Thursday, 09 August 2007

❒ நான்கு வருடம் தூங்கிய ராம்கி

1. வலைப்பதிவுலக வாத்தியார்கள் மவுனம் சாதிப்பது எதற்கோ? என்றொரு கேள்வி கேட்டிருக்கிறார் ராம்கி.

ஒரு வாத்தியார் (தேவையின்றி) வாய் திறந்ததன் தண்டனையை நாங்களல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

2. ஏற்கனவே பதியும் இரண்டாயிரம் பேரை தக்க வைத்துக் கொள்ள மந்திரம் உண்டா?

அந்த மந்திரத்தைத்தான் நீங்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களே? நீங்களே ஓதுங்கள்.

3. தண்ணியடிப்பது, தம்மடிப்பது பற்றி செய்தியாகக்கூட வலைப்பதிவர்கள் யாரும் எழுதியதில்லை.

செய்யலாம்; எழுதக்கூடாது?

4. எலிக்குட்டி சோதனை பற்றியெல்லாம் லக்கிலுக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எலிக்குட்டியெல்லாம் பிடித்து முழுங்கி விட்டுத்தான் லக்கி உட்பட எல்லோருமே அடுத்த வழிக்கு போகிறோம்.

5. 'சற்றுமுன்' விஷயங்களையெல்லாம் பாஸ்டன் பாலாஜி எப்போதே செய்துவிட்டார்.

பாபாவைப் பாராட்டியது தப்பில்லை. அதற்காக சற்றுமுன்னை வம்புக்கிழுத்திருக்க வேண்டாம்.

6. பதிவுகளின் சாதனையாக பிரமிட் சாயிராவின் 'மார்க்கெட்டிங்' வலைப்பதிவு!

சாதனை என்று சொன்னார்களா? மாறுபட்ட முயற்சிகள் என்றார்களா? இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா?

7. எப்படியோ நான்கு வருஷங்களாக கூடிப்பேசியும் நிறைவேறாத விஷயம் இன்று கண்முன் நடந்தேறியிருக்கிறது.

இது ரொம்ப முக்கியமான விஷயம். எங்கே கூடிப்பேசினீர்கள் என்பதைக் கொஞ்சம் ஆதாரத்தோடு சொல்ல முடியுமா?

பதிவர் பட்டறை - நான்கு வருஷ கனவு - ரஜினிராம்கி

Monday, 06 August 2007

❒ கலக்கியது பதிவர் பட்டறை!

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மெரினா வளாக அரங்கில் ஆகஸ்ட் 5, 2007 ஞாயிற்றுக் கிழமை தமிழ் வலைப்பதிவர்களால் நடத்தப் பட்ட தமிழ்வலைப்பதிவர் பட்டறை 150 பேர் பங்கு கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டு 300 க்கு மேற்பட்ட பங்களிப்பாளர்களுடன் தமிழ்ப்பதிவுலகில் மாபெரும் சாதனையாகவே நடந்தேறியிருக்கிறது.

பட்டறை நிகழவிருப்பதை சில தினங்களுக்கு முன்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு, தினகரன் போன்ற நாளிதழ்கள் விரிவாக வெளியிட்டு இருந்தன. ஐரோப்பியத் தமிழ் வானொலியும் இந்திகழ்வு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

கலந்துரையாடல் பட்டறையும், பயிற்சிப் பட்டறையும் இணையாக காலை முதல் மாலை வரை கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலுமாக ஒருங்கிணைந்து நடத்தப் பட்டிருக்கின்றன.

பட்டறை நோக்கம், நிகழ்வுகள் அறிமுகம் தந்து நிகழ்வை விக்கி ஆரம்பித்து வைத்தார்.

பொது அரங்கில் நடந்த நிகழ்வுகளில் பத்ரி தமிழ் இணைய அறிமுகம் குறித்தும், தமிழிணைய மைல்கற்கள் குறித்து (தமிழா எகலப்பை) முகுந்தும், (தமிழ்மணம் நிறுவனர்) காசி வலைப்பதிவுகளின் இன்றைய வளர்ச்சி பற்றியும், வலை நன்னடத்தை குறித்து மாலனும், வலையில் எழுதுபவர்களின் விவரப் பாதுகாப்பு பற்றி லக்கிலுக்கும் வலையில் சம்பாதித்தல் குறித்து கிருபா சங்கரும், வலைப்பதிவர்களின் சமூக பங்களிப்பு பற்றி ரஜினி ராம்கி, நுட்பமும் தொழில்களும் பற்றி அருள் செல்வனும், பொன்ஸ் வலைப்பதிவுகளில் புதிய முயற்சிகள் பற்றியும் உரையாற்றினார்கள்.

உரைகளுக்கு தேவையான திரைக்காட்சி ஒளிபரப்பை பத்ரியும், நந்தாவும் செயல்படுத்தினர். நிகழ்வை மா.சிவகுமார் ஒருங்கிணைத்தார்.

மேல் அறையில் பயிற்சிப் பிரிவில் கோபி தமிழ் தட்டச்சுப்பயிற்சியும், தமிழி வலைப்பதிவு தொடங்குவதற்கான பயிற்சிகளும், html பயிற்சியை செந்தழல் ரவியும், பெனாத்தல் சுரேஷ் பிளாஷ் வலைகலை பயிற்சியும் நடத்தினர்.

