❒ பின்னணியில் படம் போடுதல் | H | ❒ நூல்கள் நாட்டுடமை

Sunday, 11 February 2007

❒ இமெயில் "ஆ"பத்து

இளிச்சவாயர்கள் அனுப்பிய ஈ-மெயில்கள்! - ராமன் ராஜா

(நெட்டில் சுட்டதடா-தினமணிக் கதிர் தொடரில் இருந்து மறுபடி சுட்டது)

இப்போதெல்லாம் எல்.கே.ஜி., பிள்ளைகளுக்கு அணில், ஆடு, இலை, ஈ - மெயில் என்றுதான் சொல்லித் தருகிறார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மின் அஞ்சல் எனப்படும் ஈ -மெயில் நம் தினசரி வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. ஒரு தபால் கார்டைவிட மலிவான செலவில், ஒரு வதந்தியைவிட வேகமாகச் செய்தி அனுப்ப வேண்டுமென்றால் மின் அஞ்சல் போல் கை கொடுப்பது வேறில்லை. இருந்தும் இந்த மின்னல் குதிரையைச் சரியாக ஓட்டத் தெரியாவிட்டால் நம்மைக் கீழே தள்ளிக் குழி பறித்துவிடும் சக்தி அதற்கு உண்டு. ஒரு நாலு வரி மின்னஞ்சலின் நேரடி விளைவினால் வேலையை இழந்தவர்கள், பணத்தைப் பறி கொடுத்தவர்கள், ஜெயிலுக்குச் சென்றவர்கள், திருமணம் நின்று போனவர்கள் என்று பலரின் பரிதாபக் கதைகள் இருக்கின்றன.

ஈ-மெயிலின் மிகப்பெரிய பிரச்சினை, அதை அனுப்புவது அநியாயத்துக்குச் சுலபமாக இருப்பதுதான். ஏனென்றால் "அனுப்புக' என்ற பட்டனை ஒரு தடவை அமுக்கிவிட்டால் போச்சு! எமன் வீடு போன உயிர் மாதிரி சென்றது, சென்றதுதான். கதறி அழைத்தாலும் திரும்ப வராது. மின் அஞ்சல் மென்பொருள்கள் பலவற்றில் , ஆட்டோ கம்ப்ளீட் என்று ஒரு வசதி இருக்கிறது. நம் நண்பர்களையெல்லாம் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு, நாம் பெயரை டைப் அடிக்க ஆரம்பித்தவுடன் தானாகவே முகவரியைப் பூர்த்தி செய்து கொள்ளும். என்னைப் போல அட்ரûஸ ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத அப்பாவிகளுக்காகவே ஏற்பட்ட வசதி இது. ஆனால் இதில் ஒரு சிக்கல்: எங்கள் ஆபிசில் மட்டும் பதினைந்து குமார்கள், இருபது சீனிவாசன்கள் இருக்கிறார்கள். அடிக்கடி தப்பான சீனிவாசனுக்கு மெயிலை அனுப்பி வைத்துவிட்டுப் பிறகு சரியான சீனிவாசனைக் கூப்பிட்டு, ""ஏன்டா இன்னும் பதில் போடவில்லை?'' என்று கடிந்து கொள்வது என் தர்ம சங்கடம். நானாவது பரவாயில்லை. சில அமெரிக்க வக்கீல்கள் மின்னஞ்சலால் பட்ட கஷ்டங்களை விலா நோக வர்ணிக்கிறார்கள். தன் கட்சிக்காரருக்கு அனுப்ப வேண்டிய பரம ரகசியங்கள் அடங்கிய அஞ்சலை தவறுதலாக எதிர்க்கட்சி வக்கீலுக்கு அனுப்பிவிட்டு (இருவர் பெயரும் ஜான்சன்!) அசடு வழிந்து, கேûஸயும் தோற்றுவிட்டு நின்றிருக்கிறார்கள்.

