Saturday, 13 October 2007
4. எனக்கு-16 உனக்கு-12 ♂♀
உண்மைக்காதலை விட சினிமாவில் காணும் காதலுக்கு வெளிப்பூச்சுகள் அதிகம் என்பது நமக்குத் தெரியும். நிஜக்காதல் அத்தனை கனவுப்பூர்வமானதல்ல. அதில் எதார்த்தம் அதிகம். அதே சமயம் சினிமாவை மிஞ்சிய காமக்கூத்துகள் பலருக்கு நித்திய ஜீவிதமாக இருப்பதும் நிஜம்.
இங்கே நாம் காணும் வாழ்க்கைக் காதல் நிஜமானது.இந்தக் கதை மாந்தர்கள் இன்னும் இந்த மண்ணில் வாழும் சகஜீவிகள். இது தோற்ற காதல் தான் ஆனால் அந்தத் தோல்வியின் விளைவுகள்...அவற்றை நாம் எந்தச் சினிமாவிலும் கண்டதில்லை.
இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகிவிட்டன. இப்போது கற்றது தமிழ் - தமிழ் எம்ஏ, திரைப்படச் செய்திகளை வாசிக்கும் போது ஏனோ இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. அது ஏனென்று உங்களுக்கும் போகப் போகப் புரியும்.
இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
தொடரின் முந்தைய பாகங்கள்.
பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3
♂♀
ஒரு நாள் பதினோராம் வகுப்பிலுள்ள ஒரு மாணவனிடம் ஏதோ கேட்பதற்காக செல்வன் அங்கே சென்றான். அவன் வகுப்பறைக்குள் நுழையவும் பல்லவி எதிரே வந்து அவனை முட்டிக் கொள்ள இருந்தாள். சட்டென்று சுதாரித்து நின்று விட்டாள். உள்ளே நின்று கொண்டிருந்த மாணவனையே பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவனும் எதிரே குறுக்கே வந்தவளை சட்டென்று கவனித்து அங்கேயே நின்று விட்டான்.
முகத்தோடு முகம் நோக்க இருவருக்குள்ளும் பழைய நினைவுகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தன. கண்ணும் கண்ணும் கலந்தது. காதல் மீண்டும் மலர்ந்தது.
இம்முறை காதலுக்கு வில்லன்கள் எவரும் இல்லை. காதல் மிக கண்ணியமாக வளர்ந்தது. தினமும் அவள் வரும் பாதையில் காத்திருப்பு. முகதரிசனம். வாரம் ஒரு மடல்பரிமாற்றம். அவ்வளவுதான். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களின் கவனம் பட்டுவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.
அரையாண்டுத் தேர்வு சமயம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. பக்கத்து ஊர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியில் எங்களுக்கும் ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. நாங்களும் சில காட்சிப் பொருட்களுடன் செயல்விளக்கம் தந்து கொண்டிருந்தோம். எங்கள் பள்ளியில் இருந்து பார்வையிட வந்த மாணவமாணவிகளுடன் பல்லவியும் இருந்தாள். எங்கள் பள்ளிக்கு வெளியே முதன்முதலாக அவர்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு. தோழர்கள் உசுப்பி விட அவனும் சைகை செய்து அவளைத் தனியாக்கி ஒரு மரத்தடியில் அவர்கள் சந்தித்தார்கள்.
அந்த முதல் சந்திப்பில் தனிமைச் சந்திப்பிலும் அவர்கள் அதிகம் பேசிவிடவில்லை. காதல் வசனங்கள் அறவே இல்லை. அவன் பேசியது 'படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைத்த பிறகு தான் திருமணம். தங்கையின் திருமணம் முடியவேண்டும்.' அவளுக்கு மறுப்பேதும் இருக்கவில்லை.
அந்த ஆண்டு படிப்பு முடிந்தது. அவன் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரி பக்கத்து ஊரில் இருந்தது. பேருந்தில் செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தம் வழியாகத்தான் அவள் பள்ளிக்குச் செல்வாள். அவனைக் கடக்கும் நொடியில் விரியும் அவளது புன்னகை தரிசனம் கிடைத்த பிறகே கல்லூரிக்கு செல்வான். அவள் வரத் தாமதமானால் அவனும் பேருந்துகளைத் தவறவிடுவான். அவள் வராத நாட்களில் அவனுக்கும் விடுப்பு. அவ்வப்போது மடல்களும் பரிமாறிக் கொள்ளப் பட்டன.