நிறைய கணினிகள் நிறுவப் பட்டிருந்த செயல்முறைப்பகுதி பொறுப்பை பொன்ஸ், வினையூக்கி, ஜெயகுமார் கவனித்துக் கொண்டனர். பதிவு தொடங்குதல், பதிவர்களுக்கான சந்தேகங்கள் போன்றவை இங்கு செயல்பட்டன. மேலும் சில பதிவர்கள் இடையிடையே வந்திருந்து புதியவர்களுக்கு உதவினர்.

பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பட்டறையிலேயே புதிதாக பதிவுகள் ஆரம்பித்தனர்.

இறுதியாக விக்கி நன்றி உரை கூற, உணவு மற்றும் பொது ஏற்பாடுகளை பொறுப்பேற்றுச் செயல்படுத்திய பாலபாரதி பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியுரை கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.

நுழைவுக் கட்டணம் எதுவும் வைக்காமல் தேநீர், மதிய உணவுடன் எழுதுபொருட்கள், மென்பொருள் குறுந்தகடு, கணிச்சுவடி போன்றவை அடங்கிய ஒரு பரிசுப் பையும் பங்களிப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டிருக்கிறது.

சென்னை லினக்ஸ் குழுமம் சார்பில் லினக்ஸ் டெமோவும் வேண்டுபவர்களுக்கு இலவச உபுண்டு வழங்கல் குறுவட்டுகளும் வழங்கப் பட்டன.

தமிழ்மணம், சற்றுமுன், மாற்று போன்ற தளங்களும், ஹெட்வே பிராப்பர்ட்டீஸ் நிறுவனமும் நன்கொடைகள் வழங்கி உதவின. மேலும் பல பதிவர்களும், தனிநபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர். இகாரஸ் பிரகாஷ் நன்கொடை திரட்டுதலுக்கு பெரிதும் உதவியுள்ளார்.

நிகழ்வு இடம் உள்ளிட்ட ஆதரவு வழங்கிய சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தவிர, இணைய இணைப்பு வழங்கிய சிபி, கணினிகள் வழங்கிய லினஸ் அகாடமி, கணிச்சுவடியை பதிப்பித்து வழங்கிய கிழக்கு பதிப்பகம், நிகழ்வுச் செய்தியை அறிவித்ததோடு பங்கேற்பாளர்களுக்கு சாவிக்கொத்து வழங்கிய ஹலோ எப் எம் என பதிவர் பட்டறையின் முன்னும் பின்னும் ஆதரவுக் கரங்கள் ஏராளம்.

நிகழ்வன்று லைவ்வாக மொபைல் மூலம் படமெடுத்து தொடர்ச்சியாக புகைப்பட பதிவு இட்டுக் கொண்டிருந்த ஓசை செல்லா, லைவ் குறிப்புகளாக பதிவுகள் இட்டுக் கொண்டிருந்த இட்லிவடை, சற்றுமுன்னில் செய்தி, நிகழ்வின் போதே புகைப்படப்பதிவுகள் இட்ட டெல்பின் என வலைப்பதிவு மீடியா செயல்பாடுகளும் நிகழ்ந்தன.

சுமார் இரு மாதங்கள் முன்பிருந்தே திட்டமிடப்பட்ட ஏற்பாடுகளின் செயல்பாட்டுக்காக tamilbloggers.org என்னும் இணையதளம் தொடங்கப் பட்டிருந்தது. நெதர்லாந்தில் இருந்து ரவிசங்கர் பதிவர் பட்டறைக்கான தள நிர்வாகத்தில் விக்கியுடன் பங்களித்தார். இரண்டு வலைக்குழுமங்களும் இதற்கென உருவாக்கப் பட்டு ஆலோசனைகள் பரிமாறப் பட்டன. பட்டறையில் கலந்துகொள்ள விரும்பும் பதிவர்கள் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

பதிவர் பட்டறை ஏற்பாடுகளுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட மின்மடல்களின் எண்ணிக்கையே ஆயிரத்துக்கு மேற்பட்டவை என்பதும் இப்பட்டறையின் தனிச்சிறப்புகளில் ஒன்று. வெளியூர்களில் இருந்து இதற்காகவே வந்து கலந்து கொண்ட பதிவர்களின் ஆர்வங்கள் குறிப்பிடத்தக்கவை. பெங்களூரில் தொலைபேசித் துறையில் பணியாற்றும் பதிவர் அல்லாத தமிழர்கள் இருவர் இதற்காகவே வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

தமிழில் வலைப்பதிவது பற்றி அறிந்து கொள்ள நல்லபெருமாள் என்ற 71 வயது முதியவர் தனது துணைவியுடன் வந்து கலந்து கொண்டதும், பார்வையற்றவர்கள் வலைப்பதிவது பற்றி அறிய ஆர்வம் காட்டியதும் இது போன்ற பட்டறைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன.

*
தகவல் உதவி: பாலபாரதி, நந்தா, மா.சிவகுமார், பொன்ஸ்