❒ இயக்குநரைக் கொன்ற நடிகை | H | ❒ மாணவியை ஆசிரியர் காதலிக்கலாமா?

Thursday, 08 March 2007

❒ பெண்ணைப் பூட்டி வை!

Image and video hosting by TinyPicஒரு விதத்தில் நல்ல புத்தகங்கள் நல்ல மனிதரை உருவாக்குகின்றன என்பது சரி...நல்ல புத்தகங்கள் எவை என்பது தான் கேள்வியே. சும்மா எழுதப் படும் புத்தகங்களெல்லாம் நல்ல புத்தகங்களல்ல. நல்ல புத்தகங்கள் வாசிக்க கிடைப்பதும் ஒரு வகையில் அதிட்டம் சார்ந்த விதயமாகிப் போனது. அந்த வகையில் என்னை உருவாக்க உதவிய நல்ல புத்தகங்களும் எனக்குக் கிடைத்தன.

குறிப்பாக பெண்ணடிமைத் தனம் குறித்த தெளிவான பார்வை எனக்கு ஆரம்பத்திலேயே கிடைத்தது. குறிப்பாக பல வங்காள மொழி பெயர்ப்பு நூல்கள் இயல்பான வாழ்வியல் சூழலும் பெண்ணியப் பார்வையும் கொண்டு பல புரிதல்களைத் தந்திருந்தன. புத்தகங்களின் பெயர்கள் எனக்கு இப்போது நினைவில்லை. பல புத்தகங்கள் எண்பதுகளில் தூத்துக்குடி நகர நூலகத்திலிருந்தும், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நூலகத்திலிருந்தும் வாசித்தவை.

என் நண்பர்களில் என்னை அதிகம் அவனது ஆளுமைக்குள் வைத்திருந்த ஒரு நண்பன் மிகப் பயங்கரமான ஆணாதிக்கவாதி. வேறு எந்த விதயத்திலும் அவனுக்கு பதிலடி கொடுக்க முடியாத அளவுக்கு பேச வல்லவன். ஆனால் இந்த ஒரு விதயத்தில் மட்டும் அவனை எதிர்த்து வாயாட எனக்கு கருத்துகள் இருந்தன. ஆனாலும் அவன் கடைசியாக தோற்று விடும் நிலையில் ஒன்றைச் சொல்லி எழுந்து போவான். நீ..ஒரு சிசு..உனக்கு அனுபவம் போதாது...

பெண்கள் எல்லாம் காமவெறி பிடித்து அலைபவர்கள். எப்போது சமயம் கிட்டும் என்று காத்திருப்பவர்கள். கணவன் சற்று ஏமாந்தால் மனைவி அவனை ஏமாற்றி விடுவாள். இதுதான் அவனது பெண் பற்றிய பார்வை.

அவனுக்கு ஒரு தங்கை. அவளை வீட்டுக்குள் அடைத்தே வைத்திருந்தார்கள். நண்பர்கள் யாராவது அவனது வீட்டுக்குப் போனால் தங்கையை முதலில் அவளது அறைக்குள் அனுப்பி விட்டுத்தான் நண்பர்களை சந்திப்பான். நண்பர்களை பெரும்பாலும் வாசலில் வைத்தே அனுப்பி விடுவான். இத்தனைக்கும் அவனது நண்பர்கள் யாருமே ஜொள்ளுப் பார்ட்டிகளல்ல. அவர்கள் அப்படி இல்லா விட்டாலும் பெண்கள் கையைக் கண்ணைக் காட்டி மயக்கி விடுவார்களாம்.

வயதுக்கு வந்தவுடன் அவளது படிப்பை நிறுத்தி விட்டார்கள். பின்னாளில் அவனது தந்தை நோய்வாய்ப்பட்டு இந்த நண்பன் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை வந்த போது நண்பன் அவர்களைக் கைவிட்டு வீட்டை விட்டு போய்விட்டான். பின்னர் அந்தக் குடும்பத்தின் மீது அன்பும் அந்தப் பெண்ணின் படிப்பார்வமும் கண்ட அவளது ஆசிரியைஒருவர் அவளை அழைத்துக் கொண்டு போய் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார். பெண்ணுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு பெற்ற தாய் தந்தையை அந்தப் பெண்ணே காப்பாற்றி வந்தாள். பிறகு அவளுக்கு திருமணம் செய்விக்க யாரும் இல்லாத நிலையில்...

இந்த அவலம் கண்டு படிப்பில் உதவி புரிந்த ஆசிரியையே ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்வித்தார். அந்தப் பெண் இப்போது நன்றாக இருக்கிறாள். பெற்றோரையும் அவள்தான் பராமரித்து வருகிறாள்.

இப்போது நான் அந்த (முன்னாள்) நண்பனைப் பார்க்க நேர்ந்தால் என்ன கேட்கலாம்?

யார் சிசு..என்பதை அவனுக்கு விளக்கி இருக்கலாம். ஆனால் அவன் தான் தப்பித்துப் போய்விட்டானே?

-oOo-

ஒரு மகளாக தகப்பனுக்கு அடிமையாக, தங்கையாக அண்ணனுக்கு அடிமையாக, பல சமயங்களில் தம்பிகளுக்கே அடிமையாக, பின்னர் கணவனுக்கு அடிமையாக, வாழ்விறுதியில் பெற்ற மகனுக்கே அடிமையாக வாழ்பவள் பெண். படிப்பறிவும் பொருளாதார மேம்பாடும் எந்த அளவுக்கு பெண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறது? பல பெண்களின் குடும்பச் சூழல் இன்னும் அடிமைத்தனத்தை பேணி வருவதாகவே இருந்து வருகிறது. மீறல்களினால் சில பெண்கள் வெளியே வந்திருக்கலாம். இன்றைய சூழல் அறிந்து பல ஆண்களும் மாறி வருகிறார்கள்.

