Wednesday, 02 July 2008

❒ பாலபாரதியும் பகவத்கீதையும்

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.


Image and video hosting by TinyPic
*
கீதாசாரம் என்று எங்கும் காணப்படும் இந்த புகழ் பெற்ற வாசகம் பகவத்கீதையில் இல்லை என்று பாலபாரதி எழுதியதைப் படித்தவுடன் பகவத் கீதையை எடுத்து தே........டிப்பார்த்தேன். உண்மை தான். எங்குமே அப்படி ஒரு வாசகம் காணப் படவில்லை. எவரோ இது தான் கீதையின் சாரம் என்று இப்படி ஒரு வசனத்தை எழுதி வெளியிட்டிருக்க வேண்டும்.

யார் எழுதிய வாசகம் இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நம்ம ஆன்மீகப் பதிவர்கள் இந்த விஷயம் குறித்து என்ன கருதுகிறார்கள்?

15:00 Posted in விமர்சனம் | Permalink | Comments (4) | Email this

Monday, 30 June 2008

❒ சுகுணா திவாகருக்கு...

ஒரு பதிவும் சில சிந்தனைகளும்...

சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது.

அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?

பத்திரிகைகளும் இணையதளங்களும் வெளியிட்ட படங்கள் எவையும் அவர்கள் தாங்களாக எடுத்து வெளியிட்டவை அல்ல. அவை அனைத்துமே படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவால் வெளியிடப் பட்டவைதான். கவர்ச்சி விருந்து படைக்க விரும்பவில்லை என்றால் சுஜிபாலா ஜாக்கெட் போடாத படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க தேவையில்லை. கதாநாயகியின் கவர்ச்சி படத்தின் விளம்பரத்துக்கு அவசியம் என்பதாலேயே அவர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்.

வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

சினிமா ஒரு போதும் உண்மையான வரலாறாக இருப்பதில்லை என்பதை உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள். திரையரங்கினுள் திரைப்படம் ஓடும்போது அந்தப் படம் சொல்லும் செய்தி சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். திரைக்கு வெளியே புனிதங்களை ஏற்றிப் பார்ப்பது அவசியமற்றது.

04:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (6) | Email this | Tags: அய்யாவழி, சினிமா

Monday, 03 March 2008

❒ ஆட்டு மந்தையில் சில கறுப்பாடுகள்

எழுத்தாளர் சுஜாதா இறப்பையொட்டி தமிழ் வலைப்பதிவுகளில் பல 'பொதுப்புத்தி'யால் கட்டமைக்கப் பட்டிருந்த போதிலும் சில 'நல்லவர்கள்' விமர்சனங்களை வைத்திருந்தார்கள். அவை அவர்களின் உரிமை என்பதாலும் அவ்விமர்சனங்களில் சில உண்மைகள் இருப்பதாலும் அவை பற்றி எந்த மறுப்பும் எனக்கு கிடையாது. இந்த சமயத்தில் தான் இவை எழுதப் பட வேண்டுமா என்ற கேள்வியும் கூட அனாவசியமானது தான். காரணம் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா என வாசகப் பரப்பில் மாறுபட்ட ரசனைகளை உருவாக்கிய ஆளுமைகள் எதிர்பாராத தருணங்களில் சறுக்கியதை அவர்களின் ரசிகர்களே கூட ஜீரணிக்க சிரமப் பட்டார்கள். எனவே பொதுப்புத்திக்கு எதிரான கட்டறுப்பை அவர்கள் பொதுவரங்கில் கவனிக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதில் பெரிய தவறேதும் இருக்க முடியாது.

ஆனாலும் இந்த பொதுப்புத்தி சுஜாதா விஷயத்தில் ஏன் நிகழ்ந்தது என்பது குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. சுஜாதாவின் எழுத்துக்கள் படிக்கப் பட்ட அளவுக்கு ஆர்வமாக ஆரவாரமாக வேறெந்த எழுத்தாளனின் படைப்பும் இந்த தமிழுலகில் படிக்கப் பட்டதில்லை. தமிழ் வாசகனை பல்வேறு தளங்களில் தனித்துவமான நடையில் இழுத்துச் சென்ற அந்த ஆளுமையின் படைப்புலகம் அதிக வாசகப் பரப்பை உழுதுமறித்தது.

சிறுகதைகள் தவிர பிற படைப்புகளில் ஆழமான கருத்துகள் இருந்ததில்லை என்ற விமர்சனங்கள் உண்டு. ஆனால் எல்லா வாசகனும் ஆழமான விஷயங்களை வாசிக்க விரும்புவதில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதே சமயம் கவனப்படாத ஆழமான நல்ல படைப்புகளை அவர் பல்வேறு தளங்களில் அவ்வப்போது அறிமுகம் செய்து வந்தார். அவரது எழுத்து நடையின் வசீகரம் தமிழில் புதுக்கவிதை விளைவித்த அதே தாக்கத்தை உருவாக்கியது. (அதில் விமர்சனங்கள் இருந்தாலும் கூட) அவரைப்போல எழுத விரும்பி எழுத்துலகிற்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள்.

எழுத்தை இன்று கணினி வழி வலைப்பதிவுகளாக வடிக்கும் வலைப்பதிவர்கள் பெரும்பாலானவரும் அவரது வாசகர்களாக இருந்தவர்கள். அதனால் தான் இத்தனைப் பதிவுகள் அவருக்காக எழுந்தன.