இப்படியாக அந்த ஆண்டும் கடந்தது. பல்லவி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றாள். நன்றாகப் படிக்கிற மாணவி...அதுவும் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பில் தோற்றது எல்லோருக்கும் புதிராக இருந்தது. மூன்று பாடங்கள் தோல்வி. தனித்தேர்வில் எழுதிக் கொள்ளலாம்தான். ஆனால் ஏழைக்குடும்பம்.ஓரே மகள். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு போதுமென்று அவர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள்.
கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து அவர்களின் தினசரிச் சந்திப்பு தடைப்பட்டு விட்டது.
பல்லவி பயந்தாள். அவனுக்குத் தூதுவிட்டாள். அவளின் தோழியொருத்தியின் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்தாள்.
அவள் பதட்டத்தோடு விவரித்தாள். அவனோ ஆறுதல் படுத்தினான். பொறுமை காக்க புத்தி சொன்னான். வேலை கிடைத்தால் தான் திருமணம் என்பதை மீண்டும் வலியுறுத்தினான்.
அது வரை காத்திருக்க சூழல் அனுமதிக்காது என்பதை எடுத்துச் சொன்னாள். அப்படியொரு நிலைவந்தால் வீட்டை விட்டு வந்து விடுவதாக சொன்னாள். அவன் பதில் பேசவில்லை.
வீட்டில் நிலவரம் கலவரமானது. நெருக்கடி முற்றியது. பெண்பார்க்க வந்தவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணநாள் குறித்து விட்டார்கள்.
வீட்டை விட்டு வரப்போவதாக அவள் அவனுக்கு எழுதினாள். அவன் ஏற்கவில்லை. சாதி வேறுபாட்டை தன் உறவும் சுற்றமும் ஏற்காது. வாழவோ கையில் பணமில்லை. வேலை இருந்தால் மட்டுமே உறவுகளின் துணையின்றி வாழமுடியும் என்று அவன் சொன்ன பதிலால் அவள் இடிந்து போனாள்.
ஆம்... அவள் தாழ்த்தப் பட்ட சாதியொன்றில் பிறந்தவள். அவனோ ஆதிக்க சாதியொன்றின் பிரதிநிதி. அவனுக்கு நிதரிசனம் புரிந்தது. தன் கையறு நிலையும் தெரிந்தது.
அவளுக்கோ தன் காதலன் தன்னைக் கைவிட்டதின் விரக்தி. முடிந்தவரை போராடினாள். முடியவில்லை.
தேடிச் சென்ற வாழ்க்கை கைவிட்டதால் தேடிவந்த வாழ்க்கையை ஏற்றாக வேண்டிய நிலை. அவள் பெற்றோர் பார்த்துவைத்த மாப்பிள்ளைக்கு மணமாலை சூட்டினாள். அடுத்தவன் மனைவியாகி அயலூருக்குப் பயணமானாள்.
(தொடரும்)
03:35 Posted in வாழ்வியல் | Permalink | Comments (1) | Email this | Tags: love, காதல்
Friday, 27 April 2007
❒ காணாமல் வந்த காதல்!
"ஒரு சாப்ஃட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரி இப்படியிருப்பானா?' என்று சந்தேகப்பட வைத்தது அவனின் பேச்சு. வேலைக்காவது ஒழுங்காய்ப் போவானோ என்னமோ? ஷேவ் பண்ணாமல் வளர்ந்துவிட்ட தாடி. குழி விழுந்த கண்கள். எதையோ பறி கொடுத்த உணர்வு. தொளதொளப்பான சட்டை.
""என்ன காரணம்னே தெரியலை. நான் உயிருக்குயிராய் காதலிச்சேன். திடீர்னு தொடர்பைத் துண்டிச்சுக்கிட்டாள்'' என்றான்.
""அவளைப் பார்த்திருக்கீங்களா?''
""இல்லை''.
""அவள் போட்டோவாவது உண்டா?''
""இல்லை''.
""அவளுடைய பெயர், அட்ரஸ், அவளுடைய அப்பாவுடைய பெயர் எல்லாம் கொடுங்க?''
அது மட்டும் உடனே வந்தது. எல்லாவற்றையும் மளமளவென்று எழுதிக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் சட்டென்று வெளியேறினான்.
