Wednesday, 23 July 2008

❒ பாவனா கவுஜ/வஜனப் போட்டி

இந்தப் படத்தை பற்றி சின்னதா கவுஜ அல்லது வஜனம் அதாங்க டைலாக்கு எதுனாச்சும் எடுத்து உடுங்க...பெஸ்ட் வஜனத்துக்கு ஒரு பரிசு உண்டு.

Image and video hosting by TinyPic

இது எந்தப் படத்தில் இடம் பெறும் காட்சி?
என்ன பாடல்?

இது உப கேள்வி ;)

Monday, 30 June 2008

❒ சுகுணா திவாகருக்கு...

ஒரு பதிவும் சில சிந்தனைகளும்...

சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது.

அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?

பத்திரிகைகளும் இணையதளங்களும் வெளியிட்ட படங்கள் எவையும் அவர்கள் தாங்களாக எடுத்து வெளியிட்டவை அல்ல. அவை அனைத்துமே படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவால் வெளியிடப் பட்டவைதான். கவர்ச்சி விருந்து படைக்க விரும்பவில்லை என்றால் சுஜிபாலா ஜாக்கெட் போடாத படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க தேவையில்லை. கதாநாயகியின் கவர்ச்சி படத்தின் விளம்பரத்துக்கு அவசியம் என்பதாலேயே அவர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்.

வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

சினிமா ஒரு போதும் உண்மையான வரலாறாக இருப்பதில்லை என்பதை உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள். திரையரங்கினுள் திரைப்படம் ஓடும்போது அந்தப் படம் சொல்லும் செய்தி சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். திரைக்கு வெளியே புனிதங்களை ஏற்றிப் பார்ப்பது அவசியமற்றது.

Sunday, 22 June 2008

❒ நான் கடவுள் துளிகள்

உயிரை முடுக்கும் இசையில், உச்ச ஸ்தாயியில் மந்திர உச்சாடனைகள் முழங்க, ''ஹரஹரஹர மஹாதேவ்!'' என கங்கை நதிக் கரை கண் முன்னே விரிகிறது. ஆயிரமாயிரம் சாமியார்களுக்கு நடுவே 'ருத்ரன்' ஆர்யா, ருத்ர தாண்டவமாடும் காட்சி, உலக சினிமாவுக்கே புதுசு!Image and video hosting by TinyPic

''காசியில, கங்கை நதிக் கரையில ஒரு வாரம் திரிஞ்சா, வாழ்க்கை பற்றிய புரிதலே புதுசாகிடும் கிறது உண்மைதான்!'' 'நான் கடவுள்' படப்பிடிப்பை முழுமையாக முடித்து சென்னை திரும்பி இருக்கிற இயக்குநர் பாலா சின்னதாகப் புன்னகைக்கிறார். ''பிரசவ வேதனையை விடப் பெரிய அவஸ்தை, தன் படைப் பைப் பற்றித் தானே பெருமை பேசுவது'' என்று பேட்டிக்கு மறுத்தவரிடம், பிடிவாதம் பிடித்துப் பேசியதில் கொஞ்சம்...

யார் கடவுள்?

இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!

ரெண்டரை அடி உயரமே இருக்கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக் கிற என் 30 வயசு பார் வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன். பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.

ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத் தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக் கான ஆன்மிகம்!''

'ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே... எம் ஐயனே!' ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.

''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!

நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங் களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!''

''ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றிப் பேசலாமா?''

ஆங்... ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத் துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல... அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு... காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!

அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ் டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!

ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்... அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலை தொட்டு, 'இதோட அர்த்தம் எனக்குப் புரியும்' என்று சொல்லிட்டுப் போனார். மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற ராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!

''15 வருடங்கள்... மூன்றே படங்கள். நாலாவது படமான 'நான் கடவுள்' உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?''

''தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக் கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களைவெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவ சத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணை யில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!

