Saturday, 19 April 2008
❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பாலபாரதி
காலையில் எழுந்து பல்துலக்கி குளித்து அலுவலகம்/பணியிடம். மாலைவீடு திரும்பி மனைவி குழந்தைகளுடன் உல்லாசம், பசிக்கு உணவு, புணர்வு என சராசரி மனிதனின் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டுள்ளது. பசிக்கு உணவு,உணவுக்கு உழைப்பு என பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்க்கை நியதிதான் பொது நியதியாக இங்கே இருக்கிறது.
இந்த நியதியை மீறி வாழ்வைத் துய்க்க வேண்டிய தருணங்களில் சிந்தனையோட்டம் கற்பனை, என மனித வாழ்வில் சுருதிபேதமான நிகழ்வினூடே தான் படைப்பாக்கம் நிகழ்கிறது. சராசரி மனிதர்களில் இருந்து எந்தப் படைப்பாளியுமே சற்று மாறுபட்டவர்களாகத்தான் இருந்தாக முடியும். அட்டவணை வாழ்க்கையில் படைப்பு உருவாக முடியாது.
அதே சமயம் இந்த சுருதிபேதம் சிலருக்கு புதிய சுவரத்தை உருவாக்காமல் அபசுரமாக மாறிப்போவதும் உண்டு. இன்றைக்கு பத்திரிகைகளில் எழுதும் சிலநூறு எழுத்தாளப் படைப்பாளிகளில் இந்தப் அதிபிறழ்வு கொண்டவர்கள் ஒரு சதவீதம் என்றால் பல ஆயிரம்பேர் எழுதும் இணையப் பரப்பிலும் அதே சதவீதப் பிறழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நூற்றுக்கு ஒருவர் என்றால் ஆயிரத்துக்கு பத்துப் பேர் இருக்க வேண்டும். இணையம் என்ற சுதந்திர ஊடகம் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. பத்திரிகை உலகமோ விரும்பாதவர்களை புறக்கணித்து விட முடியும்.
எனவே இணையத்தில் மனப்பிறழ்வுகள் வெள்ளைத் துணியில் மைத்துளிக் கறைபோல வெளிப்படுகின்றன. அதை பொதுக் கருத்தாக கட்டமைக்க முயலும் பத்திரிகை உலக மனநோயாளிகள் தங்களின் மனக்கோளாறுகளை இதன் மறைப்பில் வசதியாக மறைத்து விடவும் இயலுகிறது.
இன்னொரு புறம் போர்னோ போன்ற பல அழுக்குகள் பத்திரிகை உலகிலும் மலிந்து கிடக்கின்றன. இணையமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இணைய எழுத்து அல்லது வலைப்பதிவு என்பது வேறு விதமானது.
ஓரிருவரின் பிழைகளை இணைய எழுத்தின் தன்மையாகவே ஏற்றிக் கூறும் குமுதம் அரசு, இணையத்துக்கு அடிமையானால்......... என்ற கேள்வியை தனது பிறழ்மனவெளிப்பாடாக இணைய எழுத்தாளர்கள் மனநோயாளிகள் என்கிறார்.
இது பற்றி சிறில் அலெக்ஸ் தன் பதிவின் பின்னூட்டத்தில்...
//அரசு யாரையெல்லாம், எந்தவகை எழுத்தையெல்லாம் குறிப்பிடுகிறார் எனச் சொல்ல முடியவில்லை.
முதலில் அவர் அந்தக் கேள்வியையே புரிந்துகொள்ளவில்லை. இண்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் வருமா? என்பது கேள்வி. இண்டர்நெட் மட்டுமல்ல வேறெதற்கும் அடிமையாவதும் மனநோய்தான்.//
தொலைக்காட்சி சீரியல்கள் தொடங்கி பலவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இணையத்தில் எழுதுபவர்களில் பலர்...........என்ற வாசகம் துருத்திக் கொண்டு வந்திருப்பது தான் அந்த அரசுவின் நோக்கம் பற்றி ?
//பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.//
இந்த வரிகளில் பகிரங்கமாகத் தெரிகிறது இவர்களின் வயிற்றெரிச்சல்... எப்படியும் அச்சுப் பத்திரிகைகளின் உள்ளடக்கங்களைவிட பிரம்மாண்டமாக தகவல்கள் இணையப் பரப்பில் வெளிப்படுகின்றன. எனவே புதுசா என்ன செய்வது என்று தெரியாமல் தங்களின் அறியாமையை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள். அச்சுப் பத்திரிகைகள் தங்களின் உள்ளடக்கங்களின் தன்மையை,செறிவை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இணையத்தில் கிடைக்காதவற்றை அவர்களால் தர முடியாத நிலையில் இது போன்ற கும்பி எரிச்சல் சகஜமே ;)
அச்சு ஊடக எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக இணையத்தில் கைக்குட்டை போட்டு இடம்பிடித்து வருவது, இணைய எழுத்தாளர்களின் இணையப் படைப்புகள் அச்சுப் பதிரிகைகளில் (அவர்களின் அனுமதியின்றியே) வெளியாகி வருவது போன்றவை இணையத்தின் குறைபாடா அல்லது இதழ்களின் போதாமையா என்ற கேள்வியை எழுப்பவில்லையா?
பத்திரிகையில் வந்த தனது படைப்பு தன்பெயரிலேயே ஒரு இணையதளத்தில் வெளியிடப் பட்டிருந்தால் அந்தப் படைப்பாளி எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ அது போன்றே தான் வலைப்பதிவில் எழுதியது பத்திரிகையில் சுட்டப் பட்டிருந்தால் பதிவரும் மகிழ்வார். அதற்காக அவர் பத்திரிகையில் வர வேண்டுமே என்பதற்காக வேறுமாதிரி எழுதப் போவதில்லை.
இரண்டுமே ஊடகங்கள் என்றபோதிலும் இணைய எழுத்து எந்த நிர்ப்பந்தமும் இன்றி வருவது. பத்திரிகை எழுத்தோ வியாபார நோக்கத்தில் வலிந்து எழுதப்படுவது. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவதும் இணைய எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதுவதும் ஆரோக்கியமான விஷயங்கள் தான். ஆனால் அவை மிகச்சிறிய அளவிலேயே நடக்கின்றன. இவர்கள் இதற்காகவே அலைகிறவர்கள் போலவும் கிடைக்காமல் போனதால் தான் இணையத்தில் எழுதுகிறார்கள் என்பது போலவும் சில பத்திரிகை உலக மேதாவிகள் கட்டமைக்க முயலும்போது தான் இவர்களின் உள்நோக்கம் குறித்து சந்தேகம் வருகிறது.
11:05 Posted in இதழியல் | Permalink | Comments (4) | Email this | Tags: kumudam, குமுதம்
Thursday, 21 February 2008
❒ சௌந்தர சுகன் 250
1987 ஜூனில் ஆரம்பித்து இந்த மாதம் தனது 249 வது இதழை வெளியிடும் வரை தொய்வில்லாமல் ஒரு தனிநபர் சிற்றிதழ் நடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் தந்து, அதற்கு மேலாக பத்தோடு பதினொன்று என்ற அளவில் இல்லாமல் இன்றுவரை தனித்துவம்மிக்க இதழாக வெளி வருகிறது சௌந்தர சுகன்.
கையெழுத்து இதழாக ஆரம்பித்து அச்சிதழாக தொடர்ந்தபின் கணினி அச்சுக் கோர்ப்பில் ஆப்செட்டில் வந்த போதும் அதன் அடையாளமோ உள்ளடக்கத்தின் தீர்க்கமோ மாறவே இல்லை. விளம்பரங்களே வெளியிடாமல் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாமல் வெளி வருகிறது என்பதும் சுகனை பிற சிற்றிதழ்களில் இருந்து தனித்துவப் படுத்துகிறது.
வண்ணப்படங்களும் பகட்டுகளும் இல்லை. கலைநயமிக்க ஓவியங்கள் அல்லது படைப்புக்கு தேவையான புகைப்படங்கள் இவை தவிர பெரிய அலங்காரங்கள் எதுவும் இல்லை. ஆனால் 120 பக்கங்களுக்கான உள்ளடக்கத்தை சுமார் 54 பக்கங்களில் நெருக்கமாக அச்சிடுவது அதன் சிக்கனம் எனலாம். பத்து ரூபாயில் தரமான உள்ளடக்கத்துடன் இருபது ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவரும் சிற்றிதழ்...
