☜ ❒ ஜிமெயிலில் பாப்3 | H | ❒ இயக்குநரைக் கொன்ற நடிகை ☞
Tuesday, 06 March 2007
❒ முலைகள் என்னும் கெட்டவார்த்தை
தமிழ்நதியின் குட்டி ரேவதி நேர்காணல் தந்த உணர்வலைகள்
சின்ன வயதில் அதிகமும் வெளியூர்களில் இருந்ததால் ஊர் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகம் தெரியாது. என் 23ம் வயதில் திரும்ப ஊருக்கு வந்த பிறகு கெட்டவார்த்தைகள் என்று சொல்லப் படுகிற வார்த்தைகள் சின்னக் குழந்தைகளின் வாய் வழிக் கூட புகுந்து புறப்படுவது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவே எனக்குத் தென்பட்டது.
குமுதம் விகடன் கல்கி வழி கட்டமைக்கப் பட்டிருந்த என் வெளியுலக சிந்தனைகள் எனக்குத் தந்த அதிர்ச்சி அது. அதற்குள்ளாக தமிழின் ஏராளமான இலக்கியங்களை? வாசித்திருந்தாலும் அவையும் மணிப்பிரவாள, செந்தமிழ் நடையில் தந்திருந்த பிம்பங்களில் அந்தச் சொற்கள் இருக்கவில்லை. அந்தச் சொற்களின் பொருள் அதற்கு மேலான அருவ்வெறுப்பை அளித்தது. பல நாட்கள் அந்த அருவெறுப்பின் குமட்டலில் தவித்திருக்கிறேன்.
சில நாட்களிலேயே இன்னொரு உண்மை எனக்குப் புரிபட்டது. அப்படி அருவெறுப்பான வசை மழை பொழிந்த இரண்டு பேர் மூன்றாம் நாள் தோளில் கை போட்டபடி என்னைக் கடந்து சென்ற காட்சி தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது. அப்படியொரு வார்த்தையை பேசி விட்டு மறுபடி எப்படி இவர்களால் சகஜமாக இருக்க முடிகிறது?
பின்னரே கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று வசைகளாகத்தான் அவர்கள் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்பதும் எப்போது சொல் வெளியாகிறதோ அப்போதே ஆத்திரமும் வெளியேறி விடுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். நாவினால் சுட்ட வடு... எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! அது இங்கே உதவாது...
அந்த வெ...ளி.. , தா...ளி.. உள்ளிட்ட ஏராளமான வசைச் சொற்களில் எந்த உட்பொருளும் அவர்களிடையே இல்லை. குறிப்பாக தாயைப் புணர்ந்தவனே என்பது பல வசைச்சொற்களின் நிரந்தர கருப்பொருளாக இருந்த போதிலும் அந்த வசை அவர்களில் எந்த அருவெறுப்புக்கும் குறிப்பிட்ட பொருள் உணர்த்தும் வசைக்கும் காரணமாக இருக்கவில்லை. மாறாக ஒரு கோபக்குறிச் சொல்லாக மட்டும் பயன்படுத்தப் படுவதால் பொருளுரைக்கும் நமக்குத் தவிர பயன்படுத்தும் அவர்களுக்கு எந்த வெறுப்புணர்வும் அருவெறுப்பும் ஏற்படவில்லை எனக் காண முடிந்தது.
பின்னர் சிற்றிதழ்களோடு பரிச்சயமேற்பட்ட போது அவற்றில் இந்த வசைகள் பயன்படுத்தப் பட்டு வந்த போது படித்தவர்களும் இதை எழுதுகிறார்களே? அவர்கள் இதன் பொருளுணராமலா பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி என்னைக் குடைந்தது.
மக்களின் இயல்புச் சொற்களை வட்டார வழக்காக பயன்படுத்துவதும் அதே நோக்கத்தில் தான் என்பதையும் இலக்கியத்தின் மீறல் பண்பும் உணர ஆரம்பித்த போது தான் என்னால் இயல்பாக இவற்றை எதிர்கொள்ள முடிந்தது.