ஒரு வாரத்துக்கு முன்புதான் அவனுடைய பெற்றோர் வந்திருந்தனர். நடுத்தர வயதிலேயே அதிகக் கவலையினால் முதுமை அடைந்ததைப் போன்ற தோற்றம். எல்லாம் மகனைப் பற்றிய கவலைதான். ஒரு பெண்ணோடு இன்டர்நெட் மூலம் அறிமுகமாகி அதிலேயே பேசி அதிலேயே காதலித்து இன்டர்நெட் தொடர்பு கடந்த ஆறுமாதங்களாகத் துண்டிக்கப்பட்டதும் காதலும் துண்டிக்கப்பட்டு சோகத்தில் மூழ்கிவிட்டான் மகன் என்பதே அவர்கள் கவலை. வேறு எந்தப் பெண்ணையும் மணம் செய்து கொள்ளமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறானாம். அந்தப் பெண் யாராக இருந்தாலும் பரவாயில்லை, கண்டுபிடித்துக் கொடுங்கள் அவளையே அவனுக்குக் கட்டி வைக்கிறோம் என்றார்கள் கண்கள் கலங்க. அதன்பின்தான் அவன் வந்தான்.
அவன் கொடுத்த பெண்ணின் பெயர், அவள் படிப்பதாகச் சொன்ன உயர்தொழில் நுட்பக் கல்லூரி, அவளுடைய தந்தையின் பெயர், அவர் வேலை செய்வதாகச் சொன்ன பெரிய நிறுவனம் எல்லாமே பொய்யான தகவல்கள் என்பதை இரண்டு நாட்கள் காடுமேடெல்லாம் அலைந்து நாம் கண்டுபிடித்தோம். அடுத்து போகும் திசை தெரியாமல் முட்டுச் சந்தில் நின்றதைப் போல இருந்தது. என்ன செய்வது என்று கையைப் பிசைந்து நின்றோம். இந்தக் கேûஸ முடிக்க முடியாது போல இருக்கிறதே என்ற கவலை லேசாகத் தலை தூக்கியது. இருந்தாலும் சோர்வைத் தூக்கியெறிந்துவிட்டு மறு தேடலுக்குத் தயாரானோம்.
மீண்டும் மறுபடி அவனிடம் விசாரணை.
அவள் கொடுத்த தகவல்கள் அத்தனையும் பொய் என்றதும் அவன் முகம் போன போக்கு இருக்கிறதே, அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவனின் காதலி தொடர்பான வேறு தடயங்கள் எதுவும் இல்லை என்கிற போது என்ன செய்வது என்று கையை விரித்துவிடலாம் என்று நினைத்தோம். அப்போது அவன் சொன்ன ஒரு தகவல் உயிரூட்டியது.
அவனுடைய காதலியின் தோழி ஒருத்தி ஆறுமாதத்திற்கு முன்பு அவனை வந்து பார்த்துவிட்டுப் போனாளாம். அவள் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டுப் போனபின்புதான் பிரிவு ஏற்பட்டதாம்.
அதற்குப் பின்தான் அவனுடைய காதலியிடம் இருந்து கண்ணீர் கடிதங்கள் இ-மெயிலில் வர ஆரம்பித்தனவாம்.
"அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்குக் கிட்னி ஃபெயிலியர். நான்தான் கிட்னி கொடுக்க வேண்டும். எனவே அன்பே என் குடும்பச் சூழல் சரியில்லை...என்னை மறந்துவிடுங்கள்' என்று இ-மெயில். அதற்குப் பிறகு இவன் உருகி உருகி அனுப்பிய இ-மெயில் கடிதங்கள் போய்ச் சேரவில்லை. இன்டர்நெட் இணைப்பையே துண்டித்துவிட்டாள். இருந்தும் தோழியின் முகவரிக்குத் தேடிப் போயிருக்கிறான். அந்தப் பெயரில் அப்படி யாரும் இல்லையென்று முகத்தில் அடித்ததைப் போலச் சொல்லியிருக்கிறார்கள். அப்புறம்தான் இவன் பைத்தியம்போல் ஆனது. சரியாகச் சாப்பிடாமல்...தூங்காமல்...உடை உடுத்தாமல்...உயிரோடு இருப்பதான உணர்வு இல்லாமல்....பகல் இரவு வேறுபாடு தெரியாமல்....
அந்தத் தோழி யார் என்று தெரிந்தால் அவளைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும் என்று நம்பிக்கை அடிவானத்துச் சூரியனாய் நமக்குள் உதித்தது.
