Monday, 05 November 2007

❒ தேசப்பிதா அத்வானி

சமீபத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட பாசித் என்பவர் நீதிபதி முன்னிலையிலேயே மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

"அத்வானி, நரேந்திரமோடி இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்பை ஒரு மணிநேரம் விலக்குங்கள். எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பாதுகாப்பை விலக்க வேண்டும்" என்று பகிரங்கமாக கூறி இருக்கிறார்.

இதைக் கேட்டால் எவருக்கும் ஆத்திரம் தான் வரும். "கொடூரமாக குண்டு வைத்து பலரைக் கொன்று தண்டனை அடைந்த பிறகும் இவர்களுக்கு கொழுப்பு அடங்கவில்லை பார்" என்றார் இந்த செய்தியைப் பத்திரிகையில் படித்த ஒரு நண்பர். அதே உணர்வுதான் நிறையப் பேருக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாசித் அப்படிக் கூறக் காரணம் என்ன? அவர் கூறியது "விசாரணைக்காக அழைத்துச் சென்று பத்து ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப் பட்டது இந்த வழக்கில் தான் ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்தவர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக, பாதுகாப்புடன் உலா வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமான அத்வானி, நரேந்திரமோடி போன்றவர்கள் அரசுப் பாதுகாப்புடன் உலாவருகின்றனர்"



.....மிகவும் உற்சாகமாக, தெளிவாக தாங்கள் எவ்வாறெல்லாம் இஸ்லாமியர்களை கொன்றொழித்தோம் என்பதை அவர்கள் விலாவாரியாக விளக்கி உள்ளனர். தெகல்காவின் நிருபர்கள் குழு குஜராத்தின் சம்பந்தப் பட்ட தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ்பட், அரசாங்க வழக்கறிஞரும் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவருமான அரவிந்த் பாண்டா மற்றும் ஆர்.எஸ்.எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் தலைவர்களை தாங்கள் இந்துத்துவாவின் பெருமைகளை குறித்து விரிவான புத்தகம் எழுதுவதாக கூறி சந்தித்து, அவர்களிடம் நம்பிக்கை வலுப்படும் வண்ணம் ஆறுமாதம் பழகி, படிப்படியாக அவர்களை பேசவைத்து பதிவு செய்து விட்டது வீடியோவில்.! இதில் இவர்கள் எப்படியெல்லாம் இஸ்லாமியர்களை கொன்று குவித்தோம் என்று இயல்பாய் வெளிப்படுத்தி விட்டனர்.

பாஜக எம்.எல்.ஏ. ஹரேஷ்பட், "தோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை முதலமைச்சர் நரேந்திரமோடி எங்களை அழைத்து ஆலோசனைபெற்றார். "மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் எவ்வளவு முஸ்லிம்களை அழிக்க முடியுமோ, அராஜகங்கள் நிகழ்த்த முடியுமோ செய்து முடித்து விடுங்கள். மூன்றாவது நாள் நான் சட்டம் ஒழுங்கை சீரமைத்து விட்டதாக உங்களில் சிலரை கைது செய்து விட்டு விடுவேன்" என்று நம்பிக்கை தந்தார் முதல்வர் நரேந்திரமோடி" என்கிறார்.

இதேபோல் அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டா, 'எப்படி நானாவதி கமிஷன் அறிக்கை வெளியானது, அதில் இருந்த நீதிபதி கே.ஜி.ஷா பாஜவின் ஆதரவாளர்' என்று பல தகவல்களைத் தருகிறார்.

பல பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி தலைவர்கள் எப்படி போலீஸ் அனுசரணையோடு ஒத்துழைத்து, வெடிகுண்டு தயாரிக்கப் பட்டது, சாதகமான நீதிபதிகளை முதல்வர் உருவாக்கித் தந்தது, சாதகமில்லாத நீதிபதிகளை இடமாற்றம் செய்தது...என பல தகவல்களைத் தருகின்றனர்.