சில சமயம் முன்பின் தெரியாத யார் யாரோவிடமிருந்தெல்லாம் மெயில் வரும். சமுதாய நெட்வொர்கிங் என்று குழுமம் ஏற்படுத்தி, என்னைத் தங்களுடைய ஆருயிர் நண்பனாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிவிப்பார்கள். நமக்குத் தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாதவர்களிடமிருந்து மெயில் வந்தால் அவசரப்பட்டுப் பதில் போடக் கூடாது என்ற பாடத்தைச் சற்றே தாமதமாகத்தான் கற்றுக் கொண்டேன். அதற்குள் என் அஞ்சல் பெட்டி முழுவதும் சுலப தவணைக் கடன்கள், உடலின் சில குறிப்பிட்ட பாகங்களைப் பெரிதாக்கும் கருவிகள், மேற்கத்திய சிட்டுக் குருவி லேகியம் என்று விளம்பர வெள்ளம் நிரம்பி வழிந்து விட்டது. இம்மாதிரி அழையாத விருந்தாளிகளாக வரும் அஞ்சல்களுக்கு ஸ்பாம் (நல்ஹம்)என்று பெயர். தினம் காலையில் இந்த உதவாக்கரை ஈ-மெயில்களைப் பேன் பொறுக்குவது மாதிரி சொடுக்கிச் சொடுக்கிக் குப்பைத் தொட்டியில் போடுவதற்கே ஒரு மணி நேரம் செலவாகிறது.

அஞ்சல்பெட்டியின் தலைப்பில் இரண்டு பட்டன்கள் இருக்கும். "பதில் எழுது',"அனைவருக்கும் பதில் எழுது' என்று. அவசரத்தில் இரண்டாவதை அமுக்கிவிட்டால் நீங்கள் எழுதும் பதில், லிஸ்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தேவையில்லாமல் ஒலிபரப்பாகிவிடும். இது போலத்தான் ஒரு முறை எங்கள் ஊர் பள்ளித் தலைமையாசிரியர் கிள்ளிவளவன், பிள்ளையார்கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிதி உதவி கேட்டு நிறையப் பேருக்கு மெயில் அனுப்பியிருந்தார். வளவனாரிடம் அப்போது எனக்கு ஒரு சொந்தக் காரியம் ஆக வேண்டியிருந்தது. எனவே தேனும் பாலும் கல்கண்டும் கலந்து உடனே பதில் எழுதினேன்: "உங்களுக்கு இல்லாமலா சார்...புண்ணிய காரியமாச்சே, கட்டாயம் அனுப்புகிறேன்' என்று. ஆனால் கைதவறி, அனைவருக்கும் பதிலெழுதும் பட்டனை அமுக்கிவிட்டேன். என்னுடைய மடத்தனத்தை உணர்ந்து நாக்கைக் கடிக்கும் நேரத்துக்குள் அது இந்தியாவில் பாதிப் பேருக்குப் போய்ச் சேர்ந்து , அவர்கள் அனைவரும் என்னை சடையப்ப வள்ளலின் எள்ளுப் பேரன் என்று நினைத்துவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அறிமுகமில்லாத பல அன்பர்களிடமிருந்து மன்னார்குடி கருடசேவை, அய்யம்பேட்டை உறியடித் திருவிழா, திருப்பதி இரட்டைக் குடை உற்சவம் போன்ற விழாக்களுக்கு நிதி கேட்டு நித்த நித்தம் மடல் வருகிறது. "அய்யோ நான் பரம்பரை நாத்திகன், அய்யா' என்று கதறினாலும் ஒருவரும் விடுவதில்லை.

ஒரு சிட் ஃபண்டு கம்பெனியில் வேலை செய்த சிங்காரவேல், தன் சொற்ப சம்பளத்தை நிறைவாக்க மாலை நேரத்தில் சைடு பிஸினஸ் ஏதாவது செய்ய முடிவு செய்தான்; பியர்லெஸ் ஏஜென்ஸி எடுத்தான். "இந்த மாதிரி ஏஜென்ஸி எடுத்திருக்கிறேன், விரும்புவர்கள் முதலீடு செய்யலாம்' என்று தன் நண்பர்கள் வட்டாரத்துக்கு மொத்தமாக மின்னஞ்சல் அனுப்பினான். அந்தோ ! அந்த அஞ்சல் முகவரி லிஸ்டில் அவனுடைய முதலாளி பெயரும் இருந்ததை மறந்துவிட்டான். மறுநாள் மேலிடத்தால் கூப்பிட்டனுப்பப்பட்டான். உள்கட்சித் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டான். சீட்டுக் கிழிக்கப்பட்டான்.