அத்தனை பேரையும் அற்பவாதிகள் அது இது என்று பொத்தாம் பொதுவில் விமர்சித்த நண்பர்களும் அவர்களை கண்டபடி விமர்சித்த நண்பர்களும் இது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

*
விமர்சனங்களில் சிலவற்றில் அதீத உணர்ச்சி வசப்படல்கள் இருந்தன. அவை பற்றிய என் விமர்சனங்கள்.

1. சுரதா சுஜாதா ஒப்பீடு.

சுரதா வாழும்போதே அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தவர். மிகச்சிறந்த கவிஞர் என்பதில் எந்த சந்தேகமில்லை. அவருக்கு அஞ்சலிப் பதிவு எழுதிய நண்பர்கள் மிகமிக பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால் அவரது எழுத்து எத்தனை பேரை உருவாக்கியது, பின்பற்ற வைத்தது என்பதில் தான் வேறுபாடு.

2. தமிழ்ச்செல்வன் மறைவை கொண்டாடியவர்கள், கலைஞரின் அஞ்சலிக் கவிதையை எதிர்த்தவர்கள் குறித்த கேள்வி நியாயமானது.

ஆனால் பதிவர்கள் ஏன் அதை விமர்சிக்கவில்லை என்பது அர்த்தமற்றது. கேள்வி கேட்டவரே கூட விமர்சித்தாரா என்பது கேள்விக்குறி.

3. மனுஷ்யபுத்திரனை கேவலமாக விமர்சித்திருக்கிறார் ஒருவர். மனுஷ்ய புத்திரனை விபீஷணன் என்கிறார். (ராவணன் யாரென்று சொல்லவில்லை). அதற்கும் மேலாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

மனுஷ்ய புத்திரன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காரிருளில் இருந்து கைப்பிடித்து அழைத்து வந்தவர்களுக்கு நன்றி பாராட்டுவது குற்றமா என்ன?

அந்தக் கொடுமையை உங்களால் உணரவே முடியாது ஐயா :(

4. சுஜாதாவை புனிதபிம்பமாக்கி விடுவதாக பாய்ந்திருக்கிறார். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அடிப்படையே இதுதான்.

யாரும் புனிதனுமில்லை. யாரும் மிருகமும் இல்லை. எல்லாருமே இரண்டும் செய்த கலவைதான். எந்த சதவீதம் அதிகமாகிறது என்பதில் தான் இருக்கிறது. சிலருக்கு கிராப் ஒரே சீராக இருக்கும் மற்றவருக்கு ஏறி இறங்கும்.

ஒவ்வொருவர் பார்வையை பொறுத்தது சில விஷயங்கள் மாறுபடும்.

11:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: சுஜாதா, மனுஷ்யபுத்திரன்

Thursday, 14 February 2008

❒ காதலர் தினம், மதவெறி + நான் கடவுள்

இன்று காதலர் தினம்.

எப்படி வந்தது என்றே தெரியாமல் பண்பாட்டுத் தளத்தில் சில விமர்சனங்களை எழுப்பியபடி கடந்த சில ஆண்டுகளாக விசுவரூபம் எடுத்து நிற்கும் காதலர் திருவிழா இது. பன்னாட்டு நிறுவனங்களின் சதி என்று ஒரு புறம் கூக்குரல்கள் ஒலித்தாலும் மக்கள் பங்களிப்பு இருந்தால் எந்த நாளையும் திருநாளாக ஆக்க முடியும் என்பதற்கு சான்றாக நிற்கும் நாள்.

காதலர்கள் மட்டுமல்லாமல் கல்யாணமானவர்களும் காதலர் தினத்தை கொண்டாடத் தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது. வழக்கம் போல தொலைக்காட்சி நிறுவனங்கள் இதை இன்னும் பிரபலப் படுத்த, பிரபலங்களின், சினிமாக்காரர்களின் காதல் அனுபவங்களை ஒளிபரப்பி பண்பாட்டுக்? காவலர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கின்றன.

மேல்தட்டு மக்கள் பார்ட்டிகள், பரிசுகள் என்று கொண்டாட, நடுத்தர வர்க்க காதலர்களுக்காக வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள் கடைகளை நிறைக்கின்றன.

வழக்கம் போல உழைக்கும் மக்கள் இன்றும் மற்றுமொரு நாளே என்றுழைக்க, வேலை தேடிக் கொண்டே காதலியைத் தேடிக் கொண்ட இளைய தலைமுறையோ புன்னகைப் பூக்களோடு நிறுத்திக் கொள்ள முடியாமல் காதலியை தாஜா பண்ண ரோஜாப்பூக்களைத் தேடி ஒடிக் கொண்டிருக்கிறது..

கலைஞர் டிவியில் இன்று காலை காதலர் தின சிறப்புப் பேட்டியாக புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதியரை ரமேஷ்பிரபா பேட்டி கண்டார்.

கழிப்பறை வசதிகூட இல்லாத கிராமத்துக் காரரை, நிலையான வேலை இல்லாத ஒருவரை, கறுப்பான இளைஞனை எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று குப்புசாமியின் தந்தையிடமே பிராக்டிகலாக கேட்ட அனிதா, பின்னர் வசதியானவரை மணந்தால் வீட்டுக் குயிலாகத்தான் இருக்க முடியும், குப்புசாமியை மணந்தால் நாட்டுக் குயிலாக ஜோடிக் கிளியாக பாடித் திரியலாம் என்று பாட்டுக்காகவே அவர் காதலை ஏற்றுக் கொண்டதாக சொன்னார்...குப்புசாமியின் காதல் சாகசங்கள் ரசமானவை.