இளமை அரும்பிய பருவத்தில் தஞ்சை பூமியில் இருந்து க.சு.சரவணன் வெளியிடத் தொடங்கிய சுந்தரசுகன் பின்னர் பதிவுக் காரணங்களுக்காக சௌந்தரசுகனானது. கடித இலக்கியம் இதன் பயணத்தில் மிகப்பெரிய அடையாளம். இலக்கியவாதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட இலக்கிய வாழ்வியல் சுவை கொண்ட கடிதங்களை அவர்களிடமிருந்து பெற்று கடித இலக்கியமாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது சுகன்.
ஆண்டு தோறும் தஞ்சை பிரகாஷ் என்ற படைப்பாளியின் நினைவுமலர் வெளியிடுகிறது. அரசியல் சமூகத்தளங்களில் எண்ணக்கண் திறப்போம் என்ற முழக்கத்துடன் தீர்க்கமான தலையங்கங்கள், கூர் என்ற பெயரில் வாசகர்களின் விரிவான விமர்சனப் பக்கங்கள், விளக்கமான புத்தக விமர்சனங்கள், சமூகவியல் படைப்பாக்க போராளிகளை அறிமுகம் செய்யும் நேர்முகங்கள், ஜனரஞ்சக இதழ்களில் காண முடியாத தரமுள்ள கதைகள், கவிதைகள் என சுகனின் படைப்புலகம் சிந்தனைத் தளத்தில் தாக்கத்தை தரவல்லதான சுற்றத்தைத் கொண்டது.
இன்று பிரபலமடைந்துள்ள, பிரபலமடைந்து வரும் பல கவிஞர்கள், கவிதாயினிகள் ஆரம்ப களமாக சுகனில் கவிதை புனைந்தவர்கள். குறிப்பாக தஞ்சைப்பக்கமிருந்து வந்த எந்தக் கவிஞரும் சுகனில் எழுதியிராமல் இருந்திருக்க இயலாது.
விளம்பரங்களை ஏற்காமல் தனிமனித உழைப்பில் பொருளில் தொடரும் இந்தச் சிற்றிதழ் மார்ச் இதழ் 250 வது இதழாக மலர்கிறது.
249 வது இதழ் தலையங்கத்தில் கடந்து வந்த பாதை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அந்த வெளியீட்டு விழாவை நண்பர்களோடு கொண்டாட முடிவு செய்து அதுபற்றி கூறுவது...
"தலையங்கப் பக்கத்தில் இந்த விழா பற்றிய செய்திகள் தேவையா என்று சிலர் நினைக்கக் கூடும். இது சுகன் இதழ் விழா... ஒரு சிற்றிதழ் தமிழ்ச் சமூகத்தில் எப்படி புரண்டு வருகிறது என்பதை அவசியம் பதிவு செய்ய வேண்டும். இத்தகையப் பதிவுகள் தான் நாளைய நம்பிக்கைகளை முளைக்க வைக்கும் தட்பவெப்பமாய் அமையும். இந்த விழா நோக்கம் பெரும் கூட்டத்தை கூட்டுவது அல்ல. உணர்வாளர்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தம்தம் வெப்பத்தை பரிமாறிக் கொள்ளும் சந்திப்பு தான் இது. அடுத்தக் கட்ட பாய்ச்சலை எப்படி நிகழ்த்துவது என்பதை வேறு எங்கு போய் கற்க முடியும். நாம் கூடி, நாம் பேசி நாம் சிந்தித்து நாம் தானே செயலாற்ற வேண்டும்...என்ன சரிதானே?"
சௌந்தர சுகன் - 250 - விழா
16-3-2008 - ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில்...(ஜூபிடர் திரையரங்கம் அருகில்)
*
சௌந்தரசுகன்
அம்மாவீடு
சி-46, இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613007
ஆண்டுச் சந்தா ரூ.120.
13:30 Posted in இதழியல் | Permalink | Comments (0) | Email this | Tags: sugan, soundara sugan, சிற்றிதழ், சௌந்தர சுகன்
Friday, 30 November 2007
★ இலங்கையின் மல்லிகை இதழில் சிந்தாநதி
பழம்பெரும் புகழ்பெற்ற இலங்கை தமிழ் இதழான மல்லிகை தனது 42வது ஆண்டு மலரில் கணினி, இணையத்தில் தமிழ் நுட்பம் பற்றி ஒரு சிறப்புப் பகுதி வெளியிட்டதன் தொடர்ச்சியாக மார்ச் 2007 இதழில் மின்வெளிதனிலே என்ற 5 பக்க கட்டுரையை எழுதியுள்ள மேமன்கவி அதில் வலைப்பதிவு நுட்பம் பற்றி விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து வலைப்பதிவு நுட்பம் பற்றிய செய்திகளையும் உதாரண வலைப்பதிவாக சிந்தாநதியையும் ஜெயகாந்தனும் கலைஞர் விருதும் கட்டுரையையும் பதிவு செய்திருக்கிறார்.
