❒ தசாவதாரம் விமர்சனம் + விமர்சனங்கள் | H | ❒ திண்ணை அனுபவங்கள்

Sunday, 15 June 2008

❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ஊருக்கு வந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வந்த நாள் அன்று அது பற்றிய எதிர்பார்ப்போ நினைவோ எனக்கு இருக்கவில்லை. மிகச்சிறந்த மாணவனாக திகழவில்லை என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. வகுப்புத் தேர்வுகளில் தோல்வி அடைவதில்லை. ரேங்க் 6 முதல் 10 இடங்களுக்குள் வரும்.

மேல்நிலைக் கல்வியை ஊரிலேயே படிக்க எண்ணியிருந்ததால் கிட்டத்தட்ட மூன்று வாரம் கழித்து மதிப்பெண் பட்டியலையும் மாற்றுச் சான்றிதழையும் அப்பா வாங்கி அனுப்பியிருந்தார். அப்போது தான் மதிப்பெண்களையே பார்த்தேன். பெரிதாக சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்றாலும் எழுதியதுக்கு ஏற்ற மதிப்பெண்தான்.

மேல்நிலைக் கல்வி படித்த பள்ளி சுமாரான பள்ளி. ஆலை இல்லாத ஊருக்கு...என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதுமாதிரி வெளியூரில் படித்துவிட்டுவந்த நான் அங்கே மாத, கால், அரையாண்டுத் தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பொதுத் தேர்வும் முடிந்தது. அப்போதும் நான் பதட்டமில்லாமல் தான் இருந்தேன். ஆனால் நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லாரும் என்னுடையது உட்பட தெரிந்த மாணவர்களின் பதிவு எண்களை வைத்துக் கொண்டு...மாலைமுரசு எப்போது வரும் என்று காத்துக் கிடந்தார்கள். அவர்களின் பதற்றம் நேரம் நெருங்க நெருங்க என்னையும் சற்றே தொற்றிக் கொண்டது என்பது உண்மையே.

மாலை 5 மணிக்குத் தான் தேர்வு முடிவுடன் மாலை முரசு சிறப்பு பதிப்பு வந்து சேர்ந்தது. என் எண் இருந்தது. உறவுக்காரப் பெண்ணின் எண் பேப்பரில் இல்லை. அவள் அழ ஆரம்பித்தாள். இத்தனைக்கும் அவள் நன்றாகப் படிக்கக்கூடியவள். எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் மறுநாள் தினத்தந்தியில் அவளின் எண்ணும் இருந்தது. இப்படி பதட்டப் பட்டு பேப்பர் பார்த்து தற்கொலைகள் எல்லாம் சகஜமாக இருந்த நேரம். நல்ல வேளை.

மதிப்பெண் பட்டியலைப் பார்த்த போது தான் திக்கென்றிருந்தது. உயிரியல் பாடத்தில் எனக்கு 78 . வெறும் எட்டு மார்க் வித்தியாசத்தில் தப்பியிருக்கிறேன்.

வணிகவியலுக்கும் உயிரியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோதும் கனவுகள் எதுவும் இன்றி பிகாம் சேர, கிடைத்த மதிப்பெண் போதுமானதாக இருந்தது. விஞ்ஞானியாக வேண்டும் என்ற முந்தைய கனவு இதில் சேர்த்தியில்லை.

*

பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்ததால் ஆங்கிலம் தடுமாற்றம் தான் என்ற போதும் டியூஷன் எல்லாம் படித்ததில்லை. புத்தக வாசிப்பு பள்ளிப் பருவத்திலேயே பைத்தியமாகிப் போனதால் தேர்வுகளுக்கு மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்ததே இல்லை. எழுதுவது எல்லாம் சொந்தமாகத்தான். அதுவும் வகுப்பறையில் கவனித்த பாடங்கள் மட்டும் தான் எழுத முடியும்.

இதற்கு மாறாக பள்ளியில் பகல் பொழுதைக் கழிக்கும் பிள்ளையை மீண்டும் அதே பாடத்தை டியூஷனிலும் படிக்க சொல்லி இளமை முழுவதையும் பாடப்புத்தகங்களில் கழிக்கும் போது சொந்தமாக சிந்திக்கும் திறனே மழுங்கி விடும் என்பது என் கட்சி. அப்படியானால் பள்ளியில் என்னதான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதையே மறுபடி டியூஷனிலும் வீட்டிலும் சொல்லிக் கொடுப்பதென்றால் பள்ளிக் கூடங்கள்தான் எதற்கு?

