Friday, 30 November 2007

★ இலங்கையின் மல்லிகை இதழில் சிந்தாநதி

பழம்பெரும் புகழ்பெற்ற இலங்கை தமிழ் இதழான மல்லிகை தனது 42வது ஆண்டு மலரில் கணினி, இணையத்தில் தமிழ் நுட்பம் பற்றி ஒரு சிறப்புப் பகுதி வெளியிட்டதன் தொடர்ச்சியாக மார்ச் 2007 இதழில் மின்வெளிதனிலே என்ற 5 பக்க கட்டுரையை எழுதியுள்ள மேமன்கவி அதில் வலைப்பதிவு நுட்பம் பற்றி விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து வலைப்பதிவு நுட்பம் பற்றிய செய்திகளையும் உதாரண வலைப்பதிவாக சிந்தாநதியையும் ஜெயகாந்தனும் கலைஞர் விருதும் கட்டுரையையும் பதிவு செய்திருக்கிறார்.

மல்லிகை இதழாளர்களுக்கும் மேமன் கவிக்கும் நன்றிகள்.

இத்தகவலையும் மல்லிகை இதழின் படப்படியையும் அனுப்பித்தந்த நண்பர் விருபாவுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Image and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPicImage and video hosting by TinyPic

Thursday, 29 November 2007

★ காசி - வலையுரையாடல் தொடர்ச்சி...

தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (கீழே பார்க்கவும்)

எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.

இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்க என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:

வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.

வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.

வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.

மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.

தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.


'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/
(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)




முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...

வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்த நீங்கள் திடீரென நாடு திரும்ப எண்ணியது எதனால்?

அமெரிக்காவில் நான்கு வருடங்கள் வாழ்ந்தோம். சுயதொழில் முயற்சிக்கு மூலதன முதலீடாக ஒரு தொகையைச் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்புவதாகத் தான் போகும்போதே திட்டம். அதனால்தான் என்னுடன் வந்த நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் பச்சை அட்டைக்கும், கனடாவில் நிரந்தரவாசி உரிமைக்கும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், ஒன்றுக்கும் முயலாமல் இருந்துவிட்டேன். இந்தியா திரும்பி 6 மாதத்தில் வேலையை விட்டுவிட்டு, திட்டப்படியே தொழில்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

இப்போது நீங்கள் ஒரு தொழில் அதிபர் என்று சொல்லலாம். ஒரு பொறியாளர் தொழிலதிபராக மாறிய போது என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது?

இன்னும் தொழில்முனைவோன்தான், தொழில் அதிபரெல்லாம் இல்லை:) (அதிபரென்ற பேரைக் கேட்டால் போதையாகத் தான் இருக்கிறது ;-)) முதலில் திட்டமிட்டதற்கு மேல் முதலீடு தேவைப்பட்டது. பல பங்குதாரர்கள் இருந்தால் முதலீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்கலாம் என்பதாலும், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக' இல்லாமல் ஒரு கடிவாளம் (checks and balances என்கிறார்களே அதுபோல) இருப்பது எல்லாவற்றுக்கும் நல்லது என்பதாலும் ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களை பங்குதாரர்களாகக் கொண்டேன். இருப்பினும் பொருளைச் சந்தைக்குக் கொண்டுவர, முன்பு திட்டமிட்டதை விட அதிக காலம் ஆகிவிட்டதால் செலவு அதிகரித்து மேலும் முதலீடு செய்யவேண்டியதாய்ப் போனது. வரும் டிசம்பரில்தான் எங்கள் கத்தரிக்காய் கடைவீதிக்கு வருகிறது. இனி எல்லாம் சுபமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கான ஆதரவு அரசுமட்டத்தில் எப்படி இருக்கிறது. அரசு அனுமதிகள் பெறுவதில் உங்கள் அனுபவங்களின் அடிப்படையில் இது பற்றி கூறுங்கள்?

