❒ கிரீமி லேயர் குழப்பங்கள் | H | ❒ பட்டிமன்ற வெற்றியாளர்

Sunday, 15 April 2007

❒ நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு

தமிழ்ப்புத்தாண்டு எது என்பது பற்றி சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காலங்கள் பற்றிய பார்வை தாண்டி தமிழ்ப்புத்தாண்டு என்று இப்போது கொண்டாடப் படும் சர்வஜித்து புத்தாண்டு தமிழ்ப்பெயரா, இந்த ஆண்டுகளில் உள்ள பெயர்கள் தமிழா, இந்த புத்தாண்டு முறை காலங்காலமாக தமிழரால் கொண்டாடப் பட்டு வருகிறதா? இந்த அறுபது ஆண்டுப் பெயர்கள் குறித்த புராணக்கதை தமிழ்ப்பண்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளதா?

இதற்கான பதிலை ராகவன், குமரன், கண்ணபிரான் ரவிசங்கர் உள்ளிட்ட நிஜமான ஆன்மிகப் பதிவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

சார்பு நிலையற்று உண்மையான புரிதலுக்காக்கவே இதைக் கேட்கிறேன். ஆன்மிகமும் தமிழ்ப்பற்றும் ஒருங்கே கொண்ட பதிவர்கள் இதற்கான பதிலைத் தரமுடியும் என்று நம்புகிறேன்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

07:10 Posted in விவாதம் | Permalink | Comments (8) | Email this | Tags: tamil new year, தமிழ்ப் புத்தாண்டு |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. /* இதற்கான பதிலை ராகவன், குமரன், கண்ணபிரான் ரவிசங்கர் உள்ளிட்ட நிஜமான ஆன்மிகப் பதிவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
    சார்பு நிலையற்று உண்மையான புரிதலுக்காக்கவே இதைக் கேட்கிறேன் */

    நானும் நீங்கள் சொன்ன காரணத்தால் நீங்கள் குறிப்பிட்டவர்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    கூறுவது: வெற்றி | Sunday, 15 April 2007

  2. இராம.கி ஐயா அவர்களையும் உங்கள் பட்டியலில் இணைத்துவிடுங்கள்.

    கூறுவது: வெற்றி | Sunday, 15 April 2007

  3. ஞான வெட்டியான் ஐயா, வாத்தியார் ஐயா

    இவர்களிடமும் கேட்கலாம்.

    கூறுவது: வல்லிசிம்ஹன் | Sunday, 15 April 2007

  4. என்னங்க இது! என்னைய ஏதோ விவரம் தெரிஞ்சவனாட்டம் கேள்வி கேட்டுட்டீங்களே! சித்திரைப் பிறப்புதான் எப்பொழுதும் தமிழ் வருடப் பிறப்பாக இருந்ததா என்று எனக்குத் தெரியாது. தையாக இருந்திருக்கும் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு என்ன ஆதாரம் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம். தமிழ் வருடப்பிறப்பிற்காக இப்பொழுது சொல்லப்படும் புராணக்கதையில் எனக்கு ஏற்பில்லை. அப்படியென்றால் கன்னட, தெலுங்கு, ஹிந்தி, வங்காள வருடங்கள் எப்படிப் பிறந்தனவோ!

    ஆனால் சித்திரைப் பிறப்பே தமிழ் வருடப் பிறப்பாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றே கருதுகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரம் இல்லாவிடினும்...சில உன்னிப்புகள் உண்டு. அதாவது பொதுவில் வானியலார்கள் கோள்களைக் கணிக்கையில் சூரியனை மையப்படுத்தியோ அல்லது சந்திரனை மையப்படுத்தியோ நாட்காட்டியைக் கணிப்பார்கள். சித்திரைப்பிறப்பு என்பது சூரிய நாட்காட்டி வகையில் வருகிறது. இதில் நமது தமிழ்ப்பிறப்புடனே....மலையாள விஷு, பஞ்சாப பைசாகி, வங்கப் புத்தாண்டு, ஒரியப் புத்தாண்டு, அசாமியப் புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இன்னொரு வியப்பான தகவல் ஒன்று. கர்நாடக தெலுங்கு வருடப்ப்பிறப்பு நம்மோடு ஒட்டி வராது. ஆனால் கர்நாடகத்தில் ஒரு சாரார் நம்மோரு வருடப் பிறப்பு கொண்டாடுகின்றனர். பஞ்சாபியரின் வருடப் பிறப்பான பைசாகி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் தெரிந்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன்.

