Tuesday, 01 July 2008
❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள்
தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister
இது ஒரு ஆன்லைன் கருவி.
இதன் பயன்கள்.
யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.
தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.
பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும். இதன் பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.
குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் இக்கருவியை மேம்படுத்த உதவும்
http://software.nhm.in/Services/NHMLister/tabid/72/Defaul...
05:55 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (1) | Email this | Tags: மென்பொருள், இணையம்
Sunday, 19 August 2007
❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு மிக எளிதாகவே இருக்கிறது.
இன்னும் கணினியில் தமிழில் எழுதும் பரிச்சயம் வராதவர்கள் கூட திரட்டிகள் வாயிலாக முதலில் வலைப்பதிவுகளை படிக்கலாம்.
தமிழின் பிரதான வலைப்பதிவுத் திரட்டிகள்.
தமிழ்மணம் (http://www.thamizmanam.com)
தேன்கூடு (http://www.thenkoodu.com)
தமிழ்ப்பதிவுகள் (http://www.tamilblogs.com)
தமிழ்வெளி (http://www.tamilveli.com)
இவற்றில் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகள் திரட்டப் படுகின்றன.
சில நண்பர்களால் நல்ல வலைப்பதிவுகள் அடையாளம் காட்டப்பட்டு தொகுக்கப்படும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி மாற்று (http://www.maatru.net).
இதே போன்று கில்லி (http://gilli.in) என்ற தளமும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளை தேர்ந்தெடுத்துத் தொகுக்கிறது.
வாரம் ஒரு ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது வலைச்சரம் (http://blogintamil.blogspot.com)
தனியொருவராக தினந்தோறும் தான் படிக்கும் பதிவுகளில் தேவையற்றதை விலக்கி மற்றதைத் தொகுத்துத் தருகிறார் ஸ்னாப்ஜட்ஜ் (http://snapjudge.blogspot.com)
இவை போன்ற திரட்டிகள், திரட்டுகள் வாயிலாக சில நாட்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலே வலைப்பதிவுகள் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? அதன் சாதக பாதகங்கள் போன்றவை ஓரளவு புரிந்து விடும்.
இப்போது நீங்கள் வலைப்பதிவு வாசகராகி விட்டீர்கள். சில கருத்துக்களைப் படிக்கும் போது நீங்களும் பதில் சொல்ல விரும்பு கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை... என்ன செய்யலாம்?
நமது கணினிகளின் இயல்பான தட்டச்சு முறையாக ஆங்கிலம் தான் இருக்கிறது. எனவே கணினியைத் தமிழ் தட்டச்சுக்கு தயார் படுத்த தட்டச்சு இயக்கி தேவை. அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச் செயலிகளில் உள்ள தமிழ் தட்டச்சு இயக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். முரசு, அழகி, குறள் போன்ற பல தமிழ்ச் செயலிகளில் தமிழ் தட்டச்சு செய்ய ரோமன், தமிழ்99, பாமினி போன்ற தமிழ் தட்டச்சு முறைகள் இருக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான முறையை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்
ஏற்கனவே தமிழ்தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கணினியிலும் பாமினி போன்ற யளனகப தட்டச்சு முறையில் தட்டச்சு செய்யலாம். இதுவரை தமிழ் தட்டச்சோ, கணினி எழுதுமுறையோ அறியாதவர்கள் அந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமம்
தமிழின் ஆரம்பகாலப் பதிவர்கள் செய்தது போல ரோமன் முறையில் தமிழில் எழுதும் முறை சட்டென்று புரிந்து விடும். உதாரணமாக ஆங்கிலத்தில் ammaa என்று எழுதினால் தமிழில் அம்மா என்று வரும். ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும் transliteration முறையில் ரோமன் தட்டச்சு முறை இருக்கிறது. இதை தமிங்கிலீஷ் தட்டச்சு என்று (கேலியாக) சொல்கிறோம். அஞ்சல் முறை என்பது பொதுப் பெயர்.