உண்மையில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. மக்கள் சரளமாக பயன்படுத்தும் சொற்களை வட்டார வழக்கில் இயல்பாக பயன்படுத்தும் வகையான இலக்கியம் தவிர இந்த பெண்ணியப் படைப்புகளில் கூறும் உடல் மொழி குறித்த இயல்பான படைப்புகள் மற்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இலக்கியத்தின் மீறல் என்பது வெற்று வார்த்தைகளல்ல. அவை கலாச்சார தளத்தில் நிச்சயம் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிக்கும். தோற்றுவிக்க வேண்டும். சிந்திக்கப் பட வேண்டும் அவை ஏன் சொல்லப் படுகின்றன என்பதன் காரணம் உணரப் பட வேண்டும்.
முலைகளை எழுதும் பெண்களை சுட்டுக் கொல்லத் துடிக்கிற பெருங்கவிகள் இடுப்பு துடிக்குது ரவிக்கை வெடிக்குதுன்னு பாட்டெழுத முடிகிற கவிப் பெருந்தகைகளை என்ன செய்யப் போகிறார்கள் என்று சொன்னால் தேவலாம். கல்யாணம் கட்டிக்காமல் பெத்துக்காலான்னு மூணு வயசு குழந்தை கூட பாடுதே இதுக்கு எந்த பெண்ணியக் கவி காரணம்? தாய்மையின் முலைகளை எழுதக்கூடாதென்னும் கவிஞர்கள் பெண்ணின் பருவச் சமைதலை ஆபாசப் பாட்டாக விற்கலாம். அவர்களுக்கு விருதுகளும் வழங்கிச் சிற்பிக்கலாம். வாழ்க்கையை எழுதுகிற பெண்களை துரத்தித் துரத்தி கல்லாலடிக்கலாம்.
என்ன செய்ய எனக்கு 23 வயதில் கிடைத்த ஞானம் இவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று தோன்றுகிறது.
-oOo-
...சில சமயம் கழிச்சல் துடைப்பதற்கு உதவலாம் என்ற போதிலும் ஏடுகள் எல்லாவற்றுக்கும் உதவாது...சமூகத்தின் அனுபவ பாடங்கள் ஏடுகளில் கிடைக்காது. அனுபவ அறிவே கிடைக்காமல் பீடங்களில் இருந்து கொண்டு பீற்றிக் கொள்ளுகிறவர்களை படைப்பாளிகளாக ஏற்பது தமிழின் சாபக்கேடு. வாழ்க்கையை படித்து எழுதப் படும் எழுத்தின் வீரியம் அவற்றில் இல்லை.
குறிப்பு: நான் படித்த புத்தகங்களில் இருந்த தாய்ப்பால் கிராமங்களில் இல்லை. அங்கே இருப்பதெல்லாம் முலைப்பால் மட்டுமே!