    கூறுவது: கோ.இராகவன் | Sunday, 15 April 2007

  5. சிந்தாநதி. இராகவன் சொன்னதையே சொல்லுக்குச் சொல் வழி மொழிகிறேன். அவர் சொன்னது போக மேலதிகமாக இவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

    இப்போது நடைமுறையில் இருக்கும் ஆண்டுப் பெயர்கள் தமிழில் இல்லை என்பது வெளிப்படை. ஒவ்வொரு பெயருமே வடமொழிப் பெயராகத் தான் இருக்கிறது. அதனால் சிலருக்கு சித்திரையில் தொடங்கும் வருடம் என்ற கருத்து ஒவ்வாததாக இருக்கிறது. சித்திரையில் தொடங்கும் வருடப் பெயர்கள் தமிழில் இருந்தால் அந்த ஒவ்வாமை நீங்கும் என்று நினைக்கிறேன். அதற்காக வார நாட்களைத் தமிழில் சொல்வது போல் வருடங்களையும் தமிழில் குறிக்கத் தொடங்க வேண்டும். அதன் முதல் அடியாக சர்வஜித் என்ற இந்த ஆண்டின் பெயரை முதலில் சர்வசித் என்று தமிழ் பலுக்கலில் சொல்லத் துவங்கி பின்னர் முழுதும் வென்றோன்; முற்றும் வென்றோன்; அனைத்தும் வென்றோன் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

    தைத் திங்களில் தொடங்கும் வருடத்திற்கு தமிழர் திருநாள் தை முதல் நாள் என்ற ஒரு காரணத்தை விட்டு வேறு ஒரு காரணமும் சூரிய மானத்தின் படி இருப்பதாகத் தோன்றுகிறது. சூரியனின் வடப்புற நகர்தல் (உத்தராயணம்) தைத் திங்கள் முதல் நாளில் தொடங்குவதாகச் சொல்லுவார்கள். இந்த இரு காரணங்களைக் கொண்டு பொங்கல் திருநாளை வருடப்பிறப்பாகச் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

    இராம.கி. ஐயா வானவியலின் அடிப்படையிலும் சந்திர சூரிய மானங்களின் அடிப்படையிலும் தமிழர்களின் காலக் கணக்கைப் பற்றி மிகத் தெளிவாக ஒரு இடுகை இட்டிருந்தார். அதில் தமிழாண்டு ஏன் சித்திரையில் தொடங்குகிறது என்று மிக நன்றாக விவரித்திருந்தார். அந்த இடுகையைக் கண்டால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தேடிக் கிடைத்தால் இங்கே அந்தச் சுட்டியைத் தருகிறேன்.

    கூறுவது: குமரன் (Kumaran) | Sunday, 15 April 2007

  6. சிந்தாநதி,
    உண்மையான புரிதல் நோக்குடன் நீங்கள் கேட்டதும்
    அதற்கு குமரன், ராகவன் இருவருமே ஏற்ப சொன்னதும் நன்றே!
    தமிழறிஞர் மற்றும் சமய வல்லுனர்கள் சிலரிடம் நான் கேட்டு அறிந்ததை எனக்குப் புரிந்த மட்டில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இது குறித்த பல விவாதங்கள் மறைமலை அடிகள் காலம் தொட்டு நடந்து வந்துள்ளன. பல தமிழறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைப் புத்தாண்டு என்று கருதினாலும்,
    தொ.பொ.மீ போன்று ஒரு சில அறிஞர்கள் சித்திரையைக் கொள்வதே சிறப்பு என்றும் கூறி வருகிறார்கள்.
    மேலும் பெயர் சுழற்சி அறுபது ஆண்டுகள் தான் என்பதால், வரலாற்றைப் பதிக்கும் போது நேரிடும் இன்னல்களைத் தீர்க்கவும் திருவள்ளுவராண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

