❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் | H | ❒ காசியின் சேவைமேஜிக்

Friday, 25 May 2007

❒ விஜயகாந்த் வில்லன்: அழகுராஜா

வில்லனை ஹீரோவென்று நம்பி விட்டோம்!
தே.மு.தி.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகுராஜ் வேதனை பேட்டி!


தே.மு.தி.க.வின் ஆரம்பகட்டத் தலைவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விலகுகிறார்கள்; அல்லது விலக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் "திருமயம் அழகுராஜ்' என்று அரசியல் வட்டாரத்தில் பாப்புலரானவர் தே.மு.தி.க. மாநில இலக்கிய அணிச் செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அழகுராஜ்

சிவகங்கை, புதுக்கோட்டை, ஏன் திருச்சி போன்ற மாவட்டங்களில் தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அழகுராஜ். சென்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் நின்று 12500 வாக்குகள் பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் நின்ற தே.மு.தி.க. வேட்பாளர்களிலேயே முதல் இடத்திற்கு வந்தவர்.

அதற்கு அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் இதே வாக்கு வங்கியை தே.மு.தி.க.விற்கு 22,000 ஆக ஆக்கிக் காட்டியவர். விஜயகாந்த் பிரச்சாரம் ஏதும் செய்யாமல், அந்த மாவட்டத்தின் பக்கமே தலை காட்டாமல் இருந்த நேரத்தில் கிடைத்த வாக்குகள் இவை.

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியின் தே.மு.தி.க. வேட்பாளராக நின்று தோல்வியுற்ற பன்னீர்செல்வம் திருப்பத்தூரில் "2011ஆம் ஆண்டு தேர்தலின் வேட்பாளர்' என்று களம் இறக்கப்படுவதை எதிர்த்ததன் விளைவே இந்தப் பதவிப்பறிப்பு!

நாம் தே.மு.தி.க.விலிருந்து விலக்கப்பட்ட அழகுராஜைச் சந்தித்தோம்.

தே.மு.தி.க.விலிருந்து ஏன் நீக்கப்பட்டுள்ளீர்கள்?

இன்றுவரை எனக்கு அது புரியாத புதிராகவே இருக்கிறது. நான் நீக்கப்பட்டதை பத்திரிகைச் செய்திகள் மூலம்தான் அறிந்தேன். அரபு நாடுகளில்கூட கொலைக் குற்றம் புரிந்தவர்களிடமே, "உன் தரப்பு நியாயம் என்ன?' என்று கேட்கிறார்கள்.

ஆனால் இங்கே கடந்த இரு வருடங்களாக இந்தக் கட்சியை வளர்க்க வியர்வை சிந்தியதோடு மட்டுமில்லாமல், என் சொந்தப் பணம் 60 லட்சம் ரூபாயை செலவு செய்தேன். கட்சிக்காக உழைத்து கடனாளி ஆகி நிற்கும் எனக்கு விஜயகாந்த் கொடுத்த வெகுமதிதான் இது!

நீங்கள் விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருக்கலாமே?

அதற்கு விருப்பம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே என்னை நீக்கிய பிறகு நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும்?

அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் கட்சி தே.மு.தி.க. என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில் ஏன் இப்படி ஒவ்வொருவராக விலக்கப்படுகிறார்கள்?

"ஆட்சியைப் பிடிக்க முடியாது' என்ற அவநம்பிக்கை விஜயகாந்திற்கு வந்துவிட்டது. குறிப்பாக சரத்குமார் வந்த பிறகு தென் மாவட்டங்களில் உள்ள ஆறேழு மாவட்டங்களில் தனக்கு பெரும் செல்வாக்கு இழப்பு ஏற்படும் என்று நம்புகிறார்.

ஆகவே அடுத்த வாய்ப்பு அ.தி.மு.க.வுக்குத்தான் இருக்குமோ என்ற நினைப்பு விஜயகாந்திற்கு வந்துவிட்டது. கட்சி ஆரம்பித்து காசு பணம் இழந்த பாக்யராஜைப் பார்க்கிறோம். கட்சி ஆரம்பித்து கட்டிடத்தை இழந்த விஜயராஜேந்தரைப் பார்க்கிறோம்.

ஆனால் கட்சி துவங்கி ஆட்சியைப் பிடிக்கும் முன்பே புதுவையில் பல கோடி ரூபாய்க்கு மருத்துவக் கல்லூரி வாங்கிய மகா புத்திசாலி விஜயகாந்த்தையும் பார்க்கிறோம்.

