Saturday, 03 November 2007

❒ யார் இந்த தமிழ்ச்செல்வன்?

தமிழ் செல்வன் 1984 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்.

1986 ல் பிரபாகரனின் தனிப்பட்ட செயலாளரானார். அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த பிரபாகரனுடன் அவரது செயல்பாடுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் உறுதுணையாக இருந்தார்.

1987 ல் புலிகள் அமைப்பின் யாழ், தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார்.

1991 ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்று பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டார்.

1993 முதல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்னும் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே முயற்சியிலான பேச்சுவார்த்தைக்குழுவில் பாலசிங்கத்துக்கு துணையாக இருந்து செயல்பட்டார். பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் சார்பிலான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தமிழ்ச்செல்வனே தலைமை வகித்தார்.

புலிகள் சார்பில் சர்வதேச அரங்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை தமிழ்ச்செல்வனே அறிவித்து வந்தார்.

தினேஸ் என்ற தனது பெயரை தமிழ்ப்பற்றினால் தமிழ்ச்செல்வன் என மாற்றிக் கொண்டவர். புலிகள் அமைப்பின் உயரிய பட்டங்களில் ஒன்றான பிரிகேடியர் என்ற பட்டமும் தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டிருந்தது

கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார்.

இதை உறுதிப் படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் அவருடன் லெப்டினென்ட் கர்னல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், நேதாஜி, அடைக்கவேல், வாகைகுமாரன் ஆகியோரும் பலியானார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்ச்செல்வன் மறைவை அடுத்து புலிகள் அமைப்பில் காவல்துறை பொறுப்பாளராக பதவி வகித்து வரும் பா.நடேசனை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்துள்ளதாக தெரிகிறது.