★ ரஜினி, விஜய் மற்றும் பாமக | H | ★ காசி - வலையுரையாடல் தொடர்ச்சி...

Thursday, 29 November 2007

★ காசியுடன் ஒரு வலையுரையாடல்

இணையத்தில் தமிழ் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது??

எங்க நண்பர் சுபாஷ் நகைச்சுவையாகச் சொல்வார்:'என்ன இருந்தாலும் வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான், வேலக்காரங்கூட இங்லீஸ் பேசுறான்':-). 'ஆங்கிலம்தான் உலக மொழி, ஆங்கிலம் அறிந்தவர்கள் மேன்மக்கள், ஆங்கிலப் புலமை இருந்தால் மேதைமை தானே வரும்' என்பது போன்ற எண்ணங்கள் தமிழ்நாட்டில் பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். சில வருட அமெரிக்க வாழ்க்கை ஓரளவுக்கு இந்தமாதிரியான கருத்துக்கள் எத்தனை தட்டையானவை என்று உணரச் செய்தது. அதேபோல இணையம் என்பது அன்றாட வாழ்க்கை, தொழில், வியாபரத்துக்கு எத்தகைய பலன்களை பொதுமக்களுக்குக் கொண்டு வரக்கூடியது என்றும் அனுபவரீதியில் உணரவும் அதே அமெரிக்க வாழ்க்கை உதவியது. (ஆனால் நம் ஊரில் இன்னும் பல 'மேதை'களே இணையத்தில் தமிழ் வந்தால் நல்ல கதை, சினிமா, ஜோக் எல்லாம் இணையம் வழியாகக் கிடைக்கும் என்று அதன் வீச்சை சுருக்குவதில் முனைப்பாக இருக்கிறார்கள்)

தமிழ் வழிக் கல்வி கற்று, தமிழை மட்டுமே படிக்கத் தெரிந்த சுற்றத்தையும் கொண்டு (எழுதப் படிக்கக்கூடத் தெரியாத அம்மா!), தமிழ் வழியாக மட்டுமே அன்றாட வாழ்வை நகர்த்தும் பெரும் சமுதாயத்துடன் வாழ்பவனுக்கு தமிழ்மீது ஆர்வம் என்பது இயல்பானதே. 2001-இல் அமெரிக்கா போனபிறகு, நேரம் அகப்பட, இணைய நுட்பம் வசப்பட ஆரம்பித்ததும் தமிழை இணையத்திலே தேடியதும் அத்தகைய இயல்பின் நீட்சியே. அப்படித் தேடி, பற்றாக்குறையைப் பார்க்கும்போது மேலும் வீரியப்பட்டதே இணையத்தில் தமிழைப் பரவலாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம். மற்றபடி 'உலகின் முதல் மொழி', 'ஆண்டவன் இடது கையால் ஒன்றையும் வலது கையால் இன்னொன்றையுமாக நேரடியாக அருளியது', 'தமிழனுக்குக் கொம்பு முளைத்திருக்கிறது' என்பதாலெல்லாம் அல்ல:-). என் அடையாளமாயும், சமூக வாழ்க்கைக்கான மொழியாயும் தெலுங்கோ, கன்னடமோ, மராத்தியோ இருந்திருந்தாலும் அவற்றின்மேலும் இதே ஆர்வம் கொண்டிருப்பேன் என்பதுதான் உண்மை.

தமிழ் வலைப்பதிவுகள் உங்களுக்கு அறிமுகமானது எப்படி? எப்போது?

2003 ஜூலை-ஆகஸ்ட் வாக்கில் என்று நினைக்கிறேன். இஸ்கான் நண்பர் ஒருவர் கிளப்பிவிட்ட ஆர்வத்தில் வைணவத்தின் வேர்கள் தேடிப் போனபோது நா.கண்ணனின் பாசுரமடல், அதிலிருந்து யாஹூகுழுக்கள், அங்கிருந்து நா. கண்ணன், கனடா வெங்கட், மாலன் போன்றவர்களின் வலைப்பதிவுகளை அறிந்தேன். இணையத்தில் தமிழைக் கண்டதும் ஆனந்தமாக இருந்தது. அப்போதே மதி கந்தசாமியின் வலைப்பதிவர் பட்டியலைத் தெரிந்துகொண்டு உலாவிக்கொண்டிருந்தேன். தொடுப்புக் கிடைத்த பக்கமெல்லாம் பயணித்தேன். வலைப்பதிவு தொடங்குவது பற்றிய சுரதாவின் செயல்முறைக் குறிப்புகளும் மதி சேகரித்து வைத்திருந்த பல சுட்டிகளும் புதியவர்களுக்குப் பல சங்கதிகளைச் சொல்லிக்கொடுத்தன. மாலன் திசைகள் இதழில் எழுதிய வலைப்பதிவுகள் பற்றிய கட்டுரை இதன்மேலான ஆர்வத்தைக் கூட்டியது. 2003 செப்டம்பரில் ஒரு நாள், தமிழ்வலைஞர்களுக்கு ராகுகாலம்: 'தொபுக்கடீர்' என்று இதில் குதித்தும் விட்டேன். :-))