கர்ப்பிணி பெண்ணின் வழிற்றை கிழித்து சிசுவைக் கொன்றது, சிறுவர்கள் வாயில் பெட்ரோலை ஊற்றி வெடிக்கச் செய்தது, வீடுகள் தாழ்ப்பாள் போட்டு எரித்தது, கொத்துக்கொத்தாக அவர்களைக் குறிப்பிட்ட கிணற்றில் போட்டது போன்ற பல சம்பங்களை சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் அவர்கள் பகிர்ந்து கொண்டிருப்பது....

சாவித்திரி கண்ணன், செய்திமலர்

கோவை குண்டு வெடிப்புக்கு வழங்கப் பட்ட தீர்ப்புக்குப் பிறகு தண்டிக்கப் பட்ட பாஷா,அன்சாரி போன்றவர்கள் "எந்தக் குற்றமானாலும் முஸ்லிம்கள் தான் தண்டிக்கப் படுகின்றனர். ஆனால் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப் படுவதில்லை. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் எங்கள் மீது அடக்குமுறை" என்றனர்.

இவர்கள் கூறுவது எந்த அளவுக்கு உண்மை?

இந்தியா சுதந்திரத்துக்காக காத்திருக்கையில் முஸ்லிம்களுக்கான நாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரிந்து சென்ற ஜின்னா மதவாரி பாகிஸ்தானை உருவாக்கினார். ஆனால் நாங்கள் மதவாதிகள் அல்ல.எங்கள் நாடு பாரதமே என்று நிலைத்து நின்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்றும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். ஜின்னாவை அடியொற்றி ஹிந்துஸ்தானை உருவாக்க முயலும் சங்பரிவாரின் தலைவர்கள் இந்திய முஸ்லிம்களின் இருப்பை வெறுத்தனர். அவர்களை அன்னியப்படுத்தி வெளியேற்ற முனைந்தனர். முதல் தலைமுறை அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகவில்லை. ஆனால் வரலாறு அறியாத இளையதலைமுறையை வெறுப்பேற்றுவதில் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். திட்டமிட்ட செயல்பாடுகளால் இந்திய முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி விட்டனர். பின்னர் திட்டமிட்ட படுகொலைகளை அரங்கேற்றினர். முஸ்லிம்கள் கோபம் கொண்டு பதில் தாக்குதலுக்குத் தயாராயினர். ஆனால் அங்கே அவர்கள் செய்த தவறு, இந்தியாவைத் துண்டாடத் துணை தேடிக் கொண்டிருந்த அந்நிய சக்திகளின் உதவிகளை ஏற்றதுதான். அதுவே அவர்களை தேசத் துரோகிகள் என்று பிரச்சாரம் செய்ய சங்பரிவாருக்கு உதவிகரமாக அமைந்து விட்டது.

மதத்தின் பெயரால் மக்களை உசுப்பேற்றி அரசியல் ஆதாயம் பெறத்துடிக்கும் பிஜேபி என்ற அரசியல் கட்சியும் அவர்களால் கட்டியெழுப்பப் பட்டுள்ளது. அதன் தலைவர்களான அத்வானி , நரேந்திர மோடி போன்றவர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் மதவெறியை நாடு முழுவதும் பரப்பி வருகின்றனர்.

அவரவர் மதநம்பிக்கைகளோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் விசேட நாட்களில் அவரவர் பண்டிகைப் பலகாரங்கள் பரிமாறிக் கொண்டிருந்த நடுத்தரவர்க்கம், ஒருவருக்கொருவர் உதவிகரமாக அவரவர் திருவிழாக்களை நடத்த ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொண்டிருந்த கிராமத்துவழக்கங்கள் எல்லாம் இன்று வழக்கொழிந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்த்து எந்தப் பிரச்சினையையும் மதக் கண்ணோட்டத்தோடு விவாதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது.

