❒ சிந்தாநதியின் இறுதி பதிவுகள் | H

Saturday, 01 August 2009

❒ சிந்தாநதி - எழுத்தும் வாசிப்பும்...

சிறு குறிப்பு

இணைய பதிவுகளுக்கு முன்பான தனது எழுத்துலகம் குறித்து சிந்தாநதி எழுதிய பதிவு.

இது சிந்தாநதியின் பதிக்கப்படாத இறுதி பதிவுகளில் ஓன்று என நினைக்கிறேன்.

வேறு பதிவுகளில் பதித்திருந்தால் மன்னிக்கவும்.


❒  எழுத்தும் வாசிப்பும்...

 

நான் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்வதற்கு நான் எதையும் இன்னும் எழுத வில்லை. சில சிற்றிதழ்கள் நடத்தியது, சில இதழ்களில் எழுதியது, இப்போது இணையத்தில் மொக்கை போடுவது தவிர பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.ஆனால் நான் ஒரு வாசகன் என்று சொல்ல ஓரளவு பரந்த வாசிப்பு அனுபவம் எனக்கு உண்டு என்றே நம்புகிறேன்.

 

ஆனாலும் அதை ஆழமாகச் செய்தேனா? இல்லை அகல உழுதவை தானா என்பதில் எனக்கும் ஐயமுண்டு. ஆனால் பொழுதுபோக்கு இலக்கியமானாலும் தீவிர இலக்கியமானாலும் ஒரே மாதிரியான ஆர்வத்துடன் வாசிக்க முடிந்திருக்கிறது.

 

எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பதை விட எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது முக்கியம். பள்ளியில் ஆனா ஆவன்னா படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழ் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் என் அம்மாவும் மாமாவும். தமிழ் எழுத்துக்கள் இன்னதென்று அறிவதற்கு முன்கே ராணியில் குறிப்பிட்ட பக்கத்தின் தலைப்பை வாசிப்பதற்கு அறிந்திருந்தேன். அவை அன்புள்ள அல்லி, குரங்கு குசலா... இது எழுத்தை புரிந்து படித்தது அல்ல. அடையாளம் கண்டு புரிந்து கொள்ளல் தான். ராணி, ராணிமுத்து, கோகுலம் என இதழகளின் தலைப்புகள்...

 

எழுத்துப் படித்த பின் அன்புள்ள அல்லியின் கேள்வி பதிவை எழுத்துக் கூட்டி வாசித்ததில் ஆரம்பித்து கோகுலம் படக்கதைகளை படிக்க ஆரம்பித்தேன். பிறகு கோகுலத்தின் பிற பக்கங்களும்...ராணிமுத்துவின் காதல் கதையொன்றை எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்து அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவிருக்கிறது.

 

சில காலம் பின்னிட்டு மாமா வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களின் மூலம் இரும்புக் கை மாயாவி, சிஐடி லாரன்ஸ்-டேவிட் அறிமுகமானார்கள். அதற்கடுத்து சிவப்புச் சாயம் பூசிய மர்ம நாவல்கள். சந்திரமோகன், சிரஞ்சீவி, மாயாவி, பிடி.சாமி இவர்களின் நாவல்கள். தொடர்ந்து சாண்டில்யனின் சரித்திர நாவல்கள்.

 

இதே காலகட்டத்தில் ஒருமுறை நாடக விழா ஒன்றிற்கான அழைப்பிதழ் அப்பாவுக்கு வந்திருந்தது. அதில் சில நாடகங்களை பார்க்க முடிந்தது. வி.எஸ்.ராகவன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர், சோ, ஒய்ஜி.பார்த்தசாரதி, காத்தாடி ராமமூர்த்தி இவர்கள் நாடகங்களை மேடையில் பார்க்க முடிந்தது.

 

என் தந்தையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட்ட அந்த நாடக விழாவின் விழா மலர் கிடைத்தது. அதில் அந்த நாடகங்களின் கதைச் சுருக்கத்தை வாசிக்க முடிந்தது. கூடவே அன்றன்று நடக்கும் நாடகத்தின் முக்கியமான காட்சிகள் அடுத்த நாள் நாளிதழொன்றில் வசனமாக வெளியிடப் பட்டது.