காதலித்து மணந்து இன்றும் காதலர்களைப்போல பாடித் திரியும் அந்த காதல் ஜோடி மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கடந்த காதலுக்கு சிறந்த உதாரணம்.

*

கடந்த வார செய்தி ஒன்று.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.

நாகர்கோயில் கோர்ட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடையார்விளையில் பொதுபாதையில் இடையூறாக இருந்த கோயிலுக்குச் சொந்தமான சுவரை இடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று சுற்றுசுவரை இடிக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கும் ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. (பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் அதிகாரி மீது கார் ஏற்றி கொல்ல முயன்றார்கள்)

இந்த சம்பவம் குறித்து வக்கீல் ரசல்ராஜ், கோயில் நிர்வாகி அர்ஜுன் ஆகியோர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வக்கீல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கண்டித்து நேற்று கோர்ட்டைப் புறக்கணித்து கோர்ட் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சிவதாணுபிள்ளை தலைமை வகித்தார். துணை தலைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் டென்னிசன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், பரமதாஸ், நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் 9-2-2008


*

கீழே இருக்கும் வீடியோ மற்றும் பதிவுகளைப் பாருங்கள்.


வீடியோ : கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி

காரால் அடித்துத் தூக்குவது எப்படி? விளக்கப் படம்!

இதையும் கொஞ்சம் படியுங்கள்

*
வக்கீல்கள் கடவுள்களா? சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?

சக பதிவரும் வழக்கறிஞருமான பிரபு ராஜதுரையின் கருத்தறிய விரும்புகிறேன்.

06:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: Valentine Day, Valentine's Day, Valentines Day, காதலர் தினம்

Wednesday, 30 January 2008

❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்

தமிழச்சி பேரச் சொல்லி பதிவுகளெல்லாம் அதகளப்படுது... அதுக்குள்ள மூக்கை நுழைக்க இப்போதைக்கு நமக்கு எண்ணமில்லாவிட்டாலும் இது கூட பெண்ணியம் சார்ந்த விசயம் என்பதால்...

Image and video hosting by TinyPicசமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஏதோ ஒரு புதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகப் படுத்த இருப்பதாக வதந்தி இருந்து வந்தது. அது போலவே தமிழச்சி தங்கபாண்டியன் என்று ஒருபுதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகம் செய்தார்கள்... இப்போது கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் தமிழச்சியும் கலந்துகொள்கிறார்...

பல விழா மேடைகளில் கலர்புல்லாக காட்சியளிக்கும் இவரை யார் இவர் என்று எல்லோரும் வியப்போடு பார்ப்பது உண்மைதான்.

இவர் திமுகவின் துவக்ககால தலைவர்களில் ஒருவரான தங்கபாண்டியனின் மகள். இவரது கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உட்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்களாம்.

இந்த அரசியல் அறிமுகத்துக்கு முன்பே ஒரு கவிஞராக அறியப் பட்டவர்தான் இந்த தமிழச்சி.

எஞ்சோட்டுப்பெண் என்னும் இவரது முதல் கவிதைநூல் கவிஞர் தமிழச்சியாக இவரை அரங்கேற்றியது.

'எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.


வனப்பேச்சி என்னும் இரண்டாவது நூல் அரசியல் அறிமுகத்துக்குப் பின் வந்திருக்கிறது.

வனப்பேச்சியிலிருந்து....

"சுடு சோறு கொதி கஞ்சி

வேப்பம் பழம்

பொசுக்கியதே இல்லை

ஊர் வெயில்.

குளிரூட்டப்பட்ட

நகரத்து அறைகளில் வசிக்கும்

என் மகள் கேட்கிறாள்"


.............

சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு...


ஆஸ்திரேலியா வாழ் இலங்கைத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். இவரது முதல் தொகுப்பான எஞ்சோட்டுப்பெண் பாரதியார் விருது, சிற்பி இலக்கிய விருது போன்றவற்றைப் பெற்றுள்ளது. கவிஞர் மட்டுமல்லாமல் நடன, நாடகக் கலைஞராக மிளிர்ந்து இயல், இசை, நாடகத் தமிழ்க் கலைஞராக இருக்கும் இவர் சென்னை ராணி மேரிக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

சுமதி என்ற இயற்பெயரை தனக்கான தனி அடையாளத்துக்காக தமிழச்சி என மாற்றிக் கொண்ட தனித்திறம் பெற்ற ஒரு பெண்மணியின் பெயரை தந்தையின் பெயரொட்டு இணைத்து தமிழச்சி தங்கபாண்டியனாக மாற்றியதன் மூலம் கலைஞர் ஒரு பெண்ணின் தனித்துவத்தை இல்லாமலாக்கி இருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அவரது அரசியல் பின்னணியை பெயர் சூட்டித்தானா வெளிப்படுத்த வேண்டும்? இது தமிழச்சியின் தனித்துவ அடையாளத்துக்கு இழைக்கப் பட்ட துரோகமன்றி வேறென்ன?

12:55 Posted in அரசியல் , இலக்கியம் , விமர்சனம் | Permalink | Comments (9) | Email this | Tags: தமிழச்சி, கலைஞர், திமுக, கவிஞர்

Tuesday, 15 January 2008

❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்

இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது.

சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம் எடுத்தவர்களைக் குறை சொல்வதா? அல்லது பொது இடங்களில் அப்படிப் பட்ட உடைகளில் வரும் நடிகைகளைக் குறை சொல்வதா?

முதலில் நடிகைகள் ஏன் அப்படி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

திரைப்படங்களில் நடிகைகள் எந்த அளவுக்கு அங்கங்கள் காட்ட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்யப் படுகிறது. முதலில் கதைக்கு இது அவசியம் என்று வற்புறுத்தப் படுகிறார்கள். பின்னர் படத்தின் வெற்றிக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள். படம் எடுப்பவர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஆண்களே!

படப்பிடிப்புகள் ஏராளமானவர்கள் முன்னிலையில் எடுக்கப் படுகின்றன. எனவே சம்பந்தப் பட்ட நடிகையின் உடல் தரிசனம் அங்கிருக்கும் அனைவருக்கும் கிட்டுகிறது. இப்படிக் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் காட்சிப் படுத்தப் படுகின்றன. அடுத்து இந்தக் காட்சிகள் திரைவழியே மக்களைச் சென்றடைகின்றன. அன்றாடம் தொலைக்காட்சி வழியாக இதே காட்சிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்படி எல்லா விததிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டிய நிலையில் நடிகையாகிய பெண் தனது கூச்சங்கள் அனைத்தையும் உதறிப் போடுகிறாள். ஒரு நடிகையாக, தனது உடலழகைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற மனநிலை அவளுக்கு ஏற்படுகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பொது இடங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்க அவள் உடலழகைக் காட்டும் உடைகளில் தோன்றுகிறாள்.

இதில் நடிகைகளைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? கலாச்சாரக் காவலர்கள் செய்ய வேண்டியது, திரைப்படங்களில் பெண்ணைச் சித்தரிக்க வேண்டிய முறை பற்றிய பொறுப்புணர்வை முதலில் இயக்குநர்களுக்குக் கற்பியுங்கள். அதை விடுத்து சுயவிளம்பரத்துக்காக நடிகைகள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.

இந்த விழாவுக்கு காரணமான சிவாஜி என்ற திரைப்படத்தில் இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை. எல்லா நடிகைகளின் நிலையும் இதுதான்.

பொதுவாக இம்மாதிரி வழக்குப் போடுவது யாரென்று கவனித்தால் மதவாத உணர்வுள்ள ஆண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க மனோபாவத்தின் நேரடி வெளிப்பாடு இது. உண்மையான அக்கறை இருந்தால் நடிகைகளை அப்படி நடிக்க வைக்கும் இயக்குநர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களைத் திருத்துங்கள்.

*
நடிகை குஷ்பு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் முன் கால்மேல் கால்போட்டது, சானியா மிர்சா தேசியக் கொடிக்கு முன் காலை நீட்டியது என்பவையும் இதே போன்று வழக்குகளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த வழக்குகளைத் தொடர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலிருந்து நோக்கம் தேசபக்தியோ கடவுள் பக்தியோ அல்லாமல் மதவெறி சார்ந்த ஆணாதிக்கம் என்பதையும் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு அறிவுறுத்தல் என்பதற்கு மேல் எந்த அவசியமும் அற்ற நிகழ்வுகளை சுயஅரிப்புகளுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

*

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வெளியீடு இங்கே...

11:35 Posted in சினிமா , விமர்சனம் , விவாதம் | Permalink | Comments (13) | Email this | Tags: shivaji, shreya, sania mirza, kushbu, சிவாஜி, ஸ்ரேயா, குஷ்பு

Wednesday, 09 January 2008

❒ புத்தகக் கண்காட்சியும் பப்பாசியும்

இப்போது சென்னையில் 31வது புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இதை நடத்துவது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கூட்டமைப்பான BAPASI. இந்த பப்பாசிக்கு ஒரு இணைய தளமும் இருக்கிறது. கடந்த ஆண்டு 30வது கண்காட்சியின்போது இந்த இணைய தளத்தில் கண்காட்சி தொடர்பான அனைத்து விவரங்கள், பங்கேற்கும் பதிப்பகங்களின் பட்டியல், கண்காட்சி அரங்க வரைபடம், ஸ்டால்கள் விவரம் என அனைத்து விவரங்களும் மிக நேர்த்தியாக தரப் பட்டிருந்தன.

இந்த ஆண்டு இந்த தளத்தில் பழைய விவரங்களே காணப்படுகின்றன. ஏன் புதுப்பிக்கப் படவில்லை என்று தெரியவில்லை. இத்தனை பெரிய அளவிலான கண்காட்சியை நடத்தும் பெரிய பதிப்பாளர்களால் ஒரு இணைய தளத்தை நிர்வகிக்க ஏற்பாடு செய்திருக்க இயலாதா?

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு திருவிழா போல இன்று இளைஞர்களை பெருமளவு ஈர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தகவல் தொடர்புக்கு இணையம் என்பது முக்கிய ஊடகம் என்பதை அவர்கள் எப்படி மறந்து போனார்கள்? பத்திரிகையைப் புரட்டி நிகழ்ச்சி நிரலை அறிவதை விட இன்று இணையத்தில் பார்ப்பதுதான் எளிதானது.

பல வலைப்பதிவுகள் புத்தகக் கண்காட்சி குறித்த விவரங்களை தொடர்ச்சியாக தெரிவிப்பதும் இதற்கெனவே சில வலைப்பதிவுகள் தொடங்கப் பட்டிருப்பதும் இணையத்தில் இதன் ஆர்வம் மற்றும் தேவைக்கான சான்றுகள்.

