Sunday, 30 September 2007

❒ பந்த் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை!

டெல்லி: திமுக கூட்டணி நாளை அழைப்பு விடுத்திருந்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. நாளை மட்டுமல்லாது வேறு எந்த நாளிலும் இதுபோன்ற பந்த் நடத்தக் கூடாது, தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல பந்த் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக அமல்படுத்தக் கோரி திமுக கூட்டணி சார்பில் அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அதிமுக, ஜனதாக் கட்சி, டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பந்த் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி மனுதாரர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச், திமுக கூட்டணி நடத்துவது ஹர்த்தாலோ அல்லது ஸ்டிரைக்கோ அல்ல, பந்த்த்தான் என்று கூறியது. இருப்பினும் பந்த் நடத்த தடை விதிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக இதைக் கருதி விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி பி.என்.அகர்வால் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், இது அரசு நடத்தும் பந்த் அல்ல. ஹர்த்தால்தான் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த பந்த்துக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், அரசியல் கட்சிகளின் உரிமையை விட பொதுமக்களின் உரிமைதான் மேலானது. அதைக் குலைக்கும் வகையில் பந்த் நடத்துவதை ஏற்க முடியாது.

அரசியல் கட்சிகள் இதுபோல பந்த் நடத்தி, பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

அக்டோபர் 1ம் தேதி மட்டுமல்ல, வேறு எந்த நாளிலும் தமிழகத்தில் பந்த் நடத்தக் கூடாது.

இந்த உத்தரவு தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தாங்கள் அளித்த பரபரப்புத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு மீதான விவாதம் கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு நடந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த்த தீர்ப்பு திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: தட்ஸ்தமிழ்

*

முழுஅடைப்புக்கு பதிலாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் :
கருணாநிதி அறிவிப்பு


சென்னை : சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக நடத்தவிருந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை வீதித்தது. இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதிலும் நடைபெறும் உண்ணாவிரதத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நந்திகள் குறுக்கே வந்தாலும் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி: தினமலர்

Saturday, 31 March 2007

❒ பந்த் என்னும் முட்டாள்தனம்

இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிரான குரல் என்பது சரிதான். அது தேவையும் தான். அந்த எதிர்ப்பை காட்ட எத்தனையோ முறைகள் இருக்கின்றன. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுகள் இந்த மாதிரி பந்த் களை ஊக்குவிப்பது குறித்து எனக்கு உடன்பாடில்லை.

முதல்வரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அடையாள உண்ணா விரதமிருந்திருக்கலாம். நாடு முழுவதும் மக்கள் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் இதைச் செய்திருக்கலாம். கறுப்புக் கொடிகட்டி எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். அரசு அலுவலகங்களிலும் கறுப்புச்சின்னம் வைத்து எதிர்ப்பை காட்டியிருக்கலாம். வேறு எத்தனையோ முறைகளில் எதிர்ப்பை காட்டியிருக்க முடியும்.

வேலை நிறுத்தம் என்பது மக்களுக்கு இடையூறு மட்டுமல்ல அது ஒரு சமூக சமாதான, பொருளாதார வீணடிப்பு. இந்த முட்டாள் தளத்திற்கு எதிராக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு இப்படி போராட்டம் பந்த் என்று செல்வது மிகப்பெரிய மூடத்தனம்.

நீதிமன்றத்தில் தேவையான அளவுக்கு ஆதாரங்கள் கொடுக்கப் படாதது, நீதிமன்றம் திருப்திப் படும் அளவுக்கு அரசு சார்பிலான வாதங்கள் அமையாதது போன்றவையே இம்மாதிரியான தீர்ப்புகளுக்கு காரணம். எதிர்தரப்பு சொல்லும் வாதத்தை நொறுக்க வேண்டிய கடமை அரசு வக்கீல் களுக்கு உண்டு. அதில் கோட்டை விட்டு விட்டு இப்படி ரோட்டுக்கு வந்து போராட்டம் செய்வது அதனினும் மூடத்தனம்.

09:15 Posted in அரசியல் | Permalink | Comments (34) | Email this | Tags: banth, பந்த் |  del.icio.us | | Digg! Digg