மல்லிகை இதழாளர்களுக்கும் மேமன் கவிக்கும் நன்றிகள்.
இத்தகவலையும் மல்லிகை இதழின் படப்படியையும் அனுப்பித்தந்த நண்பர் விருபாவுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





16:45 Posted in star , இணையம் , இதழியல் , வலைப்பதிவு | Permalink | Comments (2) | Email this | Tags: வலைப்பதிவு, மல்லிகை
Tuesday, 27 November 2007
★ வாசிக்க வாருங்கள்
தமிழ் வாசிப்பில் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்துக்கு மாற்றான புதிய சிந்தனைகளையும் கலகக் குரல்களையும் காண முடிகிற ஒரு களம் சிற்றிதழ்களின் உலகம். ஆனாலும் ஒரு அடையாளம் போல மூட்டு வரை நீண்ட ஜிப்பாவும் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையும் குறுந்தாடியுமாக இருந்தால் தான் கவிஞன், சிறு பத்திரிகையாளன், சிந்தனையாளன் என்று பொதுஜனங்கள் மத்தியில் இருந்த கேலிக் குரல்கள் குறித்து எந்தக் கவலையும் இன்றி கலகம் என்பதே இலக்கியம் என்பதாக ஒரு கட்டத்தில் இலக்கியச்சூழல் இருந்தது. அதன் காரணமும் தெளிவானது. வெகுஜன இதழ்களால் கட்டமைக்கப் பட்ட ஒழுங்கமைவுகளை மீறுதல் என்பதே இலக்கியச் சிறுபத்திரிகைகளின் நோக்கமாக இருந்தது.
அதே சமயம் பல இலக்கியக்கூட்டங்கள் கேலிக்கூத்தாக முடிந்து போகவும் இவர்களில் சிலர் காரணமாக இருந்துள்ளனர். தன் வெளிப்பாடு மட்டுமே நோக்கமாகவும் பல இதழ்கள் வந்து போயின. எப்படி இருந்தாலும் நல்ல இலக்கியப் படைப்புகளின் உருவாக்கத்துக்கு சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது மறுக்க இயலாதது. இன்றும் பலநூறு சிற்றிதழ்கள் தனிநபர்கள், நண்பர்கள் குழாம், சங்கங்கள், படைப்பாளர் இணைவுகளின் மூலம் வெளியிடப் படுகின்றன.
இலக்கியவாதிகளும் காலப்போக்கில் வெளித்தோற்ற அடையாளங்களை துறந்து சமூகத்தின் பொது அடையாளங்களுக்குள் நுழைந்து விட்டபோதிலும் சிற்றிதழ் இலக்கியத்தின் தனி அடையாளங்களை இன்றளவும் சிறுபத்திரிகைகள் தொலைத்துவிடவில்லை.
மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம், வானம்பாடி காலம் என தனித்த இயக்கங்களாக ஒரு சமயத்தில் சிற்றிதழ் இயக்கம் இருந்திருக்கிறது. இன்றைய வலைப்பதிவுலகம் போலவே பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாக எண்பதுகளுக்குப் பிந்திய சிற்றிதழ்ச்சூழல் இருந்துள்ளது. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடரும் சில இதழ்கள் உட்பட தீர்மானமான இலக்குடன் வந்த இதழ்களும் அவற்றில் இருந்தன.
சிற்றிதழ் பரவலாக்கத்தை இன்னொரு விதமாகவும் வலைப்பதிவோடு ஒப்பிட முடிகிறது. வலைப்பதிவுகளை இன்று திரட்டிகள் வழியாக வாசிப்பது போலவே சிற்றிதழ் திரட்டிகளும் அன்று இருந்தன.
தமிழ்ச் சிற்றிதழ்களைச் சேகரித்து கண்காட்சி அமைத்துப் பாதுக்காத்த சில நண்பர்களுக்கு எல்லா சிற்றிதழாளர்களும் தங்கள் சிற்றிதழின் ஒரு பிரதியை அனுப்புவது வழக்கமாக இருந்தது. கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நசன் அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அவர் தான் சேகரிக்கும் சிற்றிதழ்களின் விவரம் முகவரி மற்றும் சில குறிப்பிட்ட படைப்புகளின் அறிமுகம் அடங்கிய காலாண்டிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அந்த இதழின் பெயர் சிற்றிதழ்ச் செய்தி.