நிர்வாகிகள் போடுவதில் வசூல் பண்ண வேண்டும் என்பதற் காகவே 31 மாவட்டங்களை 57 மாவட்டங்களாக மாற்றினார். அனைத்துப் பதவிக்கும் பணம் என்ற அடிப்படைக் கொள்கையைக் கட்சியில் புகுத்தியுள்ளார் தலைமை வசூல் ஏஜெண்ட்டாகச் செயல்படும் அவரது மச்சான் சுதீஷ்.

இப்போது அடுத்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற வேட்பாளர் வாய்ப்பை விற்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அப்படித்தான் திருப்பத்தூர் தொகுதியை 2011க்காக பன்னீர்செல்வம் என்ற பணக்காரருக்கு விற்பனை செய்துள்ளார்கள்.

விஜயகாந்தின் மைத்துனர் பற்றி குறை சொல்கிறீர்கள். கேப்டன்தான் குடும்ப ஆட்சிக்கு எதிரானவராயிற்றே...?

மதுரை மாநாட்டில், "ஒரு கட்சி குடும்பத்திற்காக நடக்கிறது' என்று தி.மு.க.வையும், "இன்னொரு கட்சி நண்பருக்காக நடக்கிறது' என்று அ.தி.மு.க.வையும் குற்றம் சாட்டினார். ஆஹா! அரசியலில் புதிய அத்தியாயம் படைக்க வந்துவிட்டார் என்று மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் நாளடைவில் கட்சியை மச்சான் கட்சியாக மாற்றி விட்டார். அவரை மீறி ஒரு துரும்பு கூட கட்சியில் அசையாது. எதையெல்லாம் தன் அரசியல் கொள்கையாக அறிவித்தாரோ அதற்கெல்லாம் நேர்மாறாக நடப்பவர்தான் விஜயகாந்த்!

எப்படி அது போன்று குற்றம் சாட்டுகிறீர்கள்?

ஊழல்வாதிகள் யாரையும் தே.மு.தி.க.வில் உறுப்பினராகக்கூட சேர்க்க மாட்டேன் என்றார் விஜயகாந்த். ஆனால் உச்ச நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டு, வேலூர் சிறையில் களி தின்று, ஆறு வருடம் தேர்தலில் நிற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டவர்தான் தே.மு.தி.க.விற்கு மாநில அளவில் தேர்தல் பிரிவுச் செயலாளர். கிரானைட் ஊழலில் சிக்கியவர் தியானேஸ்வரன். அவரது மகனுக்கு மாணவர் மாநில அணிச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.

அதேபோல் "அண்ணா கட்டிய கூட்டில் குடியேறியவர் கலைஞர்' என்றார். ஆனால் இப்போது என் தொகுதியில் அழகுராஜ் கட்டிய வீட்டில் பன்னீர்செல்வம் மட்டும் குடியேறலாமா? "கையில் பணம் இல்லாதவனை கட்சி ஆஃபீஸýக்குள் விடாதே.' -இதுதான் தே.மு.தி.க.வின் அடிப்படைக் கொள்கை என்று உருவாக்கி விட்டார் விஜயகாந்த்.

ஆகவே சென்ற தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு, கடனாளியாகி வீதிக்கு வந்து விட்ட தே.மு.தி.க.வினருக்கு கட்சிப் பதவி கொடுக்கவில்லை. அவர்களின் இல்லத் திருமணங்களில்கூட கலந்து கொள்வதில்லை. ஆனால் ஊழல்வாதியான பொன்னுச்சாமியின் இல்லத் திருமணத்தில் குடும்பத்தோடு சென்று கலந்துகொள்கிறார்.

தே.மு.தி.க.விற்கு விழும் வாக்குகள் விஜயகாந்திற்காக விழுபவை. அவருக்கு ஏற்ற நிர்வாகிகளை வைத்துக்கொள்வதில் என்ன தவறு?

அப்படியென்றால் விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதற்கு அவரே பொறுப்பேற்றுக் கொள்வாரா? அதற்காக தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா?

கோயம்பேடு திருமண மண்டபத்தை இடிப்பது தி.மு.க.வின் பழி வாங்கும் செயல் என்கிறார்களே?

சாலை விரிவாக்கத்திற்கு எத்தனையோ ஏழைகள் தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு, கிடைத்த நஷ்ட ஈட்டை வாங்கிக் கொண்டு போகிறார்கள். ஆனால் எனக்கு ஆறடி நிலம்தான் சொந்தம் என்று பேசிய விஜயகாந்த், திருமண மண்டபத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஐ.நா. சபைக்கு மட்டும்தான் போகவில்லை. மற்றபடி அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்றுவிட்டார்.