வளர்ந்த குழந்தைகளைக்கூட விட்டு விட்டு சில பெண்கள் கள்ளக் காதலனுடன் ஓடிப் போனதாக செய்தி வருகிறது. காமத்துக்காக என்று மிகச்சுலபமாக அதை சமூகம் விமர்சிக்கிறது. காமத்துக்காக 100 ஆண் அதே தவறை செய்யும் போது 1 பெண் செய்வது பெரிதாக விமர்சிக்கப் படுகிறது. பெண்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல. ஆனால் ஆண் செய்யும் தவறுகளுக்கு முன்னால் அவை தூசுக்கு சமம்.

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். "இப்போது 100க்கு ஒன்று என்று நீங்கள் சொல்வது அதிகமாகி விடக்கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சில கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகின்றன"

அந்த நூறை குறைப்பதற்கு நீங்கள் என்ன கட்டுப் பாடுகள் விதித்திருக்கிறீர்கள் ஐயா? ஒன்று பெரிதாகி விடக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் நூறை குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய மாட்டீர்கள் அப்படித்தானே?

(கணித ரீதியாக நூறு கீழ்நோக்கி குறைந்தால் தானாக சதவீத அடிப்படையில் ஒன்று மேல்நோக்கி பெரிதாகி விடும் என்ற அக்கறை போலும்..)

இதற்கும் பெண்ணுரிமைக்கும் தொடர்பு இல்லை என்ற போதும் பெண்ணடிமைத் தனத்திற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. பத்துப் பெண்களோடு தொடர்பு வைத்திருக்கும் ஆண் கூட திருமணத்திற்கு கன்னிப் பெண்தான் வேண்டும் என்கிறான். இவன் பத்துப் பெண்களை நாசமாக்கியது பற்றி எந்தக் கவலையும் இல்லை.

எந்தப் பெண்ணும் வரப்போகும் கணவன் கற்புள்ளவனா என்று ஆராய்ந்ததாக விவரம் இல்லை...

நமது சினிமாவும் இதே அடிமைத்தனத்தை இன்னொரு விதமாக பறைசாற்றி வருகிறது. பெண்ணைக் கேலி செய்து பாடும் அதே ஆண்களுடன் அரைகுறை ஆடையில் பெண் குத்தாட்டம் போடுவதும், கதாநாயகிகள் நாயகர்களைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும் நாயகன் கடமையே கண்ணாக இருப்பதும்... என்னாங்கடா வெளையாடுறீங்களா?


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

08:45 Posted in வாழ்வியல் | Permalink | Comments (6) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. //நமது சினிமாவும் இதே அடிமைத்தனத்தை இன்னொரு விதமாக பறைசாற்றி வருகிறது. பெண்ணைக் கேலி செய்து பாடும் அதே ஆண்களுடன் அரைகுறை ஆடையில் பெண் குத்தாட்டம் போடுவதும், கதாநாயகிகள் நாயகர்களைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும் நாயகன் கடமையே கண்ணாக இருப்பதும்... என்னாங்கடா வெளையாடுறீங்களா?//

    சூப்பர்... சினிமான்னு தனியா சொல்லமுடியாது.
    பெண்ண பெண்ணா காட்டுங்கன்னு சொன்னா தப்புங்கறாங்க.. என்னத்த சொல்றது

    சென்ஷி

    கூறுவது: சென்ஷி | Thursday, 08 March 2007

  2. அந்த நன்பன் அட்ரஸ் இருந்தா குடுங்க ( திரும்ப கண்ணில் மாட்டினா)...பளிச்சுன்னு ஒரு அறை விடனும்...

    கூறுவது: செந்தழல் ரவி | Thursday, 08 March 2007

  3. தலைப்பை பார்த்ததும் கோபம் வந்தது. பதிவை பார்த்ததும் சாந்தமாகிட்டேன் ;-)

    கெட்ட எண்ணம் பிடிச்சவங்களலாம் நண்பன்னு சொல்லாதீங்க.

    கூறுவது: ஜெஸிலா | Thursday, 08 March 2007

  4. \அந்த நூறை குறைப்பதற்கு நீங்கள் என்ன கட்டுப் பாடுகள் விதித்திருக்கிறீர்கள் ஐயா? ஒன்று பெரிதாகி விடக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் நூறை குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய மாட்டீர்கள் அப்படித்தானே?//

    சரியான கேள்வி தான். பதில் கிடைத்திருக்காதே .

    கூறுவது: முத்துலெட்சுமி | Thursday, 08 March 2007

  5. அறிவிப்பு:

    மகளிர் தின பட்டிமன்ற பரிசுப் போட்டி விவாதங்கள் நாளை சனிக்கிழமை இந்திய நேரம் பகல் 12 மணிவரை போட்டியாளர்கள் கலந்து கொண்டு விவாதிக்கலாம்.

    12 மணிக்கு போட்டி முடித்துக் கொள்ளப்பட்டு பரிசுத் தேர்வுக்காக நடுவருக்கு அனுப்பப் படும்.. அன்று மாலை பரிசுக்குரியவர் அறிவிக்கப் படுவார்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 09 March 2007

  6. போட்டித்தள சுட்டி

    http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_08.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 09 March 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)