....சமூகத்தில் கலவரங்களை ஏற்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட சில கயவர்களுக்கு மனோதத்துவத்தின் மூலம் காரியம் சாதித்துக் கொள்ளுவது சுலபம். அவர்களுக்கு இதனால் ஆதாயம் கிடைப்பதில் ஆச்சரியமில்லை. அதிருப்தியுடன் இருக்கும் ஒரு குழுவில் சில முரட்டு மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் தான் மானம் காக்கும் வீரர்கள் என்று புகழ்ந்துரைத்து, வெறுப்புப் பிரச்சாரம் மூலம் கலகங்கள், நாசவேலைகள், வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் இவற்றை நடத்துகிற சுலபமான வேலையை ஒப்படைப்பது எளிது.

இவ்வாறாக அந்த அமைப்பின் எல்லா உறுப்பினர்களுடைய மனதிலும் வெறுப்புணர்வு ஆழமாக விதைக்கப் படுகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் எசமானர்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாறி விடுகிறார்கள். பொத்தானை அமுக்கியவுடன் இயங்கும் பொம்மை போல, பகையுணர்ச்சியைத் தட்டியெழுப்பும் அவர்களுடைய எசமானர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டவுடன் வெறித்தனமான செயல்களில் தானாகவே உடனடியாக ஈடுபடுகின்றனர்....

-காப்மேயர்.
இந்தியாவின் வைதீக மதங்களின் சாதிப்பிரிவினையோ, இஸ்லாமிய மத அடிப்படைவாதமோ அந்தந்த மதங்களின் பிரச்சினைகளாக அந்தந்த மதத்தவரால் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினைகளாக அன்றும் இன்றும் இருந்து வருபவை. ஆனால் அவை மதத்துவேஷத்துக்கோ வெறுப்புணர்வுகளுக்கோ ஒருபோதும் பயன்படுத்தத் தக்கவை அல்ல.

அதைவிட இன்று மதவேறுபாட்டில் கலக்கப் படும் கொடும் விஷம் என்பது இந்த வெறுப்புணர்வு தான். பெரும்பாலும் வழிபாட்டிடங்களை மையமாகக் கொண்டு இந்த வெறுப்புணர்வுகள் உருவாக்கி வளர்க்கப் படுகின்றன.

இன்னொரு புறம் பிஜேபி என்ற அரசியல் கட்சியின் தலைவர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டுள்ள இந்த மதவெறித் தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றி வந்து இதே வெறுப்புணர்வை விதைத்துச் செல்கின்றனர். ஓட்டுக்கள் பெற்று அதிகார பீடமேறும் வெறியில் இவர்கள் செய்யும் இந்த அராஜகத்தின் ஒரு பகுதியை தெகல்கா இணையப் பத்திரிகை சமீபத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. நெஞ்சு பதறும் இந்தக் கொடுமைகள் விளைவித்த தாக்கங்களே கோவை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கான மூலமாக உணர முடியும். அவர்கள் கூறுவதிலுள்ள உண்மைகள் நம்மை கூசிப்போகச் செய்கின்றன.

படித்தவர்க்கம் என்று பெருமைப்படும் மக்களைக்கொண்ட தமிழ் வலைப்பதிவுலகிலும் சில மனநோயாளிகள் இவர்களை ஆதரித்தும் இவர்கள் கொள்கைகளை வலைப்பதிவில் பரப்பியும் தங்கள் வக்கிரங்களுக்கு வடிகால் தேடிக் கொள்கின்றனர். வக்கிரங்கள் வக்கிரங்களை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது... அது அவர்களுக்கு சகஜம்தானே!

இருதரப்புமே குற்றவாளிகள் எனில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தலைவர்களாக உலாவருவது ஏன்?

07:55 Posted in அரசியல் | Permalink | Comments (9) | Email this | Tags: tehelka, தெகல்கா, பாஜக, BJP |  del.icio.us | | Digg! Digg