Friday, 17 August 2007
❒ வலைப்பதிவு என்றால் என்ன?
கணினி மற்றும் இணையத்தில் ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கணினியில் தமிழ் எழுத முடியும்; அதை இணையத்தில் ஏற்ற முடியும் என்று அறிந்த உடன் பலவேறு எழுத்துருக்களால் அமைந்த இணையதளங்கள் தமிழிலும் உருவாக்கப் பட்டன. பொதுவாக தமிழ் ஆர்வலர் குழுக்கள், செய்தி நிறுவனங்கள் போன்றவையே அத்தகைய தளங்களை உருவாக்கி இருந்தனர். இந்நிலையில் யாகூ நிறுவனத்தின் geocities சேவையும் அது போன்ற சில சேவைகளும் இலவசமாகவே தளங்களை உருவாக்க வாய்ப்பு அளித்தன. எனவே ஏராளமான தனிநபர்களும் தங்களுக்கான இணைய தளங்களை உருவாக்கி தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்து வைத்தனர்.
தொடர்ந்து blogs எனப்படும் இணைய டைரிக் குறிப்புகள் புழக்கத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் blogdrive, livejournal போன்ற சேவைகள் பிரபலமாக இருந்தன. ஆங்கிலத்தில் blog எழுதிக் கொண்டிருந்த தமிழர்களில் சிலர் 2002 ஆண்டு வாக்கில் தமிழிலும் எழுத முற்பட்டனர். தொடர்ந்து தமிழில் நிறைய பிளாக்குகள் உருவாக தொடங்கின. blogger.com நிறுவன சேவை எளிமையாக கையாளக் கூடியதாகவும் இருந்ததால் பெரும்பாலானாவர்கள் அதையே விரும்பி செயல்படுத்தினர்.
அந்த காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடையே பிரபலமாக இருந்த யாகூ குழுமங்களில் திஸ்கி எழுத்துருவே பயன்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் நேரடியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுத வந்ததாலோ என்னவோ பிளாக்கர்கள் யூனிகோடு குறிமுறையை பயன்படுத்தினர்.
ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ என்றும் வலைப்பதிவு என்றும் கூற ஆரம்பித்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன்படுத்தியதால் இன்று பிளாக் என்பது வலைப்பதிவு என்ற பெயராலேயே அறியப் படுகிறது.
பாமினி முதலான தட்டச்சு முறைகளைப் பயன்படுத்திய குழும மடல்களைப் போலன்றி இங்கே (அதே ஆங்கிலத்தில் இருந்து வந்த காரணமாக இருக்கலாம்) ரோமன் தட்டச்சு முறையே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது.
சுரதா யாழ்வாணன் நேரடியாக தமிழை ரோமன் முறையில் எழுத ஆன்லைன் எழுதிகளை உருவாக்கினார். கூடவே
வலைப்பதிவு உருவாக்கும்போதே மறுமொழி எழுத அந்த நிரலிலேயே தமிழ் எழுதுகருவியை இணைத்துக் கொள்ளும் விதத்திலான அமைப்பையும் உருவாக்கி அளித்தார்.
இப்படியாக வலைப்பதிவு மூலம் தமிழ் எழுவது எளிமையாக இருப்பதை வாசகர்களாக வந்தவர்கள் உணர்ந்து தாங்களும் எளிதாக வலைப்பதிவுகளை ஆரம்பித்துக் கொண்டனர்.
பிளாக்கர் சேவையைத் தொடர்ந்து வேர்ட்பிரஸ் செயலியில் இயங்கும் weblogs.us என்னும் தளம் வலைப்பதிவு சேவையை அளிப்பது அறிந்து சிலர் அந்த சேவையைப் பயன்படுத்தி வலைப்பதிய ஆரம்பித்தனர். பின்னர் wordpress நிறுவனமே இலவச வலைப்பதிவு சேவையை ஆரம்பித்தது. பலரால் அந்த சேவையும் பயன்படுத்தப் படுகிறது. இவை தவிர yarl.net, yahoo 360, blogsome, blogneo, adada உட்பட இன்னும் நிறைய வலைப்பதிவுச் சேவைகள் இருக்கின்றன. அவற்றையும் பலர் பயன்படுத்துகின்றனர்.
movable type, neucleus, blog cms போன்று பலவித வலைப்பதிவு செயலிகள் பயன்படுத்தப் படுகின்றன. இப்போதைய பல வலைப்பதிவு சேவைகளும் wordpress கொண்டு இயங்குபவையாக உள்ளன. சொந்த தளத்தில் வலைப்பதிவு செய்பவர்களும் இப்போது பெரும்பாலும் வேர்ட்பிரஸ் வலைப்பதிவாகவே அவற்றை இயக்குகின்றனர்.
வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?
பணிநிமித்தம் அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர் என்று சொல்லலாம். இது தவிர வலைப்பதிவு என்பது ஒரு மாற்று ஊடகமாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக தமிழர்களிடையே வலைப்பதிவு ஆர்வமும் வளர ஆரம்பித்தது.
வலைப்பதிவு என்பது தனி இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம். வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களையும் எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை என படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளை பகிரலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும் வலைப்பதிவுகளிலும் எழுதலாம்.