இதோ, 'நான் கடவுள்' படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, 'பேசுப்பா!'னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!''

''சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?''

''கூடிய விரைவில்னு பொது வான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.

'ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி'னு சொல்வான் என் ருத்ரன். அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச் சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!''

#விகடனில் பாலா பேட்டி

*
அஜித் நடிக்க இருந்த படம் பாலாவுடன் மோதல் ஏற்பட்டு அவர் விலக ஆர்யா நாயகனானார்.
நாயகிக்கு பாவனா, கார்த்திகா என்றெல்லாம் பேசப்பட்டு பூஜாவில் முடிந்திருக்கிறது.
இரண்டு வருடங்களாக தாடி முடியுடன் ஆர்யா வேறு படங்களில் நடிக்க முடியாமல் சிக்கிக் கொண்டார்.
காசி நிர்வாணச் சாமியார்களும் அரவாணி ஒருவரும் உட்பட வித்தியாசமான பலரை இதில் நடிக்க வைத்துள்ளார் பாலா.

ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
இளையராஜா இசையமைக்கிறார்.
சண்டைப்பயிற்சி : ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா.
ஒளிப்பதிவு : ஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌‌ன்.

காசியில் தொடங்கி தேனியில் முடிந்துள்ளது..
கிளைமேக்சில் நரமாமிசம் தின்னும் காட்சி இடம் பெறுவதாக செய்(வதந்)தி(?).

தயாரிப்பு சிவஸ்ரீ சீனிவாசன், தேனப்பன் தொடங்கி தற்போது பிரமிட் சாய்மீரா பொறுப்பேற்றுள்ளது.

Wednesday, 28 November 2007

★ ரஜினி, விஜய் மற்றும் பாமக

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக வந்தார் ரஜினி. நடிகர் விஜய் எல்லாப் படங்களிலும் பரட்டைத் தலையுடன் நடித்து வருகிறார். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

எதுவுமே இல்லை. ஆனால் இருவருக்கும் இருந்த பொருத்தம், இருவரின் படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகள் சரளமாக அமைந்திருக்கும். அதுவே அவர்களின் நாயகத் தன்மைக்கான ஸ்டைலாகவும் திரைப்படங்களில் கட்டமைக்கப் பட்டிருக்கும்.

பாபாவில் ரஜினியின் புகைப் பிடிக்கும் போஸ்தான் போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. பாமக ரஜினிக்கு எதிரான தனது போராட்டங்களை இது போன்ற காட்சிகளுக்கு எதிரானதாக காட்டி மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தது.

விளைவு, ரஜினியின் அடுத்த படங்களில் புகைக்கும் காட்சி எதுவும் இல்லை. இப்போது ரஜனியின் அந்தப் பழக்கத்தை மேற்கொள்பவர் நடிகர் விஜய்...

மத்திய சுகாதார அமைச்சர். அன்புமணி இம்முறை விஜய்க்கு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தார். உடனடியாக விஜயும் இனி அம்மாதிரி காட்சிகள் தன்படங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார்.

பாமகவின் கலாச்சாரக் காவலர் அவதாரம் பல நேரங்களில் அத்துமீறிப் போய்விடுவதாக தோன்றியதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் நிச்சயம் அவசியமானவை தான்.

நடிகர்களையே இன்றைய இளைய தலைமுறை தங்கள் ஆதர்ச புருசர்களாக நினைத்து வளர்கின்ற சூழலை நமது பல்லூடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. திரையரங்கில் படம் பார்த்து தீவிர ரசிகர்களாக மாறுபவர்களை விட பலமடங்கு அதிக பாதிப்பை இன்று சின்னத்திரை வழியாக பெரிய திரைக் காட்சிகள் அளித்து வருகின்றன.

நன்றி: பாலபாரதி, மலைநாடான்.
இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் இருக்கும் தொடர்பு ;) புகை!!!!!!