ஒரு லண்டன் இளைஞன், ஒரு லண்டன் இளைஞியை தற்செயலாக சந்திக்கிறான்; அவளுடன் உல்லாசமாக இருக்கிறான். பிறகு அந்த அனுபவத்தைத் தன் அலுவலக சகாக்கள் குழுவுக்கு மின் மடலாகத் தீட்டுகிறான். அனுப்பின அட்ரஸ்களில் ஒரு கோபமுள்ள பெண்மணியும் இருக்கிறார். பெண் விடுதலைப் போராளியான அவர், சீறி எழுந்துவிட்டார். அந்த அஞ்சலை ஒரு காட்டமான முன்னுரையுடன் தன்னுடைய சக போராளிகளுக்கு அனுப்ப, அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்ப, சங்கிலித் தொடர்போல் அந்தக் கடிதம் உலகம் முழுவதும் பயணித்து லட்சக்கணக்கான பிரதிகள் எடுக்கப்பட்டு சந்தி சிரித்துவிட்டது. அலுவலக மெயிலைத் தப்புத் தண்டாவாக உபயோகித்ததற்காக இளைஞனுக்கு வேலையும் போய்விட்டது.

திருமதி சாராவின் பெண்ணுக்குக் கல்யாணம். சம்பந்தி அம்மாளிடமிருந்து ""கல்யாணப் பத்திரிகை அடித்தாச்சா, ஏன் லேட்டாகிறது?'' என்று கேட்டு மின்னஞ்சல் வந்தது. அதைத் தன் பெண்ணுக்கு அனுப்பி, ""என்ன இது, உன் வருங்கால மாமியார் சரியான சண்டைக்காரியாக இருப்பாள் போலிருக்கிறதே, இப் பதிலிருந்தே அதிகார தோரணை தூள் பறக்கிறது?'' என்று கசப்புடன் எழுதினார் சாரா. துரதிர்ஷ்டவசமாக, ஃபார்வர்ட் என்பதற்குப் பதில் ரிப்ளை என்ற பட்டனை அழுத்திவிட்டார். மெயில் நேராகச் சண்டைக்காரி கைக்குப் போய், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் கல்யாணமே நின்று போய்விட்டது.

உங்களுக்கு ஆன் லைன் லாட்டரியில் பத்து லட்ச ரூபாய் விழுந்திருப்பதாகவோ, அல்லது மெக்ஸிகோவில் யாரோ கோடீசுவரர் உங்கள் பேருக்கு எல்லாச் சொத்தையும் உயில் எழுதிவிட்டு மண்டையைப் போட்டிருப்பதாகவோ மெயில் வந்தால் உடனே பத்துவிரலாலும் டெலீட் பட்டனை அமுக்குங்கள். விளையாட்டாகக் கூட அதற்குப் பதில் போட வேண்டாம். இவையெல்லாம் கடத்தல், மிரட்டல், அடித்தல், பிடுங்கல் கும்பல்களால் போடப்படும் எலெக்ட்ரானிக் தூண்டில்கள்.

ஒரு மின் அஞ்சலின் ஆயுட்காலம் எவ்வளவு? அதிக பட்சம் இரண்டொரு நாள் இருக்குமா? ஆனால் சில சமயம் மின் மெயில்கள் சாகா வரம் பெற்று , அனுப்பியவரைக் கால காலத்துக்கும் காய்ச்சி எடுக்கும். அமெரிக்காவில் பல மாநிலங்களில் சட்டமே இருக்கிறது. மெயில் கம்பெனிகள் எல்லா மின் அஞ்சல்களையும் பத்திரமாகச் சேமித்து வைத்துக் கொண்டு, கோர்ட்டில் வழக்கு வாய்தா வந்தால் சாட்சியாக சமர்ப்பிக்க வேண்டும். என்ரான் கம்பெனியின் மேலதிகாரிகள் தங்கள் தில்லு முல்லுகள் பற்றி மின்னஞ்சல் எழுதிவிட்டுத்தான் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணினார்கள். அவ்வளவு பெரிய மைக்ரோசாப்ட் கம்பெனியையே, பிசினஸ் குற்றத்திற்கு சாட்சியான மெயில்களை அழித்துவிட்டார்கள் என்று அரசாங்க வக்கீல்கள் உரித்து உப்புக் கண்டம் போட்டுவிட்டார்கள்.