என் நண்பரின் மகள் எந்தப் பாடலையும் கேட்ட மாத்திரத்தில் நினைவில் வைப்பவள். ஆனால் படிப்பில் சுமார்தான். ஆண்டுக்கு இரண்டு டியூஷன் மாற்றி பல இடங்களில் படிப்பித்தும் ஏழாம் வகுப்பில் பெயில் ஆனாள். டியூஷன் ஒரு பிரயோசனமும் இல்லை என்று தாமதமாக புரிந்து நிறுத்தியபின் பத்தாம் வகுப்பில் தானாகப் படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றாள்.

*

சாலையைக் கடந்தால் ஆங்கிலப் பள்ளி இருந்ததால் மகனை அதிலேயே சேர்க்க நேர்ந்தது. அவன் மக்கு இல்லை என்றால் கூட எல்லாப் பாடமும் 90+ மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது அவன் தாய்க்கு நிர்ப்பந்தம். மதிப்பெண் குறையும்போதெல்லாம் டியூஷன் அனுப்பச் சொல்லி குடைச்சல். எப்படியோ இதுவரை தவிர்த்து விட்டேன். மூன்றாம் வகுப்பு வரை 90 சதவீதமாக இருந்தது படிப்படியாக குறைந்து ஆறாம் வகுப்பில் சராசரி 60 சதவீதம் தான்.

மூன்றாம் வகுப்பு வரை தேர்வு நாட்களில் அம்மா கூட இருந்து அடித்து அடித்து படிக்க வைத்த பழக்கம் நின்று போனதில் பள்ளியில் அவனது புரிதல் சதவீதம் 60 என்பது எனக்குப் புரிகிறது.அதுவே அவனது உண்மையான அறிவின் அளவீடாகவும் இருக்கலாம்.

குறைந்த பட்சம் தானாகப் புரிந்து படிக்கும் எண்ணம் வர வேண்டும் என்ற முயற்சிக்கு இதுவரை வெற்றி கிட்டவில்லை. அம்மா சொல்லிக் கொடுத்தபடி அவனுக்கு படிக்க வேண்டுமானால் யாராவது கூட இருந்து கேள்வி கேட்க வேண்டும்.

பிளாக் படிக்கிற, எழுதுகிற அப்பாவுக்கு அதுக்கெல்லாம் ஏது நேரம். இருந்தாலும் பையன் கேட்கிற அசட்டுத் தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல தவறுவதில்லை. அவன் அம்மாவுக்கு மட்டும் கோபம் வந்து விடுகிறது. "ஏண்டா முட்டாள்தனமாக கேட்டுகிட்டு இருக்கிறே. புத்தகத்தை எடுத்து படிடா......." இது பையனுக்கு.

"பையனைப் படிக்க வைக்க மட்டும் நேரங்கிடையாது. இந்தமாதிரி கிறுக்குத் தனமா கேட்டா எதையாவது சொல்லி நேரங்கடத்த முடியும்" இது அப்பாவுக்கு.

*
ஜெயமோகனின் தேர்வு கட்டுரை எழுப்பிய உணர்வலைகளின் பாதிப்பில் எழுதியது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP -._/|\_.- வசவு - THUMBS DOWN

10:30 Posted in வாழ்வியல் | Permalink | Comments (3) | Email this

 நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. ஜெயமோகனின் தேர்வு கட்டுரை பலருக்கும் நினைவு மீட்டல்களை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம். எல்லோருக்குமே இது போன்ற அனுபவங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நுட்பம் மிக அரிது. ஜெயமோகனின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. வாழ்வியல் அனுபவங்களை இத்தனை நுட்பமாக சமீபத்தில் எங்கும் வாசித்ததில்லை.

    அந்த கட்டுரை தந்த தாக்கத்தில் இருந்து, எனது சில அனுபவங்கள் சொல்ல முயன்றது தான் இது.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 16 June 2008

  2. நீங்களும் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.

    சில வரிகள் எனக்கும் பொருந்தும்.

    கூறுவது: மஞ்சூர் ராசா | Monday, 16 June 2008

  3. result அன்று பேப்பரைப் பார்க்காமல் இருக்க முடியாது. இப்போ இண்டனெட் இருக்கிறது. எல்லா மார்க்கும் உடனே தெரிந்து விடுகிறது. என்னதான் படிச்சிருந்தாலும் பதட்டம் வராம இருக்கிறது இல்லை

    கூறுவது: priya | Thursday, 19 June 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)