பக்கத்து வீட்டு பிளஸ்டூ மாணவி நோட்டுப் புத்தகம் வாங்கிவர தன் தம்பியை கடைக்கு அனுப்பினாள். சூர்யா படம்போட்டது தான் வேண்டும் என்றாள். தம்பி கடைக்குப் போய் சூர்யா படம் இல்லை என்று விஜய் படம் போட்ட நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்து தந்தான். உடனே தம்பியை விரட்டி மீண்டும்அதைத் திருப்பிக் கொடுத்து வேறு கடையில் சூர்யா படம்போட்ட புத்தகம் வாங்கித் தரும்வரை அவள் விடவில்லை...அதைவிட நோட்டுப் புத்தகம் கைக்கு வந்ததும் அவள் செய்த செயல் என்ன தெரியுமா?.... உயிருக்குயிரான காதலனை முத்தமிடுவது போல அவள் அந்தப் புத்தகத்தில் இருந்த சூர்யா படத்தை முத்தமிட்டாள். பருவ வயதின் ஆர்வக்கோளாறு தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் மேல் இத்தனை கிரேஸ் வர காரணமாக இருந்தவை தொலைக்காட்சி சானல்கள் தான். இத்தனைக்கும் அந்தப் பெண் திரையரங்கில் சினிமா பார்த்ததே இல்லை.

Monday, 17 September 2007

❒ நேற்றுப் பார்த்த பெரியார்!

கலைஞர் டிவியில் நேற்று கண்ட பெரியார் திரைப்படம் முந்தின நாள் கண்ட இரண்டு தமிழ் மசாலாத் திரைப்படங்களுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. பெரியார் பிறந்த நாளுக்கு முந்தைய நாளே படத்தை கலைஞர் டிவி ஒளிபரப்பி விட்டது.

நல்ல முயற்சி. பெரியாரின் வாழ்வை ஒட்டிய நிகழ்வுகளை நன்றாகத் தொகுத்திருக்கிறார்கள்.

பார்த்ததில் என்னை கவர்ந்தது பெரியாராக நடித்த சத்தியராஜின் இயல்பான நடிப்பு. பெரியாரின் துணைவிகள் நாகம்மை, மணியம்மையாக வரும் ஜோதிர்மயி, குஷ்பு ஒளரவு இயல்பாக நடித்துள்ளனர். மற்றவர்கள் இயல்பாக நடிக்க முயன்று? தோற்றுப் போயிருக்கிறார்கள். காமராஜ் பரவாயில்லை. பிற திராவிடத் தலைவர்களாக நடித்தவர்கள் கொஞ்சம் பயத்துடனே நடித்த மாதிரி தெரிகிறது. அதிகமாக நடுங்கியவர் கருணாநிதியாக நடித்தவர் தான் என்று தோன்றுகிறது.

திரைக்கதையில் எதையும் விட்டு விடக்கூடாது என்ற பதற்றம் தெரிகிறது. அதனால் சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டிய பல காட்சிகள் மிகவும் சாதாரணமாக எடுக்கப் பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் கொஞ்சம் துண்டு துண்டாக நிகழ்ச்சிகள் வருகின்றன. பெரியாரைப் புரிந்து கொள்ளச் செய்வது என்ற அளவில் அது சரியான அணுகுமுறைதான். ஆனால் படத்தின் நனவோட்டத்தை அது சற்றே பாதிக்கிறது.

படத்தில் இயக்குநரின் உழைப்புத் தெரிகிறது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்துக்கான களம் அமைப்பதில் கொஞ்சம் சறுக்கல் தான். ஆனால் நல்லதொரு, அவசியமான வரலாற்றுப் பதிவு என்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
*
ஞாயிற்றுக்கிழமை முக்கியமான திரைப்பட நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட திரைப்படம். ஆனால் எத்தனை பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகுந்த ஏமாற்றம். எங்கள் தெருவில் உள்ள எந்தக் குடும்பத்திலும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பாமல் சானலை மாற்றி சன்டிவியில் ஓடிய அருணாச்சலத்தை 26 வது முறையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலைமையாக இருந்திருக்கும்....ம்..