சமீபத்தில் லண்டன் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். அதிகமாக மின் அஞ்சல் அல்லது செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்புவர்களுக்கு நாளாவட்டத்தில் மூளை மழுங்கிப் போய், அவர்களுடைய ஐ.க்யூ பத்து புள்ளி வரை இறங்கிவிடுகிறதாம். எடுத்த வேலையைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யாமல் நடுநடுவே மெயில், குயில் என்று கவனம் சிதறிக் கொண்டே இருப்பதால் வருகிற விளைவு இது. பெரிய நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த வகை இடையூறுகளால் வருடத்திற்குப் பல்லாயிரம் பவுண்டு உற்பத்தித் திறன் குறைந்துவிட்டதாம்.

இந்தச் செய்தியைப் படித்தவுடன் கவலையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்லி, இனி ஈ-மெயில் அனுப்புவதைக் குறைத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். இருங்கள்; அனைவரும் உடனே இந்தத் தகவலை மின் அஞ்சலில் அனுப்பிவிட்டு வருகிறேன்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

15:25 Posted in இணையம் | Permalink | Comments (7) | Email this | Tags: email, தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. சில மின் அஞ்சல் நிரலிகளில் அனுப்பிய கடிதத்தை திருப்பி பெற வசதியுண்டு!!! அனுப்பபட்டவருக்கு அஞ்சல் திருப்பி பெறப்பட்டது என்று அவருக்கு பதில் அனுப்பப்பட்டிருக்கும்!! ஆனால் என்ன அனுப்பப்பட்டது என்று அவரால் வாசிக்கமுடியாது!!!

    கூறுவது: NONO | Sunday, 11 February 2007

  2. NONO வாங்க

    ஆன்லைனில் இருப்பவர் அந்த நொடியிலேயே கூட வாசித்து விட வாய்ப்புண்டு. அப்போது திருப்பி பெறப் பட்டாலும் பிரயோசனமில்லை.

    சரி எந்தெந்த சேவைகளில் திரும்பப் பெறும் வசதி உள்ளது?

    கூறுவது: சிந்தாநதி | Sunday, 11 February 2007

  3. நல்ல தகவல்கள் நகைச்சுவையுடன். :))

    வலைப்பூ எழுதறதுனால என்ன வியாதி வரும்னு அடுத்த பதிவில எழுதுங்க!

    கூறுவது: தம்பி | Sunday, 11 February 2007

  4. தம்பி வாங்க

    முதல் பாராட்டு ராமன்ராஜாவைச் சேரும்.

    //வலைப்பூ எழுதறதுனால என்ன வியாதி வரும்னு அடுத்த பதிவில எழுதுங்க!//

    எழுதிடுவோம்... ;))

    கூறுவது: சிந்தாநதி | Sunday, 11 February 2007

  5. இப்படித்தான் ஒரு கம்பெனியில் பணிபுரியும் ஒருவன் தன்னுடைய கம்பெனியைப் பற்றி ஒரு காமெடி மடல் தயார் செய்து, அதனை தன் நண்பர்களுக்கு அனுப்பி விட்டான். அது ஃபார்வேர்ட் மேல் ஃபார்வேர்ட் ஆகி, கடைசியில் அவன் வேலையை விட்டு வெளியேறும் நிலை....

    கூறுவது: ஜி | Sunday, 11 February 2007

  6. ஜி வாங்க

    கூறுவது: சிந்தாநதி | Sunday, 11 February 2007

  7. //இந்தச் செய்தியைப் படித்தவுடன் கவலையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்லி, இனி ஈ-மெயில் அனுப்புவதைக் குறைத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். இருங்கள்; அனைவரும் உடனே இந்தத் தகவலை மின் அஞ்சலில் அனுப்பிவிட்டு வருகிறேன்.//

    :-))))))))))))))))))))))))))

    கூறுவது: Tulsi Gopal | Sunday, 11 February 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)