    உங்கள் இரண்டு வினாக்களில்:
    1.இப்போதிருக்கும் பெயர்கள் எதுவும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது முற்றிலும் உண்மை. இது ஏன் என்றால், இந்த மாதிரி ஆண்டுகள் பகுக்கும் முறை (calendaring) உருவான போது, அப்போது இருந்த சோதிட முறைப்படியே உருவானவாது. சோதிடமும் சமயம் சார்ந்து இருந்ததால், இது சமய-சோதிட பகுப்பு முறையாக அமைந்து விட்டது.

    தெலுங்கு, கன்னட ஆண்டுகளும் பெரும்பாலும் இதே 60 பெயர்கள் கொண்டு தான் வருகின்றன. ஒரே வேறுபாடு சூர்யமானம், சந்திரமானம் என்று கதிரையோ, நிலவையோ மையப்படுத்திக் கணக்கிடுதல்.
    சோதிடப் பொது விதி என்னவென்றால், சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் புகுவது புத்தாண்டு.
    அப்படிப் பார்த்தால் End Mar-Mid Apr, அவரவர் சூர்யமான, சந்திரமான கணக்குப்படி, உகாதி என்றோ, சித்திரை என்றோ கொண்டாடுகிறார்கள்!

    2. இந்த ஆண்டுகளின் பின்னுள்ள கதைகளாக, நாரத முனிவர் பற்றிய குறிப்புகள், எப்படி வழங்கலாயிற்று என்று தெரியவில்லை.
    எந்தப் புராணங்களிலும் இதற்கு ஆதாரக் குறிப்புகள் இல்லை என்று தான் சொல்கிறார்கள்.

    வெறும் கர்ண பரம்பரை (செவி வழி) கதையாக இருந்தாலும், சிலர் இது ஆபாசமாகத் திரிந்து விட்டது என்கிறார்கள்; உண்மையில் அது நிலையாமை குறித்த கதை என்றும் சொல்கிறார்கள்;
    இது மட்டும் அல்லாது, ஒவ்வொரு ஆண்டுக்கும் வேறு தனித்தனிக் கதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சர்வஜித்=அனைத்திலும் வெற்றி. பார்வதி தன் புலன்களை வென்று சிவனாரை அடைந்ததைக் குறிக்கும் பெயர்.

    அதனால் கதை அடிப்படையில் இது கிடையாது; மேலும் அதே பெயர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியம், மலையாளத்தில்-சில பெயர்கள் மட்டும் என்று அனைத்திலும் இருப்பதால்,
    இது கதையைக் காட்டிலும், சமய-சோதிட முறையால் பகுத்தது என்று கொள்ளுவதே தகும் என்பது இச்சாரார் கருத்து.
    அதைச் சாலிவாகன முறையின் ஒரு பகுதி என்கிறார்கள். கலியுகாதி என்று ஆண்டு எண்ணைச் சொல்லி, 60-இல் ஒரு ஆண்டின் பெயரைச் சேர்த்துக் குறிக்கிறார்கள்.

    இதைத் தமிழ்ப் புத்தாண்டு என்னாது, சித்திரைப் புத்தாண்டு என்றோ, இல்லை உகாதி, விஷு போல் வேறு ஒரு பெயர் சொல்லி அழைத்தாலோ இவ்வளவு குழப்பங்கள் வாராது!
    சோதிட-சமய அடிப்படையில் அமைந்த புத்தாண்டு என்று கொள்வதே ஏற்புடைத்தாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்.

    நாளும் கோளும் தாண்டி, இறையருள் ஒன்றே வாழ்க்கைக்கு விளக்கம்.
    தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை தீருகிறதோ இல்லையோ, பெரும்பாலான தமிழ் இல்லங்களில் தமிழ் தவிர்க்கப்படாமல்
    பாரதி, கம்பன், வள்ளுவன், நாயனார், ஆழ்வார் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நாளெல்லாம் புதுநாளே!