எங்கள் தொழில் சிறுதொழிலாக இருப்பதாலும், மாசுக் கட்டுப்பாடு போன்ற சட்டங்களால் பாதிக்கப்படாத ஒன்றானதாலும், கோவையில் முக்குக்கு முன்னூறு தொழில் முனைவோர்கள் இருப்பதாலும் அனுமதிகள் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அதே போல அரசு ஆதரவின் தேவையும் இங்கு எதுவும் இல்லை. எதையும் நாங்களும் முயற்சிக்கவில்லை. மின்சாரம் மட்டும் தடையில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் ஆண்டுமுழுவதும் சகஜம். இதனால் பல மணி நேரங்கள் உழைப்பு வீணாகிறது. இதைச் சீர் செய்தால் அரசுக்கு நன்றி கூறுவோம். சாலைகள் என்ற பெயரில் இருக்கும் தடங்களை மேம்படுத்தி வாகனங்கள் செல்லுமளவுக்கான உண்மையான சாலைகளாக போட்டார்களென்றாலே:P அரசு என்று ஒன்று இங்கு இயங்குவதை ஒப்புக்கொள்ளலாம். (தொலை தொடர்பில் நேர்த்தியின்மை ஒழிந்துவிட்டது. மின்சாரம், சாலை, குடிநீர் போன்றவற்றில் ஒழியும் என்று தோன்றவில்லை.) தொழிலுக்காக வேறு ஒன்றும் அரசு செய்யவேண்டியதில்லை. (முடிந்தால் அரசு அலுவலகங்களில் சேவைகளுக்கு'மேலதிகமாய்' செலவாகும் தொகையை தரப்படுத்தி பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்;-)

சொந்த தொழில் துவங்க எண்ணியதும் அதிலும் ஏற்கனவே இருக்கும் தொழில்களில் புகுந்துவிடாமல் புதிய ஒரு பொருளை உருவாக்கி உங்கள் தனித்தன்மையை நிரூபித்துள்ளீர்கள். இந்த ஐடியா எப்படி வந்தது?

இன்று இருக்கும் தொழில்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தயாரிப்பு, மற்றது சேவை. (தயாரிப்பு சேவை என்றும் ஒன்று உண்டு, Manufacturing Services, அது இப்போது வளர்ந்துவருகிறது) இவற்றுள் தயாரிப்பு தான் எங்கள் அனுபவத்துக்கேற்ற பிரிவு. தனிப்பட்ட அளவில் என் திறன் புத்துருவாக்கம், பொருள் வடிவமைப்பு என்பதால் நாம் புதுமையான ஒரு பொருளைத் தயாரிப்பதன்மூலம் நம் திறனுக்குத் தக்கதான பலன் பெறலாம் என்று எண்ணி புதிய பொருளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக தோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

விருப்பமிருப்பவர்கள் தமிழ்மணம் தளத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்க:
  1. வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்
  2. தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள்
  3. தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி
  4. தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்
  5. தமிழ்மணம் - 365
  6. போலீஸ் வேலை
  7. நினைவூட்டல் (நன்கொடை)
  8. வழங்கி மாற்றம் நிறைவு
  9. விரிவுபடுத்தப்பட்ட தமிழ்மணம் நிர்வாகக் குழு
  10. ஒரு அறிவிப்பு
  11. சில முயற்சிகள் சில அனுபவங்கள் -12


இதையெல்லாம் இணையவெளியில் பதிவு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு உங்களுக்கும் நன்றி.

Tuesday, 11 September 2007

❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்

வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கும், நிறைய அறிந்தவர்களுக்கும் தேவையான வசதிகள் இதில் தான் இருக்கின்றன.

உதாரணமாக இணையப்பக்க வடிவமைப்பு, HTML நிரல் குறித்து அறிந்திராதவர்கள் கூட பிளாக்கர் தரும் ரெடிமேட் அடைப்பலகை (template) களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புக்களை வலைப்பதிவில் காட்சிப்படுத்தலாம். ஒரு வேர்ட்பாட் (word pad) போன்ற வசதி கொண்ட எழுதும் பக்கத்தில் சென்று எழுதி பதிந்து விட்டால் அது தானாக பதிவில் தேதி நேரத்துடன் பதிவாகி வந்து விடும்.

அதே சமயம் நிரல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் முழுநிரலையும் தலைகீழாக மாற்றிப் போட்டு சொந்தமாக அடைப்பலகைகளை எளிதாக வடிவமைக்கவும் தேவையான ஜாவாஸ்க்ரிப்ட் அலங்காரங்களையும் அதிலேயே செய்து கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தது பிளாக்கர்.

இதில் பதிவு தொடங்க நேரடியாக பிளாகர் வலைப்பக்கம் சென்று எளிதாக தொடங்கி விட முடியும்.

கூகுள் நிறுவனம் பிளாக்கரை வாங்கி நிறைய மேம்படுத்தல்கள் செய்து பீட்டா பிளாக்கரை அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜிமெயில் கணக்கு இருந்தால் தான் பிளாக்கரில் பதிவு தொடங்க முடியும்.