ஆரம்பப் புரிதல் எளிதாக இருந்தாலும் வழக்கப் படுத்திக் கொள்ளும் போது இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக இம்முறையில் தட்டச்சு செய்து பழகும்போது நம் மனம் தமிழை ஆங்கில எழுத்து வழியாகவே நினைக்கப் பழகுகிறது. கூ என்ற எழுத்தை தமிங்கில அஞ்சல் முறையில் எழுத kuu என்று (k-u-u மனதில் எழுத்துக் கூட்டி) எழுத வேண்டும்.
கூ என்பது க'கர மெய்யுடன் ஊ'காரம் இணைந்து வருவது. எனவே க+ஊ என்று தட்டச்சு செய்தாலே கூ என்று தட்டெழுதக் கூடிய எளிய தட்டச்சு முறையான தமிழ்99 முறையை ஆரம்பத்திலேயே பழகிக் கொள்வதால் குறைந்த விசையழுத்தங்களில் விஞ்ஞானப் பூர்வமாக தட்டெழுதப் பயிலலாம். இது 1999 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப்படுத்தப் பட்ட விசைப்பலகை முறையாக அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை, மலேசிய அரசாங்கங்களும் இந்த முறையை அங்கீகரித்துள்ளன.
எனவே தமிழுக்கான இந்த தட்டச்சு முறையில் தமிழ் எழுதக் கற்பது எளியதும் பயனுள்ளதுமாக இருக்கும். ஏற்கனவே தமிங்கில தட்டச்சு முறையில் வலைப்பதிவுப் பயிற்சி பழகிய மூத்த வலைப்பதிவர்கள் பலரும் கூட இன்று தமிழ்99 முறையின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்ந்து இப்போது இந்த முறையில் தட்டச்சு செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே பழகிய முறையை பழக்கம் காரணமாக கைவிட இயலாமல் இருக்கிறார்கள். எனவே ஆரம்பத்திலேயே தமிழ்99 முறையில் தமிழ் தட்டச்சு செய்ய பழகிக் கொள்வது நல்லது.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் தமிழ் எழுது கருவிகளை தயாரித்து வழங்கிய சுரதா யாழ்வாணனும் தற்போது தனது புதுவை யூனிகோட் எழுதியில் (http://www.suratha.com/unicode.htm) தமிழ்99 தட்டச்சு (tam) முறையையும் இணைத்துள்ளார். இது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்கும்.
பயர்பாக்ஸ் இணைய உலாவியைப் பயன்படுத்துபவர்கள் எழுதுவதற்கு தமிழா தமிழ்கீ ஆன்லைன் (http://developer.thamizha.com/tamilkey.html) பயன்படுத்தலாம். (தமிழ்க்கீ பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சனாகவும் வருகிறது. அதை நிறுவிக் கொண்டால் பயர்பாக்ஸ் மூலமாக இணையப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.)
தமிழ்99 முறையில் திரைவிசைப்பலகையுடன் கூடிய ஆன்லைன் எழுதுகருவி w3 தமிழ் இணைய விசைப்பலகை (http://wk.w3tamil.com)
இது போன்ற இணைய எழுதுகருவிகளே ஆரம்ப மறுமொழி இடுதலுக்கு போதுமானவை. இந்த கருவிகளின் திரையில் தமிழில் எழுத வேண்டியதை தட்டச்சு செய்து பின் அவற்றை தேர்வு செய்து வெட்டி தேவையான மறுமொழிப் பெட்டியில் ஒட்ட வேண்டும். (cut & paste). இவை இணையத்தில் இருப்பதால் எந்தக் கணினியில் இருந்தும் எங்கிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி எழுத முடியும்...