இன்று இந்த நிமிடம் இந்தப் பதிவை எழுதும்போது பபாசி தளமுகப்பில் இருக்கும் பேனர் இது.

Image and video hosting by TinyPic

06:30 Posted in விமர்சனம் | Permalink | Comments (1) | Email this | Tags: புத்தகக் கண்காட்சி, bookfair, BAPASI

Monday, 03 December 2007

★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?

தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பதிவுகள் விவரப் படி 2404 பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்மணத்தில் இணைக்கப் படாத பதிவுகளும் உண்டு...ஆகவே கிட்டத் தட்ட 3000 தமிழ்ப்பதிவுகள் எனக் கொள்ளலாம்... அவற்றில் தொடர்ந்து இயங்கும் பதிவுகள் மூலம் சராசரியாக தினமும் எழுதப் படும் இடுகைகள் சுமார் 200 இருக்கலாம்.( தமிழ்மணத்தில் 146)

தமிழ் வெகுசனப் பத்திரிகை உலகமும் தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கவும் அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினமணி போன்ற இதழ்களில் எல்லாம் தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.

வலைப்பதிவுலகின் "எல்லையில்லா இணையம்" என்ற கருத்தாக்கத்தின் விளைவாக பலரும் தொடத் தயங்கும் பல கருத்துக்களை வலைப்பதிவுகளில் காண முடிகிறது. இவற்றில் நச்சுக் கருத்துக்களும் இருக்கலாம்...அது சமூக ரீதியான காரணங்களால் நிகழ்வது...ஆனால் இணையத்தின் வீச்சு இன்று அவசியமானது.

தமிழ்வலைப்பதிவுகளை எடுத்துக் கொண்டால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் தமிழார்வத்துக்கு வடிகாலாகவே தமிழ்ப்பதிவுகளை எழுதத் தொடங்கி இருந்தாலும் இன்று பரவலாக தமிழ்நாட்டிலும் தமிழ் வலைப்பதிவர்கள் கணிசமாக வலைப்பதிகிறார்கள்.

இது தவிர இங்கே காண முடிந்த ஒரு சுவாரசியமான விஷயம்... செல்பேசிகளில் எஸ்எம்எஸ் பழக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் மிக அதிகமாக இருக்கிறது. செல்பேசி சிரிப்புகள், கடிகள், பொன்மொழிகள் என்று தனி அகராதியே போடுமளவுக்கு மக்கள் பரப்புரை செய்கிறார்கள்...இவர்கள் தமிங்கில மொழியை அனாயாசமாக பயன்படுத்துகிறார்கள்...இது தமிழ்வலைப்பதிவில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் ரோமன் தட்டச்சு முறைக்கு ஒத்ததாக இருப்பதால் அதே தமிங்கில தட்டச்சில் தமிழையே வெளியீடாக கிடைப்பதில் தமிழ் வலைப்பதிவுலகிற்கும் இவர்களில் பலர் இன்று எளிதாக காலடி எடுத்து வைக்க காரணமாக இருக்கிறது...

ஆரம்பத்தில் இவர்கள் பெரிதாக படைப்பாக்கம் என்று செய்யாவிட்டாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...நேரடி உரையாடல் முறையில் இவர்களின் வலைப்பதிவுகள் ரசிக்கவும் வைக்கின்றன. ஆனால் இவர்களில் பலர் நல்ல படைப்பாக்க முயற்சிகளையும் வலைப்பதிவுகளில் செய்ய முனைகிறார்கள்....சுவையான இளமைக் கவிஞர்கள் பலர் இவர்களில் இருந்து உருவாகி வருகிறார்கள்...

குரல் பதிவுகளான ஆடியோ பதிவுகளை சில ஈழத் தமிழ்ப்பதிவர்கள் முன்னெடுத்த போதிலும் இப்போது சற்று தொய்வு தென்படுகிறது....திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவுகள் மட்டுமே இப்போது அதிகமாக வருகின்றன.

தாங்கள் ரசித்த வீடியோ, புகைப்படங்களையும் பலர் பதிவாக இடுகின்றனர். எனினும் பதிவுக்காகவே உருவான வீடியோ பதிவுகள் இதுவரை காணக்கிடைக்கவில்லை... வெப் கேமரா மூலம் பதிவு செய்யப் பட்ட வீடியோ பதிவு ஒன்றை (ஆங்கில வலைப்பதிவு) ஒன்றை காணமுடிந்தது..அது போன்ற முயற்சிகள் தமிழிலும் செய்யப் படலாம்...

நேற்று ஒரு புதிய முயற்சியாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு ஒன்று ஒளிபரப்ப ஆரம்பமாகி இருப்பதை காணமுடிந்தது...அதுவும் தமிழில் புதிய சாத்தியங்களுக்கான ஒரு ஆரம்பம் எனக் கொள்ளலாம்...வலைப்பதிவுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் வருவதன்மூலம் இணையத்தின் பல்லூடகத் தன்மையை வலைப்பதிவுகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும்.

02:35 Posted in star , வலைப்பதிவு , விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: blogs, tamil blogs, தமிழ்ப்பதிவுகள்

Saturday, 01 December 2007

★ வழக்கறிஞர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?

சமீப காலங்களில் பலமுறை வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்றப் புறக்கணிப்பு, மறியல் என்று செய்திகள் வருகின்றன.