ஆரம்ப கால தமிழ் வலைப்பதிவுகள் எப்படி இருந்தன??

ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தி சொல்லுவனவாக இருந்தன. வாசகரை நேரடியாக விளித்து இடையூடாடும் பாணி அல்லாதது ஒரு வகையில் impersonal நடையில் அமையக் காரணமாயிருந்தது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை அடக்கத்தில் நிறைவாய் இருந்தன. மொக்கைகள், ஒத்தி ஒட்டுதல், தனிமனித ஆராதனை/வன்முறை, குழுமனப்பான்மை, போன்றவை பெரிதும் இல்லை. புனைவு இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், ஆன்மீகம், பயணக்கட்டுரைகள் போன்றவை இருந்த அளவுக்கு அரசியல், சமூகம் போன்றவை தொடப்படவில்லை. வழமையான ஊடகங்களில் பல காரணங்களால் மறைக்கப்பட்ட இத்தகையவை எழுதப்படுவதே வலைப்பதிவின் தனிப்பட்ட சிறப்பாக இன்று உணரப்படுவதால் அந்த வகையில் முதற்கட்ட வலைப்பதிவுகள் சற்று தீவிரம் குறைந்தே காணப்பட்டன.

நுட்பரீதியில் பல சிக்கல்கள் இருந்தன. யுனிகோடு முறைமையின் குறைபாடுகளின் மேல் வருத்தம் கொண்டு டிஸ்கி குறியேற்றத்தில் எழுதப்பட்டவையும் இருந்தன.(முக்கியமானவை ரமணீதரன், இராம.கி, போன்றோர் எழுதியவை) ப்ளாக்கர் மட்டுமல்லாமல் மேலும் பல சேவைகளை (ப்ளாக்ட்ரைவ், ரிடிப்ப்ளாக்ஸ், போன்றவை) மக்கள் பயன்படுத்தினர். ப்ளாக்கரில் செய்தியோடை வசதி இல்லை, மறுமொழி வசதி இல்லை. மறுமொழிக்கெனத் தனிச்சேவைகள் (ஹலோஸ்கேன், பேக்ப்லாக், போன்றவை) கிடைத்தன. விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பரவலாகாததால் (உடைக்கப்படாததாலோ இருக்குமோ:) இயங்கு எழுத்துருவின் தேவை இருந்தது. உமர் செய்த உதவியால் இது சாத்தியப்பட்டது. திரட்டிகள் என்று பெரிய அளவில் யாரும் பழகவில்லை. ப்ளாக்கர் ஆடம் செய்தியோடை வசதி கொண்டுவந்த பின்னரே ஒரு பாய்ச்சலுக்குத் தமிழ்வலைப்பதிவுகள் தயாராகின.

தமிழ்மணம் திரட்டியின் வரவு முந்தைய பாணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறைந்த பட்சக் கவனம் கிடைப்பது உறுதியானதால் ஆர்வம் வற்றாமல் பலரும் எழுத முடிந்தது. மறுமொழி நிலவரத்தையும் திரட்டிக் காட்ட ஆரம்பித்ததும், வலைப்பதிவும் ஒரு பெரும் இடையூடாடும் வடிவமாக, விவாத மேடையாக உருப்பெற்றது. அதனால் தீவிர விவாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் என்று களம் சூடாகத் தொடங்கியது. அதே நேரத்தில் இந்த வசதிகளே பல பக்கவிளைவுகளுக்கும் காரணமாயின.

உங்கள் வலைப்பூ* அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள், இப்போதைய வலைச்சரம் பற்றிய உங்கள் கருத்து, ஆலோசனைகள் என்ன??