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
08:05 Posted in இலக்கியம் | Permalink | Comments (17) | Email this
| Tags: kavitai, கவிதை, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
சில சமயம் கழிச்சல் துடைப்பதற்கு உதவலாம் என்ற போதிலும் ஏடுகள் எல்லாவற்றுக்கும் உதவாது...சமூகத்தின் அனுபவ பாடங்கள் ஏடுகளில் கிடைக்காது. அனுபவ அறிவே கிடைக்காமல் பீடங்களில் இருந்து கொண்டு பீற்றிக் கொள்ளுகிறவர்களை படைப்பாளிகளாக ஏற்பது தமிழின் சாபக்கேடு. வாழ்க்கையை படித்து எழுதப் படும் எழுத்தின் வீரியம் அவற்றில் இல்லை//
என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது, ஆனால் புரியலையே :-(கூறுவது: ramachandranusha | Tuesday, 06 March 2007
-
அது வேறு ஒண்ணும் இல்லீங்க
சுட்டுக் கொல்லத் துடிக்கிற பெருங்கவிகள் பத்தி தான். தங்களைத் தாங்களே பெருங்கவிகளாக நினைத்துக கொண்டு மத்தவங்களை புரிஞ்சிக்க தெரியாத சடங்ங்களை வேற எப்படி சொல்றது.கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 06 March 2007
-
/முலைகளை எழுதும் பெண்களை சுட்டுக் கொல்லத் துடிக்கிற பெருங்கவிகள் இடுப்பு துடிக்குது ரவிக்கை வெடிக்குதுன்னு பாட்டெழுத முடிகிற கவிப் பெருந்தகைகளை என்ன செய்யப் போகிறார்கள் என்று சொன்னால் தேவலாம். கல்யாணம் கட்டிக்காமல் பெத்துக்காலான்னு மூணு வயசு குழந்தை கூட பாடுதே இதுக்கு எந்த பெண்ணியக் கவி காரணம்? தாய்மையின் முலைகளை எழுதக்கூடாதென்னும் கவிஞர்கள் பெண்ணின் பருவச் சமைதலை ஆபாசப் பாட்டாக விற்கலாம். அவர்களுக்கு விருதுகளும் வழங்கிச் சிற்பிக்கலாம். வாழ்க்கையை எழுதுகிற பெண்களை துரத்தித் துரத்தி கல்லாலடிக்கலாம்./
சத்தியமான வரிகள்.
இங்கு பல விஷயங்கள் அதனை செய்பவர் ஆணா, பெண்ணா எனபதைப் பொறுத்தோ அல்லது அதன் பின் புலத்தை வைத்தோ முக்கியத்துவம் பெறுகின்றன.
முலைகள் என்று பெயரை வைத்ததாலேயே அக்கவிஞரை, கீழ்த்தரமாக பார்ப்பவன் இல்லை நான். ஆனால்,எனக்குள்ளே இதையொட்டி பல கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை தனியாகவே ஒரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன்.
உதாரணத்திற்கு :
இதே பெயரை ஒரு ஆண் கவிஞர் வைத்திருந்தால், தாய்மையை விலை பேசுகிறார் என்றோ, அல்லது வேறு எதாவது முத்திரையை அவர் மீது விழ வைப்பதில் பலர் (பெண்ணியம் பேசும் சிலர் உட்பட) ஈடுபடலாம் என்று தோன்றுகிறது.
சமைஞ்சது எப்படி என்ற பாட்டு கேவலமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பல நாட்டுப்புற பாடல்களில் கூட மச்சினியை வம்புக்கிழுக்கும் வரிகளும், முறைப்பெண்ணை மாந்தோப்பின் ஓரம் ஒதுங்கச் சொல்லி அழைக்கும் வரிகளும் இருக்கின்றனவே. கட்டிக்கலாமா? பெத்துக்கலாமா? பாடல் அந்த ரகத்தை சேராதா?
இதற்கான விடை தேடும் முயற்சியாக இதை தனியே ஒரு பதிவாகவே போட நினத்திருக்கிறேன்.
எது எப்படியிருப்பினும், இங்கு நீங்கள் சொன்ன கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.கூறுவது: Nandha | Tuesday, 06 March 2007
-
//நான் படித்த புத்தகங்களில் இருந்த தாய்ப்பால் கிராமங்களில் இல்லை. அங்கே இருப்பதெல்லாம் முலைப்பால் மட்டுமே!//
Top classகூறுவது: தங்கவேல் | Tuesday, 06 March 2007
-
//ஆனால் பல நாட்டுப்புற பாடல்களில் கூட மச்சினியை வம்புக்கிழுக்கும் வரிகளும், முறைப்பெண்ணை மாந்தோப்பின் ஓரம் ஒதுங்கச் சொல்லி அழைக்கும் வரிகளும் இருக்கின்றனவே. //
அது அந்தந்த பருவத்தில் அந்தந்த ஆட்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அது இயல்பானது தான்.
அதுவே சினிமாவுக்கு வரும்போது 3 வயது குழந்தை பொருளறியாது பாட நேர்கிறது.