-oOo-

பார்த்து விட்டீர்களா? திரட்டிகளின் தொகுப்பு

Monday, 30 July 2007

❒ திரிஷா! எது உண்மை?

Image and video hosting by TinyPic த்ரிஷா அழுகை.. தேற்றிய விஜய்

த்ரிஷாவுக்கும் அவரது அம்மா உமாவுக்கும் தனியாக டின்னர் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய். இந்த டின்னருக்குப் பெயர் சமாதான டின்னராம்.

சமீபத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் வெள்ளி விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்புப் போனது. பலருக்கு விஜய்யே நேரிலும் போனிலும் அழைப்பு விடுத்தார்.

ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பில்லையாம். அது த்ரிஷா.

தனது பெயர் ஏகப்பட்ட நெகடிவ் செய்திகளில் (விசிடி, குடி, ஆட்டம், பளார் இன்னும் பல) அடிபட்டுக் கொண்டிருப்பதால் நொந்து போயிருந்த த்ரிஷாவுக்கு விஜய்யின் செயல் அதிர்ச்சியைத் தந்துவிட்டதாம்.

தரணியின் இயக்கத்தில் அடுத்த விஜய்யின் படத்தின் ஹீரோயினாக புக் ஆகியுள்ள நிலையில் தன்னை விஜய் தரப்பு ஓரங்கட்டுவதை பொறுக்க முடியாமல் தவித்துவிட்டாராம் த்ரிஷா.

நேரில் தான் அழைப்பில்லை.. விஜய்யிடம் இருந்து தபாலிலோ கூரியரிலோ இன்விடேசனாவது வரும், நிகழ்ச்சிக்குப் போய்விடுவோம் என தனது புரோகிராம்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு தயாராக இருந்திருக்கிறார் த்ரிஷா.

ஆனால், இன்விடேசன் கூட வரவில்லை. இதையடுத்து போனாவது வரும் என்ற நம்பிக்கையோடு மாலை வரை காத்திருந்தாராம். ஹூஹும்.. எதுவும் வரவில்லை.

அப்படியே அடக்கி வைத்த அழுகையை கொட்டித் தீர்த்துவிட்டாராம் த்ரிஷா. கேவிக் கேவி மகள் அழுவதைப் பார்த்து அம்மா உமா அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். முடியவில்லை.

த்ரிஷாவின் தவிப்பும் அழுகையும் ஜாஸ்தியாகிக் கொண்டே போகவே ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் விஜய்க்கே போன் போட்டு இங்கே த்ரிஷாவின் மனசு படும் பாட்டை எடுத்துச் சொன்னாராம்.

இதையடுத்து போனை த்ரிஷாகிட்டே குடுங்க என்று சொல்லி, அவரிடம் காரணங்களை விளக்கியிருக்கிறார் விஜய். (என்ன காரணமோ நமக்குத் தெரியாதுப்பா). மேலும் மம்மி உமாவிடம் காரணங்களைச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.

இதில் த்ரிஷாவும் உமாவும் சமாதானமாகிவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து ஒரு ஸ்டார் ஹோட்டலில் வைத்து விஜய்யை த்ரிஷாவும் உமாவும் சந்தித்துள்ளனர். அப்போது நேரிலும் விஜய் காரணங்களைக் கூறினாராம்.

இதைத் தொடர்ந்து அதே ஹோட்டலில் இருவருக்கும் எக்ஸ்க்ளூசிவாக சிறப்பு டின்னரும் கொடுத்தாராம் விஜய்.

விஜய்யின் அன்பால் த்ரிஷாவும் உமாவும் மனம் குளிந்து வீட்டுக்குப் போனார்களாம்.

செய்தி : தட்ஸ்தமிழ்

-oOo-

திரிஷா மோத ரெடியாகி விட்டார்!


தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி ஹீரோக்களுடன் திரிஷா மோத ஆரம்பித்து விட்டார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுக்க பரவி வருகிறது. சமீபத்தில் வெளி வந்துள்ள கிரீடம் படத்திற்கு சென்னை திருவான்மியூரிலுள்ள ஒரு தியேட்டரில் கட்-அவுட் வைப்பதில் ஏற்பட்ட அஜீத்- திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் அஜீத் தரப்பினருக்கு ஏகப்பட்ட கடுப்பினை உண்டாக்கியுள்ளது. அதே சமயம் ஹீரோவிற்கு மட்டும் தான் தியேட்டர் முழுக்க பேனர் கட் அவுட் வைக்க வேண்டுமா? ஹீரோயின்கள் இல்லையென்றால் படம் ஓடி விடுமா? இது திரிஷா தரப்பில் கேட்கப் பட்ட கேள்வி.

ஒரு வழியாக சமாதானம் என்று வந்தாலும் இனி அஜீத் தன் படங்களுக்கு திரிஷாவை நாயகியாக போட ஒப்புக் கொள்ளவே மாட்டார். அடுத்து இன்னொரு மேட்டர். ராசியான ஜோடி என்று பெயர் வாங்கியவர்கள் விஜய், திரிஷா. கில்லி, திருப்பாச்சி வெற்றிக்குப் பிறகு திரிஷா தெலுங்கில் பிசியானதால் விஜய்யுடன் ஜோடி சேர முடியவில்லை.

இந்நிலையில் தரணி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு திரிஷாதான் நாயகி என்று ஒப்பந்தமானது. இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. விஜய் படத்திற்கான பூஜையில் கூட திரிஷா கலந்து கொள்ளவில்லை. அதே போல் போக்கிரி வெற்றி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தும் திரிஷா அம்மா கூட எட்டிப் பார்க்கவில்லை. இதனால் விஜய் தரப்பு திரிஷா மீது ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.

செய்தி: தினமலர் செய்திமலர்.

Friday, 27 July 2007

❒ தடாலடியார் தந்த தடாலடி

நண்பர்களே

நம்ம தடாலடியார் கவுதம் அவர்கள் நடத்திய தடாலடிப் போட்டியில் நாளை 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' திரைப்பட முதல் நாள் காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் இல்லாததால் சென்னை நண்பர்கள் யாருக்கேனும் வழங்க இருக்கிறேன்.

கவுதம் மற்றும் வலைப்பதிவு நண்பர்களுடன் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் சனிக்கிழமை 6.30 காட்சியில் சங்கர் தாதாவை காண விரும்பும் சென்னை வலைப்பதிவு நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
வாழ்த்துக்கள்.

Saturday, 12 May 2007

❒ பெரியார்: விமர்சனம்

லகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது...

வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது

என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான். அப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு மரியாதை செலுத்த விரும்பிய நல்ல மனிதர்களின் முயற்சியே "பெரியார்'.

பெரியாரின் வாலிபம் முதல் வயோதிகம் வரையிலான கால கட்டங்களின் பல அம்சங்களை எளிமையாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி படித்தும், கேட்டும் அறிந்த இளைய தலைமுறையினருக்கும், அவரைப் பார்த்து, அவர் காலத்தில் வாழ்ந்த பலருக்கும் இந்தப் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களும், சம்பவங்களும் இருக்கின்றன.

பூஜைக்குத் தடை ஏற்படுத்தி தந்தையிடம் செருப்படி வாங்குவது, காசியில் எச்சில் இலை உண்பது, தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கப்பட்டவரின் வீட்டில் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அன்போடு உணவு உண்ணுவது, பிழைப்புக்காக பக்தர் வேஷமிடுவது, பெண்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத உடையை மலேசியாவிலிருந்து மனைவிக்கு வாங்கி வந்து அதை அணிந்து வரச் சொல்வது, கருத்து வேறுபாடு இருந்தபோதும் ராஜாஜியுடன் நண்பராக அன்பு பாராட்டுவது உள்ளிட்ட பல காட்சிகள் பெரியாரின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.

"அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால் ரஷியா சிதறிவிடும்' என்று கூறுவதும், "மதவாதிகளால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று காந்தியடிகளிடம் கூறும்போதும், விதவை மறுமணக் காட்சிகளும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றன.

படத்துக்குப் பெரிய பலம் கதாபாத்திரத் தேர்வு. பெரியாராக நடித்துள்ள சத்யராஜின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது. பெரியாரின் குரலை ஏற்ற இறக்கத்துடன் உச்சரித்திருப்பதிலும், நடை உடை பாவனையிலும், பல ஆண்டு பிரிவுக்குப் பிறகு அண்ணாவைச் சந்திக்கும் காட்சியிலும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெரியாரை நடமாடவிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சத்யராஜ் எந்த விருதையும் இனி எதிர்பார்க்கத் தேவையில்லை; பெரியார் பாத்திரத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பே அவருக்கு உண்மையான, உரிய, உயரிய விருது.

அதே போல் முதல் மனைவி நாகம்மையாக வரும் ஜோதிர்மயி, பிற்காலத் துணைவி மணியம்மையாக வரும் குஷ்பு ஆகியோர் யதார்த்தத்தின் முழு வடிவையும் தங்களுடைய நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தங்களுடைய பாத்திரத்தின் தன்மையையும், பொறுப்பையும் உணர்ந்து கண்ணியமாக நடித்திருக்கிறார்கள். பெரியாரின் தாயாராக நடித்திருக்கும் மனோரமா, எஸ்.எஸ்.ஸ்டேன்லி (அண்ணா), சேலம் ரங்கநாதன் (கருணாநிதி), பாண்டு (எம்.ஜி.ஆர்.), அண்ணாமலை (காமராஜர்) உள்ளிட்ட பலரும் கதையோட்டத்துக்குத் தேவையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் பாராட்டுக்குரியவர்.

தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு... காலமாற்றத்துக்கு ஏற்ப யதார்த்தத்தையும், அழகியலையும் சரிவிகிதத்தில் கலந்து காட்டியிருக்கிறது. வித்யாசாகரின் இசையில் ஜேசுதாஸ் பாடியுள்ள "தாயும் யாரோ...' பாடலில் "தந்தை'க்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார் வைரமுத்து. கலை இயக்குநர் ஜே.கே.யின் உழைப்பும், லெனினின் படத்தொகுப்பும் பல காட்சிகளில் உதவியிருக்கிறது.

பெரியார் என்றால் இப்படித்தான் என பலர் நினைத்திருந்த விஷயங்களைத் தாண்டி, அவருடைய அருங்குணங்களையும், பன்முகத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சமகால அரசியலாளர்களைப் புறக்கணித்து சங்கடத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சில காட்சிகள் இருந்தாலும் பெரிய முயற்சிக்காக படத்தை பாராட்டலாம். அறுதியற்ற முடிவு (ர்ல்ங்ய்ண்ய்ஞ் ங்ய்க்) பாணியிலான படத்தின் இறுதிக் காட்சியில் பெரியார் துக்கத்துடன் பேசும் வசனங்கள், சமூகத்தில் இன்னும் ஏற்பட வேண்டிய பல மாற்றங்களைச் சூசகமாக உணர்த்துகின்றன.

மனிதர்கள் மானமுள்ளவர்களாக வாழ வேண்டும் என வலியுறுத்திய "பெரியார்' ...

தர"மான' படம்!

# தினமணியில் மனோஜ்கிருஷ்ணா.

Saturday, 09 December 2006

அசின்! அசின்!! அசின்!!!

medium_asin.jpgஅசினுக்கு கால்ல அடியாம். அதான் இப்போ ஹாட்-டாக்.