வலைப்பூ என்பது மதியின் யோசனையில் உருவான, ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஒரு வலைப்பதிவு. (இடையில் என்னையும் சக ஒருங்கிணைப்பாளராக மதி அழைத்து, நானும் சில காலம் இருந்தேன்.) தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்கக் கட்டத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு மதியின் பங்களிப்பு வேறு எதையும்விட அதிகப் பங்காற்றியிருக்கிறது. அன்றிருந்த ஒவ்வொரு பதிவருடனுமே மதிக்கு நேரடி அறிமுகம் இருந்தது. கேட்காமலேயே ஓடிவந்து உதவும் அவரின் பாங்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. 'வலைப்பூ' வலைப்பதிவை ஒருங்கிணைக்க இவை மிகுந்த தேவைகளாயும் தகுதிகளாயும் ஆயின. 'வலைப்பூ' பின்னாளில் தமிழ்மணம் திரட்டியில் 'இந்த வார நட்சத்திரம்' பகுதியாகப் பரிணாமித்த போது அதற்கான பங்களிப்பை மதி செய்ய இந்தக் கூடுதல் திறமையும் தகுதியுமே காரணிகளாக இருந்தன.

தனிப்பட்ட அளவில் சுவையான அனுபவங்கள் என்று அடுக்குவதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. பொதுவாகச் சொல்வதானால், திரட்டிகள் இல்லாத அந்தக் கட்டத்தில் வலைப்பூ பலரும் ஒருவரை ஒருவர் அறியும் ஒரு மேடையாக, அரங்கமாக இருந்து வலைப்பதிவுகள் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. பொதுவான பிரச்னைகள் பேசப்பட்டன. படித்ததில் பிடித்தவை அடையாளம் காட்டப்பட்டன. சில சிரமங்களும் நினைவில் உள்ளன. அதைப் பற்றிப் பேசி இன்று ஆகப்போவது ஒன்றுமில்லை.

இன்று வலைச்சரம் அன்றைய வலைப்பூ செய்ததையே முயற்சிக்கிறது. ஆனால் வலைச்சரத்துக்குச் சரியான வெளிச்சமில்லை. அன்று திரட்டியென்று ஒன்றும் இல்லாததால் வலைப்பூவுக்கு இயற்கையான முக்கியத்துவம் கிட்டியது. திரட்டிகள் வந்தும் தமிழ்மண முகப்பில் காட்டப்படுவதால் 'நட்சத்திர'த்துக்குக் கவனம் கிடைக்கிறது. வலைச்சரத்துக்கு அப்படி ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும்! ஆனாலும் பணியை நன்றாகச் செய்துவருகிறார்கள் வலைச்சர ஆசிரியர்கள். பின்னிருந்து இயக்கும் சிந்தாநதியும் அனுபவம் நிறைந்தவர், சமூக அக்கறை நிறைந்தவர். எனவே சரியான ஆசிரியர்களை எளிதில் அடையாளம் காணவும் அணுகவும் இயலுகிறது. இன்னும் நட்சத்திரங்கள் தொடாத, 'வலைச் சமூகப் பொது விசயங்கள், நுட்ப சங்கதிகளை' விளக்கும், விவாதிக்கும் இடமாகவும் இது மாறலாம் என்பது என் யோசனை:-)

தமிழில் ஒரு திரட்டி உருவாக்க வேண்டும் என்ற பொறி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது??

வடிவமைப்புப் பொறியாளனும் பொடிஜாமானக் கிறுக்கனுமான (gadget geek) எனக்கு எப்போதுமே 'உள்ளதே போதும்' என்ற மனநிலை ஏற்படாது. 'இதை இன்னும் எப்படிச் சிறப்பாக செய்யலாம்?' என்றேதான் சிந்திப்பேன். மதியின் அழைப்பை ஏற்று தமிழ்வலைப்பதிவுகள் பட்டியலை நிர்வகிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட போது, பட்டியலில் பதிவுகளைச் சேர்ப்பதை எப்படித் தானியங்கியாக்கலாம், மேற்கொண்டு பட்டியலை எப்படி பெயர்வாரியாக, வசிப்பிடவாரியாக, வலைப்பதிவு தொடங்கிய தேதிவாரியாக அடுக்கலாம், என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். அத்துடன் கூடுதலாக என்னெல்லாம் செய்யலாம் என்று கலவையாக ஒரு வடிவத்தை கற்பனை செய்தேன். அந்தக் கற்பனை வடிவத்துக்கு திரட்டி என்ற பொதுப்பெயரெல்லாம் அப்போது யாரும் இடவில்லை. இந்த சாத்தியங்களைப் பட்டியலிட்டு சக ஒருங்கிணைப்பாளரான மதிக்கும், தமிழ் இணையத்தில் நுட்பம் சார்ந்த பல சேவைகளைச் சத்தமில்லாமல் சாதிக்கும் சுரதாவுக்கும் அனுப்பினேன். ஆனால், எப்படி, யார், எப்போது செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை. அங்கிருந்துதான் தமிழ்மணம் தொடங்கியது.