ஜிமெயில் கணக்கில் இருந்து நேரடியாக பிளாக்கரில் நுழைய முடியும். பிளாக்கர் தளத்தில் ஜிமெயில் பயனர் பெயரில் தான் உள் நுழைய முடியும்.

ஆகவே முதலில் ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அடிப்படையில் இருந்தே ஆரம்பிப்போம்.

கூகுள் தான் இன்று தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் ஜிமெயிலும் பிளாக்கரும் அது போலவே நமக்கு முதன்மையான சேவைகளாக இருக்கின்றன.

எனவே கூகுளில் இருந்து தொடங்குவோம்.

முதலில் google.com தளத்துக்கு செல்வோம்.

Image and video hosting by TinyPic

எல்லா இணையதளங்களின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் அவற்றின் விரிவான முழு முகவரி நினைவில் வைப்பது மற்றும் அவற்றை தட்டச்சு செய்வது சிரமம். எனவே ஒரு தளப்பெயரின் முக்கிய பாகம் ஒரு சொல் சரியாக நினைவிருந்தால் அந்தச் சொல்லை கூகுள் தேடுபொறியில் கொடுத்து விட்டால் தேடுதல் முடிவுகளில் அந்தச் சரியான தளத்துக்கான சுட்டி பெரும்பாலும் கிடைத்து விடும்.Image and video hosting by TinyPic

இப்போது நமக்கு gmail தேவை எனவே gmail என்று கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்து தேடுதல் கட்டளை கொடுத்தால் gmail பக்கத்துக்கான சரியான சுட்டி நமக்குக் கிடைத்து விடும்.

இது தான் gmail கணக்கு தொடங்க, செல்ல வேண்டிய தளம்.

mail.google.com/

இந்தப் பக்கத்தில் கீழ்வலது பக்கம் Sign up for Gmail என்று இருக்கும் சுட்டி வழியாக

http://mail.google.com/mail/signup

என்னும் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

இங்கே இருக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி ஒரு Gmail கண்க்கை உருவாக்கிக் கொள்ளவும்.

(ஜிமெயில் உருவாக்க சமீப காலம் வரை இன்னொரு ஜிமெயில் பயனர் அழைப்பு அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது நேரடியாகவே ஜிமெயில் கணக்கு தொடங்க முடியும்.)
Image and video hosting by TinyPic
யாகூ போன்ற பல தளங்களில் மின்னஞ்சல் தொடங்க பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல சொந்த விவரங்கள் தர வேண்டி இருக்கும். ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்க சொந்த விவரங்களாக பெயர் மற்றும் நாடு மட்டுமே பதிய வேண்டும். வேறு எந்த விவரமும் அதிக படிவ விவரங்களும் தேவை இல்லை.

கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மறந்துவிடாமல் இருக்க...மறந்து விட்டால் மீண்டெடுக்க ஒரு ரகசிய கேள்வி பதில் அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பும் மின்னஞ்சல் பெயர் கிடைக்குமா? இருக்கிறதா? என்பதை check availability என்ற சுட்டியைப் பயன்படுத்தி பரிசோதித்துக் கொண்டு ஒரு முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இப்போது நீங்கள் ஜிமெயில் கணக்கு உருவாக்கி விட்டீர்கள்.

ஜிமெயிலில் நுழைந்து சோதித்துக் கொள்ளுங்கள்.

(ஜிமெயிலைப் பயன்படுத்தி பிளாக்கர் கணக்கு, தமிழ் வலைப்பதிவு தொடங்குவது எப்படி - தொடரும்)

-oOo-

குறிப்பு: இந்த இடுகையை படித்து வரும் பலருக்கு சிறுபிள்ளைத் தனமாகக்கூட தோன்றலாம். கணினியில் புழங்குகிறவர்களுக்கோ, ஏற்கனவே வலைப்பதிவர்களாக இருப்பவர்களுக்கோ இவை பெரிதாக பயன்படப் போவதில்லை. மேலும் ஓரளவு இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த நீட்டி முழக்கல் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரளவு கணினிப் பயிற்சி இருந்தாலும் இணையப் பரிச்சயம் குறைவாக உள்ளவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

உதாரணமாக எனக்குத் தெரிந்த இருவரைச் சொல்லலாம். ஒருவர் கணினியில் DTP பயிற்சி முடித்து ஆப்செட் அச்சகம் ஒன்றில் பணி செய்பவர். இன்னொருவர் MS ஆபீஸ் பயின்று ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பவர். இவர்கள் இருவருமே இணைய இணைப்பு இல்லாத சூழலில் கணினிப் பயிற்சி பெற்றவர்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தனை விரிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

Sunday, 19 August 2007

❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?

இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு மிக எளிதாகவே இருக்கிறது.

இன்னும் கணினியில் தமிழில் எழுதும் பரிச்சயம் வராதவர்கள் கூட திரட்டிகள் வாயிலாக முதலில் வலைப்பதிவுகளை படிக்கலாம்.

தமிழின் பிரதான வலைப்பதிவுத் திரட்டிகள்.

தமிழ்மணம் (http://www.thamizmanam.com)
தேன்கூடு (http://www.thenkoodu.com)
தமிழ்ப்பதிவுகள் (http://www.tamilblogs.com)
தமிழ்வெளி (http://www.tamilveli.com)


இவற்றில் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகள் திரட்டப் படுகின்றன.

சில நண்பர்களால் நல்ல வலைப்பதிவுகள் அடையாளம் காட்டப்பட்டு தொகுக்கப்படும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி மாற்று (http://www.maatru.net).

இதே போன்று கில்லி (http://gilli.in) என்ற தளமும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளை தேர்ந்தெடுத்துத் தொகுக்கிறது.

வாரம் ஒரு ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது வலைச்சரம் (http://blogintamil.blogspot.com)

தனியொருவராக தினந்தோறும் தான் படிக்கும் பதிவுகளில் தேவையற்றதை விலக்கி மற்றதைத் தொகுத்துத் தருகிறார் ஸ்னாப்ஜட்ஜ் (http://snapjudge.blogspot.com)

இவை போன்ற திரட்டிகள், திரட்டுகள் வாயிலாக சில நாட்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலே வலைப்பதிவுகள் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? அதன் சாதக பாதகங்கள் போன்றவை ஓரளவு புரிந்து விடும்.

இப்போது நீங்கள் வலைப்பதிவு வாசகராகி விட்டீர்கள். சில கருத்துக்களைப் படிக்கும் போது நீங்களும் பதில் சொல்ல விரும்பு கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை... என்ன செய்யலாம்?

நமது கணினிகளின் இயல்பான தட்டச்சு முறையாக ஆங்கிலம் தான் இருக்கிறது. எனவே கணினியைத் தமிழ் தட்டச்சுக்கு தயார் படுத்த தட்டச்சு இயக்கி தேவை. அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச் செயலிகளில் உள்ள தமிழ் தட்டச்சு இயக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். முரசு, அழகி, குறள் போன்ற பல தமிழ்ச் செயலிகளில் தமிழ் தட்டச்சு செய்ய ரோமன், தமிழ்99, பாமினி போன்ற தமிழ் தட்டச்சு முறைகள் இருக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான முறையை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்

ஏற்கனவே தமிழ்தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கணினியிலும் பாமினி போன்ற யளனகப தட்டச்சு முறையில் தட்டச்சு செய்யலாம். இதுவரை தமிழ் தட்டச்சோ, கணினி எழுதுமுறையோ அறியாதவர்கள் அந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமம்

தமிழின் ஆரம்பகாலப் பதிவர்கள் செய்தது போல ரோமன் முறையில் தமிழில் எழுதும் முறை சட்டென்று புரிந்து விடும். உதாரணமாக ஆங்கிலத்தில் ammaa என்று எழுதினால் தமிழில் அம்மா என்று வரும். ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும் transliteration முறையில் ரோமன் தட்டச்சு முறை இருக்கிறது. இதை தமிங்கிலீஷ் தட்டச்சு என்று (கேலியாக) சொல்கிறோம். அஞ்சல் முறை என்பது பொதுப் பெயர்.

ஆரம்பப் புரிதல் எளிதாக இருந்தாலும் வழக்கப் படுத்திக் கொள்ளும் போது இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக இம்முறையில் தட்டச்சு செய்து பழகும்போது நம் மனம் தமிழை ஆங்கில எழுத்து வழியாகவே நினைக்கப் பழகுகிறது. கூ என்ற எழுத்தை தமிங்கில அஞ்சல் முறையில் எழுத kuu என்று (k-u-u மனதில் எழுத்துக் கூட்டி) எழுத வேண்டும்.