இத்தனைக்கும் விஜயகாந்திற்கு இழப்பு வெறும் 56 சென்ட்! அதற்கு 8.50 கோடி ரூபாயை அரசு நஷ்ட ஈடாக வேறு கொடுக்கிறது. "எனக்கு இந்த நஷ்ட ஈடு வேண்டாம்' என்று விஜயகாந்த் சொல்ல முன் வருவாரா?

ஆனால் என் வருத்தம் வேறு! ஐ.நா. சபையில் உரையாற்றிய முதல் தமிழன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் அரசியல் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்தின் திருமண மண்டபத்திற்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகிறார். அவர் ஒழுங்காக கணக்கு காட்டாததற்காக வந்த ரெய்டை கண்டித்து போராடுகிறார். அதை நினைத்தால்தான் மனது வேதனைப்படுகிறது.

தே.மு.தி.க.வில் இரு வருடம் இருந்துள்ளீர்கள். அந்தக் கட்சி பற்றியும், விஜயகாந்த் பற்றியும் உங்கள் அனுபவம் என்ன?

முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வரும் "குடிகாரன்' என்று குற்றம் சாட்டிய பிறகும் அதற்கு முறையாக விஜயகாந்தால் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை. பொது வாழ்க்கைக்குத் தேவையான தியாக மனப்பான்மை இல்லாதவர். அதனால்தான் இவரை வைத்து "சொக்கத் தங்கம்' படம் எடுத்த ஜி.வி. தூக்கில் தொங்கினார்.

"பேரரசு' எடுத்த காஜா மொய்தீன் படத்தை வெளியிட முடியாமல் மருந்து குடித்து மரணத்தின் விளிம்புக்குப் போய் திரும்பினார். இப்போது தே.மு.தி.க.வில் கைக்காசுகளை கட்சிக்காக இழந்த ஆயிரமாயிரம் இளைஞர்கள் தற்கொலைக்குத் தயாராகிறார்கள்.

ஆனால் இவர் மட்டும் லீக் கிளப், எஞ்சினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வாழைத்தோப்பு என்று சொத்துக்களைப் பெருக்கிக் கொண்டே போகிறார். அரசியலில் ஆட்சியைப் பிடிக்காமல் சொத்துச் சேர்ப்பது எப்படி என்பதற்கு விஜயகாந்தை வைத்து தனியாக ஒரு புத்தகமே போடலாம்.

விஜயகாந்த் நடிகராகச் சம்பாதித்துள்ளார். அதை எப்படி நீங்கள் குறை கூற முடியும்?

அரசியலுக்கு வந்த பிறகு அவர் எந்தச் சொத்தையும் விற்பனை செய்யவில்லை. கடந்த ஐந்து வருடத்தில் அவருடைய படங்கள் எல்லாம் திரையரங்கை விட்டு ஓடின. ஆனால் திரையரங்கில் ஓடவில்லை.

அப்படியிருக்கும் போது கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு எங்கிருந்து வந்தது? "தனித்து நிற்கிறேன்' என்று இவர் கூறுவதே யாரையோ ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு யாரோ வடித்துக் கொடுத்த திரைக் கதையோ என்ற சந்தேகம்கூட எங்களுக்கு இருக்கிறது.

சரி, இப்போது உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

விஜயகாந்த் என்ற வில்லனை ஹீரோ என்று நினைத்துக் கொண்டு ஏமாந்த என்னைப் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். திருச்சி தங்கமணி, கடலூர் துரை மகாதேவன், மதுரை முத்து, கிண்டி வேணு, பூக்கடை நடராஜன் -இப்படியொரு நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களை ஒன்று திரட்டி எதிர்பிரச்சாரம் செய்வோம். அது சாத்தியமில்லை என்றால் எங்களை முழு மூச்சாகப் பயன்படுத்த எந்த இயக்கம் தயாராகிறதோ அந்த இயக்கத்தில் எங்களை இணைத்துக் கொள்வோம்.

ஆனால் இனி என் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு வினாடியையும் விஜயகாந்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யவே செலவிடப் போகிறேன். ""நெருப்பை கிரீடம் என்று எண்ணி ஏமாந்ததாம் மெழுகுவர்த்தி'' என்ற கவிதை வரிகள் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

=தமிழன் எக்ஸ்பிரஸ்

-oOo-

தமிழ் நாடுங்கோ!


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

09:40 Posted in அரசியல் | Permalink | Comments (2) | Email this | Tags: vijayakanth, விஜயகாந்த் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. all party against to vijayakanth. vijayakanth is honest man

    கூறுவது: dargin | Friday, 18 April 2008

  2. Realy use full net work please keep it up....................
    thank you your service............

    கூறுவது: SOLAI SELVAM | Saturday, 29 November 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)