Thursday, 24 January 2008

❒ தமிழ் புத்தகச் சந்தை

தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.

இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.

தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.


நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?

Monday, 23 April 2007

❒ சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

சென்னையில் நேற்று நடந்து முடிந்த வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதில் எல்லாம் சொல்லப் படாத ஒரு நிகழ்ச்சியும் வலைப்பதிவர் சந்திப்பின் போது நிகழ்ந்தது.

அது தான் நமது விடைதேடும் வினா பட்டிமன்ற போட்டிக்கான பரிசளிப்பு விழா. போட்டியின் ஸ்பான்சர்களான சிறில் அலெக்ஸ், பாஸ்டன் பாலா, பொன்ஸ் ஆகியோரும் இந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதால் பரிசுப் போட்டிகளில் வென்ற சென்னை பதிவர்களுக்கு நேரிலேயே வலைப்பதிவர் சந்திப்பின் போதே புத்தகப் பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன்படி பிப்ரவரி 27 போட்டியில் வென்ற பொன்ஸ், மார்ச் 20 வெற்றியாளர் இனியன், ஏப்ரல் 9 வெற்றி பெற்ற நந்தா ஆகியோருக்கான பரிசுகள் அந்தந்த ஸ்பான்சர்களைக் கொண்டே வழங்க ஏற்பாடாகியது. வித்லோகா புத்தக நிறுவன பொறுப்பாளர் பாலபாரதி புத்தகங்களை பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்க, பதிவர் சந்திப்பு நடைபெற்ற நேற்றைய தினம் விடைதேடும் வினா பட்டிமன்ற பரிசளிப்பு விழாவும் நடந்தேறியது. சென்னை வலைப்பதிவரான இனியன் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாமல் வெளியூர் சென்று விட்டதால் அவர் சார்பாக புத்தகத்தை பாலபாரதியே பெற்றுக் கொண்டார். பொன்ஸ், நந்தா ஆகியோர் நேரில் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். சிறில் அலெக்ஸ், பாஸ்டன் பாலா, பொன்ஸ் ஆகியோர் இப்புத்தக கொடைகளை வழங்கியுள்ளனர். இதில் முந்தைய போட்டிக்கு பரிசு வாங்கிய பொன்ஸ் கடந்த வார போட்டிக்கான பரிசை தானே வழங்கியது குறிப்பிடத் தக்கது.

இனி நிலா, அருட்பெருங்கோ ஆகியோருக்கான பரிசுகள் வழங்கப் பட வேண்டியுள்ளன. மங்கை, செந்தழல் ரவி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.

போட்டிகளின் கொடையாளர்கள், பங்கேற்ற போட்டியாளர்கள், பரிசுகளை ஏற்பாடு செய்த நண்பர் பாலபாரதி ஆகியோருக்கு நன்றி...

-oOo-

வலைப்பதிவர் சந்திப்பு குறித்து மக்கள் தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பிய செய்தியின் பதிவு.



நன்றி: வடுவூர்குமார்.