சிற்றிதழ்ச் செய்தி இதழ் தமிழில் வெளியாகும் அனைத்து இதழ்கள் பற்றிய விவரங்களை இதழாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிமாறி சிறந்த தகவல் திரட்டியாக செயல்பட்டு வந்தது.
பொள்ளாச்சி நசன் இப்போது தமிழம்.நெட் தளத்தின் மூலம் தனது சேகரிப்புக்களை பதிவு செய்திருப்பதோடு தாய்த்தமிழ்ப் பள்ளியையும் இணையம் வழி தமிழ் கற்பிக்கும் சேவையையும் வழங்கி வருகிறார்.
அடுத்து திருச்சியைச் சேர்ந்த நண்பர் தி .மா சரவணன் என்பவர் தனது கலைநிலா நூலகத்தின் மூலம் தமிழ் சிற்றிதழ்களை சேகரித்து தமிழகம் முழுவதும் அவற்றை கண்காட்சியாக வைத்து சிற்றிதழ்ப் பரவுதலுக்கு உறுதுணையாக இருந்தார். அவரும் சிற்றிதழ் விவரங்கள் அடங்கிய வெளியீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
கோவையைச் சேர்ந்த குன்றம் இராமரத்நம் என்ற படைப்பாளர் தாராமதி என்ற சிற்றிதழை நடத்தி வந்தார். அவரும் பிற சிற்றிதழ் நண்பர்களுமாக தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தை தோற்றுவித்தனர். பின்னர் அவர் தொடங்கிய முங்காரி என்ற சிற்றிதழ் தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாக நடத்தப் படுகிறது. சங்கத்தில் இணையும் உறுப்பிதழ்கள், சங்கத்துக்கு வரும் இதழ்கள் போன்றவை இந்த மாத இதழில் தொடர்ந்து அறிமுகம் செய்யப் படுகின்றன. அதில் தரப்பட்டுள்ள முகவரிகளில் தொடர்பு கொண்டு தேவையான சிற்றிதழை வாசகர்கள் நேரடியாகப் பெற இயலும்.
முங்காரி
ஆசிரியர்: குன்றம் மு.இராமரத்நம்
புலமைப் பண்ணை,
சுகர்கேன் அஞ்சல்,
கோவை-641 007.
தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்ற சில நண்பர்கள் உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். அதன்பொதுச் செயலாளர் வதிலை பிரபாவின் மகாகவி இதழே சங்கத்தின் குரலாக ஒலிக்கிறது. இதிலும் இந்தச் சங்கத்தின் உறுப்பிதழ்கள் தொடர்ந்து பட்டியலிடப்பட்டு அறிமுகம் செய்யப் படுகின்றன. பிற சிற்றிதழ்களும் அறிமுகம் செய்யப் படுகின்றன.
மகாகவி
ஆசிரியர்: வதிலை பிரபா
9-16-18/2, ஒற்றைத் தெரு,
வத்தலக்குண்டு- 624 202
திண்டுக்கல்மாவட்டம்
வெகுஜன இதழ்களின் சமூக அரசியல் பரப்புரைகளின் கயமைகளை தோலுரித்துக் காட்டும் அற்புதமான கருத்துக் களஞ்சியங்களாக சிற்றிதழ் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்த விஷயங்களின் புரிந்த பலவற்றின் புரியாத, தெரியாத பக்கங்களை அறிந்து கொள்ள முடியும். ஆழமான வாசிப்பை விரும்புகிறவர்களுக்கு வாசித்தலின் பின்னான சிந்திப்பை தரும் படைப்புக்களை, மக்களின் மொழிகளில் உருவான படைப்புக்களை வாசிக்கலாம்.
கீற்று இணைய இதழ் தமிழ்ச்சிற்றிதழ்களில் பலவற்றை இணையத்தில் அறிமுகம் செய்து படைப்புக்களை வெளியிட்டுவருகிறது...
*
குறிப்பு: இது சிந்தாநதி வலைப்பதிவின் 300வது இடுகை.
