Wednesday, 22 July 2009

❒ சிந்தாநதியின் இறுதி பதிவுகள்

இது சிந்தாநதியின் பதிக்கப்படாத இறுதி பதிவுகள் என நினைக்கிறேன்.   வேறு பதிவுகளில் பதித்திருந்தால் மன்னிக்கவும்.

❒  கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒரு மீள்வரவு. இரு வாரங்களுக்கு முன்பே வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பித்து விட்டாலும் பதிவு எழுதும் மனநிலைக்கு வரவில்லை. இந்திய தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப் பட்டிருந்த நேரம். தேர்தல் முடிவுகள் பற்றிய அரசியல் பதிவு எழுதலாம் என்று நினைத்த வேளை...

 

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையோரின் நிஜ கதாநாயகனின் மரணச் செய்தி.அதைக்குறித்து எழுத ஆரம்பிக்கும்போது அது பொய் மரணம் என்று ஆவேசக் குரல்கள்...

 

 

உண்மை எதுவென்ற தெளிவான புரிதல் இல்லாமல் அரைவேக்காடாக எழுதி குழம்பியும் குழப்பியும் வைப்பது வேண்டாம் என்ற புரிதலோடு சற்று தாமதமாய்.

 

என்றாலும்...

 

தங்களின் இரட்சகன் என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு நாயகனின் மரணத்தை ஏற்க இயலாதவர்களும் இது வரை அந்த தலைவனின் நிழலில் தங்களின் எல்லா நம்பிக்கைகளையும் ஒப்படைத்து வாழ்ந்திருந்து,இன்று அடுத்து என்ன செயவதென்று புரியாமல் தவிப்பவர்களும் அந்த மரணம் பொய்யானதென்று தங்கள் மனதை தாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றார்களோ என்று ஒரு கேள்வி எழுகிறது.

 

போர்முனையில் வெளிநாட்டு ஆயுத உதவிகளால் இலங்கை ராணுவம் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மத்தியில்,

 

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க வல்லவர் என்று நம்பப்பட்ட தமிழக அரசியல்வாதி வைகோவின் தோல்வி, இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு இந்திய அரசின் மவுனமான உதவிக்ள் தொடர்வதாக சொல்லப் படும் நிலையில் மீண்டும் காங்கிரசின் எழுச்சி, இவை இலங்கை அரசுக்கே சாதகமாக திரும்பும் என்ற நிலையில் தாங்கள் கவசமாகக் கொண்டிருந்த பொதுமக்களை விடுவித்து அதிரடிக்கு முதிர்ந்திருக்க வேண்டும் பிரபாகரன்.

 

சரண்டைய வந்தவர்களை கொன்று குவித்தது இலங்கை என்ற இன்னொரு செய்தீயும் உலாவருகிறது.

 

வைகோ உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரபாகரனின் மரணம் பத்மநாபனால் உறுதி செய்யப் படவில்லை என்பதால் அது பொய் என்று முதலில் கூறியதும், பத்மநாபனே பிரபாகரன் மரணத்தை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டவுடன் பத்மநாபனுக்கு அதைக்கூற என்ன அதிகாரம் இருக்கிறது? என்றும் அவர் சர்வதேச உளவு நிறுவனங்களுக்கு விலைபோய் விட்டதாகவும் கூறி குழப்பத்தை அதிகரித்துள்ளனர்.

 

இங்கே எப்படி இருந்தாலும் பாதிக்கப் பட்ட ஈழமக்களின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.ஈழம் மீண்டும் பகல்கனவாகி வாழ்வின் இருப்பு ஒன்றே இன்றைய பிரச்சினையாக மாறிவிட்டதை காண முடிகிறது.

 

இந்திய அரசு சார்பில் ஈழப்பிரச்சினை பற்றிப் பேச தமிழர்கள் எவரும் இலங்கைக்கு அனுப்பப் படுவதில்லை. தமிழ் உணவற்ற மலையாளிகளான அதிகாரிகள் ராசபக்சேயின் வீட்டில் விருந்துண்டு வருவதைத்தான் பார்க்க முடிகிறது.

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் கூட ஈழம் பற்றி எரிந்த நிலையிலும் ஈழ ஆதரவை முன்வைத்த அரசியல்கட்சிகள் தோற்றுப் போனதையே காண முடிகிறது. பிரபாகரனை கநாநாயகனாக வரித்த அரசியல் அணிகள் தோற்று பிரபாகரனை வில்லனாக சித்தரித்த காங்கிரஸ் அணிக்கே வெற்றியை தமிழக மக்கள் தந்துவிட்டனர்.ராஜீவ் கொலை ஒரு நிரந்தர வரலாற்றுப் பிழையாகி ஈழத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அது பற்றிய நியாய அநியாயங்கள் குறித்து பலரும் பலமுறை பதிவுகளில் உணர்வுப் பூர்வமாக விவாதித்து விட்டோம். ஆனால் அதன் விளைவை இன்றைக்கு கண்ணீருடன் கண்டு நிற்க வேண்டியுள்ளது.

 

வேறு வழியின்றி காங்கிரஸ் அணியில் போட்டியிட்டு வென்ற ஈழ ஆதரவாளரான திருமாவளவன் செய்வதறியாது திகைப்பதை காணமுடிகிறது.

 

இந்தியா ஒருபோதும் ஈழத்தை மீட்டுத் தர உதவாது. இந்தியத் தமிழர்களும் இதில் பெரிதாக உணர்வுப் பூர்வமாக இல்லை. ராஜீவ் மரணத்தில் அதிர்ந்த தமிழன் பிரபாகரனின் மரணத்தில் துடிக்கவில்லை.

 

சில தலைவர்கள் மட்டுமே ஆறுகோடி தொப்புள் கொடி உறவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்து அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதே கசப்பான உண்மை.

 

இன்னும் கூட பொய் நம்பிக்கைகளை விதைக்காமல் உண்மையிலேயே ஏதாவது ஆக்கப் பூர்வமாக செய்ய முடிந்தால் செய்யலாம்.

Tuesday, 07 July 2009

அஞ்சலி அறிவிப்பு

சிந்தாநதிகணிமை.காம் ,   தமிழ் புத்தக சந்தை   இவற்றின்  சிற்பி 

ஜூலை திங்கள்  2 ஆம் நாள்  மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

நண்பர்களுக்கும் நலம் நாடுவோருக்கும் உரிய நேரத்தில் அறிவிக்க இயலவில்லை.

குடும்பத்தினரால் நடத்தப்பெறும் அஞ்சலி நிகழ்வுகள்  9 ஆம் நாள்   (ஜூலை திங்கள்  10 ஆம் நாள் ) குடும்ப கல்லறை தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.