தோழியின் முகவரி தேடிப் போன போது அந்த வீடு பங்களாவாக இருந்தது. வயதான தம்பதியினர் செüகரியமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். வேலைக்காரர்கள்தாம் துணை. வீட்டு வேலைக்காரியை நட்பாக்கி விசாரித்த போது தெரிந்தது அந்த வயதான தம்பதிக்கு ஒரே மகள் என்றும் அவளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது என்பதும்.
அவளும் ஐந்து வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டவளாம். ஆறு மாதத்திற்கு முன்புதான் இங்கே அப்பா, அம்மாவைப் பார்க்க வந்தாளாம். மூன்று மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வேலை செய்கிற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டாளாம்.
வேலைக்காரப் பெண்ணிடம் அப்படி இப்படிப் பேசி அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் வெளிநாட்டு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்குவதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
நவீன தகவல் தொடர்பு யுகத்தில் அவனுடைய காதலியைப் பிடிப்பது பெரிய விஷயமாகவே இல்லை.
அவள் அவனைக் காதலிக்கவே இல்லையாம்.
""ஏன் சார்...கண்டதும் காதல் வருவதே இந்தக் காலத்தில் பைத்தியக்காரத்தனம். அது என்ன சார் காணாமலேயே காதல் வருவது? அவன் லூஸ் டைப்பான ஆளாகத் தெரிந்தான். எனக்கும் வேலை முடிந்த நேரங்களில் பொழுது போகலை. பொழுதுபோக்காக இ - மெயில் அனுப்பி வைப்பேன். அந்த முட்டாள்தான் தேவையில்லாமல் உருகி வழிந்தான். அதற்கு நானா பொறுப்பு? ஆறு மாதத்துக்கு முன்பு நான் சென்னை வந்திருந்த போது அவன் மூஞ்சி எப்படியிருக்கிறது என்று பார்க்க வந்தேன். சரியான பைத்தியக்காரன்னு தெரிந்தது. அதற்கு மேல் அவனுடன் தொடர்பு கொள்ள நான் என்ன முட்டாளா?'' சாதாரணமாகப் பேசி விட்டுச் சத்தம் போட்டுச் சிரித்தாள்.
எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் தெரிந்தது.
அவனிடம் இந்த உண்மையை எப்படிப் பகிரங்கமாகச் சொல்வது என்ற கவலைதான் அடுத்து எங்களுக்கு உடனடியாகத் தோன்றியது.
டிடெக்டிவ் டைரி: மாலதி - தினமணிகதிர்
02:35 Posted in வாழ்வியல் | Permalink | Comments (2) | Email this | Tags: தினமணிகதிர், காதல்
Thursday, 12 April 2007
❒ கட்சிக்காக ஒரு காதல் தியாகம்
."கட்சிக்காக காதலை தியாகம் செய்கிறேன்' தே.மு.தி.க., பெண் கவுன்சிலர் உருக்கம் சென்னை:கல்லுõரி மாணவியான தே.மு.தி.க., பெண் கவுன்சிலரை தி.மு.க.,வுக்கு இழுக்க அவரது காதலர் முயற்சி செய்வதாக புகார் எழுந்தது. கட்சிக்காக காதலை தியாகம் செய்வதாக பெண் கவுன்சிலர் அதிரடியாக தெரிவித்தார்.