உங்களிடம் சொந்தமாக கணினி இருந்தால் அல்லது உங்கள் கட்டுப் பாட்டில் அலுவலகக் கணினி இருந்தால் தமிழா.காம் (http://thamizha.com) தளத்தில் இருந்து எகலப்பை - தமிழ்99 (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5) என்ற விசைப்பலகை இயக்கியை பதிவிறக்கி நிறுவிக் கொள்வது நல்லது.
இதன்மூலம் இணையத்தில் தமிழ் எழுத மட்டுமல்லாமல் நேரடியாகவே நோட்பேடு, வேர்ட்பேடு போன்ற விண்டோஸ் செயலிகளிலும் விண்டோசில் இயங்கும் எம் எஸ் ஆபீஸ் போட்டோஷாப் உள்ளிட்ட பிற செயலிகளிலும் கூட எப்போதும் நேரடியாக தமிழில் எழுத முடியும். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்துள்ள தமிழ்99 சிறப்பு வசதிகள், விதிகள் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) போன்றவற்றை இதில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும்.
-oOo-
இப்போது நீங்கள் வலைப்பதிவுகள் படிக்கவும் மறுமொழி விமர்சனங்கள் எழுதவும் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்தது என்ன?
நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட வேண்டியது தானே?
வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
அதற்கு முன்னால் ஒரு விஷயம்...
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள் (http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_1) என்று தமிழ்மணம் நிறுவனர் காசி மிகச்சிறந்த ஒரு தொடரை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதில் அவர் பழைய பிளாக்கரில் வலைப்பதிய ஆரம்பிப்பது வரை சிறப்பான விளக்கமும் தந்திருக்கிறார்.
அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
அடுத்து புதிய பிளாக்கர், வேர்ட்பிரஸ் உள்ளிட்ட சேவைகளில் பதிவு தொடங்குவது பற்றிய விளக்கங்களுடன் நான் தொடர்கிறேன்.
06:10 Posted in internet , இணையம் , வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this | Tags: internet, blogs, வலைப்பதிவு, இணையம்
Friday, 18 May 2007
❒ தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம்
நண்பர்களே
முன்பு தமிழ்மணத்தின் ஒரு பகுதியாக தமிழ்மணம் காசி, பதிவர் யக்ஞா முயற்சியில் உருவாகி பலரால் தொகுக்கப் பட்டு வந்த தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம் என்னும் விக்கி மையம் தற்போது தனித்தளத்தில் நண்பர் காசியால் உருவாக்கப் பட்டுள்ளது. எனினும் அதில் தொகுக்கப் பட்ட பல தகவல்கள் மீளத் தொகுக்க வேண்டியுள்ளது. ஆர்வமுள்ள நண்பர்கள் நேரம் உள்ள போது சிறுகச் சிறுக இந்த தமிழ்மென்பொருள் விக்கியை கட்டியெழுப்ப முன்வருமாறு வேண்டுகிறேன். எளிமையான செயல்பாடு தான். மிக விரைவில் இதை செய்ய முடியும். தமிழ் கணிமை முயற்சிகள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இந்த முயற்சி இது. கணினி வழி தமிழ்ச் செயலிகளின் தொகுப்பாக இது உருவாக்கப்பட வேண்டும்.
இது போன்ற முயற்சிகள் இன்னும் பல தளங்களில் நடைபெறுகின்றன என்றாலும் இது சற்று மாறுபட்ட எளிமையான முறையில் சுட்டிகளை தொகுத்து தரும் முயற்சி.
ஆர்வமுள்ள நண்பர்கள் இங்கு பின்னூட்டமிட்டு சொல்லுங்கள். என்னென்ன செய்யலாம் என்பதை ஆலோசித்து செயல்படுத்துவோம்.
வாருங்கள். இணையம் மூலம் இணைந்து செயல்படுவோம்.
தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம்
07:55 Posted in இணையம் | Permalink | Comments (6) | Email this | Tags: tamil wiki, விக்கி, இணையம், கணினி

