☜ ❒ ஏழாவது மனிதனின் மரணம் | H | ❒ வலைப்பதிவர் பற்றி குமுதம் ☞
Saturday, 22 March 2008
❒ தமிழ்நாயக ஆராதனையும் ஜெயமோகனும்
எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் இரு தமிழ் சினிமா ஆளுமைகள் பற்றிய கட்டுரை ஒன்றை ஜெயமோகன் எழுதப்போக, அதை வைத்து பரபரப்பு விளம்பரம் தேடிக் கொண்டது ஆனந்த விகடன். இப்போது அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிகிறது.
தனது அனுபவத்தில் இந்த நடிகர்கள் குறித்து சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்ளும் விதம் குறித்தே ஜெயமோகன் எழுதியிருந்தார். சொல்லப்போனால் இதைவிட கீழ்த்தரமாகவே ரசிகர்கள் சினிமாக்காரர்கள் குறித்து பேசிக்கொள்வதை நானே கேட்டிருக்கிறேன். இப்போதைய மகாநாயகர்களைப் பற்றியும் இன்றளவும் இது போன்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அப்படி ரசிர்கள் கருத்தாகவே அவரும் எழுதி இருந்தார். ஆனால் இதை எழுதி விட்டார் என்பதற்காக ஜெயமோகனை சினிமா உலகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆனந்த விகடனுக்கு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் பேட்டிகள் கொடுக்க கூடாது என்றும் சினிமாக்காரர்கள் தீர்மானம் இயற்றி இருக்கிறார்களாம். வலைப்பதிவுகளுக்குத் தணிக்கை வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
காவல்துறை அதிகாரிகளை, டாக்டர்களை, அமைச்சர்களை, வில்லன்களாக சித்தரித்து படம் எடுக்கும் இதே சினிமாக்காரர்களை சம்பந்தப் பட்டவர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும். சினிமாக்காரார்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று மருத்துவர்களோ சினிமாக்காரர்களின் புகார்களை விசாரிக்க மாட்டோம் என்று காவல்துறையோ சொல்வது எத்தனை அபத்தமோ அது போன்ற நிலைதான் இவர்களின் முட்டாள்தனமும்.
படைப்புகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் படைப்பிலக்கியவாதியாக தமிழ் இலக்கியச்சூழலில் தவிர்க்க முடியாதவர் ஜெயமோகன். அதே சமயம் ஜெயமோகன் எழுதும் பொதுவிமர்சனக் கருத்துகள் பல சமயங்களில் பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை.
இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் பொறுத்தவரை பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அதில்பிழையான கருத்து எதையும் ஜெயமோகன் சொல்லி இருக்கவில்லை. ஆனால் ஆனந்த விகடனின் தேவையற்ற திரிபு அந்தக் கட்டுரைக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி விட்டது.
சினிமா நாயகர்களை ஆதர்ச நாயகர்களாக வரித்துள்ள தமிழ்சினிமா ரசிகனை வெறியேற்ற இவை போதுமானவை. உலக சினிமா சரித்திரத்தில் நடிகைக்கு கோயில் கட்டிய தமிழ்ப்பரம்பரை அல்லவா? வீட்டில் குடும்பமே பட்டினி கிடந்தாலும் ஆதர்சநாயகனின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் ரசிகப் பட்டாளம் இங்குண்டு.
ஆனாலும் ரசிகர்கள் போதுமான அளவில் இதை கண்டுகொள்ளாதது சினிமாக் காரார்களை வெறி கொள்ளச் செய்தது. இதன் விளைவுகளாகவே அவர்களின் மேற்கண்ட தீர்மானங்கள். 80 சதவீதம் ஆபாசக் குப்பைகளை உருவாக்கித் தள்ளும் தமிழ்சினிமா ஒரு எழுத்தாளனின் பேனாவுக்கு கடிவாளம் போட நினைக்கிறதாம். பத்திரிகைக்கு தடையாம். இணையத்துக்கு தணிக்கையாம்.
இருக்கும் தணிக்கையையே ஒழுங்காக பின்பற்றாத சினிமா மேதாவிகள் படைப்பிலக்கிய சிந்தனைக்கு தடைப்போடுவார்களாம். தங்களைத் தாங்களே புகழ்ந்து பாட்டெழுதிப் பூத்தூவிக் கொள்ளும் சினிமா நாயக அவதாரங்கள் இணைந்து இணையத்துக்கும் எழுத்தாளனுக்கும் எச்சரிக்கை விடுப்பார்களாம்.
