Saturday, 03 May 2008

❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு

நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும் கூட...Image and video hosting by TinyPic

ஆர்க்குட்/பேஸ்புக் போன்ற தளங்களில் பல நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பார்க்க முடிகிறது. எனவே நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் அறிமுகம் செய்யலாமே என்று நண்பர் முகுந்த் இந்த மலரும் நினைவுகளை மீட்டியதால் என் நினைவில் இருந்து இந்த துளிகள்.

ஆடுபுலி ஆட்டம்

தமிழக கிராமப்புற விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம்.

இது இருவர் விளையாடும் விளையாட்டு.

பொதுவாக சாக்பீஸ் அல்லது கரிக்கட்டையால் தரையில் ஆடுபுலிக் களம் வரைந்து அதில் மூன்று புலிகளாக சற்று பெரிய கூழாங்கற்களோ விதைகளோ, ஆடுகளாக 15 சிறிய விதை/ கூழாங்கல் பயன்படுத்தி விளையாடுவார்கள்.

மூன்று புலிகள் 15 ஆடுகள் கொண்டது இந்த விளையாட்டு.

புலிகள் ஆடுகளிடம் சிறைப் படுதல். அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது இந்த விளையாட்டின் நோக்கம். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என விளையாட்டு உத்தி வகுக்கப் பட்டுள்ளது.

1. முதலில் புலி அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப்போல் இது கட்டத்துக்குள் வைக்கப் படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.

2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.

3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அது போல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெல்வார்.

இவை இந்த விளையாட்டின் பொது விதிகள். இது தவிர பிற விதிமுறைகள் நுட்பங்கள் குறித்து நினைவில் இருப்பவர்கள் பின்னூட்டம் தரலாம்.

இன்னும் சற்று மாறுபட்ட களத்தில் 21 ஆடுகள் கொண்ட விளையாட்டும் சில இடங்களில் விளையாடப் படுகின்றன.

பிற விளையாட்டுகள் மற்றும் அவற்றின் விதிமுறைகள் பற்றியும் நினைவுகளை மலரவிடுங்கள்.