Monday, 30 June 2008
❒ சுகுணா திவாகருக்கு...
ஒரு பதிவும் சில சிந்தனைகளும்...
சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது.
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
பத்திரிகைகளும் இணையதளங்களும் வெளியிட்ட படங்கள் எவையும் அவர்கள் தாங்களாக எடுத்து வெளியிட்டவை அல்ல. அவை அனைத்துமே படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவால் வெளியிடப் பட்டவைதான். கவர்ச்சி விருந்து படைக்க விரும்பவில்லை என்றால் சுஜிபாலா ஜாக்கெட் போடாத படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க தேவையில்லை. கதாநாயகியின் கவர்ச்சி படத்தின் விளம்பரத்துக்கு அவசியம் என்பதாலேயே அவர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.
மேலும் நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்.
வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
சினிமா ஒரு போதும் உண்மையான வரலாறாக இருப்பதில்லை என்பதை உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள். திரையரங்கினுள் திரைப்படம் ஓடும்போது அந்தப் படம் சொல்லும் செய்தி சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். திரைக்கு வெளியே புனிதங்களை ஏற்றிப் பார்ப்பது அவசியமற்றது.
04:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (6) | Email this | Tags: அய்யாவழி, சினிமா

