Tuesday, 17 June 2008
❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா?
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஆரம்பித்த பிறகு அது வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போல ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது. காங்கிரசின் புகழ் பெற்ற கோஷ்டிப் பூசலும் கட்சிக்கு தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக்கி நிரந்தரமாக டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டுப் பெறும் அரசியலை உருவாக்கிக் கொண்டு விட்டது.
இன்று தமிழகத்தில் ஆட்சி என்றாலே திமுக அல்லது அதிமுக என்ற நிச்சயமான நிலை தான் நிலவுகிறது. புதிதாக ரேசில் அடுத்த முதல்வர் கனவுடன் விஜயகாந்த் தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயன்று கொண்டிருந்தாலும் சரத்குமார், கார்த்திக் என இன்னொரு நடிக வரிசை அதே கனவுடன் நுழைந்து கொண்டிருந்தாலும் கூட இப்போதைக்கு நிலைமையில் மாற்றமில்லை.
அதிமுகவைப் பொறுத்த வரை ஜெயலலிதாவைத் தவிர முதல்வர் ரேசில் யாரும் இல்லை.
திமுக தலைமையைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளரைக் களத்தில் இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி என்று போற்றப் படும் திமுகவில் முதல்வர் பதவிக்கு மட்டும் கருணாநிதி குடும்பத்தை விட்டு வேறு பெயர்கள் எதுவும் சிந்திக்கப் படுவதேயில்லை. கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் மறைவுக்குப் பின் களமிறக்கப் பட்ட அவர் மகன் தயாநிதி மாறன் இந்தப் போட்டியில் இருப்பதான நிலவரம், அவர் சார்ந்த தினகரன் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி அவர் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டார். ஆரம்பத்திலிருந்தே முதல்வர் வேட்பாளராக, கருணாநிதியின் அரசியல் வாரிசாகப் பேசப் பட்டு வந்த ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இப்போது களத்தில் இருப்பதே அரசியலின் மிக வினோதமான கூறு. அறிவுஜீவி அரசியல்வாதியாக களமிறங்கிய கனிமொழியும் அழகிரியை ஆதரிப்பதாக வந்துள்ள செய்திகளால் தமிழக மக்களுக்கு அடுத்த முதல்வர் வேட்பாளராக திமுக களமிறக்கப் போவது யாரை என்ற சந்தேகம் சர்வநிச்சயமாக ஏற்படக்கூடும்.
மாறன் சகோதரர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கக்கூடூம். ஸ்டாலின் தமிழக முதல்வராக தகுதியானவரா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அவர் அரசியலில் அடித்தளம் முதல் வளர்ந்து வந்த முறையும் பயிற்சியும் ஓரளவுக்கு அந்த தகுதியை உருவாக்கி இருக்க கூடும்.
ஆனால் அழகிரி? முதல்வரின் மகன் என்ற முறையில் அவர் மதுரையில் தனி ராசாங்கமே நடத்தி தாதா அரசியலைத்தான் செய்து வந்திருக்கிறார். இப்படிப் பட்ட கட்டைப் பஞ்சாயத்து அரசியல்வாதி முதல்வராவதை விட விஜயகாந்தே வந்து விட்டுப் போகலாம்.
நட்பு என்ற காரணத்துக்காக ஆற்காடு வீராச்சாமி போன்ற ---களை அமைச்சராக்கி தமிழக மக்களை சோதனைக்குள்ளாக்கும் கருணாநிதி ஒருவேளை வாரிசுரிமைப் படி மூத்த மகனுக்கே பட்டம் சூட்டக் கூடும். அப்போது நாமும் கருணாநிதிச் சோழனின் வாரிசாக தமிழக முதல்வர் அழகிரிச்சோழ பாண்டியனை வாழ்த்தி பதிவுகள் போட்டு மகிழலாம்.
வாழ்க தமிழகம்.
07:35 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this
| Tags: tamilnadu, dmk, திமுக |
del.icio.us
|
|
Digg
Wednesday, 30 January 2008
❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்
தமிழச்சி பேரச் சொல்லி பதிவுகளெல்லாம் அதகளப்படுது... அதுக்குள்ள மூக்கை நுழைக்க இப்போதைக்கு நமக்கு எண்ணமில்லாவிட்டாலும் இது கூட பெண்ணியம் சார்ந்த விசயம் என்பதால்...
சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஏதோ ஒரு புதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகப் படுத்த இருப்பதாக வதந்தி இருந்து வந்தது. அது போலவே தமிழச்சி தங்கபாண்டியன் என்று ஒருபுதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகம் செய்தார்கள்... இப்போது கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் தமிழச்சியும் கலந்துகொள்கிறார்...
பல விழா மேடைகளில் கலர்புல்லாக காட்சியளிக்கும் இவரை யார் இவர் என்று எல்லோரும் வியப்போடு பார்ப்பது உண்மைதான்.
இவர் திமுகவின் துவக்ககால தலைவர்களில் ஒருவரான தங்கபாண்டியனின் மகள். இவரது கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உட்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்களாம்.
இந்த அரசியல் அறிமுகத்துக்கு முன்பே ஒரு கவிஞராக அறியப் பட்டவர்தான் இந்த தமிழச்சி.
எஞ்சோட்டுப்பெண் என்னும் இவரது முதல் கவிதைநூல் கவிஞர் தமிழச்சியாக இவரை அரங்கேற்றியது.
'எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.
வனப்பேச்சி என்னும் இரண்டாவது நூல் அரசியல் அறிமுகத்துக்குப் பின் வந்திருக்கிறது.
வனப்பேச்சியிலிருந்து....
"சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்"
.............
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு...
ஆஸ்திரேலியா வாழ் இலங்கைத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். இவரது முதல் தொகுப்பான எஞ்சோட்டுப்பெண் பாரதியார் விருது, சிற்பி இலக்கிய விருது போன்றவற்றைப் பெற்றுள்ளது. கவிஞர் மட்டுமல்லாமல் நடன, நாடகக் கலைஞராக மிளிர்ந்து இயல், இசை, நாடகத் தமிழ்க் கலைஞராக இருக்கும் இவர் சென்னை ராணி மேரிக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
சுமதி என்ற இயற்பெயரை தனக்கான தனி அடையாளத்துக்காக தமிழச்சி என மாற்றிக் கொண்ட தனித்திறம் பெற்ற ஒரு பெண்மணியின் பெயரை தந்தையின் பெயரொட்டு இணைத்து தமிழச்சி தங்கபாண்டியனாக மாற்றியதன் மூலம் கலைஞர் ஒரு பெண்ணின் தனித்துவத்தை இல்லாமலாக்கி இருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அவரது அரசியல் பின்னணியை பெயர் சூட்டித்தானா வெளிப்படுத்த வேண்டும்? இது தமிழச்சியின் தனித்துவ அடையாளத்துக்கு இழைக்கப் பட்ட துரோகமன்றி வேறென்ன?
14:55 Posted in அரசியல், இலக்கியம், விமர்சனம் | Permalink | Comments (9) | Email this
| Tags: தமிழச்சி, கலைஞர், திமுக, கவிஞர் |
del.icio.us
|
|
Digg