தமிழில் ஒரு திரட்டி உருவாக்க எந்த முன்மாதிரியும் இல்லாதிருந்த வேளையில் எப்படி அதற்கான தொழில் நுட்பம் வடிவம் போன்றவை உங்களுக்கு கிடைத்தது??

முன்மாதிரியுடனே எல்லாரும் தொடங்கணும்னா அதுக்கு யாராவது ஒரு முன் மாதிரி வேண்டுமில்லையா? (பெருமையடித்துக்கொள்வதென்று ஆகிவிட்டது, பிறகென்ன கூச்சம்:-)) புத்துருவாக்கம்(INNOVATION) எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட ஒரு திறன். என்னைத் தொழில்ரீதியாக அறிந்தவர்கள் இதை ஒத்துக்கொள்வார்கள். (இந்தியாவிலும் அமெரிக்காவிலும் காப்புரிமையுடன் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன, காப்புரிமை பெறாத, நான் தொழிலில் செயற்படுத்தியவை பல) எனவே முன்மாதிரி இல்லாமல்தான் தமிழ்மணம் முயற்சிக்கப்பட்டது. இன்றைய எங்கள் தொழிலகத்தின் பெயர் கூட NuHom Innovations Pvt. Ltd.

இணையத் தொழில்நுட்பத்துக்குள் என்னை இழுத்துவிட்டதுக்குத் 'தமிழா'(இ-கலப்பை) முகுந்த்துக்குத் தான் நன்றி சொல்லவேண்டும் (திட்டுவதானாலும் அவரைத்தான் திட்டணும்;-). அவர் அழைத்து நான் இறங்கிய நியூக்ளியஸ் என்ற (இன்றைய வேர்ட்பிரஸ் போன்ற) வலைப்பதிவு மென்கலனை தமிழ்ப்படுத்தும் முயற்சியால் PHP என்ற மொழியின் இருப்பையும், அதன் சாத்தியங்களையும் புரிந்துகொண்டேன். முறையாக கணினிப் பள்ளி எதற்கும் போனதில்லையானாலும் ஏற்கனவே என் பணித்தேவை மற்றும் ஆர்வம் காரணமாக BASIC, TurboPascal, TurboC, FORTRAN, AutoLISP, APDL போன்ற மொழிகளில் நிரலெழுதியிருக்கிறேன். (இன்னும் வழக்கொழிந்துபோன IDEAS-Language-ம் உண்டு). இவற்றில் ஒவ்வொன்றிலும் 1000 வரிகள் உள்ள நிரல்கள் கூட எழுதியிருக்கிறேன். அத்தனையுமே எனக்கு அல்லது என் குழு உறுப்பினர்களின் பயனுக்காக எழுதப்பட்டவை, வணிகரீதியில் அல்லாமல், மென்பொருளாக்க வழிமுறைகளுக்கு அடங்காமல் எழுதப்பட்டவை. இந்த அனுபவத்தால் புதிய கணினி மொழி கற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.

பிஹெச்பி திறமூல நிரலாளர்கள் பெரிதும் பயன்படுத்தும் மொழியாதலால் பல நிரல்துண்டுகள், யோசனைத் துணுக்குகள் இணையத்தில் சிதறிக் கிடந்தன. இவை இல்லாவிட்டால் என்னால் இத்தனை நேர்த்தியாக(?) உருவாக்கியிருக்க முடியாது. உதாரணமாக MAGPIERSS என்ற செய்தியோடை திரட்டும் நிரற்பொதி மிகவும் அத்தியாவசியமான திரட்டுதல் என்ற ஒரு செயலுக்கு உதவியது. இவை பெரும்பாலும் GPL என்ற உரிமத்தின் கீழ் இலவசமாகப் பயன்படுத்த, மாற்றியமைத்துக்கொள்ள வெளியிடப்பட்டவை. தமிழ்மணத்திலிருந்து நான் விடைபெறும்போது அதன் நிரல்களில் சுமார் 30-40% இப்படியான கொடைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாயும், மீதம் தமிழ்மணத்துக்கெனவே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாயும் இருந்தன.