16:50 Posted in star , இதழியல் | Permalink | Comments (3) | Email this | Tags: சிற்றிதழ், இதழியல்
Thursday, 20 September 2007
❒ செய்தி என்றால் என்ன?
எ-6?
என்ன?
எங்கே?
எப்படி?
எப்போது?
எதற்காக?
எவரால்?
இந்த ஆறு "எ"கேள்விகளுக்கும் விடையளிப்பதாக ஒரு செய்தி இருக்க வேண்டும்.
ஒரு நிகழ்வு செய்தியாக்கப் படுவதன் நேர்மை, விளக்கம் இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருக்க வேண்டும்.
12:40 Posted in இதழியல் | Permalink | Comments (6) | Email this | Tags: news, செய்தி
Wednesday, 15 February 2006
துக்ளக் சோவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ்
சனவரி-பிப்ரவரி 2006 'நாளை விடியும்' இதழில் வெளியானது இது:
*
துக்ளக் சோ-குருமூர்த்தி பிபிசியின் பெயரால் மோசடி
பூ.அர.குப்புசாமி,B.A.,B.L.,Dip.Anthrop.,
19, மேற்கு மடவளாகம் தெரு,
இரா.ஜீவானந்தம்
வழக்கறிஞர்கள்
கரூர்-639001
04324-261114
பெறுநர்
1. S.குருமூர்த்தி, ஆடிட்டர், சென்னை.
2. சோ, ஆசிரியர், துக்ளக் வார இதழ், 166-கிரீன்வேஸ் சாலை, சென்னை-28
3. ஆசிரியர், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ், சென்னை.
அய்யன்மீர்,
எம் கட்சிக்காரர் இல.பரணன் த/பெ இலட்சுமணன், வயது 71, செயலாளர், சமூக வரலாற்றுச் சங்கம், யாசிகா இல்லம், சக்தி நகர், சின்னாண்டான் கோயில் சாலை, கரூர் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் உங்களுக்குக் கொடுக்கும் அறிவிப்பு யாதெனில்;-
1. 2.11.2005 தேதியிட்டு வெளியிடப்பட்ட துக்ளக் வார இதழ் பக்கம் 34-இல் ஆரிய திராவிட பேதம் - கட்டுக்கதை - பிபிசி கூறுகிறது என்ற தலைப்பில் உங்களில் 1ஆம் நபர் (குருமூர்த்தி) எழுதியுள்ள கட்டுரையை உங்களில் 1ஆம் நபர் (சோ) வெளியிட்டுள்ளீர்.
2. உங்களில் 1ஆம் நபர் (குருமூர்த்தி) எழுதியுள்ள, Dr.David Frawely என்பவர் Myth of Ariyan Invasion of India என்ற கட்டுரையை உலக அளவில் நம்பகத் தன்மையுள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் www.bbc.com.uk website வெளியிட்டுள்ளதாக 29.10.2005 தேதியிட்ட The New Indian Express பத்திரிக்கையில் உங்களில் 3ம் நபர் (ஆசிரியர், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்) வெளியிட்டுள்ளீர்.
3. அக்கட்டுரையில் 1848 ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் என்ற சரித்திர நிபுணர், "மத்திய ஆசியாவிவிருந்து ஆரியர்கள் பாரத நாட்டின் மீது படையெடுத்து வந்து, சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்து, திராவிடர்களை நகர்ப்புறத்திலிருந்து காடுகளுக்கு விரட்டி, மிச்சமிருந்தவர்களைத் தங்களுடைய கலாச்சார வழிபாட்டு முறைகளுக்கு மாற்றி, இந்த நாட்டின் பழமையான கலாச்சாரத்தை அழித்து விட்டனர்" என்று அறிவித்ததைப் பின்பற்றி பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை ஆரிய திராவிட பேதம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், ஆனால் அக்கருத்து பொய் என்று பிபிசி ஒலிஒளி பரப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்று சில வாரங்களுக்கு முன் வெளியிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. எனது கட்சிக்காரர் www.bbc.com.uk இணைய தளத்தில் உட்சென்று பார்த்த போது நீங்கள் கூறியுள்ளது போல Dr.David Frawely என்பவரது Myth of Ariyan Invasion of India என்ற கட்டுரை பிபிசி இணையத் தளத்தில் வெளியிடப்படவில்லை என்பதையும், ஆனால் மேலே குறிப்பிட்ட கட்டுரை Hindu Students Council என்ற அமைப்பு நடத்தி வரும் The Hindu Universe என்கிற External Internet Site உள்ளே அமைக்கப்பட்டுள்ள www.hindunet.org என்ற இணைய தளத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் www.bbc.com.uk இணைய தளத்தில் "THE BBC IS NOT RESPONSIBLE FOR THE CONTENT OF THE EXTERNAL INTERNET SITES" என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது என்பதையும் கண்டார்.
