இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை என்று கூறுகிற பத்திரிகை செய்திகள் தொடர்பாக மேல் நடவடிக்கைக்காக பிபிசி நிறுவனத்தின் copy right and legal department பிரிவிற்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
6. தொல்பொருள் ஆய்வு, கல்வெட்டுச் செய்திகள் மற்றும் ஏராளமான ஆய்வு நூல்களின் அடிப்படையில் Indian Council For Historical Research என்னும் இந்திய அரசின் வரலாற்று ஆய்வு அமைப்பு "மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் பாரத நாட்டின் மீது படையெடுத்து வந்து சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்து, திராவிடர்களை நகர்ப்புறத்திலிருந்து காடுகளுக்கு விரட்டி, மிச்சமிருந்தவர்களை தங்களுடைய கலாச்சார வழிபாட்டு முறைக்கு மாற்றி, இந்த நாட்டின் பழமையான கலாச்சாரத்தை அழித்து விட்டனர்" என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து முழுப்பூசணிக் காயை சேற்றில் மறைக்க முயல்வது போல மேற்படி வரலாற்று உண்மையை மறைக்கத் திட்டமிட்டு, நீங்கள் மோசடியான விதத்தில் பிபிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மேற்படி ஆரிய திராவிட வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொண்டுள்ள திராவிட இயக்கங்களையும் அவதூறு செய்துள்ளீர்கள். திராவிட சித்தாந்தம் என்னும் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள எம் கட்சிக்காரர் உள்ளிட்ட கோடானு கோடி திராவிட இனமக்களின் மனதைப் புண்படுத்தி அவதூறு செய்துள்ளீர்கள்.
7. "திராவிடர்" என்னும் சொல் இந்தியப் பூர்வீகக்குடிகள் எனவும் "ஆரியர்" என்னும் சொல் இந்தியாவுக்கு வெளிநாட்டிலிருந்து வலிந்து வந்து குடியேறியவர்கள் எனவும் பொருள் கொள்ளப்படுவதால் திராவிட சித்தாந்தம் என்னும் கோட்பாட்டை, எந்த விதத்திலாவது அழித்தொழிக்கத் திட்டமிட்டு, முயன்று மேற்கண்டவாறு பொய்யான செய்திகளை மோசடியான விதத்தில் வெளியிட்டுள்ளீர்கள். இது முற்றிலும் இதழியல் நெறிக்கு எதிரானது. எனவே இவ்வறிவிப்பு கிடைத்த 15 நாட்களில் அடுத்து வெளிவரும் துக்ளக் வார இதழ் மூலமாகவும், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாகவும் நீங்கள் மோசடியான விதத்தில் பிபிசி நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி ஆரிய திராவிட வரலாற்று உண்மைகளைத் திரித்து வெளியிட்ட அவதூறான கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்புக் கோரியும் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட வேண்டும் என்றும், தவறினால் உங்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.
இந்நடவடிக்கைக்கான ஏற்பாடு மற்றும் ஆலோசனை:
வழக்கறிஞர் இராசேந்திரன், லார்ட்ஸ் பார்க் பள்ளி, கரூர்-4.
*
(துக்ளக்கில் வந்த கட்டுரையை அப்போது யாரோ வலைப்பதிவில் கூட பிரசுரித்திருந்ததாக ஞாபகம். அதுசரி எக்ஸ்பிரசிலோ துக்ளக்கிலோ மறுப்பு வந்ததா?)
09:00 Posted in இதழியல் | Permalink | Comments (3) | Email this | Tags: Tamils
Tuesday, 14 February 2006
வாழ்க்கைப்பாடம்
எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள்
*
சாதாரண மனிதர்கள் அனைவருமே உலகத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். உலகத்தில் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட மனிதர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும் நம்பியே இருக்கிறது. -ஜார்ஜ் பெர்னாட்ஷா.
*
உலகத்தில் இரண்டே இரண்டு மனிதர்கள் மட்டுமே இருந்தாலும் கருத்து மோதலும் சண்டை சச்சரவும் இருக்கத்தான் செய்யும். நான் சொல்வதே சரி என்ற பிடிவாதமும் அதை எதிர்த்தே தீருவேன் என்ற எதிர்வாதமும் மனிதனின் ரத்தத்தில் ஊறிய பாரம்பரிய குணம். அதை யாராலும் மாற்ற முடியாது. -விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
*
அன்பைக் கலக்காமல் தயாரிக்கப்படும் ரொட்டி சுவைக்காது. அது கசக்கும். பாதிப் பசியைத்தான் அது தணிக்கும். -கலீல் கிப்ரான்.
*
திட்டமிடுவதில் தோல்வியடைகிறவன் தோல்வியடையத் திட்டமிடுகிறான்.
*
மாணவன் கற்பதற்குத் தயாராகி விட்டால் ஆசான் தாமாகவே வந்து விடுவார்.
*
08:40 Posted in வாழ்வியல் | Permalink | Comments (1) | Email this | Tags: Tamils