சென்னை புளியந்தோப்பு டிமலர்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(22). பேசின் பிரிட்ஜ் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் உஷா(22). இருவரும் சென்னை மாநிலக் கல்லுõரியில் பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கின்றனர். புளியந்தோப்பில் இருந்து கல்லுõரிக்கு ஒன்றாக பஸ்சில் சென்று வந்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. கல்லுõரி படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் கவுன்சிலராக உஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கவுன்சிலரான பிறகும் காதலர் ராஜ்குமாரை திருமணம் செய்வதில் உஷா உறுதியாக இருந்தார். தி.மு.க., ஆதரவாளர்கள் கட்சித் தாவும்படி உஷாவிடம் பேரம் பேசினர். "தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேப்டன் கட்சியிலிருந்து விலக முடியாது' என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.உஷாவின் சகோதரர் ஆறுமுகம் அப்பகுதியின் தே.மு.தி.க., வட்டத் தலைவராக உள்ளார். அவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை, சிலர், பேரம் பேசியும் பலனில்லை. அப்போது, கவுன்சிலர் உஷாவின் காதலரை, சிலர், துõண்டி விட்டனர். இதையடுத்து உஷாவிடம், "உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று ராஜ்குமார் கூறினார்.கல்லுõரி படிப்பு முடிந்த பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார் உஷா. போலீஸ் கமிஷனரிடம் ராஜ்குமார் கொடுத்த புகாரில், "நானும் உஷாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்தோம். எனது காதலி கவுன்சிலர் ஆனார். அதன் பின்னர், அவரை நான் சந்திக்க அவரது சகோதரர்கள் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என்று கூறினார்.இது குறித்து கவுன்சிலர் உஷா கூறியதாவது:
நானும் ராஜ்குமாரும் கல்லுõரியில் ஒரே வகுப்பில் படித்த போது காதலித்தோம். எனது சகோதரர் ஆறுமுகம் தே.மு.தி.க.,வைச் சேர்ந்தவர். எங்கள் வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், எனது சகோதரர் என்னை தேர்தலில் போட்டியிட வைத்தார்.கவுன்சிலரான பின்னர், என்னை சிலர் கட்சித் தாவும்படி பேரம் பேசினர். படியாததால் மிரட்டினர். எனது காதலரை துõண்டி விட்டு எனது குடும்பத்திற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்றிருந்தேன். அங்கு ராஜ்குமாருடன் தி.மு.க.,வினர் நிறைய பேர் இருந்தனர். எனது காதலர் மூலமாக என்னை கட்சித் தாவ வைக்க முயற்சிகள் நடக்கின்றன.கல்லுõரியில் நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவில் ராஜ்குமாரும், நானும் அருகருகில் உள்ளோம். அந்த போட்டோ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. உண்மையான காதலுக்கு அவர் மரியாதை கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் வரை, அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தேன். அரசியல்வாதிகள் துõண்டுதலால் எனது காதலை ராஜ்குமார் துõக்கி எறிந்து விட்டார்.ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் நான், எனது காதலருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தலாம். என்னை நம்பி தெருத் தெருவாக பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் சந்தோஷப்பட மாட்டார். என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்கள் சந்தோஷப்பட மாட்டார்கள். கட்சிக்காக எனது காதலை தியாகம் செய்கிறேன்.இவ்வாறு கவுன்சிலர் உஷா கூறினார்.
=தினமலர்.
12:40 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this | Tags: காதல், கட்சி
Wednesday, 28 March 2007
❒ தோற்றவர் கவுஜ?
கண்ணீர் இனிக்கும்
தண்ணீர் கசக்கும்
சூடான தேநீரும்
பனி போல குளிரும்
ஐஸ்கிரீமோ
அனலாய் கொதிக்கும்
கொதிக்கும் வெயிலில்
நடக்கத் தோன்றும்
நிழலோ
நெருப்பாய் சுடும்
தனிமை கொல்லும்
இருந்தும்
கூட்டம் வெறுக்கும்
நிலையற்ற காதலை
நிசமென்று நம்பி
தோற்றவர் தடுமாறும்
நிலையிது...
-oOo-
சென்ஷிக்கு...
06:05 Posted in வாழ்வியல் | Permalink | Comments (12) | Email this | Tags: love, காதல்
❒ இது மொக்கையா? கவுஜயா?
காதல் மனசில் பூத்தால்...
பூக்களின்
புன்னகை கேட்கும்
பூ விரியும்
ஓசை கேட்கும்
பூவோ டுரசும் தென்றலும்
காதோ டுரசும்
காட்டுக் கத்தலாய்
கத்தினாலும்
பக்கத்திலிருப்பவர் பேச்சு
மட்டும் கேட்கவே கேட்காது...
-oOo-
(காதலிக்கத் துடிக்கும், காதலை மறைக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.)
05:10 Posted in வாழ்வியல் | Permalink | Comments (16) | Email this | Tags: love, காதல்
Wednesday, 14 February 2007
❒ காதலர் தினம் தேவையா?
காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் எங்கெங்கு நோக்கிடினும் காதலடா.
இந்தக் காதல் இல்லையேல் சாதல் வேறயாம். நோக்கியா வழியாவும் காதல்...நோக்கிய விழியாலும் காதல்...
இப்போ சூடா காதலர் தினம்...
காதலர் தினம் வேணுமா வேண்டாமா இங்கே போய் உங்க கருத்தைச் சொல்லுங்க..!
08:40 Posted in வாழ்வியல் | Permalink | Comments (9) | Email this | Tags: காதல், valentine's day, தமிழ்ப்பதிவுகள்