இந்திய விடுதலைப்போராட்டம் இதுபோன்ற வடிவங்களில் நடத்தப் பட்டு வெற்றிகண்டது வரலாறு. உலக அளவில் தொழிலாளர் அமைப்புகள் தொழிற்சங்கம் என்ற அங்கீகாரத்தின் மூலம் போராட்டங்களில் ஈடுபடுவதும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அன்று அன்னிய ஆட்சியை எதிர்த்து சட்டமறுப்புப் போராட்டங்களில் வழக்கறிஞர்களும் ஈடுபட்டார்கள்.

ஆனால் இன்றைய தொழிலாளர் போராட்டங்கள் கூட முறையாக நோட்டீஸ் கொடுத்து அனுமதி பெற்றே நடத்தப் படுகின்றன.

ஆனால் ஒரு வழக்கறிஞர் தனிநபரால் தாக்கப் பட்டாலும் சரி, போலீஸாரால் கைது செய்யப் பட்டாலும் சரி, நீதிபதிகளுடன் மோதிக் கொண்டாலும் சரி இன்று வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு அந்த வழக்கறிஞருக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

இதே பிரச்சினைகள் வேறு நபருக்கு ஏற்பட்டு வழக்கறிஞரிடம் வரும்போது சட்டப்படி வழக்குப் போட்டு நீதி கிடைக்கச் செய்கிறோம் என்று சவடால் விடும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு என்று வரும்போது ஏன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்?

சட்டம் அனைவருக்கும் பொது.ஆனால் வழக்கறிஞர்களுக்குத்தான் அதைப் பயன்படுத்தும் முறை தெரியும். அப்படிப் பட்ட வழக்கறிஞர்கள் ஒருவர் தன்னை தாக்கி விட்டால் அதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க ஏன் முயல்வதில்லை?

தான் போலீசில் புகார் கொடுத்தால் அவர்கள் எந்த விசாரணையும் இன்றி தான் சொல்லும் செக்ஷனில் குற்றவாளிமீது வழக்குப் பதிவு செய்யப் பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். இவரது எதிர்பார்ப்பு தவறு என்று தோன்றி காவல்துறை அதிகாரி சற்றுக் குறைவான செக்ஷனில் வழக்குப் பதிவு செய்தால் உடனே காவல்துறைக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்... காவல்துறை அதிகாரி செய்தது தவறு என்றால் அதையும் சட்டப்படி நீதிமன்ற உத்தரவு பெற்று சரி செய்ய முடியும். அது அந்த வழக்கறிஞருக்கும் அவர் சட்டம் முறையாகப் படித்தவராக இருந்தால் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவர் முறைதவறி அந்த எதிர்பார்ப்பை திணிக்க முயலும்போது அது நீதிமன்றத்தில் எடுபடாது என்று அவருக்குத் தெரியும்...அதனால் போராட்டத்தின் மூலம் நிர்ப்பந்தம் செய்து தனக்குச் சாதகமாக நடந்து கொள்ள வைக்க முயல்கிறார்.

வக்கீல் குற்றம் செய்தால் கூட கைது செய்யப் படக்கூடாது என்று நினைக்கிறார்கள். சட்டம் தங்களுக்கேற்ப வளைந்து கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களே நினைத்தால் சட்டத்துக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

அன்னிய சட்டத்தை மறுத்தது அன்று நியாயம். ஆனால் எந்த சட்டத்தின் காவலர்களாக தங்களை நினைத்துக் கொண்டு பணி செய்கிறார்களோ அந்த சட்டத்தையே மதிக்காமல் இன்றைய குடியரசு ஆட்சிக் காலத்தில் சட்டத்தை மிகவும் மதித்து மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள் தெருவில் இறங்கிப் போராடுவது மிகவும் மூடத்தனம்.

இதற்கெல்லாம் காரணமாக இருப்பது அரசியல்கட்சிகளில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு தான்... கட்சிகளின் அரசியல் அணியில் பொறுப்பு வகிக்கும் இவர்கள் அரசியல்வாதிகளின் எல்லா குணங்களையும் பழகிக் கொள்கிறார்கள்... இதனால் தான் அரசியல்வாதிகளைப் போலவே சட்டத்தை மதிக்காத போக்கு வழக்கறிஞர்களிடமும் வளர்ந்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் சிபாரிசுகளின் மூலம் இவர்களே நீதிபதிகளாகவும் வந்து விடுவதால்தான் இன்று நீதித் துறையும் மிகவும் மலினப் பட்டதாக மாறி வருகிறது.

மாணவப்பருவத்திலேயே அரசியல் ருசி காட்டப் பட்டு அல்லது அவர்களின் அடிமைகளாக்கப் பட்டு, இன்று மாணவர்களும் அரசியல்வாதிகளைப் போல போராட்டங்களிலும் அராஜகங்களிலும் ஈடுபடுகின்றனர். அதிலும் மேற்கூறிய சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று அசல் ரவுடிகளாக மாறி காவல்துறையுடன் மோதிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது... மாணவர்களாக இருக்கும்போதே இத்தனை ஆவேசமும் வெறித்தனமும் இருந்தால் அவர்களால் எப்படி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக, சட்டத்தின் காவலர்களான வழக்கறிஞர்களாக மிளிர முடியும்?

வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டங்களால் தங்களை நம்பி வழக்குகளை ஒப்படைத்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை வஞ்சிக்கின்றனர். இன்று தங்கள் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று நம்பி தங்கள் வயிற்றுப் பாட்டுக்கான தொழிலைக்கூட விட்டுவிட்டு வரும் அப்பாவி பொதுசனம் தங்கள் வக்கீல் சுயநலத்துக்காக வழக்கை விட்டுவிட்டு போராட்டத்துக்கு போயிருக்கிறார் என்று அறியவரும்போது என்ன நினைப்பார்...அந்தப் பொதுசனம் வழக்கறிஞர்களைப் புறக்கணிக்க தீர்மானித்தால் என்ன ஆகும்?

எனவே வழக்கறிஞர்கள் முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்....அப்போது தான் பொதுமக்களும் சட்டத்தில் நம்பிக்கை வைப்பார்கள்...வழக்கறிஞர்கள் மற்றவர்களுக்கு எதைக் கூற விரும்புகிறீர்களோ, அதை அவர்களும் கடைப்படிக்க முயலவேண்டும்...

17:30 Posted in star , வாழ்வியல் , விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: law, சட்டம், வழக்கறிஞர்கள்

Thursday, 29 November 2007

★ காசி - வலையுரையாடல் தொடர்ச்சி...

தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (கீழே பார்க்கவும்)

எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.

இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்க என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:

வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.

வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.

வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.

மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.

தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.


'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/
(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)




முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...

வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்த நீங்கள் திடீரென நாடு திரும்ப எண்ணியது எதனால்?

அமெரிக்காவில் நான்கு வருடங்கள் வாழ்ந்தோம். சுயதொழில் முயற்சிக்கு மூலதன முதலீடாக ஒரு தொகையைச் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்புவதாகத் தான் போகும்போதே திட்டம். அதனால்தான் என்னுடன் வந்த நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் பச்சை அட்டைக்கும், கனடாவில் நிரந்தரவாசி உரிமைக்கும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், ஒன்றுக்கும் முயலாமல் இருந்துவிட்டேன். இந்தியா திரும்பி 6 மாதத்தில் வேலையை விட்டுவிட்டு, திட்டப்படியே தொழில்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

இப்போது நீங்கள் ஒரு தொழில் அதிபர் என்று சொல்லலாம். ஒரு பொறியாளர் தொழிலதிபராக மாறிய போது என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது?

இன்னும் தொழில்முனைவோன்தான், தொழில் அதிபரெல்லாம் இல்லை:) (அதிபரென்ற பேரைக் கேட்டால் போதையாகத் தான் இருக்கிறது ;-)) முதலில் திட்டமிட்டதற்கு மேல் முதலீடு தேவைப்பட்டது. பல பங்குதாரர்கள் இருந்தால் முதலீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்கலாம் என்பதாலும், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக' இல்லாமல் ஒரு கடிவாளம் (checks and balances என்கிறார்களே அதுபோல) இருப்பது எல்லாவற்றுக்கும் நல்லது என்பதாலும் ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களை பங்குதாரர்களாகக் கொண்டேன். இருப்பினும் பொருளைச் சந்தைக்குக் கொண்டுவர, முன்பு திட்டமிட்டதை விட அதிக காலம் ஆகிவிட்டதால் செலவு அதிகரித்து மேலும் முதலீடு செய்யவேண்டியதாய்ப் போனது. வரும் டிசம்பரில்தான் எங்கள் கத்தரிக்காய் கடைவீதிக்கு வருகிறது. இனி எல்லாம் சுபமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கான ஆதரவு அரசுமட்டத்தில் எப்படி இருக்கிறது. அரசு அனுமதிகள் பெறுவதில் உங்கள் அனுபவங்களின் அடிப்படையில் இது பற்றி கூறுங்கள்?

எங்கள் தொழில் சிறுதொழிலாக இருப்பதாலும், மாசுக் கட்டுப்பாடு போன்ற சட்டங்களால் பாதிக்கப்படாத ஒன்றானதாலும், கோவையில் முக்குக்கு முன்னூறு தொழில் முனைவோர்கள் இருப்பதாலும் அனுமதிகள் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அதே போல அரசு ஆதரவின் தேவையும் இங்கு எதுவும் இல்லை. எதையும் நாங்களும் முயற்சிக்கவில்லை. மின்சாரம் மட்டும் தடையில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் ஆண்டுமுழுவதும் சகஜம். இதனால் பல மணி நேரங்கள் உழைப்பு வீணாகிறது. இதைச் சீர் செய்தால் அரசுக்கு நன்றி கூறுவோம். சாலைகள் என்ற பெயரில் இருக்கும் தடங்களை மேம்படுத்தி வாகனங்கள் செல்லுமளவுக்கான உண்மையான சாலைகளாக போட்டார்களென்றாலே:P அரசு என்று ஒன்று இங்கு இயங்குவதை ஒப்புக்கொள்ளலாம். (தொலை தொடர்பில் நேர்த்தியின்மை ஒழிந்துவிட்டது. மின்சாரம், சாலை, குடிநீர் போன்றவற்றில் ஒழியும் என்று தோன்றவில்லை.) தொழிலுக்காக வேறு ஒன்றும் அரசு செய்யவேண்டியதில்லை. (முடிந்தால் அரசு அலுவலகங்களில் சேவைகளுக்கு'மேலதிகமாய்' செலவாகும் தொகையை தரப்படுத்தி பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்;-)

சொந்த தொழில் துவங்க எண்ணியதும் அதிலும் ஏற்கனவே இருக்கும் தொழில்களில் புகுந்துவிடாமல் புதிய ஒரு பொருளை உருவாக்கி உங்கள் தனித்தன்மையை நிரூபித்துள்ளீர்கள். இந்த ஐடியா எப்படி வந்தது?