வலைப்பதிவாளர் என்ற முறையில் ஜெயமோகன் மீது விடுக்கப் பட்டுள்ள இந்த கருத்தியல் வன்முறையை கண்டிக்கிறேன். வலைப்பதிவாளர்களை வம்புக்கிழுத்து கட்டற்ற இணையவெளியை கட்டுப் படுத்த நினைக்கும் கோமாளிக்கூட்டத்தை எச்சரிக்கிறேன்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
16:00 Posted in சினிமா | Permalink | Comments (12) | Email this | Tags: jeyamohan, ஜெயமோகன்
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() | தமிழின் வேகமான திரட்டி செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
தாங்கள் சொன்னது போல் சினிமா ரசிகர்கள் இதைவிட பல மடங்கு கீழ்த்தரமாகவே பேசுவார்கள்.அது சினிமாகாரர்களுக்கும் தெரியும்.ஏன் அவர்களே
ரசிகர்களாக இருந்தபோது பிற நடிகர் களைப் பற்றி பேசியதை நினைத்துப் பார்த்தாலே போதும்.ஜெயமோகன், ரசிகர்கள் பேசுவதை முழுமையாகக்கூட எழுதியிருக்கமாட்டார்.ரசிகர்கள், எனக்குத்தெரிந்து நடிகர்களை அவர் இவர் என்று மரியாதையாக விளித்துக்கூட நான் பார்த்தது இல்லை!.எப்போதுமே
அவன் இவன் தான்.அப்போதெல்லாம் எம்ஜிஆரின் குரல் உச்சரிப்பைக் கிண்டல்
செய்ய "இந்தா வாத்யாரே சோடா குடி" என்பதை எம்ஜிஆர் பேசுவதைப் போல
பேசுவார்கள்.அது ஒரு கெட்ட வார்த்தையைப் போல கேட்க்கும்.அதில் ஒரு
ஆனந்தம்.
இப்படி பல விஷயங்கள் ஒவ்வொரு ஊருக்கும் உண்டு.ஒவ்வொரு நண்பர் வட்டத்திற்க்கும் உண்டு.இதெல்லாம் மிகச் சாதரணமான விஷயங்கள் இதைப்
பெரிது படுத்தி இன்னும் ரசிகர்கள் எவ்வளவு கேவலமாக பேசுவார்கள் என்பதை
தெரிந்து கொள்ள சினிமா துறையினருக்கு ஆசையா?கூறுவது: இத்துப்போன ரீல் | Sunday, 23 March 2008
-
ஆ.வி செய்தது பத்திரிகை விபச்சாரம். ஜெயமோகன் செய்தது எழுத்து விபச்சாரம். வலைப்பதிவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் காண்டோம் விற்கப் போவோமா ?
கூறுவது: Poovannan | Sunday, 23 March 2008
-
இதை ஒட்டிய கருத்தை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம், உங்கள் கருத்துக்கு வலுசேர்க்கும்.
http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_8244.htmlகூறுவது: கோவி.கண்ணன் | Sunday, 23 March 2008
-
Poovannan
ஆ.வி செய்தது, ஜெயமோகன் செய்தது என்று விளக்கம் கூறி இருக்கிறீர்கள். சினிமா ஜித்தர்கள் செய்வது, செய்தது என்ன என்று சொல்லவில்லையே?கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 23 March 2008
-
:)
கூறுவது: சென்ஷி | Sunday, 23 March 2008
-
இந்த பிரசினைகளைப்பற்றி இதுவரை வந்த பதிவுகளை படிக்கவில்லை. இதுதான் முதலாவது.
இந்த பதிவில் சினிமாக்காரர்களின் கருத்தைப்பற்றிய எனது விமர்சனமென்றால் சுத்த பைத்தியக்காரத்தனம். எழுத்தாளர்களின் கையை கட்டிப்போட்டு அவர்கள் எதை வரவேற்க நினைக்கின்றார்கள்?? விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத இந்த மேதாவிகளால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை. ஆனாலும் இதை சிறந்த வியாபார யுத்தியாக மாற்றிக்கொண்ட விகடனின் புத்தியை என்ன சொல்ல... :(
ஜெயமோகன் எழுத்தாளர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அவர் சிறந்தவரா இல்லையா என்ற அளவுகோல் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும். என்னைப்பொறுத்தவரை அவர் எழுத்துக்கள் ஓக்கே....
ஆனாலும் இணையத்தின் மேல் கை வைக்க துடிக்கும் அந்த நியாய நெஞ்சங்களை நினைக்கும்போது உங்கள் அளவு எனக்கு கோபம் வரவில்லை. மாறாக சிரிப்புதான் வருகிறது. அடப்போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும் என்ற அளவுக்கு சலிப்பு தட்டிப்போக வைத்த புண்ணியவான்கள் பிறந்த பூமியில் இவர்கள் சாதித்தது ரசிகர்கள் என்ற சொல்லை உருவாக்கி வைத்தது மட்டும்தான்.
