☜ ❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள் | H | ❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா? ☞
Monday, 16 June 2008
❒ திண்ணை அனுபவங்கள்
தனது பதிவில் பாலபாரதி திண்ணை வைத்த வீடுபற்றிய அனுவங்களை எழுத தூண்டி இருந்தார்.
நான் பிறந்த வீட்டில் (அம்மா வீடு) ஓட்டு வீடானாலும் மாடி வீடு. மாடிக்கு தரையாக மரப்பலகைகள் வைத்து அடிக்கப் பட்டிருக்கும். மாடிக்குச் செல்ல அகலமான மரப்படிகளுடன் ஏணி போன்ற அமைப்பு. மாடியில் பெரிய நெல்பத்தாயமும் சுவர்களில் பழைய இரும்பு ஆயுதங்களும் இருக்கும். குங்குமம் வைக்கப் பட்டு பார்க்க பயமாக இருக்கும். அந்த ஆயுதங்களுக்குப் பயந்து நாங்கள் குழந்தைகள் யாரும் மாடிக்குச் செல்வதேயில்லை.
அந்த வீட்டின் முகப்பில் நீண்ட வராந்தா. அதில் அழகான தூண்கள் வைத்து நடுவில் படியும் இருபுறமும் திண்ணை இருக்கும். வராந்தாவில் ஏகப்பட்ட புகைப்படங்கள் பிரேம் செய்து மாட்டப் பட்டு வீட்டு உறுப்பினர்களின் பழைய அடையாளங்களை சொல்லிக் கொண்டிருக்கும். சுவரோரமாக வட்டமான கம்பி நாற்காலிகளும் இரு மர நாற்காலிகளும் இருக்கும். அவை வெளியார் வந்தால் அமர்வதற்குத் தான். வீட்டினர் யாரும் நாற்காலிகளில் அமர்வதில்லை. தாத்தா மட்டும் ஒரு மர நாற்காலியில் அமர்வார். அப்பா வரும்போது மற்றொரு நாற்காலியில் அமர்வார்.
நாங்களெல்லாம் எப்போதுமே திண்ணையில் தான் அமர்வது வழக்கம். வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் மாமாவின் நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தவுடன் மாமா ஒரு குப்பி மோர் வாங்கி வருவார். அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு மாங்காய்த்துண்டுகளுடன் எடுத்து வருவார். அந்த திண்ணைக் கச்சேரியில் எங்களுக்கும் பங்கு கிடைக்கும். அந்தப் புளிப்பும் மணமும் காரமும் இன்னும் நாவில் நிற்கிறது. திண்ணை நினைவுகளில் இன்னும் மறவாத நினைவு இதுதான்.
திண்ணைக் கச்சேரி முடிந்தவுடன் மாமாவும் நண்பர்களுடன் கிளம்பி விடுவார். தோட்டத்து பூவரச மர நிழலில் சீட்டாடத்தான் போகிறார்கள் என்பது நீண்ட நாள் கழித்து கண்டுபிடித்த ரகசியம்.
*
அப்பா வீட்டில் வெளித் திண்ணை இல்லை. அது கேரள பாணியில் அமைந்த நாலுகெட்டு வீடு. அதில் வீட்டுக்குள் திண்ணை இருக்கும். அது எட்டு வடிவில் கட்டப் பட்ட வீடு. அதனால் உட்புறம் இரண்டு முற்றங்கள் இருக்கும். அதைச் சுற்றி திண்ணை இருக்கும். முன்புற திண்ணையில் ஆண்களும், பின்புற திண்ணையில் பெண்களும் புழங்குவர். சுமார் இரண்டரை அடி உயர அடித்தரை கருங்கல்லால் அமைக்கப் பட்டு சிறிய சிறிய உள்ளறைகள் மரச்சுவர்களால் உருவாக்கப் பட்டதாக அந்த வீடு இருக்கும். அடித்தரை அப்படியே திண்ணையாக நீண்டு உள்ளே தொட்டி போல சதுரமாக வானம் பார்த்த முற்றங்கள் வீட்டுக்குள்.
உள் திண்ணையில் கையளவு பாக்கு உரலில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு பாட்டி, எப்போதாவது திரிகையில் தானியம் திரிக்கும் அத்தை. மழை நாட்களில் உட்புற முற்றத்தில் விழும் மழைத்துளிகளை திண்ணையில் இருந்து ரசிக்கலாம். கைகளை நீட்டி நனைக்கலாம். எப்போதாவது மழையில் குளிக்கவும் அனுமதி கிடைக்கும். அது கொண்டாட்டமான குளியல்.
சித்தப்பாவின் திருமணத்தோடு வீட்டை ஒட்டி செங்கற்களால் இன்னொரு அறை உருவானது. அதன்பிறகு அந்த வீட்டின் திண்ணைகள் மதிப்பிழந்து போயின.
*
இப்போது இரண்டு வீடுகளுமே இல்லை. மாமாவின் மகன்கள் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டுகிறார்கள். சித்தப்பாக்களும் பங்கு பிரிக்கும்போது பழைய வீட்டை இடித்து விட்டார்கள். இனி பழைய திண்ணைகளை காண முடியாது. அப்பா கட்டிய வீட்டில் வராந்தா இருந்தாலும் திண்ணை இல்லை. பாதுகாப்பு கருதி அதையும் கம்பித்தடுப்பு போட்டு விட்டோம். எங்களின் இப்போதைய வீட்டிலும் திண்ணை இல்லை.
இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும் ஒரு விஷயம் அப்பா வேலைபார்த்த இடங்களில் அரசாங்க குவார்ட்டர்சில் திண்ணை இருந்தது.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
06:30 Posted in வாழ்வியல் | Permalink | Comments (0) | Email this
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() | தமிழின் வேகமான திரட்டி செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