    கூறுவது: Kannabiran Ravi Shankar (KRS) | Sunday, 15 April 2007

  7. இராகவன், குமரன், கண்ணபிரான் ரவிசங்கர் ஆகியோரின் விளக்கங்கள் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

    /* சித்திரைப்பிறப்பு என்பது சூரிய நாட்காட்டி வகையில் வருகிறது. இதில் நமது தமிழ்ப்பிறப்புடனே....மலையாள விஷு, பஞ்சாப பைசாகி, வங்கப் புத்தாண்டு, ஒரியப் புத்தாண்டு, அசாமியப் புத்தாண்டு ஆகியவை வருகின்றன. */

    இலங்கையில் வாழும் சிங்கள பெளத்த மக்களும் சித்திரையைத் தான் தமது புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் இப் புத்தாண்டை தமிழ்-சிங்கள புத்தாண்டு என்றும் சொல்வர். இத்தினம் இலங்கையில் தேசிய விடுமுறை.

    அண்மையில் ஒரு புத்த மதகுரு[பிக்கு] இப் புதுவருடம் பற்றி கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்தார். அவரின் விளக்கத்தையும் இங்கே விரைவில் இணைக்கிறேன்.

    கூறுவது: வெற்றி | Sunday, 15 April 2007

  8. நன்றி நண்பர்களே

    இந்த சித்திரைப் புத்தாண்டு பற்றிய குழப்பமும் விவாதமும் முதலில் சமயம் சார்ந்தே ஏற்பட்டது. இதில் உள்ள மொழிக்குழப்பமும் சேர்ந்து கொள்ள விவாதங்கள் வேறு திசைக்குத் திரும்பியது. ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைக்கு ஏற்றபடி புத்தாண்டு இது என்று விளக்கம் கூற ஆரம்பித்தனர். இதில் நடுநிலையான விவாதக் கருத்துக்களோ விளக்கங்களோ வர வாய்ப்பில்லாமல் அந்தந்த சார்பானவர்களின் ஒரு சார்பான கருத்துக்களையே காண முடிந்தது. எனவே தான் தமிழ்வலைப்பதிவர்களில் தமிழ்ப்பற்றும் சமயப் பற்றும் கொண்ட பதிவர்களாகவும் அதே சமயம் இன்றைய காலகட்டத்தை உள்வாங்கிக் கொள்ளக் கூடியவர்களாக நான் அடையாளம் கண்ட ராகவன், குமரன், கண்ணபிரான் ரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பதிவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். இவர்களாலும் இதற்கு தெளிவான முழுமையான பதில் கிடைக்கவில்லை என்ற போதும்

    புராணக்கதை நம்ப தேவையில்லை

    60 ஆண்டுப் பெயர்களும் ஏற்க அவசியமில்லை.

    ஆனாலும் பொதுவாக சித்திரையில் துவங்கும் ஆண்டே புத்தாண்டாக ஏற்கலாம்.

    என்ற அளவில் பொதுவான கருத்துகள் கிடைத்துள்ளன.

    நண்பர்கள் இராம.கி ஐயா, ஞான வெட்டியான் ஐயா, வாத்தியார் ஐயா போன்றோரிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளனர். நிச்சயமாக அவர்கள் இதற்கு பதில் கூற தகுந்தவர்கள் தான். அவர்களிடம் இருந்தும் விளக்கம் வந்தால் மிகவும் மகிழ்ச்சி.

    வெற்றி நீங்கள் அறிந்த விளக்கத்தையும் வெளியிடுங்கள்.

    இப்போதைய நிலையில் எனது கேள்வி மற்றும் நண்பர்கள் ராகவன், குமரன், கண்ணபிரான் ரவிசங்கர் ஆகியோர் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு இது தொடர்பான மேல்விளக்கங்களை எவர் வேண்டுமானாலும் தொடரலாம்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 16 April 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)