அதைவிட முக்கியமாக அதையெல்லாம் சகிக்கிற இந்த மேதாவிகள் இந்த பெண் கவிஞர்களை எதற்காக சாடுகிறார்கள்? என்பதே...இவர்கள் எழுவதைப் படித்து யார் கெட்டுப் போகிறார்கள். எந்தக் கலாச்சாரம் சீர் கெட்டுப் போகிறது?கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 06 March 2007
-
நல்ல பதிவு சிந்தாநதி,
பித்த(ளை)ம் தலைக்கு ஏறினால் இப்படித்தான் புலம்புவார்கள். அல்லது மறைமுகமாக தாக்கத்தொடங்குவார்கள். இவர்கள் இவர்களுக்கே சரியான முறையில்(நேர்மை?) இருக்க மாட்டார்கள் என்கிற போது.. எப்படி இவர்களிடம் நீங்கள் சொல்லும் விசயங்களை எதிர்பார்க்க முடியும்?
அட.. விடுங்க பாஸூ.. அவங்க எப்பவுமே அப்படித்தான்.
தானா கனியாது சில பழம்... அடிச்சுத்தான் கனிய வைக்கனும். :)கூறுவது: யெஸ்.பாலபாரதி | Tuesday, 06 March 2007
-
தமிழ்நதி. நல்லதொரு கேள்விதான். ஆனால் விடை? பெண் அப்படியெல்லாம் எழுதக் கூடாது. ஆண் கவிஞர்கள் மட்டுந்தான் எப்படியும் எழுதலாம். பெண்களுக்குப் பண்பாடு இல்லையா? பெண் பாட்டுக்கு முலை கிலைன்னு எழுதத் தொடங்கீட்டா அப்புறம் இவங்க பொழப்பு?
// சமைஞ்சது எப்படி என்ற பாட்டு கேவலமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பல நாட்டுப்புற பாடல்களில் கூட மச்சினியை வம்புக்கிழுக்கும் வரிகளும், முறைப்பெண்ணை மாந்தோப்பின் ஓரம் ஒதுங்கச் சொல்லி அழைக்கும் வரிகளும் இருக்கின்றனவே. கட்டிக்கலாமா? பெத்துக்கலாமா? பாடல் அந்த ரகத்தை சேராதா? //
நந்தா இங்கே ஒரு வேறுபாடு உண்டு. மச்சான் முதலில் பாடுவார். பிறகு மச்சினி பாட்டு கட்டுவார். யாரும் மச்சினியை அப்படிப் பாடியதற்கு வசவு செய்வதில்லை. ஆனால் இங்கே கதையே வேறு!கூறுவது: கோ.இராகவன் | Tuesday, 06 March 2007
-
நல்லதொரு பதிவு. உங்களின் புதியதொரு பரிமாணத்தை காட்டியது..கருத்துக்களும் நன்று.....கொஞ்சம்போல புரியல...இருந்தாலும் பரவால்ல..:)
கூறுவது: செந்தழல் ரவி | Tuesday, 06 March 2007
-
சிந்தாநதி,
அருமையான கட்டுரை எழுத்தில் இலக்கியம், தமிழும் மட்டும் ஒளிராமல் .... கருத்தும் கொட்டி கிடக்கிறது.கூறுவது: கோவி.கண்ணன் | Tuesday, 06 March 2007
-
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது "என் தாய் முலைக்காம்பில்" என்று ஒரு கவிதை வரி எழுதப்போக என் தமிழையா என்னைத் திட்டித் தீர்த்து வெளியே அனுப்பி விட்டார். எவ்வளவு விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள வில்லை. அந்தரங்க உடல் உறுப்புக்கள் எல்லாவற்றின் தமிழ்ப் பெயர்களையும் கெட்ட வார்த்தைகளாக ஆக்கி கூடவே அவை குறித்த அறியாமையையும் கூச்சத்தையும் குற்ற உணர்வையும் சேர்த்து விதைக்கிறது நம் சமூகம் !!!