5. இது தொடர்பாக பிபிசி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு 07.11.05 அன்று பிபிசி நிறுவனத்தின் சார்பாக Adam sims என்னும் அலுவலர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில் மேலே குறிப்பிட்ட கட்டுரை www.bbc.com.uk இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும் இதர பிற இணையதளங்களில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு பிபிசி பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி கட்டுரையை ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளியிட்டு விட்டு அதனை பிபிசி இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை என்று கூறுகிற பத்திரிகை செய்திகள் தொடர்பாக மேல் நடவடிக்கைக்காக பிபிசி நிறுவனத்தின் copy right and legal department பிரிவிற்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
6. தொல்பொருள் ஆய்வு, கல்வெட்டுச் செய்திகள் மற்றும் ஏராளமான ஆய்வு நூல்களின் அடிப்படையில் Indian Council For Historical Research என்னும் இந்திய அரசின் வரலாற்று ஆய்வு அமைப்பு "மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் பாரத நாட்டின் மீது படையெடுத்து வந்து சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்து, திராவிடர்களை நகர்ப்புறத்திலிருந்து காடுகளுக்கு விரட்டி, மிச்சமிருந்தவர்களை தங்களுடைய கலாச்சார வழிபாட்டு முறைக்கு மாற்றி, இந்த நாட்டின் பழமையான கலாச்சாரத்தை அழித்து விட்டனர்" என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து முழுப்பூசணிக் காயை சேற்றில் மறைக்க முயல்வது போல மேற்படி வரலாற்று உண்மையை மறைக்கத் திட்டமிட்டு, நீங்கள் மோசடியான விதத்தில் பிபிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மேற்படி ஆரிய திராவிட வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொண்டுள்ள திராவிட இயக்கங்களையும் அவதூறு செய்துள்ளீர்கள். திராவிட சித்தாந்தம் என்னும் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள எம் கட்சிக்காரர் உள்ளிட்ட கோடானு கோடி திராவிட இனமக்களின் மனதைப் புண்படுத்தி அவதூறு செய்துள்ளீர்கள்.
7. "திராவிடர்" என்னும் சொல் இந்தியப் பூர்வீகக்குடிகள் எனவும் "ஆரியர்" என்னும் சொல் இந்தியாவுக்கு வெளிநாட்டிலிருந்து வலிந்து வந்து குடியேறியவர்கள் எனவும் பொருள் கொள்ளப்படுவதால் திராவிட சித்தாந்தம் என்னும் கோட்பாட்டை, எந்த விதத்திலாவது அழித்தொழிக்கத் திட்டமிட்டு, முயன்று மேற்கண்டவாறு பொய்யான செய்திகளை மோசடியான விதத்தில் வெளியிட்டுள்ளீர்கள். இது முற்றிலும் இதழியல் நெறிக்கு எதிரானது. எனவே இவ்வறிவிப்பு கிடைத்த 15 நாட்களில் அடுத்து வெளிவரும் துக்ளக் வார இதழ் மூலமாகவும், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாகவும் நீங்கள் மோசடியான விதத்தில் பிபிசி நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி ஆரிய திராவிட வரலாற்று உண்மைகளைத் திரித்து வெளியிட்ட அவதூறான கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்புக் கோரியும் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட வேண்டும் என்றும், தவறினால் உங்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.
இந்நடவடிக்கைக்கான ஏற்பாடு மற்றும் ஆலோசனை:
வழக்கறிஞர் இராசேந்திரன், லார்ட்ஸ் பார்க் பள்ளி, கரூர்-4.
*
(துக்ளக்கில் வந்த கட்டுரையை அப்போது யாரோ வலைப்பதிவில் கூட பிரசுரித்திருந்ததாக ஞாபகம். அதுசரி எக்ஸ்பிரசிலோ துக்ளக்கிலோ மறுப்பு வந்ததா?)
09:00 Posted in இதழியல் | Permalink | Comments (3) | Email this | Tags: Tamils