தமிழ்மணம் முதல் பதிப்பைப் பார்த்திராதவர்கள் இங்கே சென்றால் பார்க்கலாம்.

தமிழ்மணம் தளத்தின் வளர்ச்சியை (உருவாக்கும்போது நான் கடந்த படிகளை) பார்க்க விரும்பினால் கீழே சில படங்களை இணைத்துள்ளேன்.






----(தொடரும்)


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

04:15 Posted in star, இணையம் | Permalink | Comments (7) | Email this | Tags: தமிழ்மணம், காசி, வலைப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. ரொம்ப அவசியமான அருமையான பதிவு இது.

    நம்ம மதியும் காசியும் உதவலைன்னா இன்னிக்கு நான் 'இங்கே' இல்லை.
    தமிழ்மணத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

    நம்ம காசி gadget geekன்னா.... நான் பொடி ஜாமான் வாங்கிச்சேர்க்கும் பைத்தியம்:-))))

    கூறுவது: துளசி கோபால் | Thursday, 29 November 2007

  2. //இப்போதைய வலைச்சரம் பற்றிய உங்கள் கருத்து, ஆலோசனைகள் என்ன??//

    சிந்தா உங்களிடம் சொல்ல நினைத்த கருத்து இது. அசந்தர்ப்பமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்.

    வலைச்சரம் கொஞ்சநாட்களாக முதுகுசொறிதலுக்கும், கும்மிக்கும் இடமளிப்பதாக தோற்றமளிக்கிறது. ஆரம்பத்தில் வலைச்சரத்தை புரட்டிப் பார்த்த ஆர்வம் எனக்கு இப்போது இல்லை.

    முதுகுசொறிதலிலும், கும்மியிலும் புகழ்பெற்றவனாக இருந்தபோதிலும், வலைச்சரத்தின் வார ஆசிரியர் பொறுப்பு எனக்கு வந்தபோது வாலை சுருட்டியே வைத்திருந்தேன். அதுபோலவே தமிழ்மண நட்சத்திர வாரம் எனக்கு அமைந்தபோதும் என் வால் சுருண்டே இருந்தது.

    வலைச்சர ஆசிரியர்களாக வருபவர்கள் வெறுமனே கும்மியடிக்காமல் உருப்படியான பதிவுகளை தந்தால் தேவலை. இல்லையேல் அப்படிப்பட்டவர்களை பொறுப்பாசிரியராக நியமிப்பதற்கு முன்பாக வலைச்சரம் குழுவினர் ஒன்றுக்கு பத்து முறை ஆலோசிக்கலாம். பொன்ஸ் இப்போதெல்லாம் வலைச்சரப் பொறுப்பில் இல்லையா?

    மனதில் பட்டதை சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...

    அன்புடன்
    லக்கிலுக்

    கூறுவது: லக்கிலுக் | Thursday, 29 November 2007

  3. மிக மிக நல்ல பதிவு.

    கூறுவது: பாஸ்கரன் | Thursday, 29 November 2007

  4. துளசி, லக்கி, பாஸ்கரன் நன்றி

    லக்கி உங்கள் கருத்துக்கு நன்றி...ஆனால் வலைச்சரத்தில் இப்போதைய வார ஆசிரியர்களில் பலர் புதிய பதிவர்கள்...இவர்கள் யாருக்கும் முதுகு சொறிந்து விடுபவர்கள் அல்ல...ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்த்திக் கொள்கிறார்கள் ...ஆனால் பதிவுகளில் நிச்சயமாக விதவிதமாக வகைப்படுத்தி தொகுத்துத் தருகிறார்கள்.... பின்னூட்டங்களில் கும்மியடித்தாலும் இடுகைகள் தரமாகவே இருக்கின்றன.

    வலைச்சரக்குழுவில் என்னுடன் பொன்ஸ், முத்துலட்சுமி இருக்கிறார்கள்....

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 29 November 2007

  5. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?
    நல்ல பதிவு.
    பல விபரங்கள் எனக்கு புதிது.

    கூறுவது: vaduvurkumar | Thursday, 29 November 2007

  6. நன்றி

    கூறுவது: Balaji | Thursday, 29 November 2007

  7. //ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்த்திக் கொள்கிறார்கள்//

    :-)))))

    கூறுவது: லக்கிலுக் | Thursday, 29 November 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)