கூறுவது: ரவசங்கர் | Tuesday, 06 March 2007
-
என்ன உலகமிது என்று கசப்பாக இருக்கிறது. சல்மா,குட்டி ரேவதி,சுகிர்தராணியை எல்லாம் பெண்களாகவே பார்ப்பதில்லை... இதில் கவிஞர்களாக ஏற்றுக்கொள்வதெப்படி என்றொருவர் எனது பக்கத்தில் வந்து கேட்டிருக்கிறார். ம்... இந்தச் 'சீத்துவத்தில்'பெண்கள் தினம் வேறு வருகிறது. அன்றைக்கு வீட்டில் பெண்டாட்டியை அடிக்க மாட்டார்களோ என்னவோ... சாதி மத மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள்கூட பெண்களைச் சமமாக நினைக்க மாட்டேனென்கிறார்களே என்பதுதான் சமீபத்திய வருத்தம். வருத்தப்படத்தான் முடியும். பெண்கள் கோபப்படக்கூடாது
கூறுவது: தமிழ்நதி | Tuesday, 06 March 2007
-
கலக்கிட்டீங்க.
கூறுவது: சிறில் அலெக்ஸ் | Tuesday, 06 March 2007
-
//அனுபவ அறிவே கிடைக்காமல் பீடங்களில் இருந்து கொண்டு பீற்றிக் கொள்ளுகிறவர்களை
படைப்பாளிகளாக ஏற்பது தமிழின் சாபக்கேடு//
சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க. இது மட்டுமா சாபக்கேடு? இன்னும்
தமிழனுக்குன்னே நிறைய இருக்கு(-:கூறுவது: Tulsi Gopal | Tuesday, 06 March 2007
-
I do not know what to say except our society is still conservative and does not want to see/hear/read women who write. But there are a few exceptions. Lets celeberate women's writing.
Regards,
Vithiyaகூறுவது: Vithiya | Tuesday, 03 July 2007
-
கவிதைகள் நீண்ட காலத்துக்கு நிலைப்பவை. பெருங்கவிகள் அருவருக்கத்தக்க வார்த்தைகளை வைத்து கவியாளும்போது இவர்களும் எழுதுவதால் என்ன குறைந்து விடப்போகிறது என்பது சரியான வாதமாகி விடாது.
வக்..ளி, தா..ளி போன்ற வார்த்தைகள் உரிய அர்த்தங்களில் உபயோகிக்கப் படவில்லை கோபமில்லாமல் சொல்லப்படும்போது அல்லது விளையாட்டாய் உபயோகிக்கும்போது மட்டும். கோபத்தில் சொல்லப்படும்போது அதன் உரிய பொருள் குறைவில்லாமல் ஒலிக்கும். வலிக்கும்.
எது கெட்ட வார்த்தை என அவரவர் மனதுக்குத் தெரியும். அதை தூக்கி எறிந்து விட்டு நல்ல வார்த்தைகளையே பொருக்கிப் போடலாமே. யார் கேட்பார்களோ அவர்களிடம் அவ்வாறு மட்டுமே போடச் சொல்லி போதிக்கலாமே. நிர்ப்பந்திக்கலாமே. தவறேயில்லை.
பெருங்கவிகளையும் சிறு கவிகளோடு சேர்ந்து திருந்தச் செய்வதே நல்லது. கனியிருப்பக் காயைக் கவர்வானேன்.கூறுவது: சுல்தான் | Tuesday, 03 July 2007
-
வீர்யமிக்கதாய் இருந்தது கட்டுரை. நன்றி.
மிக்க அன்புடன்
செல்வேந்திரன்கூறுவது: செல்வேந்திரன் | Tuesday, 03 July 2007
-
எனது மாறுபட்ட சிந்தனையை இங்கே பதிந்துள்ளேன். நன்றி!
http://osaichella.blogspot.com/2009/03/blog-post_504.htmlகூறுவது: ஓசை செல்லா | Wednesday, 11 March 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