நம்ம கார்த்தி என்னமா உருகறார் பாருங்க!

ஒரு குவிஸ்

அசின் நடித்த முதல் படம் பேர் என்ன?

(தமிழில் இல்லீங்க - ஆனா நம்ம பார்த்திபன் அதில் நடிச்சிருக்காரு.)

அம்மணிய மங்களகரமா பார்க்க விரும்புறவங்க இங்க கிளிக்குங்க!.

(ஏதோ நம்மளாலான சேவை!)

Thursday, 07 December 2006

சிவப்பதிகாரம்- விமர்சனம்

'படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!' அப்படீன்னு ராகவன் கிண்டலடிச்சார்.

'படத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக! அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு! யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா! ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!' னு பிரதீப் எச்சரிச்சார்.

இன்னிக்கு காலைல தினமணி மேய்ஞ்சப்போ இது கண்ணுல மாட்டிச்சு.

-oOo-

சிவப்பதிகாரம்- விமர்சனம்

Image and video hosting by TinyPicநம்மை அதிகாரம் செய்து ஆளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய ஆதங்கம்தான் "சிவப்பதிகாரம்'.

அழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகம் எழுத சொந்த கிராமத்துக்கு வருகிறார் பேராசிரியர் ரகுவரன்.

அவருடைய குறிப்பறிந்து குறிப்பெடுக்க உதவிக்கு வருகிறார் அவரிடம் படித்த மாணவர் விஷால். இதற்கிடையில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள். குருவின் உபதேசத்தோடும், குறு வாளின் உதவியோடும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என பேதமுமில்லாமல் மூன்று வேட்பாளர்களை பொது இடங்களில் குத்திக் கொல்கிறார் விஷால். உயிர் பயம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள்.

தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷால் வேட்பாளர்களை ஏன் கொல்கிறார்; இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

Image and video hosting by TinyPicவிஷால் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அறிமுக நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகளைப் போல் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். கஞ்சா கருப்புவின் யதார்த்தமான காமெடியை ரசிக்கலாம். மணிவண்ணன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோர் யதார்த்தமான நடிப்பையும், சண்முகராஜன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து படம் நெடுகிலும் வரும் பல புதுமுகங்களின் நடிப்பு கதையோட்டத்துக்கும், காட்சிகளுக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது.

நடிப்பில் அனைவரையும் முந்துபவர் ரகுவரன்தான். பேராசிரியர் பாத்திரத்தில் நிறைகுடமாய் ஜொலிக்கிறார். தன்னைப் பிடிக்க வரும் போலீசாரிடமும், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களிடமும் இயல்பாய் பேசும் காட்சிகள் சிறப்பு.

விஷால் வைத்திருக்கும் கத்தி வேட்பாளர்களைக் கொல்கிறது என்றால், கத்தியை விடக் கூர்மையான கரு.பழனியப்பனின் வசனம் ரசிகர்களின் மனங்களை வெல்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம். படத்தில் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகளில், ஆசிரிய-மாணவ உரையாடல்களில் யதார்த்தம் மிளிர்கிறது. அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்துக்கு இன்னொரு பலம் வித்யாசாகரின் இசை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராமங்களை உயிர்ப்போடு படம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. திரைக்கதையின் வலுக்குறைவால் சில காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றமுடியவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று வேட்பாளர்கள் கொல்லப்பட்டவுடன் மாநிலத்திலுள்ள பல வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதும், நாயகன் பொது இடங்களில் வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு மெதுவாக நடந்து வருவதும் ஏற்புடையதாக இல்லை.

"சிவப்பதிகாரம்' -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா - தினமணியில்.

-oOo-

//"சிவப்பதிகாரம்' -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.//

யப்பா மனோஜ் கிருஷ்ணா மெய்யாலுமா?

இன்னாபா ராகவன், பிரதீப்பு இவரு மாதிரி ரசிச்சு பாக்கணும்யா!

All the posts