கூ என்பது க'கர மெய்யுடன் ஊ'காரம் இணைந்து வருவது. எனவே க+ஊ என்று தட்டச்சு செய்தாலே கூ என்று தட்டெழுதக் கூடிய எளிய தட்டச்சு முறையான தமிழ்99 முறையை ஆரம்பத்திலேயே பழகிக் கொள்வதால் குறைந்த விசையழுத்தங்களில் விஞ்ஞானப் பூர்வமாக தட்டெழுதப் பயிலலாம். இது 1999 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப்படுத்தப் பட்ட விசைப்பலகை முறையாக அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை, மலேசிய அரசாங்கங்களும் இந்த முறையை அங்கீகரித்துள்ளன.

எனவே தமிழுக்கான இந்த தட்டச்சு முறையில் தமிழ் எழுதக் கற்பது எளியதும் பயனுள்ளதுமாக இருக்கும். ஏற்கனவே தமிங்கில தட்டச்சு முறையில் வலைப்பதிவுப் பயிற்சி பழகிய மூத்த வலைப்பதிவர்கள் பலரும் கூட இன்று தமிழ்99 முறையின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்ந்து இப்போது இந்த முறையில் தட்டச்சு செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே பழகிய முறையை பழக்கம் காரணமாக கைவிட இயலாமல் இருக்கிறார்கள். எனவே ஆரம்பத்திலேயே தமிழ்99 முறையில் தமிழ் தட்டச்சு செய்ய பழகிக் கொள்வது நல்லது.

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் தமிழ் எழுது கருவிகளை தயாரித்து வழங்கிய சுரதா யாழ்வாணனும் தற்போது தனது புதுவை யூனிகோட் எழுதியில் (http://www.suratha.com/unicode.htm) தமிழ்99 தட்டச்சு (tam) முறையையும் இணைத்துள்ளார். இது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்கும்.

பயர்பாக்ஸ் இணைய உலாவியைப் பயன்படுத்துபவர்கள் எழுதுவதற்கு தமிழா தமிழ்கீ ஆன்லைன் (http://developer.thamizha.com/tamilkey.html) பயன்படுத்தலாம். (தமிழ்க்கீ பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சனாகவும் வருகிறது. அதை நிறுவிக் கொண்டால் பயர்பாக்ஸ் மூலமாக இணையப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.)

தமிழ்99 முறையில் திரைவிசைப்பலகையுடன் கூடிய ஆன்லைன் எழுதுகருவி w3 தமிழ் இணைய விசைப்பலகை (http://wk.w3tamil.com)

இது போன்ற இணைய எழுதுகருவிகளே ஆரம்ப மறுமொழி இடுதலுக்கு போதுமானவை. இந்த கருவிகளின் திரையில் தமிழில் எழுத வேண்டியதை தட்டச்சு செய்து பின் அவற்றை தேர்வு செய்து வெட்டி தேவையான மறுமொழிப் பெட்டியில் ஒட்ட வேண்டும். (cut & paste). இவை இணையத்தில் இருப்பதால் எந்தக் கணினியில் இருந்தும் எங்கிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி எழுத முடியும்...

உங்களிடம் சொந்தமாக கணினி இருந்தால் அல்லது உங்கள் கட்டுப் பாட்டில் அலுவலகக் கணினி இருந்தால் தமிழா.காம் (http://thamizha.com) தளத்தில் இருந்து எகலப்பை - தமிழ்99 (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5) என்ற விசைப்பலகை இயக்கியை பதிவிறக்கி நிறுவிக் கொள்வது நல்லது.

இதன்மூலம் இணையத்தில் தமிழ் எழுத மட்டுமல்லாமல் நேரடியாகவே நோட்பேடு, வேர்ட்பேடு போன்ற விண்டோஸ் செயலிகளிலும் விண்டோசில் இயங்கும் எம் எஸ் ஆபீஸ் போட்டோஷாப் உள்ளிட்ட பிற செயலிகளிலும் கூட எப்போதும் நேரடியாக தமிழில் எழுத முடியும். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்துள்ள தமிழ்99 சிறப்பு வசதிகள், விதிகள் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) போன்றவற்றை இதில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும்.

-oOo-

இப்போது நீங்கள் வலைப்பதிவுகள் படிக்கவும் மறுமொழி விமர்சனங்கள் எழுதவும் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்தது என்ன?

நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட வேண்டியது தானே?

வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

அதற்கு முன்னால் ஒரு விஷயம்...

தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள் (http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_1) என்று தமிழ்மணம் நிறுவனர் காசி மிகச்சிறந்த ஒரு தொடரை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதில் அவர் பழைய பிளாக்கரில் வலைப்பதிய ஆரம்பிப்பது வரை சிறப்பான விளக்கமும் தந்திருக்கிறார்.

அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அடுத்து புதிய பிளாக்கர், வேர்ட்பிரஸ் உள்ளிட்ட சேவைகளில் பதிவு தொடங்குவது பற்றிய விளக்கங்களுடன் நான் தொடர்கிறேன்.

Monday, 16 July 2007

❒ பதிவர்களுக்கு கொண்டாட்டம்!

தமிழ்ப்பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். வலைப்பதிவர் சந்திப்புகள் என்று யார் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஆதி எது என்று ஆராயப் புகுந்து வாங்கிக் கட்டிக் கொள்ள நான் தயாரில்லை ;)

இருந்தாலும் சென்னை, மதுரை, டெல்லி என உள்ளூரிலும் அமெரிக்கா ஆஸ்திரேலியா அமீரகம், சிங்கை என உலகின் பல பாகங்களிலும் இருந்து பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் வரும்போது வாசிக்க ஏற்படும் ஆர்வமும் நாமும் வாசிப்பின் ஊடாக அந்த நிகழ்வுகளில் பங்களிப்பதும் முகம் தெரியாத மனிதர்களை முகாமுகம் காண்பதில் உள்ள ஆர்வமும் எல்லாமே சுவையானவை.

இப்படி வலைப்பதிவர் சந்திப்பாக மட்டுமே இருந்ததை சற்று பயனுள்ளதாக மாற்றி குறிப்பிட்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து பாலபாரதி சென்னை வலைப்பதிவர் சந்திப்புகளில் இன்னொரு மாற்றத்தை உருவாக்கினார். முன்னதாக அமெரிக்க துணைக்கண்டத்திலும் தொழில்நுட்ப அறிமுகங்கள் சார்ந்து ஒரு சந்திப்பு நடந்தது. ஏப்ரல் 22ல் நடைபெற்ற சென்னை பதிவர் சந்திப்பில் சாகரன் நினைவு மலர் வெளியீடு உட்பட நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டு செயல்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து கோவையில் செல்லா ஏற்பாடு செய்து பாலபாரதியால் மே 20 அன்று நடத்தப் பட்ட நிகழ்வு தொழில் நுட்பரீதியாக பதிவர் சந்திப்பை பதிவர் பட்டறையாக முன்னேற்றியது. டெலிகான்பரன்சிங் உட்பட இந்த பட்டறையில் நுட்ப வசதிகளுடன் பதிவுநுட்ப அறிமுகங்கள் கொடுக்கப் பட்டன.

இதன்மூலம் பதிவர் சந்திப்பு பதிவர் பட்டறையாக மாறி இதோ ஆகஸ்ட் 5 அன்று மாபெரும் பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது. இது பதிவர்களுக்கும் பதிவராக விரும்புகிறவர்களுக்கும் தொழில் நுட்ப ரீதியாக தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி அறிய உதவ இருக்கிறது. வலைப்பதிவர்களுக்கு நுட்ப ரீதியாக ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும் புதியவர்களுக்கு தமிழில் எழுதும் முறைகளை புரிய வைக்கவும் இந்தப் பட்டறை திட்டமிட்டிருக்கிறது.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் மெரினா வளாக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2007 ஆகஸ்ட் 5 காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த பட்டறை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

கட்டணம் ஏதும் இல்லை. குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெளியூர் நண்பர்கள் சென்னையில் தங்கும் வசதியும் செய்யப் படுகிறது.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு நுட்பம் சார்ந்த விசயங்களை அறிமுகம் செய்யவும் புதிதாக வலைப்பதிய விரும்புகிறவர்களுக்கு தமிழில் எழுதுவது முதல் வலைப்பதிவு துவங்குவது வரை செயல்முறைப் பயிற்சி வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இதற்கென tamilbloggers.org என்னும் வலைத்தளம் தொடங்கப் பட்டுள்ளது. தொடர் அறிவிப்புகள் http://www.tamilbloggers.org/blog என்னும் வலைப்பதிவில் வெளியிடப் படுகின்றன. பட்டறையில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயர்களை இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழில் எழுதவும் இணையத்தில் ஆர்வமும் உள்ள வலைப்பதிவர் அல்லாத நண்பர்கள், மாணவர்களை இந்த பட்டறையில் கலந்து கொள்ள தூண்டலாம். இது தமிழ் வலைப்பதிவர்கள், தமிழில் எழுதக்கூடியவர்கள் பலரை உருவாக்க உங்கள் பங்களிப்பாக இருக்கும்.