இன்று இருக்கும் தொழில்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தயாரிப்பு, மற்றது சேவை. (தயாரிப்பு சேவை என்றும் ஒன்று உண்டு, Manufacturing Services, அது இப்போது வளர்ந்துவருகிறது) இவற்றுள் தயாரிப்பு தான் எங்கள் அனுபவத்துக்கேற்ற பிரிவு. தனிப்பட்ட அளவில் என் திறன் புத்துருவாக்கம், பொருள் வடிவமைப்பு என்பதால் நாம் புதுமையான ஒரு பொருளைத் தயாரிப்பதன்மூலம் நம் திறனுக்குத் தக்கதான பலன் பெறலாம் என்று எண்ணி புதிய பொருளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக தோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

விருப்பமிருப்பவர்கள் தமிழ்மணம் தளத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்க:
  1. வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்
  2. தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள்
  3. தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி
  4. தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்
  5. தமிழ்மணம் - 365
  6. போலீஸ் வேலை
  7. நினைவூட்டல் (நன்கொடை)
  8. வழங்கி மாற்றம் நிறைவு
  9. விரிவுபடுத்தப்பட்ட தமிழ்மணம் நிர்வாகக் குழு
  10. ஒரு அறிவிப்பு
  11. சில முயற்சிகள் சில அனுபவங்கள் -12


இதையெல்லாம் இணையவெளியில் பதிவு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு உங்களுக்கும் நன்றி.

13:40 Posted in star , இணையம் , வலைப்பதிவு , விமர்சனம் | Permalink | Comments (14) | Email this | Tags: தமிழ்மணம், காசி, வலைப்பதிவு

Wednesday, 28 November 2007

★ ரஜினி, விஜய் மற்றும் பாமக

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக வந்தார் ரஜினி. நடிகர் விஜய் எல்லாப் படங்களிலும் பரட்டைத் தலையுடன் நடித்து வருகிறார். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

எதுவுமே இல்லை. ஆனால் இருவருக்கும் இருந்த பொருத்தம், இருவரின் படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகள் சரளமாக அமைந்திருக்கும். அதுவே அவர்களின் நாயகத் தன்மைக்கான ஸ்டைலாகவும் திரைப்படங்களில் கட்டமைக்கப் பட்டிருக்கும்.

பாபாவில் ரஜினியின் புகைப் பிடிக்கும் போஸ்தான் போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. பாமக ரஜினிக்கு எதிரான தனது போராட்டங்களை இது போன்ற காட்சிகளுக்கு எதிரானதாக காட்டி மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தது.

விளைவு, ரஜினியின் அடுத்த படங்களில் புகைக்கும் காட்சி எதுவும் இல்லை. இப்போது ரஜனியின் அந்தப் பழக்கத்தை மேற்கொள்பவர் நடிகர் விஜய்...

மத்திய சுகாதார அமைச்சர். அன்புமணி இம்முறை விஜய்க்கு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தார். உடனடியாக விஜயும் இனி அம்மாதிரி காட்சிகள் தன்படங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக அறிவித்து விட்டார்.

பாமகவின் கலாச்சாரக் காவலர் அவதாரம் பல நேரங்களில் அத்துமீறிப் போய்விடுவதாக தோன்றியதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் நிச்சயம் அவசியமானவை தான்.

நடிகர்களையே இன்றைய இளைய தலைமுறை தங்கள் ஆதர்ச புருசர்களாக நினைத்து வளர்கின்ற சூழலை நமது பல்லூடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. திரையரங்கில் படம் பார்த்து தீவிர ரசிகர்களாக மாறுபவர்களை விட பலமடங்கு அதிக பாதிப்பை இன்று சின்னத்திரை வழியாக பெரிய திரைக் காட்சிகள் அளித்து வருகின்றன.

நன்றி: பாலபாரதி, மலைநாடான்.
இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் இருக்கும் தொடர்பு ;) புகை!!!!!!

பக்கத்து வீட்டு பிளஸ்டூ மாணவி நோட்டுப் புத்தகம் வாங்கிவர தன் தம்பியை கடைக்கு அனுப்பினாள். சூர்யா படம்போட்டது தான் வேண்டும் என்றாள். தம்பி கடைக்குப் போய் சூர்யா படம் இல்லை என்று விஜய் படம் போட்ட நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்து தந்தான். உடனே தம்பியை விரட்டி மீண்டும்அதைத் திருப்பிக் கொடுத்து வேறு கடையில் சூர்யா படம்போட்ட புத்தகம் வாங்கித் தரும்வரை அவள் விடவில்லை...அதைவிட நோட்டுப் புத்தகம் கைக்கு வந்ததும் அவள் செய்த செயல் என்ன தெரியுமா?.... உயிருக்குயிரான காதலனை முத்தமிடுவது போல அவள் அந்தப் புத்தகத்தில் இருந்த சூர்யா படத்தை முத்தமிட்டாள். பருவ வயதின் ஆர்வக்கோளாறு தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் மேல் இத்தனை கிரேஸ் வர காரணமாக இருந்தவை தொலைக்காட்சி சானல்கள் தான். இத்தனைக்கும் அந்தப் பெண் திரையரங்கில் சினிமா பார்த்ததே இல்லை.

11:40 Posted in விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: புகை,