☜ ★ இலங்கையின் மல்லிகை இதழில் சிந்தாநதி | H | ★ கணினி பயன்பாட்டில் சில குறிப்புகள் ☞
Saturday, 01 December 2007
★ வழக்கறிஞர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?
சமீப காலங்களில் பலமுறை வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்றப் புறக்கணிப்பு, மறியல் என்று செய்திகள் வருகின்றன.
இந்திய விடுதலைப்போராட்டம் இதுபோன்ற வடிவங்களில் நடத்தப் பட்டு வெற்றிகண்டது வரலாறு. உலக அளவில் தொழிலாளர் அமைப்புகள் தொழிற்சங்கம் என்ற அங்கீகாரத்தின் மூலம் போராட்டங்களில் ஈடுபடுவதும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
அன்று அன்னிய ஆட்சியை எதிர்த்து சட்டமறுப்புப் போராட்டங்களில் வழக்கறிஞர்களும் ஈடுபட்டார்கள்.
ஆனால் இன்றைய தொழிலாளர் போராட்டங்கள் கூட முறையாக நோட்டீஸ் கொடுத்து அனுமதி பெற்றே நடத்தப் படுகின்றன.
ஆனால் ஒரு வழக்கறிஞர் தனிநபரால் தாக்கப் பட்டாலும் சரி, போலீஸாரால் கைது செய்யப் பட்டாலும் சரி, நீதிபதிகளுடன் மோதிக் கொண்டாலும் சரி இன்று வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு அந்த வழக்கறிஞருக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.
இதே பிரச்சினைகள் வேறு நபருக்கு ஏற்பட்டு வழக்கறிஞரிடம் வரும்போது சட்டப்படி வழக்குப் போட்டு நீதி கிடைக்கச் செய்கிறோம் என்று சவடால் விடும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு என்று வரும்போது ஏன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்?
சட்டம் அனைவருக்கும் பொது.ஆனால் வழக்கறிஞர்களுக்குத்தான் அதைப் பயன்படுத்தும் முறை தெரியும். அப்படிப் பட்ட வழக்கறிஞர்கள் ஒருவர் தன்னை தாக்கி விட்டால் அதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க ஏன் முயல்வதில்லை?
தான் போலீசில் புகார் கொடுத்தால் அவர்கள் எந்த விசாரணையும் இன்றி தான் சொல்லும் செக்ஷனில் குற்றவாளிமீது வழக்குப் பதிவு செய்யப் பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். இவரது எதிர்பார்ப்பு தவறு என்று தோன்றி காவல்துறை அதிகாரி சற்றுக் குறைவான செக்ஷனில் வழக்குப் பதிவு செய்தால் உடனே காவல்துறைக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்... காவல்துறை அதிகாரி செய்தது தவறு என்றால் அதையும் சட்டப்படி நீதிமன்ற உத்தரவு பெற்று சரி செய்ய முடியும். அது அந்த வழக்கறிஞருக்கும் அவர் சட்டம் முறையாகப் படித்தவராக இருந்தால் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவர் முறைதவறி அந்த எதிர்பார்ப்பை திணிக்க முயலும்போது அது நீதிமன்றத்தில் எடுபடாது என்று அவருக்குத் தெரியும்...அதனால் போராட்டத்தின் மூலம் நிர்ப்பந்தம் செய்து தனக்குச் சாதகமாக நடந்து கொள்ள வைக்க முயல்கிறார்.
வக்கீல் குற்றம் செய்தால் கூட கைது செய்யப் படக்கூடாது என்று நினைக்கிறார்கள். சட்டம் தங்களுக்கேற்ப வளைந்து கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களே நினைத்தால் சட்டத்துக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?
அன்னிய சட்டத்தை மறுத்தது அன்று நியாயம். ஆனால் எந்த சட்டத்தின் காவலர்களாக தங்களை நினைத்துக் கொண்டு பணி செய்கிறார்களோ அந்த சட்டத்தையே மதிக்காமல் இன்றைய குடியரசு ஆட்சிக் காலத்தில் சட்டத்தை மிகவும் மதித்து மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள் தெருவில் இறங்கிப் போராடுவது மிகவும் மூடத்தனம்.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது அரசியல்கட்சிகளில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு தான்... கட்சிகளின் அரசியல் அணியில் பொறுப்பு வகிக்கும் இவர்கள் அரசியல்வாதிகளின் எல்லா குணங்களையும் பழகிக் கொள்கிறார்கள்... இதனால் தான் அரசியல்வாதிகளைப் போலவே சட்டத்தை மதிக்காத போக்கு வழக்கறிஞர்களிடமும் வளர்ந்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் சிபாரிசுகளின் மூலம் இவர்களே நீதிபதிகளாகவும் வந்து விடுவதால்தான் இன்று நீதித் துறையும் மிகவும் மலினப் பட்டதாக மாறி வருகிறது.
மாணவப்பருவத்திலேயே அரசியல் ருசி காட்டப் பட்டு அல்லது அவர்களின் அடிமைகளாக்கப் பட்டு, இன்று மாணவர்களும் அரசியல்வாதிகளைப் போல போராட்டங்களிலும் அராஜகங்களிலும் ஈடுபடுகின்றனர். அதிலும் மேற்கூறிய சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று அசல் ரவுடிகளாக மாறி காவல்துறையுடன் மோதிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது... மாணவர்களாக இருக்கும்போதே இத்தனை ஆவேசமும் வெறித்தனமும் இருந்தால் அவர்களால் எப்படி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக, சட்டத்தின் காவலர்களான வழக்கறிஞர்களாக மிளிர முடியும்?
வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டங்களால் தங்களை நம்பி வழக்குகளை ஒப்படைத்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை வஞ்சிக்கின்றனர். இன்று தங்கள் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று நம்பி தங்கள் வயிற்றுப் பாட்டுக்கான தொழிலைக்கூட விட்டுவிட்டு வரும் அப்பாவி பொதுசனம் தங்கள் வக்கீல் சுயநலத்துக்காக வழக்கை விட்டுவிட்டு போராட்டத்துக்கு போயிருக்கிறார் என்று அறியவரும்போது என்ன நினைப்பார்...அந்தப் பொதுசனம் வழக்கறிஞர்களைப் புறக்கணிக்க தீர்மானித்தால் என்ன ஆகும்?
எனவே வழக்கறிஞர்கள் முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்....அப்போது தான் பொதுமக்களும் சட்டத்தில் நம்பிக்கை வைப்பார்கள்...வழக்கறிஞர்கள் மற்றவர்களுக்கு எதைக் கூற விரும்புகிறீர்களோ, அதை அவர்களும் கடைப்படிக்க முயலவேண்டும்...
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
19:30 Posted in star, வாழ்வியல், விமர்சனம் | Permalink | Comments (3) | Email this
| Tags: law, சட்டம், வழக்கறிஞர்கள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
A true reflection of present status of attitude of advocates. Good.
கூறுவது: Ramesh N | Saturday, 01 December 2007
-
வழக்கறிஞர்கள் கேள்வி கேக்கலாம். நாம அவங்களைக் கேள்வி கேட்டாத் தப்பாய்யா?
கூறுவது: tamilnenjam | Sunday, 02 December 2007
-
தற்போதைய எதார்த்த நிலையை அப்பட்டமாக நடுநிலையோடு படம்பிடித்துக்காட்டி இருக்கின்றீர்கள். சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருந்தினால் சரி. மேலும் நீதிமன்றங்களும் இவர்களுக்கு கடிவாளம் போடவேண்டும்.
கூறுவது: மா. கலை அரசன். | Sunday, 02 December 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