//வலைப்பதிவாளர் என்ற முறையில் ஜெயமோகன் மீது விடுக்கப் பட்டுள்ள இந்த கருத்தியல் வன்முறையை கண்டிக்கிறேன். வலைப்பதிவாளர்களை வம்புக்கிழுத்து கட்டற்ற இணையவெளியை கட்டுப் படுத்த நினைக்கும் கோமாளிக்கூட்டத்தை எச்சரிக்கிறேன்//
அடபோங்க தலைவா....! நீங்களும் அவனுங்க ரேஞ்சுக்கு காமெடி செய்யறீங்க :))கூறுவது: சென்ஷி | Sunday, 23 March 2008
-
//அடபோங்க தலைவா....! நீங்களும் அவனுங்க ரேஞ்சுக்கு காமெடி செய்யறீங்க :))//
இருக்கலாம் :)
ஆனால் சினிமாக்காரர்கள் சொல்லே வேதம் என்று நினைக்கிற அரசாங்கங்கள் இருக்கிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்...எழுத்தாளனை விட மசாலாத்தனமான சினிமாக்காரன் எல்லாமட்டத்திலும் மதிக்கப் படுகிற சாபக்கேடான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 23 March 2008
-
என்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். ஜெயமோகன் எழுதியதில் எனக்கு உடன்பாடில்லையெனினும் அவர் எழுதியதை நீக்கச் சொல்வதும், மன்னிப்புக் கோரச்சொல்வதும் அடாவடித்தனம். அதுவும் தமிழ் சினிமாவைச் சீரழித்து வரும் இந்த அற்பக் கூட்டம் இதைக் கோருவதை என்னவென்று சொல்வது.
நன்றி - சொ. சங்கரபாண்டிகூறுவது: S. Sankarapandi | Sunday, 23 March 2008
-
//பதிக்க வேண்டாம்//
இப்ப தமிழ் மணம் கருவிப் பட்டை தமிழில் அமைந்த முகவரிகளுக்கும் ஆதரவு தருகின்றதே.. ஏன் இன்னும் ஆங்கிலத் தலைப்புகள்??? SEO நோக்கம் என்றால் சரி!! ;)கூறுவது: மயூரேசன் | Wednesday, 16 April 2008
-
இதே ஜெயமோகன், பாபா படத்திற்காக ரஜினியை நேரில் பார்த்தற்கோ / தொட்டு பார்த்ததர்கோ புலகாங்கிதப்பட்டதை ஒரு பத்திரிக்கையில் பேட்டி குடுத்திருந்தாரே... அது எந்த வகையில் சேர்த்தி...
சும்மா அரிக்குதேன்னு சொரியிறவங்களுக்கு மாஞ்சி மாஞ்சி வக்காளத்து எதுக்குப்பா...! ஏதோ என் கருத்து...
தப்புன்னா லூசுல விட்டுருங்க...கூறுவது: லிவிங் ஸ்மைல் வித்யா | Sunday, 20 April 2008
-
//இதே ஜெயமோகன், பாபா படத்திற்காக ரஜினியை நேரில் பார்த்தற்கோ / தொட்டு பார்த்ததர்கோ புலகாங்கிதப்பட்டதை ஒரு பத்திரிக்கையில் பேட்டி குடுத்திருந்தாரே... அது எந்த வகையில் சேர்த்தி...//
அப்படி எந்த பேட்டியையும் படித்ததில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தொடுப்பு கிடைத்தால் நல்லது.
ஞானகூத்தன் கலைஞரின் கைகைளை தொட்டு புளகாங்கிதபட்டதை பொதுவில் கண்டிக்க போய்தான் ஜெயமோகன் மேல் பலவித விமர்சனங்கள். அவரே அதைப் போல் செய்திருக்க மாட்டார் என்பது எனது எண்ணம்.
மற்றபடி டிவிக்களில் வரும் காமெடி ஷோக்களில் 'மிமிக்ரி' என்ற பெயரில் செய்யாத கிண்டலா? அதற்கு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கவில்லையா?
இந்த மாதிரி கிண்டலை எல்லாம் எழுத்து விபச்சாரம் என்பது என்ன அளவுகோலோ...
மற்றபடி பத்திரிகைகளுக்கு 'இணையத்தை' பற்றி குற்றம் சொல்ல ஒரு காரணம்.
சினிமா சங்கங்களுக்கு தங்கள் இருப்பை காட்டி கொள்ள தங்கள் பலத்தை பரிசோதிக்க ஒரு வாய்ப்பு.
நமக்கு எல்லாம் இன்னொரு பதிவு / மறுமொழி உரையாடல் :-) மற்றபடி இந்த விசயத்தினால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கின்றேன்.கூறுவது: Sridhar Narayaanan | Sunday, 20 April 2008
-
naan nandri solla aasaipadugiraen.
கூறுவது: thilak | Wednesday, 30 April 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