 

மேடையில் காட்சியாக கண்ட நாடகத்தை கதைச் சுருக்கமாக வாசித்து காட்சியை வசனமாகவும் படித்தபோது நாடகத்தில் வடிவம் மனதுக்குள் நச்சென்று ஒட்டிக் கொண்டது. மனசுக்குள்ளேயே நாடகக் காட்சிகள் ஓட ஆரம்பித்தன. ஓடிய காட்சிகளை கை தாளில் வரியாக வடிக்க ஆரம்பித்தது.

 

அப்படித்தான் நான் நாடகம் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 13.பழைய நோட்டுப் புத்தகங்களில் அப்போது வாசித்த மர்ம நாவல்களின் பாதிப்போடு எழுதிய ஆரம்ப நாடகங்கள்.

 

பின்னர் பள்ளி ஆண்டு விழாவில் நண்பர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் இயக்கத்தில் உதவியதோடு பிராம்டிங் எனப்படும் வசனம் எடுத்துக் கொடுக்கும் பணியும் செய்து அரங்க அனுபவமும் கிடைத்த்தில் கோவில் விழா ஒன்றில் நானே எழுதிய நாடகம் அரங்கேறியது. பின்னர் நண்பர்களுக்காக பல நாடகங்கள் எழுதிக் கொடுத்தேன். ஐந்து ஆண்டுளில் சுமார் 15 நாடகங்கள்.

 

தூத்துக்குடி நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்கள் கிடைத்தன. சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கல்கி, அகிலன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி, லஷ்மி, தமிழ்வாணன், ராஜேந்திரகுமார் நாவல்கள் அங்கே வாசித்த பெரும்பான்மை.

 

பள்ளிப் படிப்பிற்குப் பின் புதுக் கோட்டையில் இருந்த போது மன்னர் கல்லூரி நூலகத்தில் இருந்து கிடைத்த பல வங்க மொழி நூலகளின் மொழிபெயர்ப்புகள், காண்டேகர், பக்கிம் சந்திரர் மேலும் பல மொழியாக்க நூல்கள், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி,கண்ணதாசன், கல்கி, அகிலன், சாண்டில்யன் பெரும்பாலான நூல்கள், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், துமிலன் தேவன், மகரிஷி, முவ, அண்ணாதுரை, புதுமைப்பித்தன், பாரதி இன்னும் பலர்.

 

தொடர்ந்து லெண்டிங் லைப்ரரி தந்த ராஜேஷ்குமார், சுபா, ரமணிச்சந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர் என பிரபலமான பாக்கெட் மாத நாவல்கள்.

 

இதற்கிடையே ஊரில் இருந்து வரும் என் நண்பனின் கடிதங்கள் புதிய ஒரு மாற்றத்தை தந்தன. ஒரு காதல் தோல்வியில் என் நண்பன் தனது கடித்ங்களை கவிதை வடிவில் எழுதத் துவங்கினான். ஏதோ ஒரு ஆர்வத்தில் அவனுக்கு எழுதும் பதில்களை நானும் கொஞ்சம் சந்தம் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். அவற்றை வரிவரியாக எழுதியதில் விடலைப்பருவ புதுக்கவிதை எழுதிய இறுமாப்பு.தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு கவிதை?களை எழுதி வைத்தேன்.

 

வானம்பாடிக் கவிதைகள் தவிர வேறொன்றும் வசீகரிக்கப் படாத பருவம். புதுமைப்பித்தன், பாரதி எல்லாம் வாசித்திருந்த போதும் அவை அன்று மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.

 

பின்னாளில் எழுத்தின் மீதிருந்த காதலால் அச்சகம் ஆரம்பித்த போதும் அது என் எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் ஆரம்பத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில் நண்பர்கள் இணைந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். அதன் பெயர் தமிழ் மலர்.

 

ஒரு முறை ஒரு இளைஞர் ஒரு சிறு பத்திரிகையின் முதல் இதழை அச்சிட வந்தார். பதினாறு பக்க இதழ். பின்னர் ஓராண்டுக்குப் பின் அந்த இதழின் முதலாவது ஆண்டு மலரை அச்சிட அதே இளைஞர் வந்தார். இடையில் வேறொரு அச்சகத்தில் இருந்து அந்த இதழை தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறார். இம்முறை எனக்கு அவர்மீது சற்று ஆர்வம் பிறந்தது. உரையாடினோம். வாடிக்கையாளர் என்பதில் நண்பராக மாறினார்.அவர் பெயர் கே.புஷ்பராஜ். அவர் நடத்திய இதழ் கவிமலர். அது பின்னாளில் அரசுப் பதிவுக்காக கேப்பியார் என மாறியது.