அச்சு ஊடகம் போலன்றி வலைப்பதிவில் என்ன எழுதுகிறோமோ அதை வாசிப்பவர் அந்த நொடியிலேயே படைப்புக்கான விமர்சனத்தை மறுமொழியாகத் தந்து விட முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களாக இருக்கின்றனர். விரைவிலேயே வாசகரும் வலைப்பதிவராக மாறிவிடுவார். இவ்வாறு வலைப்பதிவர்களே வாசகர்களாகவும் வாசகர்களே வலைப்பதிவர்களாகவும் இருக்கும் நிலையே பெரும்பாலும் இருக்கிறது. வலைப்பதிவு பற்றி அறிந்து புதிதாக வாசகராகும் ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. இது தவிர web.2.0 போன்ற இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இது வலைப்பதிவையும் ஒரு முழுமையான பல்லூடகமாக மாற வகை செய்தது.
இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் வலைப்பதிவு தொடங்க என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் இணைய வசதியுடன் ஒரு கணினி சொந்தமாக இருப்பது நல்லது.
அல்லது
அலுவலகத்தில் உங்கள் பொறுப்பில் ஒரு கணினி இருந்தாலும் போதும். ;)
அதுவும் இல்லையா?
பரவாயில்லை...! கணினி மையம் ஒன்றில் சிறிது நேரம் செலவிட முடிந்தால் அதுவே போதுமானது.
(தொடரும் பகுதிகளில் நுட்பம் சார்ந்த தகவல்களும் செயல்முறை விளக்கங்களும் வரவிருக்கின்றன.)
06:55 Posted in internet, இணையம், வலைப்பதிவு | Permalink | Comments (11) | Email this
| Tags: blogs, பதிவுகள், தமிழ் |
del.icio.us
|
|
Digg
Tuesday, 10 July 2007
❒ ஆரியம் எங்கே போனது?
ஜாலிஜம்பர் என்பவர் ஒரு பதிவு இட்டிருந்தார்.
==========================
தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
===========================
முதலில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வந்தது என்று பார்ப்போம். இது தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாகவே எழுதப் பட்டது அல்ல.
மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை தனது மனோன்மணீயம் நாடகத்தின் பாயிரமாக கடவுள் வணக்கம் என ஒரு கடவுள் வாழ்த்தையும் கூடவே தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் இன்னொரு பாடலையும் எழுதி இருந்தார்.
அந்தப் பாடல் இது தான்.
-oOo-
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
எனவாங்கு
நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.
அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.
(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.
பாயிரம் முற்றிற்று.
-oOo-
தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை தேர்வு செய்ய பல பாடல்கள் பரிசீலிக்கப் பட்ட போது இந்தப் பாடலும் அந்தப் பரிந்துரையில் இருந்தது. இறுதியில் இந்தப் பாடலின் முதல் இரு பத்திகள் தேர்வு செய்யப் பட்டன. எனினும் இரண்டாம் பத்தியின் பொருள்
இடைவிடாது பல உயிர்கள், பல உலகம் படைத்தளித்துக்கொண்டே இருந்தாலும் பரம்பொருளாகிய இறைவன் முன் இருந்தபடியே (சோர்வின்றி) இருப்பது போல
கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பலமொழிகள் உன்னிடமிருந்து பிறந்தாலும் ஆரிய மொழியாகிய சமற்கிருதம் போல வழக்கொழிந்து போய்விடாமல் என்றும் இளமையுடன் புதுமை குன்றாமல் இருக்கும் உன் திறனை வாழ்த்துவோம்
என்பதாக வருகிறது.
எனவே 'பிறமொழிகளைப் பற்றிய ஒப்பீடு அவசியமில்லை, முதற்பத்தி மட்டுமே போதும்' எனக் கருதி கூடவே அதற்கு முத்தாய்ப்பாக 'இரண்டாம் பத்தியின் இறுதி வரி'யை மட்டும் தேர்வு செய்தார் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி.
எனவே கிட்டத்தட்ட ஐம்பது வரிகள் இருந்த பாடலில் இருந்து மொத்தம் ஏழுவரிகள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப் பட்டன.
இடையில் (பரிந்துரை செய்யப் பட்ட இரு பத்திகளில்) என்று பார்த்தாலும் நீக்கப் பட்டது ஒருவரி அல்ல. இரண்டாம் பத்தியின் ஐந்து வரிகள் நீக்கப் பட்டு ஒரு வரி மட்டுமே தேர்வு செய்யப் பட்டது.
07:50 Posted in இலக்கியம் | Permalink | Comments (11) | Email this
| Tags: tamil, தமிழ், வாழ்த்து |
del.icio.us
|
|
Digg
Thursday, 24 May 2007
❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?
இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?
இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.
உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)
இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.
இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.
தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.
உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.
முதலில் கணினியில்
Control Panel க்கு செல்லவும்.
விண்டோஸ் xp அல்லது 2000 எனில்
Change or Remove Programs
இதில்
Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)
(விண்டோஸ் 98, Me எனில்
Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.
Add/Remove கிளிக் செய்யவும்.)
புதிதாக வரும் Features to install பெட்டியில்
1. next கிளிக் செய்யவும்.
2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.
3. expand International Support கிளிக் செய்க.
4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.
5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.
6. கிளிக் Update.
இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.
-oOo-
குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.
எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.
08:40 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (40) | Email this
| Tags: word, ekalappai, tamil, தமிழ், எகலப்பை, வேர்ட் |
del.icio.us
|
|
Digg
Friday, 11 May 2007
❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.
இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.
தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.
தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.
அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.
செய்தி: தட்ஸ்தமிழ்
-oOo-
தலையெழுத்த்து...!
08:35 Posted in இலக்கியம் | Permalink | Comments (7) | Email this
| Tags: tamil, தமிழ், இலக்கியம் |
del.icio.us
|
|
Digg