 

கேப்பியாரில் வந்த படைப்புகள், புஷ்பராஜ் தந்த இதழ்கள், புத்தகங்கள் மூலம் இலக்கிய சிற்றிதழகள் என்ற மற்றொரு உலகம் இருப்பதை கண்டு கொண்டேன். சுந்தரராமசாமி, சிங்காரம், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், நகுலன், பிரமிள், வெங்கட் சாமிநாதன் என்னும் பெயர்கள் நவீன கவிதை, நாவல், விமர்சன உலகை அடையாளம் காட்டின.அது வரை கவிதையென்று எழுதியவை எப்படிப்பட்டவை என்ற புரிதலை அவை எனக்குத் தந்தன. புதிதாக சில பரிசோதனைகள் செய்தேன்.

 

கேப்பியார் எனது சில கவிதைகளை பிரசுரித்தது.

 

அதே காலகட்டத்தில் எனது அடுத்த எழுத்து வடிவம் பிறந்தது. அது சிறுகதை. இன்றளவும் எனக்கு வசதியானதும் மிகவும் சரளமானதுமான வடிவமாக உணர்வதும் சிறுகதை வடிவைத்தான்.

 

கல்கி, ராணி, தினமணி, தினமலர் கதைமலர், கதிரவன், தினத்தந்தி இதழ்களில் படைப்புகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. கேப்பியார் எனது சிறுகதைகளை பிரசுரிததது. சுந்தரசுகன், புதுக்கவிதைப்பூங்கா, ஏழைதாசன், முங்காரி, தாராமதி என சிற்றிதழ்களிலும் எனது கவிதை, சிறுகதை, கட்டுரைப் படைப்புகள் வெளியாகின.

 

உதயதாரகை இலக்கியச் சிற்றிதழ், யாழ்- காலாண்டுக் கவிமடல் ஆகியவற்றை வெளியிட்டேன். சுயம் என்ற தொண்டு நிறுவனங்களுக்கான சுய உதவிக்குழு விழிப்புணர்வு இதழையும் உருவாக்கினேன்.

 

புதிய தரிசனங்கள் தந்து சாகித்ய அகாதமி விருது வென்ற பொன்னீலன் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னைச் சந்திக்க வந்த நாட்களில் அவரது இனிமையான பண்பு மிவும் கவர்ந்தது. அவரைத் திட்டுபவர்களைக்கூட திட்டாத அவரது பண்பு வியக்க வைத்தது.

 

உக்கிலு என்ற மாறுபட்ட குறுநாவலை உருவாக்கிய குமாரசெல்வா என்ற படைப்பாளியோடு பழக முடிந்தது.உதயதாரகை நாட்களில் அடிக்கடி அச்சகத்துக்கு வருவார். இப்போது கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

 

குமரி மண்ணின் மற்றொரு படைப்பாளியான பேராசிரியர் ஐசக் அருமைராசன் அவரும் அவ்வப்போது வந்து சென்றவர். பேராசிரியர் பணியில் இருக்கும் போதும் ஓய்வுக்குப் பின்னரும் கூட அவர் என்னைச் சந்திக்க வந்ததுண்டு

 

புதுக்கவிதைப்பூங்கா என்ற மாணவர் இதழை உருவாக்கிய அதங்கோடு அனிஷ்குமார் என்ற மாணவப் படைப்பாளி நான் எழுத்தை மறந்த நாட்களில் தூண்டுகோலாக தொடர்ந்து எழுதச் செய்தவர்.இப்போது இவரும் கல்லூரி ஆசிரியர்.

 

கோவை ஞானி, கவிஞர் விக்கிரமாதித்யன், வல்லிக்கண்ணன் அவர்கின் தொடர்புகள் சுகன், ஏழைதாசன் விஜயகுமார் இவர்களோடு மடல், தொலைபேசித் தொடர்புகள் என் இலக்கியம் எனக்குத் தந்த பரிசுகள்.

 

சாரு, எஸ்ரா, மனுஷ்யபுத்திரன் இணைய அறிமுகம் கிடைத்த பின் இவர்களின் இலக்கிய அறிமுகமும் கூடவே கிடைத்தது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

09:35 Posted in இணையம், வலைப்பதிவு, வாழ்வியல் | Permalink | Comments (0) | Email this |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)